விளம்பரம்
முகப்புகோலிவுட்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி மனு - அவ்வளவு மோசமான நிகழ்ச்சியா 'பிக் பாஸ்'?

  | July 14, 2017 13:54 IST
Bigg Boss Tamil

துனுக்குகள்

  • சமூக வலைத்தளங்களில் சூடான விவாதங்களை ஏற்படுத்தும் பிக் பாஸ்
  • இதுவரை அதிக டி.ஆர்.பி'யை பெற்றுள்ள நிகழ்ச்சி பிக் பாஸ்
  • இந்த நிகழ்ச்சியை தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 3 வாரங்களாய், தமிழ்நாட்டின் மிகப்பெரிய பரபரப்பே 'ஸ்டார் விஜய்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தான். வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட, வெவ்வேறு வாழ்க்கை முறையை சேர்ந்த 14 பிரபலங்கள் வெளியுலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஒரு வீட்டிற்குள் அடைக்கப்படுவர். அங்கே அவர்கள், 100 நாட்களுக்கு ஒரு குடும்பம் போல் வாழ்ந்து காட்ட வேண்டும். 'பிக் பாஸ்' (என சொல்லப்படுகிற நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்) கொடுக்கின்ற வீட்டு வேலைகளையும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கொடுக்கப்படும் மற்ற பணிகளையும் சரியாக செய்து அனைவரும் தங்கள் ஒற்றுமையையும், கூட்டுமுயற்சியையும், தனிமனித ஒழுக்கத்தையும் மற்ற நற்பண்புகளையும் நிரூபிக்க வேண்டும். இந்நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையில், வாரம் ஒருவர் அந்த 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். கடைசி வரை, அந்த வீட்டினுள் இருக்கும் ஒருவரே வெற்றியாளர்; அவருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

1999ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் தோன்றிய 'பிக் பிரதர்' என்கிற இந்த ரியாலிட்டி ஷோவை மையமாக வைத்து, கடந்த 18 ஆண்டுகளாய் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 54 நாடுகளில் வெவ்வேறு முறையில் வெவ்வேறு விதிகளோடு அந்தந்த நாட்டிற்கேற்ப இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 2006 முதல் இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளாய், ஹிந்தியிலும் கன்னடம் உட்பட வேறு சில மொழியிலும் 'பிக் பாஸ்' என்கிற பெயரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இது வரை, இந்தியில் அமிதாப் பச்சன், சல்மான் கான், சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி உட்பட பல முன்னணி பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர்.
 
bigg boss

இந்தாண்டு முதல் இந்த நிகழ்ச்சியை, 'ஸ்டார்' தொலைக்காட்சி நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழில் 'உலக நாயகன்' கமலஹாசனும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். 3 வாரங்களுக்கு முன் தமிழில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இல்லாத அளவிற்கு தொடர்ச்சியாக மிக அதிக டி.ஆர்.பி'யை பெற்றுள்ளதாகவும், அதிகபட்சமாக மூன்றே முக்கால் கோடி மக்கள் இந்நிகழ்ச்சியை பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் சில சூடான விவாதங்களைத் தாண்டி, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது இந்நிகழ்ச்சி.

