முகப்புபாலிவுட்

"பாலிவுட் மட்டுமல்ல இந்திய சினிமாவின் அடையாளம்!" Happy Birthday Radhika Apte

  | September 07, 2018 15:21 IST
Radhika Apte

துனுக்குகள்

  • பாலிவுட்டில் சிறந்த நடிகைகளுள் ஒருவர் ராதிகா ஆப்தே
  • பல படங்களில் தன் தனித்துவத்தைக் காட்டியவர்
  • அவரது பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு இதோ.
ராதிகா ஆப்தே பற்றி சமீபத்தில் மீம்கள் உலவியது கண்டு ஏதும் புரியாமல் தலை சுற்றியது. நண்பர் ஒருவர் அதைப் பற்றி கேட்கும் முன்பு, ஓரளவுக்கு விஷயம் புரிந்திருந்தது. அவர் கேட்டதும் `ஆம்னி பிரசன்ஸ் ஆஃப் ராதிகா ஆப்தே' பற்றி நான் அறிந்து வைத்திருந்ததை கூறினேன். அப்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ராதிகா ஆப்தேவின் `லஸ்ட் ஸ்டோரிஸ்', `சேக்ரெட் கேம்ஸ்', `பேட்மேன்'னுடன் புதுவரவாக வந்த `Ghoul'லும் இணைந்திருந்தது. நெட்ஃப்ளிக்ஸின் ஹோம் பேஜ் அல்காரிதம் சில சமயம் இப்படி மாறிக் கொள்ளும் போல. அன்று ஹோம் பேஜ் முழுக்க ராதிகா ஆப்தே நடித்தவைகளின் பட்டியலாய் இருந்தது. அதை உணர்ந்த யாரோ ஒருவர் துவங்கி வைத்திருக்கிறார். கிண்டல் என்றால்தான் நமக்கு கிரியேட்டிவிட்டி விளையாடுமே. தொடர்ந்து வந்த பல மீம்களும், அதற்கு எசப்பாட்டு போல நெட்ஃப்ளிக்ஸ் போட்ட கிரியேட்டிவ் சமாளிப்புகளும் என இரண்டு நாட்கள் அந்த பாதிப்பு இருந்தது. ராதிகா என இல்லை, பல பிரபலங்களும் தங்கள் மீதான கிண்டல்களைக் கடந்து கொண்டிருப்பவர்கள்தான். பாலிவுட்டிலேயே மிகப் பிரபலமான உதாரணமாக அலியா பட்டை சொல்லலாம். பொது அறிவு கேள்விகளில் அவர் தவறான பதில்களை அளித்த போது படையெடுத்த மீம்ஸ் எல்லாம் வேறு ரகம்.

" `சேக்ரெட் கேம்ஸ்' நெட்ஃப்ளிக்ஸ்காகவே எடுக்கப்பட்டது. ஆனால்,`லஸ்ட் ஸ்டோரிஸ்' மற்றும் `Ghoul' படங்கள் என்றுதான் எடுக்கப்பட்டது. அவை எப்படி வெளியாகப் போகிறது என்கிற யோசனை எல்லாம் அப்போது இல்லை. ஆனால், நெட்ஃப்ளிக்ஸ் அவற்றை வாங்கியது. இந்த மீம்ஸ் எல்லாம் வந்த போது அவற்றைப் பற்றி என் நண்பர்கள் கூறி, `இதை எல்லாம் பார்த்தியா?' எனக் கேட்டார்கள். பின்புதான் அவற்றைப் பார்த்தேன். 'வேலை செய்வதற்காக கேலிக்குள்ளாக்கப்படுவது என்ன மாதிரியான ஒன்று?' எனத் தோன்றியது. ஆனால், இந்த மீம்ஸ் மூலம் ஒரு கவனம் என் மேல் குவிகிறது என்பது எனக்கு பிடித்திருந்தது." என சிரித்துக் கொண்டே இதை எதிர் கொண்டார் ராதிகா. தனது பிரபலத்தன்மையை கையாள ஒரு திறமை தேவையாய் இருக்கும். ராதிகா பொறுத்தவரை அது நிறையவே இருக்கிறது எனத் தோன்றுகிறது. நன்றாக நடிக்கிறார், முக்கியமான இந்திய நடிகைகளில் ஒருவர் என்பதெல்லாம் தாண்டி, தனக்கு வரும் பிரச்சனைகளை கையாள்வதிலும் ஒரு நேர்த்தி அவருக்கு கைவந்திருக்கிறது. ராதிகாவின் ஆபாச வீடியோ என ஒன்று வலம் வந்த போதும், `பார்ச்ட்' படத்தின் ஒரு காட்சி பரப்பப்பட்ட போதும் கூட அவர் அதை நேர்மையாகவே எதிர்கொண்டார் என உணர்கிறேன்.

