முகப்புகோலிவுட்

"ரஜினி இல்லைனா இந்தப் படமே வேண்டாம்" - 'முள்ளும் மலரும்' உருவான கதை #40YearsofMullumMalarum

  | August 15, 2018 07:56 IST
Mullum Malarum

துனுக்குகள்

  • தமிழ் சினிமாவின் கிளாசிக் சினிமா `முள்ளும் மலரும்'
  • மகேந்திரன் இயக்குநராக அறிமுகமான படம்
  • இந்தப் படத்தின் 40 ஆண்டு சிறப்புக் கட்டுரை இதோ
அதுவரை சினிமா கதாசிரியராக இருந்த மகேந்திரனை இயக்குநராக மாற்றியதற்கா? ரஜினி எனும் அபாரமான நடிகனை அடையாளம் காட்டியதற்கா? இளையராஜா - பாலுமகேந்திரா - மகேந்திரன் என மூன்று மேதைகள் இணைந்து ஒரு மறக்கமுடியாத சினிமா அளித்ததற்கா? அல்லது படம் வந்து (ஆகஸ்ட் 15) இன்றோடு 40 ஆண்டுகள் கடந்த பின்னும் நிலைத்திருப்பதற்கா? எதைச் சொல்லி கொண்டாட... `முள்ளும் மலரும்' தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றுதான் சொல்வேன். இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பின்னும், அதற்கு மேலேயும் கூட சாஸ்வதமான பொக்கிஷம் அது. சில விஷயங்கள் நடக்கவில்லை என்றால் இந்த சினிமா உருவாகமலேயே போயிருக்கும். ஆனால், ஒரு நல்ல சினிமா எப்பாடுபட்டாவது தன்னை உருவாகிக் கொண்டே தீரும். உதாரணமாக `முள்ளும் மலரும்' படத்தையே எடுத்துக் கொள்ளலாம். தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாக கொண்டாடப்படும், இந்தப் படத்தின் இயக்குநர் மகேந்திரனுக்கு, தமிழ் சினிமா மீது மிகப் பெரிய அதிருப்தி இருந்தது. கூடவே சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியவர் என்றால் நம்ப முடிகிறதா?
 
544t7m8

சினிமா பக்கம் வர வேண்டும் என்கிற எண்ணம் பள்ளி சிறுவனாக இருந்த மகேந்திரனிடம் இல்லை. காரணம் அப்போது பக்கம் பக்கமாக வசனங்களால் நிறைந்திருந்த, நாடகம் போல் இருந்த, போலித்தன்மையான தமிழ் சினிமாக்கள். இங்கு சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள், சிறந்த இயக்குநர்கள், சிறந்த டெக்னீஷியன்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் காட்டும் சினிமா என்பது சினிமாவே இல்லை என்கிற கவலை கல்லூரி காலத்திலும் மகேந்திரனிடம் இருந்தது. எந்த அளவுக்கு என்றால் அந்த மாதிரி சினிமாக்களை கேலி செய்து கல்லூரியில் நாடகம் போடும் அளவுக்கு. இவ்வளவு ஏன், அவரின் சினிமா பற்றிய பேச்சைக் கேட்டு எம்.ஜி.ஆரே பாராட்டுக் கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால், அதை மடித்து பெட்டியில் வைத்துவிட்டு வேலை தேடக் கிளம்பிவிட்டார். காரணம் வீட்டில் கொடுக்கப்பட்ட பொறுப்புகள். ஆனாலும் சில சூழல்கள் சினிமாவுடன் மீண்டும் மகேந்திரன் புழங்க வேண்டிய தாக்குகிறது. கதாசிரியராகிறார், அவர் கதையமைப்பில் உருவாகும் படங்கள் வெற்றியும் பெறுகிறது. ஆனால், மகேந்திரன் மனதில் ஒரு ஆற்றாமை. நாம் எந்த சினிமாவை பரிகாசம் செய்தோமோ அதே போன்ற சினிமாக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற கவலை. இனி சினிமா வேண்டாம் என உடனே ஊருக்கே கிளம்பிவிடுகிறார். பிறகு சினிமாவுக்கு எப்பிடி வந்தார்? என்ன நடந்தது?
 