இந்நிலையில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தடை செய்யக்கோரியும் நடிகர் கமல்ஹாசனையும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரையும் கைது செய்யக் கோரியும் இந்து மக்கள் கட்சி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது. இதே போல், மதுரை மாநகர காவல் ஆணையரிடம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஒரு மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அமைப்புகளும் அளித்த புகார் மனுவில் சமூகத்தை சீரழிவுக்கும், இந்திய மக்களின் கலாச்சார சீரழிவுக்கும் வித்திடும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருப்பதாலும், தமிழர்கள் தங்கள் உயிரினும் மேலாக நினைத்திடும் தமிழ்த்தாய் வாழ்த்தை கேலி செய்ததாலும், மேற்கொண்டு இதுபோல் எந்தவித கலாச்சார சீரழிவும் ஏற்படாமல் இருக்கவும், இந்த நிகழ்ச்சியை தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே, 'பிக் பாஸ்' நிகழ்ச்சி அவ்வளவு மோசமானதா? இவ்வாறு தடை கோரும் அரசியல்வாதிகளுக்கும் அமைப்புகளுக்கும் நம் மக்கள் மீதும், கலாச்சாரம் மீதும் உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா? இவர்களது இலக்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியா, அல்லது நடிகர் கமல்ஹாசனா? அல்லது, இதெல்லாம் வெறும் அரசியல் விளம்பரத்திற்காக மட்டுமே செய்யப்படுபவையா? என பல கேள்விகள் எழாமலில்லை.

இதில் பல கேள்விகளுக்கு கமல்ஹாசன் நேற்றே தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் முகத்தில் அடித்தாற்போல் தெளிவாக பதிலளித்து விட்டார். அரை மணிநேரம் நீடித்த அந்த சந்திப்பில், இந்நிகழ்ச்சி குறித்த எல்லாவிதமான சூடான விவாதங்களும் அவர் முன்வைக்கப்பட்டது; எல்லாவற்றிற்கும் பொறுமையாக, சிரித்துக்கொண்டே பதிலளித்து முடித்தார். பொதுவாக இப்படிப்பட்ட எதிர்ப்புகளுக்கு எப்பொழுதும் உடனடியாக பதில் பேசாத கமல் அவர்கள், நேற்று உடனடியாக பத்திரிக்கை நண்பர்களை அழைத்து தெளிவுபடுத்திய காரணம் - தன்னை நம்பி முதலீடு செய்திருக்கும் 'ஸ்டார் விஜய்' தொலைக்காட்சிக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணமாக இருக்கலாம்; அல்லது, 'ஸ்டார்' நிறுவனமே கூட அவரை பத்திரிக்கையாளர்களை அழைத்து விரிவாக பேசச்சொல்லி கோரிக்கை வைத்திருக்கலாம்.

நிச்சயமாக, 'பிக் பாஸ்' அவ்வளவு மோசமான நிகழ்ச்சி எல்லாம் இல்லை. 'நாட்டில் ஜல்லிக்கட்டு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை, கதிராமங்கலம் பிரச்சினை, ஜி.எஸ்.டி பிரச்சினை என ஆயிரம் பிரச்சினை இருக்கும்பொழுது இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி தேவையா?' என கேட்கும் சில அரசியல்வாதிகளும் அமைப்புகளும் மட்டும் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண என்ன செய்துவிட்டார்கள்? 'இந்த நிகழ்ச்சி ஆபாசமாக இருக்கிறது, கலாச்சார சீரழிவை உண்டாக்குகிறது' என சொல்லும் இவர்கள் எல்லாம் கள்ளக்காதல், இரண்டு பொண்டாட்டி கதைகளை மட்டுமே வைத்துக் கொண்டு ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் தினமும் ஒளிபரப்பப்படும் நூற்றுக்கணக்கான டிவி சீரியல்களை ஏன் தடை செய்யச் சொல்லவில்லை? அடுத்த வீட்டு பிரச்சினைகளை பொது மக்களுக்கு கொண்டு வந்து காட்டி பஞ்சாயத்து பண்ணும் கேவலமான நிகழ்ச்சிகளை ஏன் தடை செய்யச் சொல்லவில்லை? 'இந்த பொண்ணுங்களே இப்படித்தான்' 'அடிடா அவள, உதைடா இவள' 'என்னா பு***க்கு லவ் பண்றோம்.. பொண்ணுங்களைத் திட்டாத, மாமா... அவளை வேணா ஓ***கோ மாமா' என தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையையும் வக்கிரங்களையும் தூண்டும் நூற்றுக்கணக்கான பாடல்களையும், 'ரெமோ', 'அன்பானவன் அசாராதவன் அடங்காதவன்', 'சகலகலா வல்லவன் என்கிற அப்பாடக்கர்' போன்ற படங்களையும் எதிர்த்து இவர்கள் ஏன் போராடவில்லை? ஏனென்றால், இவர்கள் அக்கறை மக்கள் மீதல்ல. கமல் போன்ற ஒருவரை எதிர்ப்பதால், ரொம்ப சுலபமாக புகழ் கிடைக்கும் என்பதும், இவர்களுக்கு இது மட்டுமே வேலை என்பதும்தான் உண்மை.
 
