முகப்புகோலிவுட்

ரஹ்மான்25 - சிறப்புப் பகிர்வு

  | August 15, 2017 20:29 IST
25 Years Of Ar Rahman

துனுக்குகள்

  • 50வது வயதில் திரையுலகில் 25ஆண்டுகளை பூர்த்தி செய்யும் AR ரஹ்மான்
  • ரஹ்மானின் ஆதிகாலம் இளையராஜாவின் குருகுலத்திலும் நிகழ்ந்திருந்தது
  • பியானோவின் வெள்ளைக்கட்டை வாலி என்றால் அதன் கறுப்புக் கட்டை வைரமுத்து
"சினிமாங்கறது வெறும் வியாபாரம் மட்டுமில்ல, ஒரு கலையும் கூடன்னு நினைக்கிறவங்களுக்கு அவரை மாதிரி ஒரு ஆள் கிடைக்க மாட்டார். Perfection-காக மெனக்கடற ஒரு கலைஞனோட தன்மை எல்லாருக்குமே அமஞ்சிடாது. இப்படியொரு தன்மை 50 வயசுக்கு மேல வேணாலும் அமையலாம். ஆனா இந்த சின்ன வயசுல அந்த பையன்கிட்ட இருக்கது எனக்கு ரொம்ப ஆர்ச்சர்யமா இருக்கு.." என்று ஒரு 28 வயது இளைஞனைக் குறித்து வியந்தார் இயக்குனர் சிகரம் K.பாலச்சந்தர்.

அந்த இளைஞன் தான் இன்று தந்து 50வது வயதில் திரையுலகில் 25ஆண்டுகளை பூர்த்தி செய்யும் AR ரஹ்மான்.

'தள்ளிப்போகாதே' பாடலில் வரும் "சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான் பார்க்கிறேன்" என்ற வரிகளில் AR. ரஹ்மானை பொருத்திப்பார்க்கிறேன். அந்த வரிகளை இசையில் பொருத்தியவரும் அவர் தான். சராசரி நடுத்தர குடும்ப சிறுவனுக்கான கனவுகளோடு தனது பால்யத்தை தொலைத்த ரஹ்மான் தனது தந்தையின் மரணத்துக்குப்பின் இன்ஜினியர் கனவை தள்ளிவைத்துவிட்டு தந்தையின் மரணத்துக்கான காரணம் கூட தெரியாமல் இசையெனும் பெருங்கடலை அலையோடு அலையாக பார்க்கத் தொடங்கினார். அலை பார்த்தல் கடல் பார்த்தலை விட அழகு, முக்கியமும் கூட. பார்வைகளுக்குட்பட்ட அலையில் சிறுவனைப்போல அன்று கால் நனைத்த ரஹ்மான் இன்று கடலினைப்போல பரந்து நிற்கிறார். அந்த அலைகள் இன்றும் அலைபாயுதே என ஓயாமல் பாய்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
பதின்ம வயதில் தான் தனக்கு தந்தையில்லை என்று உணர்ந்ததாக கூறும் ரஹ்மான் தாயும் தந்தையுமாக நினைத்தது தனது தாயை தான். ஆஸ்கர் மேடையில் "மேரே பாஸ் மா ஹை. I have nothing, but i have my mother with me " என்று கூறியதன் காரணமும் அதுவே. ஒருமுறை ரஹ்மானிடம் "உங்களோட இசை வளர்ச்சியில உங்க அம்மாவோட பங்கு என்ன" என்று கேட்டதற்கு "முழு பங்கும் அம்மாதான்" <3என்று சொன்னார் அவர். என்று சொன்னார் அவர். முதன்முதலில் இசையமைத்து 'சின்ன சின்ன ஆசை' பாடலை அம்மாவிடம் போட்டுக்காண்பித்த ரஹ்மானுக்கு அவருக்கு அவரது அம்மா கொடுத்த பாராட்டு கண்ணீர். அந்த தாயின் கண்ணீரில் அன்றே ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிவிட்டார்.