8op9q3d8

இங்குதான் தயாரிப்பாளர் வேணு செட்டியாருக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். எதற்கு என சொல்லும் முன் ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக், அது இந்த இடத்தில் மிகவும் தேவையானதும் கூட. சில படங்களுக்கு கதை எழுதிய பின்பு, இனி தன்னிடம் கதை இல்லை, ஏதாவது நாவல்களைக் கொடுங்கள் அதற்கு திரைக்கதை வசனம் எழுதித் தருகிறேன் என ஒரு தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார் மகேந்திரன். அப்படி உருவான படம்தான் கமல்ஹாசன் நடித்த `மோகம் முப்பது வருஷம்'. பின்பும் படத்திற்காக நிறைய புத்தகங்கள் படிக்கிறார். அப்படி எஸ்.பி.முத்துராமனின் படம் ஒன்றிற்கான கதை விவாதத்தின் போது, படிக்கலாமே என மகேந்திரன் எடுத்த புத்தகம்தான் உமாசந்திரன் எழுதிய `முள்ளும் மலரும்' நாவல். "அவர் அப்போ பிரபலமான எழுத்தாளர் இல்ல, ஆனாலும் புக்கு பெருசா இருந்தது படிக்க ரொம்ப நாள் ஆகும்னுதான் அந்த புக்கை எடுத்தேன். படிக்க ஆரம்பிச்சதும் அந்தக் கதை நிகழும் இடம், கதாபாத்திரங்கள் எல்லாம் எனக்கு புது உணர்வைக் கொடுத்தது. ஆனால், நாவலில் இருந்து சில மாற்றங்கள் படத்தில் இருக்கும். ஒருகட்டத்தில், புலி அடித்து காளியின் கை போய்விடும். படத்தில் லாரி விபத்தால் கை போவது போல் இருக்கும். அது வரைதான் அந்தக் கதையை படிச்சேன். இதுவரைக்கும் படிச்சதை வெச்சு ஒரு திரைக்கதை எழுதிப் பாப்போம்னு எழுத ஆரம்பிச்சேன். ஆனா, அது படம் எடுக்கறதுக்காக எழுதல, என்னுடைய திருப்திக்காக மட்டுமே எழுதினேன். அப்போ சினிமா விஷுவல் மீடியமாக இல்ல, Talkieயாதான் இருந்தது. ஒரு விஷுவல் மீடியத்திற்கு தகுந்த மாதிரி எழுதி முடிச்சேன்." என `முள்ளும் மலரும்' திரைக்கதை எழுதியதைப் பற்றி மகேந்திரன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
 
l6bui7q

ஃப்ளாஷ் பேக் முடிந்தது, இப்போது வேணு செட்டியாருக்கு நாம் ஏன் நன்றி சொல்ல வேண்டும் என்கிற காரணம். தயாரிப்பாளர் வேணு அடிக்கடி, மகேந்திரன் வீட்டுக்கு வருவதுண்டு. சினிமாவே வேண்டாம் என முடிவெடுத்து, அதே சமயம் `முள்ளும் மலரும்' திரைக்கதையையும் எழுதி முடித்து வீட்டில் இருக்கும் மகேந்திரனை சந்திக்க வருகிறார் வேணு செட்டியார். அந்த நிகழ்வையும் இவ்வாறு விவரித்திருக்கிறார் மகேந்திரன். "நான் அடுத்து படம் ஒண்ணு பண்றேன் நீ டைரக்ட் பண்ணுறியா?"னு கேட்டார். வீட்டுக்கு வந்த விருந்தாளியை முடியாது என சொல்லி வருத்தப் பட வைக்க மனசில்லாம, சரி பண்ணலாமேனு சொன்னேன். "சரி அப்போ கதைய சொல்லுங்களேன்"னு கேட்டார். நானும், சொல்றேன் சொல்றேன் சமாளிக்கப் பார்த்தேன். "அட ஒரு வரிக் கதையாவது சொல்லுப்பா"னு கேட்டார். அட ஒண்ணும் இல்ல சார். ஒரு அண்ணன் - தங்கச்சி கதைனு சொன்னதும் "அது போதும்பா"னு சத்தமா சொன்னார். அவர் அவ்வளவு உற்சாகம் ஆனதுக்கு காரணம், `பாசமலர்' படம். நான் முழுக்கதையும் சொல்றேன்னு சொன்னேன் "அவரு வேணாம்பா"னுட்டார். எனக்கு என்னென்னா முழுக்கதையும் அவர் கேட்டுட்டு இந்தக் கதை வேணாம்னு சொல்லிட்டு போயிடனும்னு ஒரு எண்ணம். ஆனா, அண்ணன் தங்கச்சி கதைன்னு சொன்னதும் அவர் "அடுத்த பாசமலர்" பண்ணிட்டான் இவன்னு நினைச்சிட்டார். ஓகே எனக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சுனு நான் நினைச்சுகிட்டேன்." இப்படித்தான் துவங்கியது `முள்ளும் மலரும்'. சினிமே வேண்டாம் என சென்றவரை இழுத்து வந்து, காலத்துக்கும் அழியாத சினிமா ஒன்று ஏற்பட காரணமானவர் வேணு செட்டியார். அவருக்கு நன்றி சொல்லியாக வேண்டும்தானே?
 
