முகப்புகோலிவுட்

2017இல் தமிழில் முத்திரை பதித்தவர்கள்

  | December 28, 2017 22:30 IST
Pushkar Gayathri

துனுக்குகள்

  • தரமான படைப்புகளுடன் பல புதுமுக இயக்குனர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள்
  • இவ்வருடம் பல நடிகர்களுக்கு தாங்கள் இழந்த இடத்தை மீட்டுக்கொடுத்திருக்கிறது
  • கடந்த பத்து வருடங்களில் இவர்கள் இயக்கிய படங்கள் வெறும் மூன்று தான்
ஒவ்வொரு கலைஞனுக்கும் தன் துறையில் முத்திரை பதிக்கவேண்டுமெனும் ஆசை அவர்களுக்குள் எரிந்து கொண்டுதானிருக்கிறது, ஒரு சிலருக்கு அவர்களின் அறிமுக படத்திலேயே அதற்கான வாய்ப்பு அமைந்துவிடும், சிலருக்கோ பல காலம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும்.

இப்படி போராடி முட்டி மோதி சாதித்த பிறகு அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்களும் ஆதரவும் மட்டுமே அவர்களின் உழைப்பிற்கு அர்த்தம் சேர்க்கும் ஒரே வெகுமதி.

2017ஆம் ஆண்டில் அப்படி சொல்லி அடித்த கலைஞர்களை அங்கீகரிக்கும் ஆதரவளிக்கும் ஊக்குவிக்கும் ஒரு எளிய முயற்சியே இக்கட்டுரை...
GK விஷ்ணு
 
gk vishnu

ஒளிப்பதிவு ஒரு படத்தின் மிக முக்கியமான துறை, இயக்குனரின் கனவுகளை அவர் நினைத்தபடி ஒளிப்பதிவாக மாற்றுவது மட்டுமல்லாமல் ஒரு படத்தின் வேகத்தை, உணர்ச்சியை, அதன் மொழியை ரசிகனுக்கு கூறாமல் கூறி அவனே லயிக்க வைக்கும் ஒரு அதி முக்கியமான பணி.

திரையுலகில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் ஒரு முதல் தட்டு நடிகரின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு கடினமானதென்று.

முதல் படமே இத்தனை பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் ஒரு முதல் தட்டு நடிகரின் படமாக அமைவதெல்லாம் வெறும் அதிர்ஷ்டமல்ல, அதன் பின் இருக்கும் உழைப்பு அபாரமானது.

ஒரு அறிமுக ஒளிப்பதிவாளர் பணியாற்றிய படம் என்பதே யாராவது கூறினால் மட்டுமே தெரியுமளவிற்கு ஒரு தேர்ந்த ஒளிப்பதிவு வழங்கியிருந்தார் விஷ்ணு. Put Chutney எனும் யூட்யூப் சேனலில் தொடங்கிய பயணத்தை, 2017 அவரை மெர்சல் படத்தின் ஒளிப்பதிவாளராக மாற்றியிருக்கிறது.

சாம் CS
 
sam cs

ரத ரத ரததா என தொடங்கும் "கருப்பு வெள்ளை" பாடலும் விக்ரம் வேதாவின் தீம் இசையும் போன் ரிங்க்டோன்களாக இன்றும் பற்றி எரிந்துகொண்டிருக்க, மறுபுறம் யாஞ்சியின் அழகில் சொக்கி அனுதினமும் காதலர்களை உழல விட்டிருக்கிறார் இசையமைப்பாளர் சாம் cs.

IMDB யின் தரவுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் சாம் 2012 ஆம் ஆண்டே இசையமைக்க தொடங்கிவிட்டார்.

அம்புலி, ஆ, கள்ளப்படம், கடலை என இவர் பணியாற்றிய பல படங்கள் கவனிக்கப்படாமல் சென்ற நிலையில் 2017 இவருக்கு விக்ரம் வேதா, மெல்லிசை என பெயர் சொல்ல இரு திரைப்படங்களை கொடுத்திருக்கிறது, அதுவும் யாஞ்சி, விக்ரம் வேதா பின்னணி இசை இவரை நேராக கவனிக்கப்பட இசையமைப்பாளர்களில் ஒருவராக சேர்க்க வைக்கிறது.

சாமின் வெற்றி அவரின் நான்கு வருட போராட்டத்தின் வெகுமானம்.

MS பாஸ்கர்
 
ms bhaskar

தொன்னூறுகளில் பிறந்தவர்களுக்கு இவரை MS பாஸ்கராக தெரிவதற்கு முன்பே பட்டாபியாக தெரியும். "சின்ன பாப்பா பெரிய பாப்பா" எனும் தொலைகாட்சித்தொடரில் பட்டாபி எனும் ஒற்றை காது கேளாத நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தன்னை ஒரு நல்ல நகைச்சுவை நடிகராக MS பாஸ்கர் வெளிப்படுத்தினார்.

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்னும் சிறு சிறு கதாபாத்திரங்களுள் இவர் திறமை அடைப்பட்டுக்கொண்டிருந்தது, எப்போதாவது இவரின் திறமையை அறிந்த ஒரு சிலர் இவரை பயன்படுத்தி வந்தார்கள், உத்தம வில்லனில் கமலிடம் தான் செய்த துரோகத்தை தன் வாயால் கூறும் கதாபாத்திரம் அதன் சான்று.

