முகப்புகோலிவுட்

கமலுக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன்

  | February 21, 2018 09:58 IST
Kamal Haasan

துனுக்குகள்

  • இன்று வரை சர்ச்சையிலேயே இருக்கும் கமல் படம் 'ஹே ராம்'
  • இந்தப் படம் வெளியாகி இன்றோடு பதினெட்டு வருடங்கள் ஆகின்றன
  • படம் பற்றிய சில விஷயங்கள் பற்றி இதோ...
கமலஹாசனுக்கு

நன்றி.

இந்தப் படத்தைப் பற்றி பல்வேறு தருணங்களில் துண்டு துண்டாக எழுதியிருக்கிறேன். பலருமே அப்படி எழுதியிருக்கிறார்கள். அதன் காரணம், நாம் படத்தின் முழுமையை தழுவிக் கொள்ள முடியாமல் திணறுகிறோம் என்பது தான். இந்த முறையும் நான் சொல்லக் கூடியது முழுமையாய் இருக்காது. நாம் காணுகிற கட்டுக்கடங்காத வீரியங்களை இன்னொருவருக்குக் கடத்தக் கூடிய தொழில் நுட்பங்கள் குறை கொண்டவை. மொழியோ நம்மை அடித்துக் கொண்டு செல்லக் கூடியது. எனினும் நான் முயலாமலிருக்கப் போவதில்லை. ஏனெனில் கடுத்த காழ்ப்பு விமர்சனங்களாலும், புரளிகள் மற்றும் வதந்திகளாலும், புறக்கணிப்புகளாலும், அறியாமைகளாலும் வீழ்த்தப்பட முயன்ற படம் இது. பத்து வருடங்களில் எவ்வளவோ மாற்றம். நல்ல படம் தானா என்கிற கிசுகிசுப்புகளும், நல்ல படம் என்கிற முடிவுகளும் வந்து கொண்டிருக்கின்றன. நானும் என் கடமையை செய்கிறேன் என்று நினைக்கிறேன்.

சாகேத் ராமன் என்கிற, காந்தியை கொல்ல முயன்ற ஒருவனுடைய கதை. பிரிவினை காலத்தில் எல்லைக்கோடுகளின் பிரச்சினையால் பாகிஸ்தானில் இருந்து திரும்பும் அவன் கல்கத்தா இந்து முஸ்லீம் கலவரத்தில் மனைவியை இழக்கிறான். ஏற்றுக் கொள்ள முடியாத பாலியல் வன்முறைக்கு அப்புறம் அவள் அவனது கண் முன்னாலே கழுத்தறுத்து கொல்லப்படுகிறாள். வெறி கொண்டு தெருவிற்கு இறங்குகிற ராம் களேபரத்துக்கு நடுவில் தான் கொல்ல வேண்டிய கொலையாளிகளை கொல்லாமல் விடவில்லை. ஆனால் மனதின் சூறாவளி அடங்காமல் ஊரெங்கும் சுழல்கிற ரத்த வாடையை அறிந்தவாறு நடக்கிறவனின் மனதில் அந்த விதை விழுகிறது. இதற்கெல்லாம் காரணம் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. அவர் முஸ்லீம்களின் பக்கமிருந்து ஹிந்துக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார். காயங்கள் ஆறவில்லை, மறுமணமே கூட செய்கிறான். ஆனால் காந்தியை கொல்ல முடிவு செய்து விட்ட கூட்டத்தில் சேர்ந்து, காந்தியை கொள்ள வேண்டிய நபராகவே தேர்வு பெறுகிறான் அவன்.

