முகப்புகோலிவுட்

கடல் - நாளங்கள் ஊடே ஓர் அன்பின் பெருவெள்ளம்

  | February 01, 2018 13:33 IST
Kadal Movie

துனுக்குகள்

  • மணிரத்னத்தின் 'கடல்' வெளியாகி இன்றோடு ஐந்து ஆண்டுகள் ஆகிறது
  • சிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது படம்
  • படம் பற்றி சுவாரஸ்ய பகிர்வு இங்கே

மணிரத்னத்தின் பிரதானமான ஒரு non-மணிரத்னம் சினிமா கடல்!

வணிக ரீதியாக வெற்றி, மக்களிடையே தாக்கம் ஏற்படுத்த தவறிய போதிலும்.. அன்பு, நம்பிக்கை எனும் இரு கருக்களை மையப்படுத்தி நன்மை, தீமை, பாவம், மீட்சி பற்றி பேசும் ஒரு படம்.. அதன் நெடுகே விரவியிருக்கும் விவிலிய குறியீடுகள் என எக்காலத்திற்கும் மணிரத்னத்தின் ஒரு அசாத்திய முயற்சியாக நிற்கும்!

மனசாட்சியின் கேள்விகள்.. மதம்.. அதன் மேல் வரும் விசுவாசம்.. குற்ற உணர்வு.. பாவம்.. மீட்சி.. இவையனைத்தும் உச்ச உணர்வுகளாகவே காட்டப்படுகின்றன! தியேட்டரின் பொது அலை மனநிலை கடந்த பின்.. பின்னொரு நாளில் மீண்டும் பார்த்தால் யாவரையும் ஆத்மார்த்தமாக தொடும் ஒரு திரைமொழி.. ஒரு உணர்வியல் இப்படத்தில் இருக்கிறது!

பெர்க்மான்ஸ் - சாமின் பகை, தாமஸின் பிறப்பு, கிராமத்திற்கு சாமின் வருகை, பியா அறிமுகம், மீண்டும் சாமின் வாழ்க்கையில் பெர்க்மான்ஸ் நுழையும் படலம், செலீனாவின் சாம் மீதான குற்றம் சுமத்தல், தாமஸ் சாத்தானுடன் சார்ந்திருப்பது, தாமஸின் பாவ மன்னிப்பு, பெரும்போர், மீட்சி என பைபிளின் பத்து கட்டளைகள் போல.. பெரும் இதிகாசங்களைப்போல.. படம் பத்து பகுதிகளாக இருக்கிறது!

தாமஸின் அன்னை பெயர் சகாய மேரி.. சாத்தானைப்போல பெர்க்மான்ஸ் கூட்டாளிகளாக செமினரியில் எப்போதும் அவருடன் இருக்கும் 12 பேர்.. சாம் ஊரை விட்டு அடித்து விரட்டப்படும் காட்சி இயேசுவின் சிலுவையேற்றம்.. கால் எலும்பை உடைத்து தெம்மாடிக்குழியில் புதைக்கப்பட்ட தாமஸின் தாயின் நன்னடக்கத்திற்கு தேவாலய வாசலில் அவனை இழுத்து செல்லும் சாத்தான் பெர்க்மான்ஸ் வரும் காட்சி.. பியா வழங்கும் பாவ மன்னிப்பு.. இறுதி ஊழ் என ஆர்ப்பரிக்கும் கடலில் நடக்கும் நன்மை, தீமை இடையேயான போர் என இதில் பல தருணங்கள் நேரடி கிறிஸ்துவ காட்சிப்படிமங்களின் குறியீடுகளே!

குறிப்பாக செலீனா சாமின் மீது பழிசுமத்தும் இடம்.. படத்தில் மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று. பைபிளோடு நேரடி தொடர்புள்ள ஒரு கட்டம். இயேசு யுதாஸால் காட்டிக்கொடுக்கப்பட்டதன் மீளாக்கம். கொலைகாரர்கள் துரத்த உயிருக்கு போராடும் பெர்க்மன்ஸை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கிறான் சாம். எங்கேயோ இருந்த செலினாவை பெர்க்மன்ஸ்க்காக தேடிக் கண்டுபிடித்து சாம் அழைத்து வருகிறான். பெர்க்மன்ஸ் பற்றி கேட்கும்போது "அவர் சாவான பாவம் செஞ்சாலும் நான் சேர்ந்து செய்வேன்"னு சொல்கிறாள். அவளை மீண்டும் பெர்க்மன்ஸிடம் சேர்ப்பது சாம். ஆனால் அந்த சாமிற்கு எதிராகவே செலினா பெர்க்மன்ஸால் பொய் சொல்ல வைக்கப்படுகிறாள். சாத்தானின் பாவம் இப்போது இந்த பெண்ணிடம் வந்து விழுந்திருக்கிறது. தேவனின் கண்களுக்கு முன் நேரடியாக குற்றவாளியாக உணரும் செலினா மனம் வருந்தி தலை குனிய, என்ன நடக்கிறது என்றே தெரியாத அந்நிலையிலும் அவளது குற்ற உணர்ச்சியை சாம் உணர்ந்து கொண்டதாக சொல்லி செல்லும் ஒரு shot.