ரஹ்மானின் ஆதிகாலம் இளையராஜாவின் குருகுலத்திலும் நிகழ்ந்திருந்தது. "புன்னகை மன்னன்" படத்தில் கமல் நடனமாடும் பிரபலமான இசையை இன்றும் கூட ரஹ்மான் இசையமைத்ததாகவும், ரஹ்மானே வாசித்ததாகவும் தான் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் அதன் இசை உருவாக்கம், கோர்ப்பு எல்லாமே இளையராஜா தான். அந்த சமயத்தில் கம்ப்யூட்டர் நுணுக்கங்கள் அறிந்து வைத்திருந்த ரஹ்மானிடம் ப்ரோக்ராம் செய்து கேட்டதால் ரஹ்மான் அதை செய்து கொடுத்தார். இருவருக்குமான புரிதல் வெளியுலகில் தெரியாத ஒன்று. தன்னையும் ரஹ்மானையும் ரோஷன்- மதன்மோஹனோடு ஒப்பிட்டு சிலாகித்தார் இளையராஜா.

ஒரு விழாவில் "இப்போல்லாம் இசை ரசிகர்கள் நான் தான் ஒஸ்தி அவர் தான் ஒஸ்தின்னு வெப்-ல மாறி மாறி திட்டிக்கிறாங்க. அது வேணாம். என்ன வேணும்னாலும் திட்டுங்க. என் ரசிகர்கள் யாரும் அவங்கள திட்டாதீங்க" என்று இளையராஜாவை உட்பட பல ஜாம்பவான்களை மேடையில் வைத்துக்கொண்டு கூறினார் ரஹ்மான். இன்று வரை கூட KV.மஹாதேவன், MS.விஸ்வநாதன், இளையராஜா பற்றி பேசாத அவரது இசைப்பயணம் பற்றிய பேச்சுகளைப் பார்ப்பது அபூர்வம்.

ரஹ்மான் தனது தொடக்க காலத்தில் தனது அடித்தளத்திற்கு அவரது இசைக்கு எவ்வளவு உரிமை இருக்க முடியுமோ அந்த அளவுக்கு வாலி மற்றும் வைரமுத்து வரிகளுக்கும் உரிமை இருக்க முடியும்.
ரஹ்மானும் வயதுகளைக் கடந்த வகுப்புத்தோழர்கள் போன்றவர்கள். ஒவ்வொரு புத்தாண்டுக்கும் சென்னையில் இருந்தால் நேரடியாக வாலியின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துபெறும் வழக்கத்தை வாலி உயிருடன் இருந்த காலம் வரை தவறாது கடைபிடித்தார் ரஹ்மான். 'சிக்குபுக்கு ரயிலே' பாடலுக்கு வெறும் இசையை மட்டும் வைத்து ட்யூன் அனுப்பியிருந்தார் ரஹ்மான். இப்படி இருந்தால் நான் எழுத மாட்டேன் என்று வாலி மறுத்ததும் ரஹ்மான் அதில் டம்மியாக பாடி கொடுத்தார். பிறகு தான் வாலி எழுத சம்மதித்தார். இருவருக்கும் அப்படி ஒரு நட்பு இருந்தது. "அன்பே வா என் முன்பே வா" என்று பல்லவி எழுதியதும் "முக்காலா", "முஸ்தபா", "மாயா மசீந்திரா" போல 'ம' வரிசையில் மாற்ற வேண்டுமென்று எண்ணி மாற்றப்பட்டு "முன்பே வா அன்பே வா" என்று வெற்றியடைந்த ஒரு பாடல் சொல்லி விடும் இருவருக்குமான புரிதலை. "சில்லுனு ஒரு காதல்" படத்துக்கு வாலி தான் பாடல் எழுத வேண்டுமென்று ரஹ்மான் தான் கேட்டுக்கொண்டதாக சூர்யாவும் சொல்லியிருந்தார்.

"பார்ப்பவர்களுக்கு இவன் உயரத்தில் குட்டையானவன்
அடுத்தவர் கண்ணீரைத் துடைக்க இவன் கைக்குட்டையானவன்"


இது வாலி ஒருமுறை ரஹ்மானை பற்றி கூறியது. ஆம் தனிமையில் சிந்தும் கண்ணீரும், சிந்தாமல் சிந்தும் விர்ச்சுவல் கண்ணீரும் இவரது இசை கைக்குட்டை. அதனால் தான் வாலி "கண்ணீர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைக்குட்டை" என்று எழுதி ரஹ்மானே பாட நேர்ந்தது.

