முகப்புகோலிவுட்

கண்டிப்பாக இதற்கு அஜித்திற்கு நன்றி சொல்ல வேண்டும்! #3YearsOfYennaiArindhal

  | February 05, 2018 19:52 IST
Yennai Arindhaal

துனுக்குகள்

  • 'என்னை அறிந்தால்' வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன
  • அஜித்தின் தோற்றம் மிகவும் புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது
  • இதில் விக்டராக நடித்த அருண்விஜய்க்கு பெரிய வரவேற்பு கிடைத்தது
"The more successful the VILLAIN is more successful the picture" ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் சொன்னது இது. சரி நமக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமான ஒருவரின் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். தனி ஒருவனில் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் பற்றி மோகன் ராஜா சமீபத்திய பேட்டியில், "எப்போதெல்லாம் அநியாயம் நிகழ்கிறதோ, அதை அழிக்க கடவுளே அவதாரம் எடுப்பார் என்பது நம்பிக்கை. ஒரு ஹீரோவை அவதாரமாக முன்வைக்க வேண்டும் என்றால் ஹீரோவைவிட சக்தி வாய்ந்த வில்லனுக்கான தேவை ஏற்படுகிறது" எனச் சொல்லியிருந்தார். சரி ஒகே... படம் முழுக்க ஹீரோவிடம் தன் அடியாட்களை அடி வாங்கவிட்டு, க்ளைமாக்ஸ் ஃபைட்டில் தானும் அடிவாங்கி வீழும் வில்லன் VS ஹீரோவுக்கு சரி சமமான அல்லது ஹீரோவைவிட ஒரு படி மேல் பலமாக இருந்து எதிர்க்கும் வில்லன். இரண்டு பேரில் சுவாரஸ்யம் யார்? கண்டிப்பாக இரண்டாம் வகையை மெஜாரிட்டி என எடுத்துக் கொள்ளலாம். அப்படி ஒரு ஹீரோவுக்கு, அதுவும் ஆன் ஸ்க்ரீன் ஆஃப் ஸ்க்ரீன் இரண்டிலும் தன் மேல் ஒரு மாஸ் இமேஜை தக்க வைத்திருக்கும் ஹீரோவுக்கு எதிராக ஒரு வில்லன் மூன்று வருடம் முன்பு வந்தான்.

அவன்தான் விக்டர், அந்தப் படம் `என்னை அறிந்தால்'. படத்தில் அஜித் வந்த விதம், நடித்த விதம் எல்லாமே புதுசு. இருந்தாலும் ஆவர் ஹீரோவாக நிற்க, அவரிடம் சரிக்கு சமமாகப் பேச ஒரு வில்லன் கதாபாத்திரம் இருந்தது படத்தை மேலும் சுவாரஸ்யமாக்கிக் கொடுத்தது. `ஹீரோ வர்றான்... அவனுக்கு வில்லனால பிரச்சனை... ஹீரோ வில்லனை ஜெயிக்கிறான்' இந்த ஸ்டோரி க்யூ வைத்து ஒரு வாரத்துக்கு பத்து கதைகள் கூட எழுதிவிடலாம். இப்படிக் கையாளும் போது, வில்லன்னுக்கான பின்னணி என்ன, அவன் யார், ஹீரோவை எப்படி பாதிக்கிறான் என்பதெல்லாம் எழுதுவதுதான் கதையை சுவாரச்யமாக்கும். சாதாரண வில்லனைப் படைப்பது ஏ பி சி டி எழுதுவது மாதிரி என்றால், விவரமான வில்லனைப் படைப்பது தலைகீழாய் நின்று ஃபோர் லைன்ஸ் நோட்டில் ஏ.பி.சி.டி எழுதுவது மாதிரி. இந்த தலைகீழ் ஏ பி சி டியை கௌதம் எப்படி வரைந்தார் என்பது கவனிக்க வேண்டியது. கௌதம் மேனன் படைத்த சிறந்த ஆன்ட்டகானிஸ்ட் விக்டர்தான் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

