விளம்பரம்
முகப்புகோலிவுட்

பாகுபலி குறை, குற்றம், வெறுப்பு

  | May 03, 2017 11:09 IST
Baahubali 2 Review

துனுக்குகள்

  • இந்திய சினிமாவுலகிற்கே மேஜிக்காக நிகழ்த்தி காட்டிவிட்டார் ராஜமௌலி
  • தமிழ்,தெலுகு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியானது
  • உலகம் முழுவதும் சுமார் 8500 திரைகளில் வெளியானது
எந்த ஒரு படைப்பிலுமே குறை கூறலாம், குறை என்பது ஆக்கப்பூர்வமான ஒன்றை எடுத்துறைக்கவோ ஏற்கனவே இருப்பதை மேலும் செம்மைப்படுத்தவோ உபயோகப்படும் ஒரு அற்புதமான கருவி.

ஆனால் இங்கு நடப்பது என்ன, குறை கூறுகிறேன் என அபாண்டமான பழிகளும் குற்றச்சாட்டுகளும், சுய கொள்கைகளை திணிப்பதும் தான் நடக்கின்றன.

அனைவரையும் திருப்தி படுத்தும் ஒரு படைப்பு என்பது உலகத்திலேயே கிடையாது, பல வகையான எண்ணங்களும் கருத்துக்களும் தான் கலைக்கு அழகு, ஆனால் அக்கருத்து வேறுபாடுகள் வெறுப்பை கக்கும் கருவியாகவோ தன் சுய மேட்டிமைதனத்தை காட்டுவதாகவோ மாறும் தருணம் தான் ஆபத்தானது.
பாகுபலி போன்ற ஒரு சரித்திர பின்னணி கொண்ட புனைவு கதையில் ராஜாமாதா சிவகாமி உட்காரும் பாங்கு சரியில்லை என்பதிலிருந்து கட்டப்பாவை வைத்து அரசியல் செய்வது வரை வரும் விமர்சனங்கள் கவலையை தருகின்றன.

அரசர் காலத்து திரைப்படத்தில் அடிமை என்று ஒருவரை காட்டுவது தவறு என்பது என்ன வகையான விமர்சனம் என்று புரியவில்லை, அதை நியாயப்படுத்துவது தான் தவறே அன்றி அதை காட்டுவதே தவறல்ல.

அடிமை என்பதால் மட்டுமே கட்டப்பாவை வைத்தே பாகுபலியை கொல்லும் காட்சியையும் கொன்றுவிட்டு அதே அரியாசனத்தில் அமரும் கொடூரனுக்கு கட்டுப்பட்டு தேவசேனையை விடுவிக்க வருபாவனை எதிர்க்கும் காட்சியையும் இயக்குனரால் வைக்க முடிகிறது.

அவர் சுயமாக சிந்திக்கும் மனிதராக இருந்தால் அவரை வைத்து இந்த காட்சிகளை எழுதுவது அபத்தமாக அல்லவா இருக்கும்.

இதே படத்தில் பிற்போக்கான எண்ணங்களுக்கு எதிரானவன் பாகுபலி என்று காட்டுவதற்கே கட்டப்பாவுடன் உணவருந்தும் காட்சியும், பாகுபலி தேவசேனையின் குழந்தைக்கு தாத்தா எனும் மரியாதையை அளிக்கும் காட்சிகளும் அமையப்பெற்றன. அதை வேண்டுமென்றே மூடி மறைத்து இதை மட்டும் வசவும் எண்ணத்தை தான் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

சில நாட்களுக்கு முன் இதே போன்றொரு வெறுப்பை கக்கும் பதிவுகள் பல மணி ரத்னத்தை நோக்கி எறியப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் அவர் விளிம்பு நிலை மனிதர்களை வைத்து படம் எடுக்கவில்லை என்பதாலும் அவர் சாதியும். மணி ரத்னம் அவருக்கு தெரிந்ததை எடுக்கிறார், அவர் விளிம்புநிலை மனிதர்களை பற்றி எடுத்தே ஆகவேண்டும் என்று மறைமுகமாக கட்டயப்படுத்துவதே ஒரு வகையான ஆதிக்க மனப்பான்மை தானே, தாலி கட்டாமல் தெருவில் செல்லும் ஆணையும் பெண்ணையும் கட்டையால் அடிக்கும் கும்பலுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். இப்படி ஒவ்வொருவரும் தான் நினைப்பதை செய்யவில்லை என்றால் வசவுமழை பொழிவேன் என்று கிளம்பினால் கருத்து சுதந்திரத்தின் கதி என்ன ஆகும்.

முதல் பாகத்தில் சில காட்சிகள் விமர்சனத்திற்கு உட்பட்டதால் இப்பாகத்தில் மேலும் சிரத்தையுடன் யாரையும் சற்றும் நிந்திக்காத நிந்திப்பது போல கூட தெரியாத வகையில் காட்சிகளையும் வசனத்தையும் அமைத்திருக்கிறார் ராஜ மௌலி.

இதிலும் பெண்ணியம் பேசும் கனவான்கள் தேவசேனையை அடுப்படியில் அடக்கிவிட்டனர் என்றும் சிவகாமி உட்காரும் பாங்கு சரியில்லை என்றும் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இது தெலுங்கு மக்களுக்காக தெலுங்கு இயக்குனர் எடுத்த படம் , இது ஒன்றும் உலகப்படம் இல்லை என்றும் ஆகச்சிறந்த அறிய கண்டுபிடிப்புகளை வரிசையாக பதிவிட்டு தங்கள் மேட்டிமைத்தனத்தையும் அகந்தையையும் வெளியிட்டு சுய இன்பம் காண்பது எந்த வகை நியாயம் என்பது சமந்தப்பட்டவற்கே வெளிச்சம்

குறை என்பது ஆக்கபூர்வமானது, வெறுப்பை கக்குவது இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அது பிரிவினையை மட்டுமே ஏற்படுத்தி வெறுப்பையும் வெறுமையையும் மட்டுமே விளைவிக்கும்..

விவாதிப்போம் ஆக்கபூர்வமாக...

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்