காட்சி மொழியில் கடல் மணிரத்னத்தின் முற்றிலும் மாறுபட்ட ஒரு அத்தியாயம்! ஓரு பாய்ச்சல்!

இருவரில் நிகழ்ந்த பாய்ச்சல்! கன்னத்தில் முத்தமிட்டாலில் நிகழ்ந்த பாய்ச்சல்!

படத்தின் முதல் காட்சியிலேயே சிலுவை ஒன்றை நோக்கி நடக்கும் சாமின் கால்கள்.. தேவாலய வாசலில் நின்றபடி தாமஸை கூவி அழைக்கும் பியாவை நோக்கி வரும் அவன் படகு.. சாம் அடித்து அழைத்து சென்றபின் தேவனின் சிலையை பார்க்க முடியாமல் குறுகும் செலினாவின் முகத்தில் விழும் ஒளி.. பிறப்பின், ஒரு உயிரின் மகத்துவத்தை தாமஸ் உணரும் நொடிகளில் அங்கிருக்கும் இயேசுவின் உருவப்படம் என படம் முழுவதும் ஒரு காட்சி மொழி தியானம்!

"அப்ப சின்ன புள்ளைல நீங்கல்லாம் என்ன விளையாட்டு விளையாடுவீங்க?" என்று ஒரு இடத்தில் பியா தாமஸை கேட்கிறாள். "அது.. சோத்து சண்டைனு ஒரு விளையாட்டு!" என்கிறான் அவன். இவளது உலகத்திலிருந்து.. பரிசுத்தத்திலிருந்து வெகு தூரத்தில் கிடக்கிறது அவன் உலகம்!

படத்தின் மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்றாக வருகிறது தாமஸின் பாவமன்னிப்பு படலம். விளையாடிக்கொண்டிருக்கும் பியாவிடம் தான் பாவி என்கிறான் தாமஸ். அவள் பாவம் என்றால் என்ன என்கிறாள். ஒரு சிதிலமடைந்த தேவாலயத்தின் வெளியே நிகழ்கிறது இது! தன் உலகம் பாவத்தில் சரிந்திருக்கிறது.. தன் கை முழுக்க பாவம் என்றும் சொல்லும் தாமஸின் கைகளை துடைத்து 'இனிமே செய்யாத! இந்த பாவமெல்லாம் போச்சு!' என்கிறாள் பியா! எந்த தேவாலயமும் தரமறுத்த.. எந்த நம்பிக்கையிலும் கிட்டாத.. அவனுக்கான பாவமன்னிப்பை அவளால் மட்டுமே வழங்க முடிகிறது.

இந்த படத்தின் இசை..

நெஞ்சுக்குள்ள..

kadal


இந்த பாடல் தனிப்பாடலாக வெளியானபோது 'பெர்ப்யூம்' படத்தின் இறுதிக்காட்சியில் அந்த வாசனை ஊரையே மயக்கி ஒரு மோனநிலைக்கு தள்ளுவதை போல் கேட்டோர் யாவரையும் ஆக்கிரமித்திருந்தது!

'பச்சி உறங்கிருச்சு! பால் தயிரா தூங்கிருச்சு!
இச்சி மரத்துமேல எல கூட தூங்கிருச்சு!
காச நோய்க்காரிகளும்.. கண்ணுறங்கும் வேளையில..
ஆச நோய் வந்த மக அரநிமிசம் தூங்கலயே!'

என நெய்தல் நில பிரிவுத்துயர் படரும் பாடல்.. செலீனா - பெர்க்மான்ஸ் காதலை கூறும் பாடலாகவே இசையமைக்கப்பட்டது. சில காரணங்களால் தாமஸ் - பியா காதலை சொல்லும் பாடலாக படத்தில் பயன்படுத்தப்பட்டது. திரைநேரத்தில் பெர்க்மான்ஸ் மீது காட்சியாளனிற்கு இருக்கும் வெறுப்புணர்வை பாடல் நீர்த்துவிடலாம் என்று எண்ணியிருக்கலாம்.

அது போலவே.. மூங்கில் தோட்டம் பாடல். இசையின் நரம்புகள் புரண்டுபடுப்பது போல் அவிழ்கிறது! பாவத்தின் உழன்ற ஒருவன்.. அவனை மீட்டுவரும் தேவதை.. இவர்கள் உலகின் பேரமைதிக்கான இசையாக விரிகிறது இந்த பாடல்!

kadal


காஸ்பெல் இசை அதிர மீட்சிக்கு இழுத்து செல்லும் தேவதைக்கு பாடும் 'அடியே..', மீன் மணக்கும் துள்ளல் மொழியில் கடற்கரையில் ஆடும் 'கீச்சான்..', துவண்டிருக்கும் மனதில் நம்பிக்கையை.. நாளையை விதைக்கும் 'சித்திரை நிலா..', கடல் அலை கிழித்து நகரும் கப்பல் விசையில் குரோதம் பேசும் ராப் பாடல் 'மகுடி' என இசையின் உச்சங்களில் எழுந்தும் விழுந்தும் ஒலிக்கும் ஒரு ஆல்பமாக கடல் இருந்தது!