bigg boss

ஏதோ 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தடை செய்வதில் தான் நம் கலாச்சாரம் காப்பாற்றப்படும், நாட்டில் இனிமேல் எந்த குற்றமும் நடக்காது என்கிற நினைப்பையும் என்னவென்று சொல்வது? தமிழ்த்தாய் வாழ்த்தைப் பற்றி பேசும் இவர்களுக்கு, நம் மாநிலத்தில் பாதி பேருக்கு மேல் பிழையில்லாமல் தமிழை எழுதப் படிக்கவே தெரியாது என்பது தெரியாதா? தொட்டதற்கெல்லாம் 'உடனே தடை செய்' என குதிக்கும் இவர்களுக்கெல்லாம், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை யார் சொல்லி புரிய வைப்பது? ஒரு விஷயத்தை எதிர்க்கும் அதே சமயத்தில், ஆரோக்கியமாக விவாதம் செய்து அதில் உள்ள நல்லது, கெட்டதை பகுத்தறிய யார் சொல்லித்தருவது?

இந்த நிகழ்ச்சியை தடை செய்யுமளவு மோசமில்லை என சொல்லும் அதே வேளையில், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் பிரபலங்களைப் பற்றியும் அவர்களது சில செயல்களைப் பற்றியும் பேசுவது கட்டாயமாகிறது. ஜூலி, பரணி, ஓவியா போன்ற ஒரு சிலர் தொடர்ந்து குறிவைத்து தாக்கப்படுகிறார்கள், வந்த நாள் முதல் 'அவன் கெட்டவன்' என்று சொல்லி பரணி character assasination செய்யப்பட்டார்.