ஒருவகையில் அவர் வளர்ந்த விதம் அல்லது வளர்க்கப்பட்ட விதம்தான் இப்போதைய ராதிகாவின் செயல்களுக்கு காரணம் என சொல்லலாம். ராதிகா பிறந்தது தமிழ்நாட்டில் வேலூரில், பின்பு அவரது குடும்பம் பூனேவிற்கு நகர்ந்தது. அப்பா அம்மா இருவரும் மருத்துவர்கள். அவர்களும் சில நண்பர்களும் இணைந்து தங்கள் குடியிருப்புக்குள்ளேயே ஒரு பள்ளியை நிறுவி தங்கள் குழந்தைகளுக்கு மாற்றுக் கல்வி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். "வெளிப்படையாக இருப்பது, எதற்காவும் கூச்சப்படாமல் நினைத்ததை தைரியமாக சொல்வது என பள்ளிக் கல்விக்குள், வாழ்க்கைக் கல்வியும் கற்றுத்தந்தது, என்னை நல்ல முறையில் வடிவமைத்தது" என அவரே கூறியிருக்கிறார். அவர் சினிமாவுக்கு வந்து சேர்ந்த கதையும் சுவாரஸ்யமானது.
ராதிகா மருத்துவர் ஆவதை அவரது அப்பா விரும்பினார். கூடவே நடிப்பு எல்லாம் அறிவற்றவர்களின் செயல் எனவும் நினைத்து வைத்திருந்தார். சினிமா மீது அவருக்கு துளி ஆர்வமும் இல்லை என்பதால் திரைப்படங்கள் பார்ப்பதையே தவிர்ப்பதை தீர்க்கமாக செய்தார். ஆனால், ராதிகாவின் அம்மாவுக்கு சினிமாவின் மீது விருப்பம் இருந்தது, நடிகை ஆக வேண்டும் என்கிற கனவும், சில காரணங்களால் அது நிகழாமல் போன வருத்தமும் இருந்தது. எனவே சினிமா நடிகை என ராதிகா கண்ட கனவுகளுக்கு சின்ன எதிர்ப்பும், சின்ன வரவேற்பும் இருந்தது. பூனேவில் பெரிய வாய்ப்புகள் எல்லாம் இல்லாத சூழலில் மும்பை கிளம்புகிறார். கையில் இருக்கும் ஒரே கான்டாக்ட் அதுல் குல்கர்னியுடையது மட்டும், கூடவே "காலை ஐந்து மணிக்கு எழுப்பிவிடேன் ப்ளீஸ்" என தன்னை அலாரமாக பயன்படுத்தும் ரூம் மேட் ஒருத்தியின் தொல்லை வேறு. என்ன செய்யப் போகிறோம் என்கிற தவிப்புகள் மட்டும் எழுந்தது ராதிகாவுக்குள். "மும்பைலதானே இருக்க அப்புறம் ஏன் இன்னும் பட வாய்ப்புகள் கிடைக்கல" என வாய்ப்புகள் வானத்தில் இருந்து கொட்டும் என்கிற நினைப்பில் இருந்த பைத்தியக்கார நபர்களின் கேள்விகள் ஒருபுறம், பண நெருக்கடி மறுபுறம் என அழுத்தம் கூட, பூனாவுக்கே திரும்பி செல்கிறார். "இனி மும்பையும் வேண்டாம், இந்த சினிமாவும் வேண்டாம். நாடகங்கள் மட்டும் போதும்" என்பதுதான் அப்போதைக்கு ராதிகா செய்திருந்த முடிவு. அடிப்படையில் கதக் பயின்றிருந்த ராதிகா, நடனம் பயில லண்டன் செல்கிறார். வாழ்க்கை மாறுகிறது, சிந்தனைகள் விரிகிறது, இந்நாள் கணவரும், அந்நாள் பாய்ஃப்ரெண்டுமான பெனடிக்ட்டை சந்திக்கிறார். அவருடன் பூனே திரும்புகிறார். இசைக்கலைஞரான பெனடிக்ட்டின் பணிகள் எல்லாம் மும்பையை மையமாகக் கொண்டது. ஆனால், மும்பை வரமாட்டேன் என்கிற ராதிகாவின் முடிவால் பூனேவில் தங்கிக் கொண்டு அடிக்கடி மும்பை பயணப்படுகிறார்.