திரைக்கதை ஒரு தனி மனிதனின் பழியுணர்ச்சியை எடுத்துக் கொள்கிற சாக்கில் வரலாற்றை சொல்லுகிறது. காந்தியை கொன்றது மட்டுமே கோட்சே, ஆனால் அது அந்தக் காலத்தில் பெரும்பாமையோரின் மனதில் நிலவிய ஒரு எண்ணம். அப்படி அவரை பலரும் கொல்ல நினைத்தார்கள். அல்லது அவரது சாவை விரும்பினார்கள். சாகேத் ராமனும் அப்படித்தான் போனான் என்பதன் மூலம் வெளிப்பட்டது காந்தியை எவ்வளவு தவறாக மதிப்பிட்டிருந்தார்கள் என்பதைத் தான். சக மனிதனை அணைத்துக் கொள்வோம் என்கிற எளிமையான உண்மை இப்போதும் சிக்கலில் தானே இருக்கிறது?

ஆக சாகேத் ராம் தன்னை எல்லாம் தெரிந்தவனாக நினைத்துக் கொள்கிறானே தவிர அவன் ஒரு முட்டாள். படத்தை நன்றாக கவனித்துப் பார்த்திருந்தால் தெரியும், அவனது புது மனைவிக்கோ, மனைவியின் தாயாருக்கோ தெரிந்திருந்த உண்மை கூட அவனுக்கு தெரியாது. அல்லது அதை அவன் மூர்க்கமாய் மறுத்துக் கொண்டு தன்னை மடையனாகவே வைத்துக் கொண்டிருக்கிறவன். ஒரு கட்டத்தில் அவன் தெளிவு பெறுவது தான் படம். ஒரு முஸ்லீம், அவனது உயிர் தோழன் தான் தனது தியாகங்கள் மூலமாக காந்தி எப்பேர்ப்பட்ட ஆசாமி என்று புரிய வைக்கிறான். மிகவும் தாமதம் என்று சொல்ல முடியுமா, ஆனால் அறிவுக்கண் முழுமையாய் திறந்தே விடுகிறது. அப்புறம் சாகேத் ராமுக்கு செய்த பாவங்களை சொல்லி துப்பாக்கியை காந்தியிடத்தில் ஒப்படைக்க அவசரம், ஆனால் புரியாத ஜனங்களின் ஆசைப்படி கோட்சே அந்த காரியத்தை செய்து முடிக்கிறான்.

காந்தி இறந்து போகிறார். தமிழில் இப்படி ஒரு படம் வந்ததில்லை. வரலாற்றை ஓடுபாதையாய் எடுத்துக் கொண்டு உளறல்கள் இல்லாத அசல் திரைக்கதை உருவானதில்லை.

ஏனெனில் மேலும் சொல்ல வேண்டும். காந்தி இறந்ததற்குப் பின்னால் சாகேத் ராம் பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறான். ராமினால் உயிர் விட நேர்ந்த அம்ஜத்தின் குடும்பமே இவனது குடும்பத்துடன் இருக்கிறது. ஆனால், இப்போது கிழவனாகி சாகும் தருவாயில் கூட சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்காலத்தின் மதவெறி கலவரம் அவருக்கு கேட்டவாறிருக்க, அப்படிதான் அவர் இறந்து போகிறார். இன்னமும் காந்தியின் தேவை, அல்லது காந்தியத்தின் தேவை எவ்வளவு முக்கியம் என்று உணர்த்தப்படுகிற இறுதிக் காட்சியில் ரோலிங் டைட்டில்ஸ் ஓடுகின்றன.

நான் கதையின் முக்கியமான ஒரு நூலைப் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறேன். ஆனால் படம் மேலும் பல்வேறு மடிப்புகளால் ஒளிரும். ஷாருக் பண்ணின அந்த அம்ஜத் என்கிற ஒரு கதாபாத்திரம் போதும். டேய், அய்யரே என்கிற பட்டாணி. கவனிக்க முடிந்திருந்தால் தெரிந்திருக்கும், ராம் எப்போதும் ஒரு கட்டுப்பாட்டில் இருப்பான். ஆனால் அம்ஜத் பொங்கி வழிந்து அன்பைக் காட்டுவான். அவனது மனதில் பேதங்களே இல்லை. ராம் வழுக்கினாலும் அவன் வழுக்குவதில்லை. இடுப்புக்கு கீழே அவுத்துக் காட்டு என்று பின் மண்டையின் மீது கோடாலி வீசுகிற எதிர்த்தரப்பை கொட்டுகிற ரத்தத்தின் வழியே அறிந்த போதும் அவன் ராமைக் காட்டிக் கொடுப்பதில்லை. இப்படி ஒரு கதாபாத்திரத்தை வார்ப்பதற்கு தனித்த மேதமை வேண்டும் என்பதை அடித்து சொல்லுவேன். ஷாருக்கின் புன்னகை காலங்காலமாக மனதில் நிலவியவாறு இருக்கிறது.