5gi91t6

படம் பற்றி எழுதலாம் என ஆரம்பித்த கட்டுரைதான் இது. ஆனால், முள்ளும் மலரும் விதை எங்கிருந்து விழுந்தது, வளர்ந்தது, மலர்ந்தது என கொஞ்சம் தேடிப் பதிய வேண்டும் போல் இருந்தது. இப்போது படம் பற்றியும் கொஞ்சம் பேசலாம். மகேந்திரன் தான் நினைத்தது போலவே ஒரு காட்சி மொழியாக `முள்ளும் மலரும்' தந்தார். அது வழக்கங்களை கட்டுடைத்து வேறு ஒரு பாதையை உண்டாக்கிக் கொடுத்தது. எப்படி? முதலில் இதன் முதன்மை பாத்திரங்களை எடுத்துக் கொள்ளலாம். காளி, வள்ளி, மங்கா, குமரன். இதில் யார் ஹீரோ? யார் வில்லன்?. ஆனால் இதில் ஹீரோவும் கிடையாது வில்லனும் கிடையாது என்பதுதான் சுவாரஸ்யம். நிகழும் சம்பவங்களும், காளிக்கு தங்கை வள்ளி மேல் இருக்கும் பாசமும், குமரன் மேல் உண்டாகும் தப்பான அபிப்பிராயம் மட்டுமே கதையை வளர்த்துக் கொண்டு போகும். மனித மனதைவிட சிக்கல் நிறைந்த ஒன்று எங்குமே இருந்துவிடாது. அப்படியான மனதாய் காளி கதாபாத்திரத்தை வைத்ததும், அதை வைத்து உள்ளே நடக்கும் சுவாரஸ்யமான ஆட்டமும்தான் படம் என்பதே வழக்கத்தை உடைத்தல்தானே.

ரஜினி எனும் அசுரத்தன நடிகனை இந்தப் படம் போல் வேறு எதில் பார்க்க முடியும். காளி விபத்தில் தன் கையை இழந்த பின், அந்தப் பக்கமாக சுடுதண்ணி வைத்திருக்கும் தங்கை "அண்ணே இத கொஞ்சம் எறக்கி வையேன்" என்பாள். எந்த வசனமும் இல்லை, சின்னதாக விரக்தியை ஒரு புன்னகையில் காட்டிவிட்டு நகர்ந்து செல்வார் காளியாக நடித்த ரஜினி. இந்தப் படத்தில் ரஜினி இணைந்ததும் சுவாரஸ்யமான சம்பவம். `ஆடுபுலி ஆட்டம்' பட சமயம்தான் ரஜினியும் மகேந்திரனும் மிக நெருங்கிப் பழகிய காலம். அப்போதெல்லாம் விடிய விடிய சினிமா பேசியிருக்கிறார்கள் இருவரும். இந்த மனுஷன் கிட்ட எதோ இருக்கு. வெறி பிடிச்சு அலையற இவருக்கு நல்ல தீனி போடும் ரோல் கிடைச்சா பின்னிடுவார் என மனதுக்குள் நினைத்து வைத்தார் மகேந்திரன். எதிர்பாராத விதமாய் அவரே இயக்குநர் ஆகவேண்டிய சூழல், காளி கதாபாத்திரத்தில் ரஜினிதான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் சொல்கிறார் மகேந்திரன். வேணு ரஜினி வேண்டாம் என சொல்ல, அவர் இல்லன்ன இந்தப் படமே வேண்டாம் சார் என சொல்லிவிட்டு செல்கிறார். ஒரு நான்கு நாட்கள் கழித்து வேணு மகேந்திரனை சந்தித்து "சரிப்பா, அந்தப் பையனையே நடிக்க வைக்கலாம்" என ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்குள் ரஜினி மட்டுமல்ல ஷோபாவோ, ஃபடாஃபட் ஜெயலக்ஷ்மியோ, சரத்பாபுவோ செய்யாத ஒன்று என என்ன இருக்கப் போகிறது. இவர்களை மீறி ஒருவர் திமிறிக் கொண்டு ஜாலம் புரிந்திருக்கிறார், இளையராஜா.
 
