முகப்புகோலிவுட்

ஸ்மார்ட்போனுக்கு முன்பே வந்த எமோஜிகளின் குவியல் செந்தில்! #HBDActorSenthilSir

  | March 23, 2018 15:13 IST
Comedian Senthil

துனுக்குகள்

  • தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் செந்தில்
  • இப்போதும் செந்திலின் காமெடிகளுக்கு வரவேற்பு உண்டு
  • அவரின் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு கீழே
''எங்க ஊர்ல தாத்தா, அப்பா எல்லாருமே மளிகைக் கடை வெச்சிருந்தாங்க. எங்க ஊர் ராமநாதபுரம், முதுகுளத்தூர்ல எங்களை கடைக்காரர்னுதான் கூப்பிடுவாங்க. திடீர்னு ஒரு நாள் என்னோட அப்பா என்னைத் திட்டிட்டார். அப்போ பதிமூனு வயசு இருக்கும், கோவிச்சுக்கிட்டு சென்னைக்கு ஓடி வந்துட்டேன். சென்னைக்கு வந்து பல வேலைகளை பார்த்தேன். அப்போ நடிப்புல ஆர்வம் இருந்தது. நாடகம் சம்பந்தப்பட்ட சிலாரின் அறிமுகமாக் கிடைச்சு நாடகத்துல நடிச்சேன். பிற்காலத்துல சினிமா பிரபலங்களா மாறின பல பேரோட நாடகத்துல நடிச்சிருக்கேன். அப்படித்தான், கவுண்டமணி அண்ணன் கூடவும் பழக்கம். அண்ணனும் நானும் சேர்ந்து நிறைய நாடகங்கள் போட்டிருக்கோம். சினிமாவுக்கு முதல் என்ட்ரி மலையாளத்துல `இதிகார பக்கி'ன்ற படத்தில்தான். தமிழ் படங்களில் சின்னச் சின்ன ரோல் பண்ணேன். அப்படியே அடுத்தடுத்து என்னோட நடிப்பைப் பார்த்துட்டு வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. இதுவரைக்கும் எத்தனைப் படங்கள் நடிச்சிருக்கேனு எனக்கேத் தெரியல. அவ்வளவு படங்கள் நடிச்சிருக்கேன். அதுல நிறையப் படங்கள் கவுண்டமணி அண்ணனோட சேர்ந்து பண்ணியிருக்கேன். நான் சென்னைக்கு ஓடி வந்ததும், என்னை சமாதப்படுத்தி ஊருக்கு திருப்பிக் கூப்பிட்டாங்க, அப்படி திரும்பிப் போயிருந்தா இன்னிக்கு இந்த செந்திலை நீங்க பார்த்திருக்க முடியாது.'' ஒரு பேட்டியில் உங்களுடைய சினிமா பயணம் எப்படித் துவங்கியது என செந்திலிடம் கேட்டபோது இப்படிக் கூறினார். அவருடைய துவக்கமும் அப்படிதான் நடந்தது. ஆனால், ஒரு பத்தியில் அவரைப் பற்றி சின்ன அறிமுகம் மட்டும் கொடுத்து நன்றி வணக்கம் சொல்வது நியாயமாய் இருக்காது. இன்று அவரது பிறந்தநாள் என்பதால் கொஞ்சமும் நியாயமாய் இருக்காது.

நவரசத்தையும் எமோஜிக்கலாக வார்த்து கீபேடில் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால், ஸ்மார்ட் போன்களின் யோசனை அதன் வடிவமைப்பாளர்களுக்கு வரும் முன்பே, அட்டகாசமான பல எமொஷன்களையும் முகத்தில் கொண்டு வந்து ரசிக்க, சிரிக்க வைத்ததில் இருக்கிறது செந்திலின் வெற்றி. அப்படிப் பார்த்தால் அந்தகாலத்து எமோஜிகளின் குவியல் செந்தில்தான். இப்போதும் பல மீம் டெம்ப்ளேட்களில் செந்தில் முகத்தைப் பார்க்கும் போது குபீர் சிரிப்புக்குப் பின்தான், மீமில் என்ன விஷயம் என்று பார்க்கிறோம். இதை அப்படியே அடுத்த தலைமுறைக்கு கடத்திக் கொண்டுவந்தது வடிவேலு. அடிவாங்கி சிரிக்க வைக்கும் செந்திலின் அதே டெக்னிக் வடிவேலுவுக்கும் பலமுறை கைகொடுத்தது. ஆனால், செந்திலின் ரீப்லேஸ்மெண்டாக அல்லாமல், தனக்கான தனித்துவத்தைப் பதிய வைத்ததும், கவுண்டமணி - செந்தில் போல் ஒரே கூட்டணியில் மக்கள் மனதில் பதியாததும் வடிவேலுவை முற்றிலுமாகத் தனித்துக் காட்டியது. ஆனால், செந்தில் நம்மைக் கவர்ந்தது வேறுமாதிரியான டெக்னிக்.
 