ரஹ்மான் பியானோவின் வெள்ளைக்கட்டை வாலி என்றால் அதன் கறுப்புக் கட்டை வைரமுத்து. வாலியைப்போலவே வைரமுத்துவுடனும் வயதைக்கடந்த நட்பில் பயணிக்கிறார் ரஹ்மான். சிலநேரங்களில் இருவருக்குமான மாற்றுச்சிந்தனைகளும் வெற்றியைத் தான் தேடித் தந்தன. அதற்கு உதாரணங்கள் இவை. மின்சாரக்கனவு படத்தில் வரும் "ஊலலா" பாடலுக்கு 'இந்த ட்யூன் தமிழுக்கு மிகவும் புதுமையாக இருக்கிறது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பாடல் தோற்கும்' என்று வைரமுத்து பாடல் எழுத மறுத்துவிட்டாராம். ரஹ்மான் அவரது இசையின் மீது கொண்ட நம்பிக்கையில் ஒரு வாரம் கழித்து வைரமுத்துவின் வீட்டுக்கு நேராகவே சென்று அவரை சம்மதிக்க வைத்து அந்த பாடலை எழுத வைத்தாராம். அது ரஹ்மானின் பார்வை. பாடலும் வெற்றியடைந்து தேசிய விருது பெற்றது. 'நறுமுகையே' பாடலை வைரமுத்து எழுதி கொடுத்ததும் ரஹ்மான் வெகுளித்தனமாக கேட்டது "சார் இது தமிழ் பாட்டு தானே. இப்படி எழுதினா மக்களுக்கு புரியுமா. கொஞ்சம் தமிழ்ல எழுதுங்களேன்''என்று தான். ஆனால் அந்த பாடலும் தேசிய விருது வாங்கியது. இசையில் ஒருவர் 'இ' என்றால் மற்றொருவர் 'சை'. "இளமை இனிமேல் போகாது. முதுமை உனக்கு வாராது" என்று ரஹ்மானின் 50வது பிறந்தநாளுக்கு வாழ்த்தியிருக்கிறார் வைரமுத்து. நிதர்சனமான வாழ்த்து இது.

ரஹ்மானை பற்றி பேசும்போது இசை நுணுக்கங்கள், புதுமை என்று நிறைய பேசினாலும் அவரது பின்னணி இசைக்கோர்ப்பு பற்றி இரண்டாம் வரியாகத்தான் இசை விமர்சகர்கள் பேசுவார்கள். ஒரு சின்ன உதாரணம். காதலன் படத்தில் பிரபுதேவாவும், வடிவேலுவும் நக்மாவைக் காண இரவில் அவரது வீட்டுக்கு செல்லும் காட்சிக்கு அவர் கொடுத்திருந்த பின்னணி இசை பிரம்மாண்டத்தின் உச்சம். இந்தியன், பம்பாய், எந்திரன் எல்லாம் இவரது பின்னணி இசைக்கான முத்திரைகள்.

"ரஹ்மான் ஒரு சித்தர்-ஞானி-ரிஷி. ரிஷின்னா தாடி வச்சுக்கிட்டு தவம் இருக்கணும்னு அவசியமில்லை. இப்படி பேண்ட் ஷர்ட்லயும் இருக்கலாம்" . இதை சொன்னது சூப்பர் ஸ்டார் ரஜினி. உண்மை தான். இசையெனும் மதத்தின் ஞானி இவர். 'பால்யங்கள் ராஜாவாலும் பதின்மவயதுகள் ரஹ்மானாலும் சூழ்ந்திருந்தன" என்று சிலாகிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இரவுகளை ரசிக்க "ராசாத்தி என் உசுரு என்னத்தில்ல', தனிமைகளைக் கடத்த "உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகியலைந்தேனே", பிரிவை ரசிக்க "நியூயார்க் நகரம்'', மழையை கொண்டாட "சின்ன சின்ன மழைத்துளியை" , அன்பை அர்த்தமாக்க "பச்சைக்கிளிகள் தோளோடு" என்று ரஹ்மான் நம்மோடு பயணிக்கிறார்.
இந்த பயணம் இன்னும் இன்னும் பல்லாண்டுகள் நீளட்டும் ரஹ்மான்.

வெள்ளிவிழா நாயகனுக்கு வாழ்த்துகள்

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்