'பிக் பாஸ்' வீட்டில் உள்ள அனைவருமே attention-seeking தான். மக்கள் கவனம் தன் மீது இருக்க வேண்டும், எப்படியாவது தான் ஒரு புத்திசாலி, நல்லவர், பண்பானவர் என்றெல்லாம் நிரூபிக்க முயற்சிப்பவர்கள். ஜூலி ஒரு ஆர்வக்கோளாறு போல, அவசரக் குடுக்கையைப் போல நடந்து கொள்வதாலும், 'இந்த சிவப்பு துண்டு, விவசாயிகளோட வியர்வையைத் துடைக்கிற துண்டு', 'தமிழ் கலாச்சாரம், பண்பாடு' என பல சமயங்களில் ஓவர்-ரியாக்ட் செய்வதாலும் வீட்டிலுள்ள மற்ற பிரபலங்களால் அவர் வெறுக்கப்பட்டார். ஆனால், 'நீ fake ஆக இருக்க.. நீ நடிக்கிற.. நீ ஏன் இவ்ளோ செயற்கையா இருக்கே?' என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தால், யாராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் 'ஒரு வேளை நாம fake'ஆ தான் இருக்கோமோ? நாம நம்மளை மாத்திக்கணுமோ?' என குழம்பி போவார்கள். அதுதான், ஜூலிக்கு நடந்தது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பெரும்பான்மை கும்பலோடு சேர்ந்துகொண்டு கூடவே இருந்த பரணியை சுயநலமாக குறை சொல்ல ஆரம்பித்தது, தன்னை எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் 'அக்கா.. அக்கா..' என காயத்ரி மற்றும் ஆர்த்தியை சுற்றி சுற்றி வருவது, தான் செய்யாத தப்புக்கெல்லாம் மன்னிப்பு கேட்பது, வேண்டுமென்றே தன்னை கேவலப்படுத்தி சிரிக்கிறார்கள் பொழுதுபோக்குகிறார்கள் என்பது புரிந்தும் கூட அவர்களை எப்படி கையாள்வது என தெரியாமல் முழிப்பது என மொத்தமாக சின்னாபின்னமாகி வருகிறார் ஜூலி. இதே தான், பரணிக்கும் நடந்தது. வந்த முதல் 3 நாட்கள் ரொம்பவே தெளிவாக, நன்றாகவே இருந்த பரணியை 'இவன் ரொம்ப தின்றான்.. ரொம்ப தப்பா இருக்கான்.. இவன் கெட்டவன்' என கஞ்சா கருப்பு தலைமையில் எல்லோரும் திட்டி திட்டி, மட்டம் தட்டி, தனிமைப்படுத்தி, மொத்தமாக ஒதுக்கியே விட்டனர். அதன் விளைவு தான், யாருடனும் பேசாமல் பரணி மணிக்கணக்கில் நடந்துகொண்டே இருந்தது. இது வரை முடிந்த எபிசோட்களிலேயே, பலரும் பரிதாபப்பட்டது பரணிக்காகத்தான். அதனால் தான், அவருக்கு மக்கள் பல லட்சம் ஓட்டுக்கள் அளித்தனர். கூட்டத்தில் தனிமையும், நம்மை சுற்றி இருக்கும் எல்லோருமே நம்மை வெறுக்கிறார்கள் என்கிற உணர்வும் எத்தனை கொடுமையானது? அவர் இடத்தில் யார் இருந்தாலும், சுவர் எகிறி குதித்தாவது இந்த வீட்டைவிட்டு போகலாம் என்றுதானே தோன்றும்? அதிலும், சக்திவேல் வாசு போன்றவர்களெல்லாம் முகத்திற்கு நேராகவே 'தராதரம் வேணும்' என்று கூறினர். அவர் 'தராதரம்' என சொன்னது பிறப்பையா, சாதியையா, பணத்தையா, புகழையா அல்லது குணத்தையா என தெரியவில்லை. அப்படியொரு வார்த்தையை பயன்படுத்துமளவிற்கு, பரணி எந்த வகையில் குறைந்து போய்விட்டார் என்பதும் தெரியவில்லை.

எல்லாவற்றிற்கும் மேல் 'நீ எதுக்கு நர்ஸ் வேலையை விட்ட?' 'நீ ஏன் VJ ஆகணும்?' 'ஜல்லிக்கட்டுல ஏன் அரசியல்வாதிகள் பத்திப் பேசின?' 'இந்த நிகழ்ச்சி மூலம் சம்பாதிச்சு தான், வீடு கட்டுவியா? நீயா சம்பாதிச்சு கட்ட முடியாதா?' என மட்டம் தட்டுவது போன்ற கேள்விகளைக் கேட்டவர்கள் எல்லோரும் தாங்களே தங்கள் தரத்தைக் குறைத்துக் கொண்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் ஆர்த்தி, அனுயா, சினேகன், வையாபுரி, கஞ்சா கருப்பு, நமீதா, சக்திவேல் வாசு என பாதி பேருக்கும் மேல், சினிமா வாய்ப்புகள் இல்லாததால் தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்தனர். அப்படியிருக்கையில், ஜூலி பரணியிடம் மட்டும் 'நாங்க எல்லாம் எவ்வளவு சீனியர் ஆர்ட்டிஸ்ட் தெரியுமா..' என அவமானப்படுத்தியதெல்லாம் வேடிக்கையாகவே இருந்தது. அதிலும் 'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏன் அரசியல் தலைவர்களைத் திட்டினாய்?' (மோடி, சசிகலா, பன்னீர்செல்வம்) என கேட்டது, தொடர்ந்து ஜூலியை மட்டும் தாக்குவது எல்லாம் அரசியல் ரீதியான வெறுப்போ என்றே தோன்றுகிறது (காயத்ரி ரகுராம் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்; ஆர்த்தி, நமீதா, சினேகன், கஞ்சா கருப்பு, வையாபுரி ஆகியோர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்).