மூன்று நண்பர்களில் இந்த இருவர் தவிர்த்து மற்றொருவன் சிந்திக்காரன். அரைகுறையாய் தமிழ் வரும். தடியன். அவனும் மற்றவர்களை தழுவிக் கொள்கிறவன் தான். கலவரம் நடந்த போது கூட்டத்தில் மகளை தவற விட்டேன் என்று சொல்லும் போது உனக்கு நான் சொல்லுவது புரியுமா என்று ராமிடம் கேட்கிற ஒரு காட்சி இருக்கிறது. அது இரண்டு மனிதர்கள் பேசுவதே அல்ல. நாம் கொண்டாடுகிற வரலாறு தலையை குனிந்து கொண்டு நிற்க வேண்டிய வெளி. ரயில்வே சிக்னலில் அப்பளம் விற்றுக் கொண்டிருக்கிற லால்வாணி என்கிற அவனை கொஞ்ச நாள் வைத்துக் கொண்டிருந்து ராம் அவனை திருப்பி அனுப்பும் போது, அவர் என் வொரீஸ் எல்லாம் கொஞ்சம் போச்சு என்பார், அது பூராவும் நமது மனதில் இருக்கும்.

பொதுவாய் புழங்கு சினிமாவில் நடை பழகி செல்லும் பெண் பொம்மைகள் இதில் சிணுங்குவதில்லை. சொல்லப் போனால் முதல் மனைவியிடம் மிகுந்த ஆண் தன்மையுடன் இருக்கிற ராம் அவளை இழக்கிறான். அதே போல இரண்டாம் மனைவியிடம் தன்னை விட்டுக் கொடுத்து எல்லாவற்றையும் சொல்லத் துணிகிற காட்சியும் வருகிறது. இந்த இரண்டுப் பெண் பாத்திர படைப்புகளுக்கு நடுவே அவனது ஆளுமை மாற்றமடைவதை அறிய முடியும். அந்த அளவிற்கு இரண்டு பெண்களும் உயிர்த்துடிப்புடன் பொலிவார்கள். ராணி முகர்ஜியும், வசுந்தராவும் அதில் நிறைந்திருந்தார்கள் என்பதை தனியாய் குறிப்பிட வேண்டும். ஹேமமாலினி செய்த மாமியார் கதாபாத்திரம் சின்னது. ஆனால் உள் மடிப்புகளில் இருந்து அவர் யாராய் இருப்பார் என்று யோசிக்கும் போது அதன் பிரம்மாண்டம் தெரியும்.

முக்கியமாக படத்தில் காந்தி சிக்கனமான ஒரு கதாபாத்திரம். ஆனால் திரைக்கதை அவரது முழுமையை கொண்டு வருகிறது.

ஒரு தடவை சுக்ராவர்த்திக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கும் போதும், மற்றொரு முறை ராமிடம் ஜோக்கடித்து பொக்கை வாய் சிரிப்புடன் நகர்த்து போகும் போதும், மற்ற எல்லா சந்தர்ப்பங்களின் போதும் அவர் காந்தியாகவே இருந்தார், எப்போதாவது நஸ்ருதின் ஷாவாக தெரிந்தாரா, தெரியவில்லை.