பரதம் போல நடிப்பிலும் நவரசமும் வெளிப்படுத்துவது பற்றி பல நடிகர்கள் மீது ஆராய்ச்சிகள் நடப்பதுண்டு. ஆனால், நவரசத்தையும் நகைச்சுவையாக வெளிக்காட்ட வேண்டியதுதான் நகைச்சுவை நடிகர்களுக்கு இருக்கும் சவால். அது எல்லாவற்றுக்கும் வலு கொடுத்ததும், நமக்கு சிரிப்பை வரவழைத்ததும் செந்தில் முகத்தில் ஏகத்துக்கும் குடியிருந்த அப்பாவித்தனம். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அந்த அப்பாவித்தனம் தொடர்ந்தபடியே இருந்தது. முன்பு சொன்னது போல காதலோ, அழுகையோ, கோபமோ, சிரிப்போ, கருணையோ, வீரமோ, பயமோ, சாந்தமோ எந்த உணர்வானாலும் அதற்கு ஏற்ற ஒரு காமெடியை செந்தில் செய்து வைத்திருப்பார். "அந்த இன்னொரு பழம்தான்ணே... இது", "பல்லி விழுந்த டீயக் குடிச்சா செத்துருவாங்கலாமே... அப்ப நீங்க செத்துருவிங்களாணே", "அவ்வா... அவ்வா", "பதனி பதனி", "சொய்ய்ய்ய்யினு பறந்திருச்சு" என ரேண்டமாக எந்த ஒரு செந்திலின் காமெடியை யோசித்தாலும் அதன் பிடிப்பில் அடங்கியிருக்கும் வெகுளித்தனம் ரசிகர்களைக் கவரும்.


என்ன பெரிய செந்தில்... கவுண்டமணி இருந்தாதானே எனக் கேட்கலாம். எந்த ஒரு நிலையிலும் செந்திலையோ, கவுண்டமணியையோ நினைத்தால் இருவருமேதான் நினைவுக்கு வருவார்கள். அது அந்தக் கூட்டணியின், இருவருக்கும் இடையில் உள்ள புரிதலின் நிமித்தம்தான். இந்தக் கூட்டணியில் செந்திலின் பங்கும் மிக முக்கியமானது. செந்தில் இல்லை என்றால், இந்தக் கூட்டணியின் காமெடிகள் எவ்வளவு வரவேற்புப் பெற்றிருக்கும் என்பதில் எனக்கு அச்சம் உண்டு. செந்தில் இல்லை என்றாலும், அந்த இடத்தில் வேறு யாரோ ஒருவர் கவுண்டமணியிடம் அடிவாங்கி, கலாய் வாங்கி எதோ ஒன்று நடந்து சிரிப்பு வந்திருக்கும். இவ்வளவு ஏன் ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கவுண்டமணியே பெரும் நகைச்சுவையை செய்திருக்கிறார்தான். ஆனால், இந்த கூட்டணி நம் மனதிற்குள் அமைத்த அடித்தளம் என்பதை கவனிக்க வேண்டும், டாம் அன்ட் ஜெர்ரி பார்த்தவர்கள் இந்த தியரியை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். பல சமயங்களில் ஜெர்ரியைக் கொள்ளக் கூடிய வாய்ப்பு அமையும். ஆனால், "உன்னைக் கொன்ற பிறகு எனக்கென்ன பொழுதுபோக்கு?" எனச் சொல்லி மறுபடி துடைப்பத்தை எடுத்து விரட்ட ஆரம்பிக்கும். பேட்மேன் - ஜோகர் போன்ற சூப்பர் ஹீரோ படங்களுக்கும் இது பொருந்தும். இது போல கவுண்டமணி காமெடியில் செந்திலின் பாகமும் வலுவானதாக இருக்கும். அவர் ஏதாவது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார். இந்தக் கூட்டணியின் படு ஜோரான காமெடிகளில் பெட்ரோமாஸ் காமெடியும் ஒன்று. "இதுல எப்பிடிண்ணே லைட் எரியும்" என மேன்டிலை உடைத்ததும், செந்திலின் முகபாவங்கள் அந்த சூழலில் உள்ள நகைச்சுவையை சூடுபடுத்தும். இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கான உளவியலை பல நகைச்சுவை காட்சிகள் மூலம் நம் மனதில் பதிய வைத்திருந்தார்கள். அதனாலேயே "சிம்ப்ளி வேஸ்ட்... ப்ச்... ப்ச்" என்கிற வசனமோ, மூலையில் உட்கார்ந்து தேங்காயைக் குரண்டும் முகபாவத்தையோ பார்த்தவுடன் நமக்கு சிரிப்பு வரக் காரணம் அந்த அடித்தளம்தான். கவுண்டமணி - செந்தில் கூட்டணி என்றதும் நமக்குள் ஒரு முன்னெச்சரிக்கை வரும், என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே பாதி சிரித்திருப்போம். இந்த டெக்னிக் வேலை செய்ய அங்கு செந்தில் வேண்டும்.
எப்போதும் யாருக்கும் மாற்றாக இன்னொருவர் வர முடியாது. அதுபோலதான் செந்திலும், அவரது எடக்கு கேள்விகளும், அசால்ட்டு முகபாவனைகளும், அப்பாவித்தனங்களும். "தானா சேர்ந்த கூட்டம்" மூலம் அவரது ட்ரேட்மார்க் காமெடிகளை ரீ-க்ரியேட் செய்திருந்தது, செந்தில் காமெடிகளை மிஸ் செய்திருந்த ரசிகர்களுக்கு நல்ல நாஸ்டாலஜியைக் கொடுத்தது. இதுபோல ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும், யாராவது "செந்தில் அப்போ ஒரு ரியாக்ஷன் கொடுப்பாரு பாக்கணுமே" எனப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். இப்போது கூட எங்காவது பேசிக் கொண்டிருக்கலாம்... படித்துக் கொண்டிருக்கும் உங்கள் மனதுக்குள் செந்தில் வந்து போய்க் கொண்டிருக்கலாம்... ஏனென்றால் எந்தக் கள்ளமும் இல்லாமல், சால்ஜாப்பு செய்யாமல் அவரால் முகத்தில் கொண்டுவர முடிந்த அந்த நகைச்சுவை. பிறந்தநாள் வாழ்த்துகள் செந்தில் சார் :)

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்