கடலின் முடிவு தெளிவாக சொல்லப்படவில்லை என்று சொல்பவர்கள் உண்டு! பெர்க்மான்ஸ்க்கு என்ன ஆனது? சாமை மக்கள் ஏற்றுக்கொண்டனரா? பியாவிற்கு தாமஸ் எப்படி நினைவிற்கு வந்தான்? இக்கேள்விகளின் ஒற்றை பதில்களாக, நன்மை தீமை இடையே ஏற்பட்ட யுத்தத்தை வென்றவர் யாரென்பதன் பதிலாக இப்படம் இல்லை! இறுதியில் அன்பு வெல்கிறது! மனிதத்தின் ஊடே ஒளிரும் அன்பு! பெர்க்மான்ஸ் தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறான்! இருண்டிருக்கும் மனதினுள்ளும் ஒரு துளி வெளிச்சம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறான்! மணிரத்னம் சாத்தான் என்பவன் வீழ்த்தப்பட்ட தேவதூதன் (fallen angel) என நிறுவுகிறார்! சாம் தன் கொள்கைகளை.. தன் நம்பிக்கையை கண்டுகொண்டு மீண்டும் தன் பணிக்கு திரும்பியது விளங்குகிறது! ஊர்க்காரர்கள் சாமை ஏற்றுக்கொள்வது படத்தின் நோக்கமல்ல! சாமும், பெர்க்மான்ஸும் நண்பர்களாக கைகுலுக்கி கொள்ள வேண்டியதில்லை! இவ்வனைத்து சங்கிலிகளையும் அன்பின் வாசலே கரைக்கிறது!

பெர்க்மான்ஸ் தன் மீட்சியை மன்னிப்பு கேட்பதன் மூலம் அடைகிறான். அத்தனை கொடுஞ்செயல்களுக்கு பின்னும் அவனை மன்னிக்கும் தாமஸ் தன்னை கடந்து நிற்பதாக சாம் உணர்கிறான்! அதுவே சாமிற்கான திறப்பு! படத்தின் முடிவில்.. விசுவாசத்தில் இல்லாத கிராமம் நம்பிக்கை கொள்கிறது. சாம் நடத்தும் ஊர்வலத்தில் பங்குபெறுகிறது. அதன் வழியே தனக்கான மீட்சியை சாம் தேடிக்கொள்கிறான்.

தாமஸ் பியாவிற்கான மீட்சி அவர்களினூடே இருக்கிறது. அன்பே அவர்கள் மீட்சி! அந்த அன்பால் மட்டுமே தாமஸ் பரிசுத்தமடைகிறான்!

'நாளங்கள் ஊடே உனதன்பின் பெருவெள்ளம்!'

அதில் தங்கள் மீட்சியை அடைகிறார்கள்!

'நீ இல்லையேல்.. நான் என் செய்வேன்?
நீ இல்லையேல்.. நான் என் செய்வேன்?
அன்பின் வாசலே!'

இந்த பாடல் ஒரு ஆசிர்வதிப்பை போல திரையில் பரவுகிறது. சாம் செய்த அந்த இயேசுவின் சிலை.. தாமஸ் முதன்முதலில் வணங்கிய சிலை.. நம்பிக்கையற்றிருந்த கிராமத்தின் வீதியில்.. 'நீயே எமதன்னமாக.. நீயே எமதெண்ணமாக..' மக்களின் நம்பிக்கையுடன் தேவாலயம் நோக்கி சுமந்துவரப்படுகிறது!

இன்றோடு கடல் வெளிவந்து 5 ஆண்டுகள் ஆகின்றன! தன்னளவில் மிகுந்த நேர்மையுடன்.. நேர்த்தியுடன் கடலை அணுகியிருப்பார்! வசனங்களின் மிகுந்த நேட்டிவிட்டி, திரைக்கதையின் அமைப்பு, நீளம், காட்சி மொழி, குறியீடுகள் என பல இடங்களில் மணிரத்னம் சொல்ல வந்தது பிறழ்ந்திருக்கலாம். "மணிரத்னத்தின் படங்களில் வெற்றி, தோல்வி என எதுவுமில்லை.. புரிந்துகொள்ளப்பட்டவை, புரிந்துகொள்ளப்படாதவை என்பன மட்டுமே" என்று வைரமுத்து சொல்வார்! எல்லா auteurகளுக்கும் இது பொருந்தும்! கடல்.. அவ்வகையில் தமிழ் சினிமாவில்.. இந்திய சினிமாவில்.. என்றும் ஒரு அசுரத்தனமான முயற்சியாகவே இருக்கும்!    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்