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், இப்போதைக்கு தமிழகத்தில் மக்கள் அதிகம் வெறுக்கும் முகங்கள் - ஆர்த்தி மற்றும் காயத்ரி! தினந்தோறும் இவர்கள் இருவரையும் வைத்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஆயிரக்கணக்கான மீம்களையும், கேலி காணொளிகளையும் பார்த்தால் அது அப்பட்டமாகத் தெரியும். சாதாரண விஷயத்துக்கு எல்லாம் சண்டை போடுவது, ஆள் இருக்கும்பொழுது ஒரு மாதிரியும் ஆள் இல்லாதபொழுது ஒரு மாதிரியும் பேசுவது, எந்நேரமும் எல்லோரையும் அவமானப்படுத்தியும் தரக்குறைவாகவும் பேசிவிட்டு 'என்னை யாரும் பாராட்டுவதேயில்லை' என அழுவது என ஆர்த்தியின் ஒவ்வொரு செய்கையுமே பொதுமக்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது. நடன இயக்குனர் காயத்ரியோ மற்றவர்களை சக மனிதர்களாக மதிக்கத் தவறுவதில் தொடங்கி, அடிக்கடி 'எச்சை', 'சேரி behaviour' என்றெல்லாம் மற்றவர்களை தரம் தாழ்த்தி பேசிவருகிறார். சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் பல நூறு பேரை வேலை வாங்குவதாலோ என்னவோ, எப்பொழுதும் அவருக்கு 'நான்' என்கிற ஒரு கர்வம் இருக்கலாம். ஆனால், சினிமா குடும்பத்தில் பிறந்திருக்காவிட்டால், இவர் இவ்வளவு எளிதாக ஒரு நடிகை ஆகியிருக்கவோ நடன இயக்குனர் ஆகியிருக்கவோ முடியாது என்பது இவருக்கு தெரியாதா? ஜூலியையும், பரணியையும் fake என சொல்லும் இவர் 'கஞ்சா கருப்பை எலிமினட் பண்ணனும், அவர் behaviour சரியில்லை' என சொல்லி போன வாரம் nominate செய்து விட்டு, இந்த வாரம் 'கஞ்சா கருப்பு அண்ணன், ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்து நம்மளையெல்லாம் பார்த்துக்கிட்டார்' என மற்றவர்கள் முன்னிலையில் சொல்வது fake இல்லையா? மற்றவர்களை 'எச்சை, எச்சை' என அழைக்கும் இவர், 'உங்கள் உடல்நிலை சீராக உள்ளது, நீங்கள் தலைவி என்பதால் மட்டும் சாக்லேட் பவுடர் கொடுக்கப்படும்' என்று பிக் பாஸ் சொன்னதை வெளியில் வந்து மற்றவர்களிடம் மாற்றி சொல்வதையும், ஒன்றுமே செய்யாத பரணியைப் பார்த்து 'இவன் இருந்தால் பெண்களுக்கு ஆபத்து' என சொல்வதையும், ஓவியா உடுத்தும் உடைகளால்தான், மக்கள் அவருக்கு போட்டிருப்பார்கள் என உடனிருக்கும் பெண்ணையே ரொம்ப கீழ்த்தரமாக பேசிய இவரை என்னவென்று சொல்வது?
 