அதுல் குல்கர்னி தமிழில் முதலாகவும் கடைசியாகவும் அசலாய் நடித்தது இதில் மட்டும் தான். விக்ரம் கோகலே என்கிற ஆளுமையின் மீசை முறுக்கலை, கண்களால் எடை போடுகிற பார்வையை யாராலும் மறக்க முடியாது.

இப்படி சொல்லிக் கொண்டே போக வேண்டும். அதற்கு ஒரு முடிவிருக்காது. ராமின் மாமனார் தனது மகள் பூ வேலை செய்த தலையணையை எடுத்துக் காட்டி ஸ்வீட் டிரீம்ஸ் என்பார், அதில் அவர் இன்ன மாதிரி என்று விளங்கும். ஓங்கி உயர்ந்த முதல் குரலிலேயே வாலி விளக்கப்படுவது போல, இருள் அப்பிய முகத்தாலேயே வி எஸ் ராகவன் விளக்கப்பட்டு விடுவார். ஒய் ஜி மகேந்திரனும், வையாபுரியும் கூட அப்போதைய அரசியல் பேசுகிறார்கள். அந்த அரசியல் யார் யாருக்கு என்னென்ன தெரியும் என்பதை சுட்டுகிறது. அப்பாஸ், நாசர், அரவிந்த் ஆகாஷ், சௌகார் ஜானகி எல்லோருமே ஜஸ்ட் தீற்றல்கள் தான். ஆனால் அவர்களை நாம் அறிவோம். அந்த பெண் தரகனின் பேடித்தனத்தை, ஹிந்து ரவுடியாய் திரிகிற டெல்லி கணேஷின் ஆணவத்தை எல்லாம் நடிப்பை மீறின உணர்வுகளாய் நாம் எடுத்துக் கொண்டு விட முடியும். இப்படி அடி முதல் முடி முதலான கதாபாத்திரங்களை அடுக்கி, அதற்கு ஜீவன் கொடுத்து செதுக்கி முடித்த அந்தத் திரைக்கதை அன்று முற்றிலும் புதிதாய் இருந்தது. இப்போதும் புதியதாகவே இருக்கிறது.

சாதாரண மக்கள் சரிதான், ஆனால் பல பிரபலங்களும் அதை புரிந்து கொள்ள பிடிக்காமல் வெறுக்கவே தலைப்பட்டார்கள். மாற்றிப் பேசி மண்ணுக்குள் அழுத்தி விட்டதாய் திருப்தி கொண்டார்கள். அவர்களுடைய எண்ணத்தில் பாவம் மண், இதோ பத்து வருடத்துக்கு அப்புறமும் நாம் உரையாடிக் கொண்டிருக்கிறோம்.

கமலஹாசனை பற்றி என்ன சொல்ல வேண்டும்.

அல்லது படம் முழுக்க அலைகளாய் பொங்கி பிரவாகித்த இளையராஜாவைப் பற்றி என்ன சொல்லி வந்து முடிப்பது. இருவருக்காகவும் தனியாய் ஒரு புத்தகம் வேண்டுமானால் எழுதலாம். எனவே முடிவுக்கு சென்று விடலாம்..

நாம் நமது சினிமா செயற்பாடுகளில் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்கிற கான்ஷியஸ் உள்ளவருக்கெல்லாம் கமல் எழுதி இயக்கி நாயகனாய் நடித்த ஹேராம் எவ்வளவு சிறப்புக்குரியது என்பது தெரியும். பதினெட்டு வருடம் கடந்தும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது ஒரு துவக்கம் தான். வேறு ஒரு தலைமுறை சினிமாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. ஆர்வக் கோளாறுகளின் பெருக்கம் தணிந்து நல்ல சினிமாவை அறியும் பையன்கள், பெண்கள் இப்படத்தின் ஐம்பதாவது நூறாவது நினைவுகளைப் போற்றுவார்கள்.

நான் எனது நன்றியை கமலுக்கு சொல்லிக் கொள்கிறேன். யாருமே இணைந்து கொள்ளலாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்