முகப்புகோலிவுட்

கமர்ஷியல் ஹீரோவோ... கதைக்கான ஹீரோவோ கெத்துகாட்டுவார் சூர்யா!

  | July 23, 2018 10:58 IST
Suriya Next Film

துனுக்குகள்

  • சூர்யாவின் தன்னை நடிகனாய் வடிவமைத்து சுவாரஸ்யமானது
  • இன்று அவரது பிறந்தநாள்
  • சூர்யா பற்றிய சிறப்புக் கட்டுரை இதோ
பாலா, கௌதம் மேனன்... அவர்கள்தான் எனக்குத் தெரிந்து சூர்யாவுக்கான இன்னொரு நடிப்பை வெளிக்கொண்டு வந்தது. `நேருக்கு நேர்', `காதலே நிம்மதி', `சந்திப்போமா', `பெரியண்ணா', `பூவெல்லாம் கேட்டுப்பார்', `உயிரிலே கலந்தது', `ப்ரண்ட்ஸ்' என மிக சாதுவாக இருந்தது அப்போது சூர்யா நடித்த கதாபாத்திரங்கள். அதை உடைத்து கருத்த உதடு, முரட்டுத்தன நடவடிக்கையுமாய் "நடி சூர்யா" என அதைத் துவங்கியது பாலா. `நந்தா'வில் காட்டிய வன்மம், அம்மாவுக்கான ஏக்கம், திடீரென முளைக்கும் காதல் எல்லாவற்றையும் சூர்யா கையாண்டது பெரிய பிரம்மிப்பு. காரணம் அதற்கு முன் அந்த சூர்யாவை யாரும் பார்த்ததில்லை, அப்படி ஒரு நடிகன் அவருக்குள் இருக்கிறான் என்று தெரியாது கூட. பிறகு சில படங்கள்... அதன்பின் `காக்க காக்க'.  43 வருடங்களுக்கு முன் இதே நாளில் பிறந்த சூர்யா, முழுமையான நடிகனாய் `காக்க காக்க'வில் மறுபடி பிறந்தார். 

எந்த வேடமும் பண்ணமுடியும் என்ற கெத்து ஒரு நடிகனுக்கு மிகப் பெரும் சௌகர்யம். அது சூர்யாவுக்கு மிக சீக்கிரமே அமைந்தது. "இந்த ரோலா ச்ச அது இவருக்கு செட்டாகாதுப்பா" என எதுவும் சொல்ல முடியாது. கமர்ஷியல் ஹீரோவோ, கதைக்கான ஹீரோவோ இரண்டும் சுலபமாய் சூர்யாவால் செய்ய முடிந்ததற்கு, இயக்குநர்கள் மூலமாய் தன்னை சரி செய்து கொண்டதே காரணம். பலர் இருக்கிறார்கள், அந்தப் பயணமும் அத்தனை எளிதானது இல்லை. அவரின் அந்த சவாரியும், தன்னை தகவமைத்துக் கொண்ட விதமும் கவனிக்க வேண்டியது. 