bigg boss

பெரும்பான்மை நேரங்களில் எந்த வேலையும் செய்யாமல் மற்றவர்களை குறைசொல்லிக்கொண்டு இருந்துவிட்டு, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள காயத்ரியையும் சினேகனையும் உயர்த்திப் பேசும் கஞ்சா கருப்பு-வையாபுரி-சக்திவேல் வாசு என்கிற மூவர் கூட்டணியும் அப்படியே. கொஞ்சம் நல்லவர்களாக இருந்த ஆரவ், நமீதா, கணேஷ் வெங்கடராமனையும் மாற்றிவிட்டார்கள் இவர்கள். இந்த மொத்த கூட்டத்தில் ரொம்பவே இயல்பாக இருப்பது, எதற்கும் கோபப்படமால் இருப்பது, யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் தானாகவே இருப்பது, எல்லா சமயங்களிலும் நியாயமாக இருக்க முயற்சிப்பது, ஓவியா மட்டுமே என்பது ஆச்சர்யம். அதனாலேயே என்னவோ, ஜூலி மற்றும் பரணியைத் தொடர்ந்து இப்பொழுது ஓவியா குறிவைக்கப்பட்டுள்ளார். ஓவியாவுக்கு மக்கள் அவ்வளவு ஓட்டுக்கள் போட்டதே, இவர்களையெல்லாம் இன்னும் அதிகமாக கடுப்பேற்றியிருக்க வேண்டும்.

கமல் சொன்னது போல, நிச்சயமாக இந்த நிகழ்ச்சி ஒரு social experiment தான். அரிஸ்டாட்டில் சொன்னதைப் போல 'மனிதன் ஒரு சமூக விலங்கு' என்பதும் 100 சதவிகிதம் உண்மை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மிருகமும் எட்டிப் பார்க்கும். நம் வாழ்க்கையில் நம்மை சுற்றி இருப்போர் எல்லோருமே காயத்ரி, ஜூலை, பரணி, ஆர்த்தி, ஓவியா போன்றோர் தான். அவர்களில் சிலரை நமக்குத் தெரியும், பலரின் உண்மை முகம் நமக்குத் தெரியாது. அதனால் தானோ என்னவோ இந்த நிகழ்ச்சி சொல்லிவைத்து எடுக்கப்பட்டதோ இல்லையோ, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என கோடிக்கணக்கான மக்கள் தினமும் 9 மணிக்கு டிவி முன்னால் ஆர்வமாக உட்கார்கிறார்கள். அங்கே நிகழ்ச்சியில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்ளும் எவ்வளவு பொய் பேசுகிறார்கள், போலியாய் இருக்கிறார்கள், மற்றவர்களை மனதளவில் காயப்படுத்துகிறார்கள் என பேசும் அதே அளவில் நம்மை நாமே தராசில் வைக்கும் அவசியமும் நமக்கிருக்கிறது. ஆர்த்தியைப் போலோ, காயத்ரியைப் போலோ, கஞ்சா கருப்பைப் போலோ தேவையில்லாமல் மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது, தெரிந்தே அடுத்தவர் மனம் புண்படும்படி பேசக்கூடாது, பரணியைப் போல மற்றவர்களின் அரசியலுக்கும் நாம் செய்யாத தப்பிற்கு பலியாகிவிடக் கூடாது என்பதும் பாடமாய் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியைத் தடை செய்கிறேன் என சொல்லும் அமைப்பினரால், பிக் பாஸிற்கு இன்னும் நிறைய விளம்பரம் தான் கிடைத்துள்ளது! இந்த தடை மிரட்டல்களையெல்லாம் பார்த்து 'ஸ்டார் விஜய்' நிறுவனம் பயப்படும் என நினைத்தால், அதை விட பெரிய முட்டாள்தனம் எதுவுமில்லை. இதையெல்லாம், இலவசமாய் கிடைக்கும் விளம்பரமாய் அவர்கள் அனுபவித்துக் கொண்டு இவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருப்பார்கள். 'ஸ்டார் விஜய்' என்கிற ஒரு தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியைப் பற்றி நேற்றும் இன்றும் புதிய தலைமுறை, தந்தி தொலைக்காட்சி, நியூஸ் 7, நியூஸ் 18 தமிழ்நாடு, சன் நியூஸ் என எல்லா தொலைக்காட்சியும் விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்