விளம்பரம்
முகப்புகோலிவுட்

100 நாட்களில் 'பிக் பாஸ்' கற்றுக்கொடுத்த பாடங்கள் என்ன?

  | October 03, 2017 23:01 IST
Bigg Boss Finale

துனுக்குகள்

  • 'எப்போடா 100 நாட்கள் முடியும்' என எதிர்பார்த்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சி
  • 'குறும்படம்' போட்டு காண்பித்தால், எவ்வளவு பயங்கரமாக இருக்கும்
  • தவறை மறக்காவிட்டாலும் கூட, மன்னிக்கவாவது பழகிக் கொள்வோம்
ஆரம்பத்தில் 'எப்போடா 100 நாட்கள் முடியும்' என எதிர்பார்த்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சி, 'என்னடா அதுக்குள்ள முடிஞ்சிருச்சே' என நினைக்கும்படி படு வேகமாகவே முடிந்துவிட்டது. பிக் பாஸ் பார்க்கவே மாட்டேன் என சொன்ன பல பேர், 100 நாட்கள் வரையிலும் பார்க்கத்தான் செய்தார்கள். 'ஓவியா வெளியே போயிட்டா பார்க்க மாட்டேன்' என சொன்ன ஆட்கள் கூட, ரைசா காயத்ரி வையாபுரி போன்ற முக்கியமான ஆட்கள் வெளியேறும் வரை பார்க்கத்தான் செய்தார்கள்.

இப்பொழுது 100 நாட்கள் முடிந்த பின் கமல் சொன்னது போல, சிலரெல்லாம் 'அய்யோ.. நான் பார்த்த ஒரே டிவி நிகழ்ச்சி இதுதானே.. இனிமே டெய்லி 9 மணிக்கு என்ன பார்ப்பேன்' எனும் அளவிற்கு புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். இந்த habitual feeling எல்லாம் அதிகபட்சம் 5, 6 நாட்களில் சரியாகிவிடும். சீசன்-2 எல்லாம் கமலோ அல்லது கமல் அளவுக்கு இணையான தொகுப்பாளரோ இல்லாவிட்டால், நல்ல வலுவான ஹவுஸ்மேட்கள் இல்லாவிட்டால் இந்தளவிற்கு வரவேற்பை பெறுமா என தெரியவில்லை.

இந்த 100 நாட்களில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து, ஹவுஸ்மேட்களும் பார்வையாளர்களும் பல வாழ்க்கை பாடங்களை கற்றிருக்கக்கூடும். ஆனால், ஒட்டுமொத்தமாக ரத்தின சுருக்கமாக நாம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருந்தன. நிகழ்ச்சி தொடங்கிய பொழுது, பலராலும் விரும்பப்பட்ட நமீதா சில நாட்களிலேயே அதிகளவில் வெறுக்கப்பட்டார். 'வீரத்தமிழச்சி' என நெட்டிஷன்கள் கொடுத்த பட்டத்தோடு செட்டுக்குள் சென்ற ஜூலி, அதே நெட்டிஷன்களால் அதிகளவில் கழுவி ஊற்றப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
முதல் 50 நாட்களில் மக்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்ட சினேகன், கடைசி சில வாரங்களில் ஒட்டுமொத்த மக்களின் ஹீரோ ஆகிப் போனார். வந்த புதிதில் பல குறைகளோடு காணப்பட்ட வையாபுரி, கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக்கொண்டு மக்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் ஆக மாறினார். ஓவியா பிரச்சினையின் பொழுது மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ஆரவ்வே, கடைசியில் அதே மக்களின் அன்பையும் வென்றார்.

இந்த சம்பவங்களின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் சில:

✓ ஏதாவது ஒரேயொரு செய்கையை மட்டும் வைத்து, ஒருவரை ஒட்டுமொத்தமாக எடை போட்டு விடக்கூடாது.

✓ யாராக இருந்தாலும், மாறுவதற்கோ திருத்துவதற்கோ இரண்டாம் வாய்ப்பு கொடுப்பது தவறல்ல.

✓ நம்மை சுற்றி ஆயிரம் பேர் நம்மைப் பற்றி என்ன பேசினாலும், நாம் யார் என்பதை முடிவு செய்வது நாமும் நமது செயல்களும் மட்டுமே!

✓ எந்த நிலையிலும் மற்றவர்கள் செய்த தவறை மறக்காவிட்டாலும் கூட, மன்னிக்கவாவது பழகிக் கொள்வோம்.

✓ மிக முக்கியமாக... 'பிக் பாஸ்' ஹவுஸ்மேட்ஸ்களை எல்லாம் பயங்கரமாக விமர்சித்தும், குறை கூறியும், அறிவுரை சொல்லியும், கலாய்த்தும் வந்த நம் வாழ்விலுள்ள தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி அவ்வப்போது யாரேனும் ஒரு 'குறும்படம்' போட்டு காண்பித்தால், எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதையும் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

'பிக் பாஸ்' மூலம் நாம் கற்றுக்கொண்ட இந்த வாழ்க்கை பாடங்கள், நிச்சயமாக எல்லோருக்குமே பயனுள்ளதாக இருக்கக்கூடும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்