`என்னை அறிந்தால்' ஒரு போலீஸ் ஹீரோவுக்கும், கிரிமினல் வில்லனுக்கும் இடையே என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கௌதமின் `காக்க காக்க', `வேட்டையாடு விளையாடு' இரண்டும் இதே லைன்தான். இந்த காரணத்தால் `என்னை அறிந்தால்' ஒரு காப் ட்ரையாலாஜி என கௌதம் கூறுவது உண்டு. ஆனால், `காக்க காக்க' பாண்டியாவுக்கு, அன்பு செல்வன் மேல் இருத்த பகை அண்ணனைக் கொன்ற கோபம், `வேட்டையாடு விளையாடு' அமுதன், இளமாறன் இருவருக்குமான மனநல பிரச்சனை அதனால் உருவாகும் குற்றங்கள், அதன் பின் இந்த வழக்கில் வரும் ராகவன் என செல்லும். ஆனால், இங்கே நம் விக்டருக்கு, சத்யாதேவ் மேல் உள்ள பகை... அது மிகவும் பர்சனலானதும் கூட.
"ஏதோ ஒரு விழாவில் அஜித் சாரை எதேச்சையா சந்திச்சப்ப, 'நீ வில்லனா நடியேன். 'வாலி’யில் ஒரு நெகட்டிவ் ரோல் பண்ணப்போதான் என் திறமை முழுசா வெளியே வந்தது. நீயும் முயற்சி பண்ணு. கண்டிப்பா வொர்க்-அவுட் ஆகும்’னு சொன்னார். ஆனா, அவர் படத்தில் அவருக்கே வில்லனா நடிப்பேன்னு எதிர்பார்க்கலை!''

கொஞ்சம் இந்தக் கதையில் விக்டரை ஹீரோவாக்கி படத்தில் நடந்ததை யோசித்தால் தெளிவாகப் புரியும். ஜெயிலில் இருக்கும் விக்டருக்கு, சத்யா என்பவன் அறிமுகமாகிறான். அங்கு ஒரு ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய சத்யாவுடன், சிறையிலிருந்து தப்பி வருகிறான் விக்டர். தன் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறான். சத்யாவை மிகவும் நெருக்கமான நண்பனாக நம்பும் விக்டர், வீட்டுக்கு சென்று தன் காதலியை அறிமுகப்படுத்துகிறான். இங்கு விக்டருக்கான காதல் கவனம் கொள்ள வேண்டியது. வழக்கமாக கௌதம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்துக்கு என ஒரு காதல் இருக்காது."எட்டு மாசம் ஆச்சு அவள நான் பார்த்து. இப்போ அவ என்னைப் பார்க்கும் போது, ஒரு ரியாக்ஷன் கொடுப்பா பாரு... அது எனக்கு ரொம்ப பிடிக்கும்" இது விக்டர், லிசாவுக்காக சொல்வது.

பின்பு ஒரு சூழலில் தான் நம்பிய, நண்பனாக நினைத்த ஒருவன், நட்பைப் பயன்படுத்தி, அவனது போலீஸ் வேலைகளை முடித்துக் கொண்டான். தான் கெட்டவன், அவன் நல்லவன் என்ற மாரல் எல்லாவற்றையும் மீறி, இந்த துரோகத்தை மிகவும் பர்சனலாக எடுத்துக் கொள்கிறான் விக்டர். சில வருடங்கள் கழித்து போனில் பேசும் போது, "எனக்கு உன்ன ரொம்பப் புடிக்கும் சத்யா. அதனாலதான் அது ஒரு அவ்வளவு ஏமாற்றமா இருந்தது எனக்கு. நான் ஒருத்தன தப்பா எடை போட்டுட்டேன்ங்கறதுதான் பெரிய அடி இதுல" என மீண்டும் சத்யா தன்னைக் ஏமாற்றியது குறித்து சொல்வான் விக்டர். அந்த துரோகம்தான் இங்கு விக்டருக்கான வலி, பகை. ஹீரோ மட்டும்தான் நம்பிக்கை துரோகத்துக் பழி வாங்க வேண்டுமா என்ன... இங்கு வில்லன் துரோகத்துக்காக பழி வாங்குகிறான். ஹேமானிகாவைக் கொன்றதில் அந்தப் பகையின் ஒரு பாதி தீர்வதாய் எடுத்துக் கொள்ளலாம். அதன் பின் தேன்மொழி (அனுஷ்கா) விவகாரத்தில் சத்யா நுழையும் போது மீதம் வைத்த பகையை தீர்க்க ஆரம்பிக்கிறான் விக்டர். அதன் முடிவு, ஹேமானிகா மரணத்திலிருந்து சத்யாவை வெளியே கொண்டு வந்த ஈஷாவை கொன்று, மறுபடி அவனின் வாழ்வை அர்த்தமர்றதாக்குவது.