e54kkku

படத்தின் துவக்கத்தில் சிறுவர்களாக காளியும் வள்ளியும் தெருவில் வித்தை காட்டும் ஒரு காட்சி வரும். கட்டையின் முனையில் படுத்திருக்கும் சிறுமி வள்ளியை பார்த்தபடியே கொட்டு மேளம் அடித்துக் கொண்டிருப்பான் சிறுவயது காளி. பின்பு படத்தில் காளி - வள்ளி சம்பந்தப்பட்ட பல காட்சிகளில் இந்த கொட்டு மேளத்தின் சப்தம் ஒலிக்கும். அதே போல் வள்ளி - குமரன், காளி - மங்கா என படத்தின் எல்லா காட்சிகளுக்குமான தனித்துவத்தை இசை வழியாகக் கொடுத்திருப்பார் இளையராஜா. பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு என்ன என்றால், அந்த மண்ணின், அந்த மனிதர்களின், அந்த வெயிலின் உணர்வு எதுவோ அதேதான். கதைக்குள் இன்னொன்றும் கவனிக்க இருக்கிறது. காளியின் ஈகோ, ஊரார் முன் தனக்கு உள்ள மரியாதை என்ன ஆகும் என்பது. இதை வைத்துதான் குமரனுடன் மோதலும் நடக்கும். இதை ஒரு தெளிவான எழுத்தை வைத்து மட்டுமே நிறைவாகவும், லாஜிக்காகவும் கதையை முடிக்க முடியும். ஈகோ... காளியின் ஈகோவை நிறைவு செய்ய படத்தின் முடிவில் வள்ளி ஒன்றை செய்வாள். தன்னுடைய வாழ்க்கைக்காக ஊரே சிரமப்பட்டு திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கும். ஆனால், அதை எல்லாம் உதறிவிட்டு, அவனிடமே திரும்பி ஓடி வந்ததும் காளி சொல்வான், "உலகத்துல யாரும் வேண்டாம். என் அண்ணன் ஒருத்தன் போதும்னு காமிச்சிட்டாள்ல. இப்ப உங்க மூஞ்சிய எல்லாம் எங்கடா வெச்சிக்கப் போறீங்க?" இங்கு தன்னுடைய ஈகோவை சமப்படுத்திக் கொள்வான். அதோடு "எனக்கு உங்கள பிடிக்கல சார், என் தங்கச்சிக்கு உங்களப் பிடிச்சிருக்கு.ஆனா, உங்க எல்லாரையும் விட நான்தான் அவளுக்கு முக்கியம்னு இப்போ காமிச்சிட்டாளே. அந்த பெருமையும் சந்தோஷமும் போதும் சார், சாகறவரைக்கும் எனக்கு. அந்த கர்வத்துலையும், திமிர்லையும் நான் இப்போ ஒரு காரியம் பண்ணப் போறேன்.முத்துச்சாமி அம்பலத்துடைய மகளும், என்னுடைய ஒரே தங்கச்சியுமான வள்ளிய, உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு நான் மனப்பூர்வமா சம்மதிக்கறேன்" என்கிற நியாயமான க்ளைமாக்ஸும் வைத்து படம் முடியும். முன்பு சொன்னது மாதிரியே மகேந்திரன் தன்னுடைய சினிமாக்களின் மூலம் காட்சி மொழி என்றால் என்ன என செய்து காட்டியிருக்கிறார். `முள்ளும் மலரும்', `உதிரிப்பூக்கள்' `ஜானி' என எதை எடுத்தாலும் அதை உங்களால் உணர முடியும். தொடர்ந்து இந்தப் படங்கள் குறித்துப் பேச வேண்டிய சூழல் இது. காரணம் எதை எல்லாம் பார்த்து, இதெல்லாம் சினிமாவே கிடையாதே என மகேந்திரனுக்கு பதற்றம் உண்டானதோ, எந்த சினிமாக்களை `துக்ளக்' பத்திரிகையில் போஸ்மார்டம் செய்தாரோ, அப்படியான சினிமாக்கள் இப்போதும் தமிழில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

மீண்டும் தெளிச்சியடைந்து ஒரு சினிமா வந்ததென்றால், அது ஒன்றைக் காரணம் காட்டி `அப்படி ஒரு சினிமா வந்திடுச்சுல, எங்களுக்கும் வழி விடுங்க' என அந்த நல்ல சினிமாவின் அல்லையில் மிதித்து கொல்லையில் தூக்கி எறிய பல குப்பைகள் வந்து வாராவாரம் விழுகின்றன. எனக்குத் தெரிந்து அந்த இயக்குநர்கள் எல்லோருக்கும் சினிமா பற்றிய சின்ன புரிதலுக்காக மகேந்திரன் படங்களைப் பார்க்க பரிந்துரைக்கிறேன். மகேந்திரன் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். இங்கு நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள், நல்ல இயக்குநர்கள், டெக்னீஷியன்ஸ் எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உருவாக்கும் சிலவற்றைத் தவிர மற்றவை எதுவும் சினிமாவே கிடையாது. தமிழ் சினிமாவை காதல் செய்யுங்கள் மகேந்திரன் போல, காளிக்கு வள்ளியின் மீதிருந்த அன்பைப் போல. ஒரு `முள்ளும் மலரும்' படம் தரும் நிம்மதியைப் போல.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்