`ஆசை' படத்தில் நடிகர் சிவக்குமாரின் மகன் சரவணனை (சூர்யா) அறிமுகப்படுத்த விரும்புகிறார் இயக்குநர் வசந்த். ஆனால், தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என சரவணன் சொல்லிவிட, அந்த படத்தில் அஜித் நடித்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு 'நேருக்கு நேர்' படத்தில் விஜய் மற்றும் அஜித் நடிப்பதாக ஷூட்டிங் துவங்குகிறது. ஆனால் சில தேதி சிக்கலால் படத்திலிருந்து விலகுகிறார் அஜித். சீக்கிரம் படப்பிடிப்பு துவங்க வேண்டிய நிலை, குறுகிய காலத்துக்குள் இன்னொரு ஹீரோவைக் கண்டுபிடிக்க வேண்டுமே என்கிற சிக்கல் வசந்துக்கு. மீண்டும் சரவணனிடம் நடிக்க சொல்லிக் கேட்கிறார். தொடர்ந்து கேட்கிறாரே மறுபடி மறுப்பது சரியாக இருக்காது என ஒப்புக் கொள்கிறார். அப்பா அவ்வளவு பெரிய நடிகராய் இருந்த போதும், ஏனோ நடிப்பு பற்றி பெரிதாக எதுவும் தெரியாமல் படத்தில் நடிக்கத் துவங்குகிறார். அந்தப் படம் பற்றி பத்திரிக்கை ஒன்றில் வாசகர் கேள்விக்கு சூர்யா சொன்ன பதில் இன்னுமும் நினைவில் இருக்கிறது. "கார்மென்ட்ஸ் தொழிலதிபர் கனவில் இருந்த என்னை கொண்டு வந்து `நேருக்கு நேர்' படத்தில் நடிக்க வெச்சாங்க. கொல்கத்தாவில் ஷூட்டிங் நடந்தது. நடிப்பு எனக்கு சுத்தமா வரலைனு யூனிட்டே கடுப்பில் இருந்தது. அப்போ லன்ச் ப்ரேக் சமயத்தில் வசந்த் சார்கிட்ட "சார்... கல்கத்தா பிரியாணி சூப்பர்'னு சொன்னதும் `அப்டியா... நல்லா சாப்பிடு ராஜா'னு ஒருவித ஆற்றாமையோடு அவர் சொன்ன கணம், அப்படியே கூனிக் குறுகிப்போனேன். தலையணை நனைய நனைய நான் அழுத அந்த நாள் மறக்கவே முடியாது. இப்போ நினைச்சா... நிம்மதி தர்ற அழுகை!" 
சூர்யாவின் இந்த பதில் எனக்கு நினைவில் இருக்க காரணம் உண்டு. நடிப்புக்கு விருப்பமே இல்லாமல் வந்தாலும், அது பற்றி எதுவும் தெரியவில்லை என்றாலும் கூட அதை முழுமையாக செய்ய முடியவில்லையே என்கிற கவலையை அவரால் அனுமதிக்க முடிந்தது. "எனக்கு இது வராதுன்னு தெரிஞ்சுதான் வந்தேன். அப்பறம் எதுக்கு நல்லா வரலன்னு நான் ஃபீல் பண்ணனும்" என்கிற ரௌடித்தனம் அவருக்கு இல்லை. ஒரு மாணவர் போல், நடிப்பா கத்துக்குறேன், டான்ஸ் வரலைன்னு சொன்னீங்கள்ல அதையும் கத்துக்குறேன் என்கிற முனைப்புதான் அவரை உயர்த்தியது. இங்கிருந்து துவங்குது சூர்யாவின் நடிப்புப் பயணம். அவரால் இயக்குநர்கள் சொல்வதை உணர முடிந்தது. அங்கிருந்து தனக்குள் இருந்த நடிகனை சூர்யா உணர்ந்து கொண்டார் எனத் தோன்றுகிறது.

கேமரா முன்னால் நடிக்க அல்ல, நிற்க, நடக்கக் கூட ஒரு உறுதி இருக்கவேண்டும். அதைப் புரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சம் சொதப்பும் சூர்யாவை ஆரம்பத்தில் பார்த்திருக்கக் கூடும். சரியாக நந்தாவில் அது எதுவுமே இல்லாத ஒரு நடிகனைப் பார்க்க முடிந்தது. பாலா சூர்யாவுக்குள் இருந்த ஒரு தயக்கத்தை உடைத்திருக்கிறார் என்பதை திண்ணமாக சொல்ல முடியும். "பெரிய சண்டியருன்னு நினைப்போ" என ராஜ்கிரண் மிரட்டும் போது பயந்தது போலவே கூடவே தைரியமாகவும் காட்டிக் கொள்ளும் நடிப்பு தயக்கம் இருந்திருந்தால் வந்திருக்காது. இன்னொன்றும் கூட செய்தார் பாலா. பொதுவாக தியேட்டர்ஸ் எனும் நடிப்பு பயிற்சிப்பட்டறைகளில், கூச்சத்தைப் போக்க பல வகை கதாபாத்திரங்களைக் கொடுப்பார்கள். இது எப்படி நடிக்கறது எனத் தயங்கிய யாரும் நிலைக்க மாட்டார்கள். ஆனால் இறங்கி அடிப்பவர்களுக்குப் பல வெளிகள் திறக்கும். அது போலவே பாலாவின் பயிற்சிப்பட்டறை சூர்யாவுக்கு கொடுத்த பாத்திரம் பிதாமகன் படத்தின் சக்தி. தெருவில் உட்கார்ந்து லேகியம் விற்கணும், ஓடும் ரயிலில் அனார்க்கலி கழுத்து கருகமணி கதைகள் சொல்லி வியாபாரம் பார்க்கணும், சித்தனின் அன்பைப் புரிய வேண்டும், இறந்தும் போக வேண்டும். `காக்க காக்க' முடித்த மிடுக்கில் இப்படி ஒரு லோக்கல் இறங்க, அதை செய்யக் கூடிய தைரியம் உள்ளவரால் மட்டுமே முடியும்.