இதில் விக்டர் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அருண் விஜய் மதிப்புக்குரியவர், பாராட்டுக்குரியவரும் கூட. இந்தப் படத்துக்கு மூன்று வருடங்கள் முன்பு வெளியான இவரது `தடையற தாக்க' மூலம் ஒரு ஹீரோவாக பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தார். இடையில் படம் ஏதும் வெளியாகத சூழலில், வில்லன் ரோல் எடுத்து நடிக்கும் நம்பிக்கை, அதில் தன்னை சிறப்பாக முன்நிறுத்திய விதமும் ஆச்சர்யத்துக்குரியது.

இதில் இந்த பாத்திரம் இவ்வளவு பேச, இவ்வளவு நடிக்க இடம் கொடுத்த அஜித் மற்றும் கௌதமுக்கு நன்றி சொல்லிக் கொள்வோம். அதைப் பற்றி அருண் விஜய் ஒரு பேட்டியில், "அஜித் சார் இந்தப் படத்தை, அஜித் படமா மட்டும் பார்க்கல. எல்லா கேரக்டரையும் சேர்த்துதான் பார்த்தார். என்னோட கதாபாத்திரத்துக்கான முழுசுதந்திரத்தையும் கொடுத்து, அதுக்கான வெயிட்டேஜ்ல எதுவும் குறையக் கூடாது சொன்னார்" எனச் சொல்லியிருந்தார். கண்டிப்பாக சத்யா - டேவிட் இரண்டு கதாபாத்திரங்களுக்குமான மோதல், படத்தில் முழுமையாய் நாம் உணர முடியாது. காரணம் இரண்டு கதாபாத்திரத்துக்குமான பலம். சத்யா தன்னைப் போல கேட்டவன் இல்லை என்ற, தன் தவறான கணிப்பை, சரியாக்க மீண்டும் மீண்டும் சத்யாவை சீண்டுவான் விக்டர். ஆனால், இறுதியில் விக்டர் காவல் துறையினரால் கொல்லப்படுவான். அங்கு நன்மை ஜெயித்து, தீமை தோற்பதோடு படம் முடியும். படத்தின் முடிவில் "நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்கற சண்டைல யார் ஜெயிக்கறாங்கறதலதான், இந்த உலகத்துடைய சமநிலை அடங்கியிருக்கு. இப்ப அந்த சமநிலை திரும்பியாச்சு. இவன் அப்பாவக் கொன்னவன் மாதிரி இன்னொருத்தன் தலை தூக்கறவரைக்குமாவது..." என்ற வாய்ஸ் ஓவருடன் முடித்திருப்பார் கௌதம்.

அது ஒரு நல்ல ஐடியா. இதனால்தான் கதாபாத்திரத்திற்கான பின்புலம் மிக அவசியம். விக்டர் கதாபாத்திரம் பலவீனமாக இருந்திருந்தால், கௌதம் படத்தில் எக்ஸ்ட்ரா வில்லனை சேர்த்திருப்பார். ஆனால், விக்டருக்காக அவர் எழுதியிருந்த பகைமை படத்தின் ஓட்டத்துக்கு துணையாக நின்றது. இரண்டு பேருக்குமான கதாபாத்திரத்தில் இருந்த முழுமை அவர்களின் பயணம் நோக்கி நம்மை நகர்த்தியது. பிரச்சனையும் அதுதான், கதாபாத்திரத்தில் இருந்த முழுமையை கதையில் இல்லை என்பதுதான் என்னை அறிந்தால் சிலருக்கு நெருக்கமாய் உணர முடியாததற்கு காரணமாய் இருக்கலாம்.

“You’ve got to put everything into the one movie and just try and make a great movie because you may not get this chance again.” And then, when it succeeded, we were able to think about, “OK, what would we do in a sequel?” என்ற கிறிஸ்டோஃபர் நோலனின் வார்த்தைகள் கௌதமுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஒருவேளை என்னை அறிந்தால் 2 உருவானால் இதன் குறை தீர்க்கப்படலாம். என்ன கௌதம் சார் ரெடியா?

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்