8 தோட்டாக்கள் படம் இவரின் பல வருட காத்திருப்பை முடித்து வைத்து, தற்காலத்தில் நமக்குள் இருக்கும் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் முக்கியமானவர் இவர் என்பதை வெளிப்படுத்தியது.

SR பிரபு
 
sr prabhu

Potential studios மூலம் இரு படங்கள், Dream warriors எனும் சொந்த நிறுவனம் மூலம் மூன்று தரமான படங்கள் என தரமான படைப்புகளை வைத்தும் பணம் செய்ய முடியும் என நிரூபித்து தன் தயாரிப்பு நிறுவனத்தின் மேல் ஒரு நல்ல மரியாதையை ரசிகர்கள் மத்தியிலும் கலைஞர்கள் மத்தியிலும் சம்பாதித்திருக்கிறார்.

மாயா, மாநகரம், அருவி, தீரன் என இவர் தயாரிப்பில் வெளிவந்து, மிக முக்கியமாக வர்த்தக ரீதியான வெற்றியும் பெற்றிருக்கும் படங்கள் திரையுலகில் ஆரோக்கியமானதொரு போட்டியையும் நம்பிக்கையையும் உருவாகியிருக்கிறது.

ஒரு தயாரிப்பு நிறுவனம் நல்ல படங்கள் செய்தும் சம்பாதிக்கலாம் என செய்து காட்டிக்கொண்டிருக்கும் SR பிரபுவிற்கு வாழ்த்துக்கள்.

புஷ்கர் - காயத்ரி
 
pushkar gayathri

இரட்டை இயக்குனர்கள் உலகத்தில் வெகு குறைவு, இந்தியாவில் அதைவிட குறைவு, கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து படம் இயக்குவதென்பது அரிதிலும் அரிதானது.

2007ஆம் ஆண்டே 'ஓரம் போ' திரைப்படத்தின் மூலம் கால்பதித்தாலும், இவ்வருடத்தின் மாபெரும் வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்றான விக்ரம் வேதா தான் இவர்களை தமிழகம் முழுவதும் மக்களிடையே கொண்டு சேர்த்தது.

கடந்த பத்து வருடங்களில் இவர்கள் இயக்கிய படங்கள் வெறும் மூன்று தான் என்றால் நம்ப முடிகிறதா?

ஆனால் அவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் எடுத்துக்கொள்ளும் நேரமும் அப்படத்தை செம்மைப்படுத்தி தரத்தை வலுவாக்க உதவுகிறது. விக்ரம் வேதாவின் வெற்றி அதை இந்தியில் மீட்டுருவாக்கம் செய்ய பலத்த போட்டியை உருவாகியிருக்கிறது.

ஓவியா:
 
oviya

மேலே குறிப்பிட்ட அத்தனை பேரும் படங்களில் பணியாற்றி புகழ் அடைந்தவர்கள், ஆனால் தன் சுயத்தை விடாமல் தானாக இருந்ததன் மூலம் மட்டுமே ஒருவர் அனைவருக்கும் பரீட்சியமானார், அவர் ஓவியா. பிக் பாஸிற்கு பிறகு இவருக்கு கிடைத்திருக்கும் கவனமும், ஸ்டார் அந்தஸ்தும் , ரசிகர்கள் ஆதரவும், அடுத்தடுத்து அரை டஜன் படங்களையும், விளம்பரங்களையும் இவர் வசம் சேர்த்திருக்கிறது.

இயக்குனர்கள்:

2017ஐ இயக்குனர்களின் ஆண்டென்று கூறும் அளவிற்கு தரமான படைப்புகளுடன் பல புதுமுக இயக்குனர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

தன் கதையை மட்டுமே வைத்துக்கொண்டு அனைவரின் கவனத்தை ஈர்த்த ஸ்ரீ கணேஷ், திரைக்கதை நகர்த்தலும் அதன் கட்டமைப்பையும் வைத்து தன் திரைப்படத்தை சுவாரசியமாக்கிய லோகேஷ் கனகராஜ், சமூகத்தின் முக்கியமான முரண்களை பேசிய அறம், சமூகம் பிறழும் இடத்தை படமாக்கிய அருவி, உண்மையின் உக்கிரத்தை உணர வைத்த தீரன், இது போல வேறேதும் உள்ளதோ என ஆச்சரியப்படவைத்த பாகுபலி என இயக்குனர்களின் ருத்ர தாண்டவமே நிகழ்ந்திருக்கிறது.

நடிகர்கள்:

நடிகர்களை எடுத்துக்கொண்டால் இவ்வருடம் பல நடிகர்களுக்கு தாங்கள் இழந்த இடத்தை மீட்டுக்கொடுத்திருக்கிறது, பல திறமையான புதுமுகங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

மெட்ராஸ் படத்திற்கு பிறகு கார்த்திக்கு அவரின் திறமைக்கு தீனி போடும் அளவில் அமைந்த தீரன், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜின் நடிப்பை உலகறியச்செய்த பாகுபலியில் தொடங்கி, MS பாஸ்கர், அறம் ராமச்சந்திரன், மேயாத மான் இந்துஜா வரை பலருக்கு அடையாளத்தை தேடிகொடுத்திருக்கிறது.

பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைவருக்கும் NDTV தமிழ் சினிமாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்