அடுத்து கௌதம் மேனன். படத்தில் பேசிய வசனங்களை விட வாய்ஸ் ஓவர்தான் அதிகம். அதற்கு முன் சூர்யா அந்த டைப் படம் நடித்ததில்லை. எடுத்த எடுப்பிலேயே ரத்தகாயங்களும், குண்டடியுமாய் கரையில் ஒதுங்கிக் கிடக்கும் படி ஆரம்பிக்கும் படம். ஒரு போலீஸ் படம் என்பதையும் தாண்டி, உள்ளுக்குள் இருந்த காதல் அழகு. ரொம்ப கச்சிதமாய் சூர்யாவிடமிருந்து ரொமான்ஸ் வந்ததை காட்டியது இந்தப் படம். அதை இன்னும் அழுத்தமாக நிரூபித்தது `வாரணம் ஆயிரம்'.  அதன் பிறகு பல நேரங்களில் கௌதம் மேனன் பட சூர்யாவை மற்ற படங்களில் கூட ஆங்காங்கே உணர முடிந்தது. ஒன்றுமில்லை அந்த இயக்குநரின் தாக்கம் அப்படி. அதன் பின் வந்த முக்கியமான இயக்குநர் ஹரி. `ஆறு', `வேல்', சிங்கம் சீரிஸ் என சூர்யாவை குடும்பங்களுக்கு நெருக்கமாக்கும் வேலையை கச்சிதமாக செய்தவர். ஏலியன் படமே எடுத்தாலும் ஃபேமிலி செண்டிமெண்ட் வைப்பதில் கில்லாடி ஹரி. மற்ற இயக்குநர்களிடம் நடிக்கும் சூர்யாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சூர்யா ஹரி படங்களில் இருப்பார். 

இதற்கு அடுத்ததாக வந்த ஒரு முக்கியமான படம் பற்றியும் சொல்ல வேண்டும். அது அடைந்த வரவேற்பு என்னவோ குறைவுதான். ஒரு நடிகனாக வெறித்தனம் காட்ட பக்காவான படம் `ரத்தசரித்திரம்'. அழுகையே வரும் அளவுக்குப் பகை, கிட்டத்தட்ட ஒரு பித்துநிலை அடைய, பழி வாங்குதல் தரும் அமைதியை தூய்மையாக காட்டியிருப்பார். இது வழக்கமாக சூர்யா நடிக்கும் எந்தப் படத்திலும் வராது. எனவே இந்த வெறியைக் காட்ட, நடித்துப் பார்த்துக் கொள்ளும் ஒரு பயிற்சியாய் சூர்யாவுக்கு அந்தப் படம் கிடைத்ததாக நினைத்துக் கொள்வேன். நேருக்கு நேர், ப்ரெண்ட்ஸ், பிதாமகன், ஆய்த எழுத்து என இன்னொரு நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும் சரி, தனியாய் நின்றாலும் சரி சொடக்கு மேல சொடக்குப் போட்டு பட்டையைக் கிளப்பும் ஆள். ஒரு கட்டத்தில் இதற்கு அடுத்து சூர்யாவால் என்ன செய்ய முடியும் எனக் காட்ட ஒரு படம் அமையவில்லையே என்கிற கவலை பலருக்கும் வந்தது.

ஆனால், அது ரொம்ப நாளைக்கு இல்லை என்பது போல் ஒரு செய்தி வந்தது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் `என்.ஜி.கே' பட அறிவிப்புதான் அது. இங்கு சூர்யாவின் அடுத்த கட்டம் என்ன என்பதைப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது. காரணம் நடிகராகவும் சரி இயக்குனராகவும் சரி இது மிகப் பெரும் வலுவான கூட்டணி. என்ன இருக்கிறது என சூர்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லியபடி காத்திருப்போம். வெரட்டி வெரட்டி வெளுத்து எடுங்க சூர்யா!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்