ஒருவருடம் கழித்து தன் முடிவை மாற்றிக் கொண்டு பெனடிக்ட்டுடன் மும்பை வருகிறார். ஆனால், இந்த முறை மும்பை தன் இன்னொரு பக்கத்தை ராதிகாவிற்கு காட்டுகிறது. நிறைய நண்பர்களின் அறிமுகம், அவர்களின் ஆதரவு, புதுப்புது வாய்ப்புகள் என முன்னே வந்து நிற்கிறது. இனி மும்பைதான் தன் வீடாக மாறப்போகிறது என்பது ராதிகாவுக்குப் புரிகிறது. கொங்கனி - மராத்தி படமான `கோ மலா ஆஸ்லா ஹவா' மூலம் முதல் வாய்ப்பு கிடைக்கிறது. `ஷோர் இன் த சிட்டி', `ரத்தசரித்ரா 1,2', `ஐ ஆம்' படங்களை முடித்துவிட்டு லண்டன் கிளம்பிவிடுகிறார். இதன் பின்னும் பல படங்கள், பல அவமானங்கள். "நீங்க குண்டா இருக்கீங்க" என்று கூட ஒரு படத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். "அந்த ஹீரோயினைப் பார், அவங்கள மாதிரி பல விஷயங்கள் பண்ணனும்" என `ஏ'டாகூட பேச்சு பேசிய ஒரு தயாரிப்பாளரையும் கூட தாண்டியே வந்தவர்தான். இந்த பயணம் ராதிகாவைப் பக்குவப்படுத்தியிருக்கும் என்பதை நம்பலாம்.

ராதிகா ஆப்தே பற்றி பேச்சைத் தொடங்கிவிட்டு அவரது நடிப்பு பற்றி சொல்லாமல் இருப்பது சரி இல்லைதான். ஆனால், இன்னுமே அவரிடம் நிறைய இருக்கிறது, முழுதாக வெளிப்படும் ஒரு தருணத்தில் நூற்றாண்டின் சிறந்த ஒரு நடிகையை நாம் காண முடியும் என்றே நம்புகிறேன். லஸ்ட் ஸ்டோரீஸில் கலிந்தியாக அவர் செய்திருப்பதை கவனித்தவர்களுக்கு நான் சொல்வதன் அர்த்தம் முழுமையாகப் புரியும். வெறுமனே `ஆல் இன் ஆல் அழகுராஜா', `லெஜண்ட்' போன்ற படங்களில் பார்த்த ராதிகா பற்றி நான் பேசவில்லை. `ஹரம்' என்றொரு மலையாளப்படம் இருக்கிறது, `ஃபோபியா' என்ற இந்திப் படம் இருக்கிறது, `அஹல்யா' என்றொரு குறும்படம் கூட இருக்கிறது, `தோனி', `கபாலி' என இரண்டு தமிழ்ப் படங்களிலும் இருக்கிறது... ராதிகா ஏன் சிறந்தவர் எனச் சொல்ல. தொடக்கத்தில் ராதிகா மீம்ஸ் பற்றி சொல்லியிருந்தேன். அதைத் தவறு எனச் சொல்லவோ, சரிதான் எனப் போராடவோ அப்படி ஆரம்பிக்கவில்லை. ராதிகா தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார், அதை கவனிக்க தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்... கிண்டல், கேலி எல்லாம் எப்போதும் இருக்கும். ஆனால், சிறந்த நடிகைக்கான இடம் நிரம்புவதெல்லாம் சகஜமான விஷயம் கிடையாது. தொப்பி விழாமல் ஸ்கிப்பிங் ஆட வேண்டியது போன்ற ஒன்று. எதிர்மறை கமெண்ட்ஸ் பற்றிய கவலை ராதிகாவுக்கு இல்லை, இருக்கவும் கூடாது என விரும்புகிறேன். அதைச் சொல்லவே அப்படித் துவங்கினேன். பெரிய நட்சத்திரங்கள் படம் வேண்டும் என்கிற வேட்கை இல்லாமல், கிடைக்கும் படங்களில் எல்லாம் தன்னை பெரிய நட்சத்திரமாக ஜொலிக்க வைக்கும் முயற்சியில் உள்ள பேர்கள் அதிசயம். நீங்கள் ஒரு அதிசயம் ராதிகா. பாலிவுட் மட்டுமல்ல இந்திய சினிமாவின் அடையாளம் நீங்கள். வாழ்த்துகள் உங்கள் பிறந்தநாளுக்காக மட்டுமல்ல எல்லாவற்றுக்கு சேர்த்து.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்