'புரூஸ் லீ' படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக தன் கால்ஷீட் டைரியில் சண்முகம் முத்துசாமியின் ‘அடங்காதே’, வெங்கட் பக்கரின் ‘4ஜி’, வள்ளிகாந்தின் ‘செம’, பாபா பாஸ்கரின் ‘குப்பத்து ராஜா',பாலாவின் ‘நாச்சியார்’, ரவி அரசுவின் ‘ஐங்கரன்’ என செம பிஸி செடியூல். இது தவிர கைவசம் ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’, எழிலின் ‘எக்கடிக்கி போதவு சின்னவாட’ ரீமேக், வெற்றிமாறன் படம், சந்திரமௌலியின் ‘100 % லவ்’ ரீமேக், சீமான் படம், சசி படம் ஆகியவை உள்ளது.
இதில் ‘100 % லவ்’ திரைப்படம் 2011-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம். சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் நாகசைத்தன்யா, தமன்னா டூயட் பாடி ஆடியிருந்தனர். இதன் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கை இயக்குநர் சுகுமாரின் ‘கிரியேட்டிவ் சினிமாஸ் NY’ நிறுவனத்துடன் இணைந்து ‘NJ எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அறிமுக இயக்குநர் எம்.எம்.சந்திரமௌலி இயக்கவுள்ள இந்த படத்தில் ஹீரோவாக ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கவுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இதற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கவுள்ளார், ‘சென்னை எக்ஸ்ப்ரெஸ், தில்வாலே’ புகழ் டட்லி ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். படத்தின் ஷூட்டிங்கை லண்டனில் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. தற்போது, இந்த தமிழ் வெர்ஷனிலும் ஹீரோயினாக நடிக்க தமன்னாவே கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இதர நடிகர்கள் – தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் அப்டேட்ஸ் விரைவில் ட்விட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.