முகப்புகோலிவுட்

லண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள அனிருத்

  | April 05, 2018 13:01 IST
Anirudh Live Concert

துனுக்குகள்

  • அனிருத் முதன்முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்
  • ஜுன் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
  • ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் அனிருத்
தமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிருத் முதன்முறையாக லண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். ஜுன் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் லண்டன் மற்றும் பாரீஸில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ‘ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனமும், ‘ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ்’ என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது. இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது… “ஜுன் 16-ஆம் தேதியில் லண்டனில் உள்ள S S E Wembly Arena என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் இசை நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பிரபல இணையதளங்களிலும் (டிக்கெட் மாஸ்டர்) இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இசையமைப்பாளர் அனிருத் லண்டனில் முதன்முறையாக நடத்தும் இசை நிகழ்ச்சி இது. இந்த இசை நிகழ்ச்சி Gig Style Show பாணியில் நடைபெறவிருக்கிறது. இந்திய இசைக்கலைஞர் ஒருவர் இதுபோன்ற வகையில் இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி நடத்துவது இது தான் முதன்முறை. இது இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளிலுள்ள அனிருத் ரசிகர்களையும், லட்சக்கணக்கான இசை ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் ஜுன் 17-ஆம் தேதியன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் Zenith என்னுமிடத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இங்கு இதுவரை எந்த தமிழ் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. அனிருத் அவர்கள் தான் முதன்முறையாக இங்கு இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்துகிறார். இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது.

‘ஒய் திஸ் கொலவெறி…’ என்ற பாடல் மூலம் உலகம் முழுவதும் தனக்கான ரசிகர்களை உருவாக்கியிருக்கும் முன்னணி இளம் இசைகலைஞரான அனிருத்தின் இசையுலக பயணத்தில் இந்த இசைநிகழ்ச்சி வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இந்த இசை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தமிழ் பாடல்கள் மட்டுமே இடம்பெறவிருக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் இசைக்கு மொழியில்லை என்பார்கள். அதனால், அனிருத்தின் ரசிகர்களும், இசை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இசையமைப்பாளர் அனிருத் தற்போது, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கைகோர்க்கும் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா ’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது வரை 20 திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியிருக்கும் அனிருத் இளைஞர்களை கவரும் வகையில் இசையமைத்து வருகிறார். முன்முறையாக லண்டன் மற்றும் பாரீஸில் நடைபெறவிருக்கும் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்காக எங்கள் நிறுவனங்கள் இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் சிறப்பான முறையில் விளம்பரங்களையும், சந்தைப்படுத்துதலையும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக லட்சக்கணக்கானோர் இந்நிகழ்ச்சியை நேரலையாக கண்டு ரசிப்பதற்கு ஏற்ற வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறோம். அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில் பிரம்மாண்டமானதாகவும், பிரம்மிக்கத்தக்க வகையிலும் இருக்கவேண்டும் என்பதற்காக கடுமையாக பணியாற்றி வருகிறோம். இந்த இசை நிகழ்ச்சியில் ஜெனிதா காந்தி உள்ளிட்ட பல முன்னணி பாடகர்களும், பாடகிகளும், இசை கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இதைப் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்