முகப்புகோலிவுட்

"உங்களுக்கு எண்டுகார்டே இல்ல வடிவேலு!" #HBD_Vadivelu

  | October 10, 2018 10:58 IST
Vadivelu Birthday

உங்களின் வாழ்க்கையில் எந்தவொரு இக்கட்டான சூழலுக்கும் பொருந்தும்படி வடிவேலுவின் காமெடி இருக்கும் என என்னால் மிக உறுதியாய் கூறமுடியும்

வடிவேலுவை இந்த நூற்றாண்டின் மகா கலைஞன் என்பதோடு நிறுத்திட முடியாது. கொஞ்சம் கவனித்தால் எங்கும் நிறைந்தவராகத்தான் இருக்கிறார். அவரின் ஒரு காமெடியையாவது சொல்லாமல் பெரும்பான்மை ஆட்களுக்கு ஒருநாளைக் கடப்பது மிகச்சிரமம். பத்தாதற்கு இன்றைய இணையத்தில் வளர்ச்சியால் யூட்டியூபோ, மீமோ, ஸ்க்ரீன் ஷாட்டோ எதைப் பார்த்தாலும் அவரைப் பார்க்காமல் உங்கள் ஸ்க்ரால் நகராது. இன்று அவர் பிறந்தநாள் என்பதையும் ஒரு காரணமாய் வைத்துக் கொள்வோம். ஆனால், இப்படி ஒன்றை எழுதி சின்னதாய் ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ளும் ஆசை பலநாட்களாய் இருந்தது. அது இன்றைக்கு வாய்த்ததாய் நினைத்துக் கொள்கிறேன்.

உங்களின் வாழ்க்கையில் எந்தவொரு மகிழ்ச்சியான, துக்கமான, இக்கட்டான சூழலுக்கும் பொருந்தும்படி வடிவேலுவின் காமெடி இருக்கும் என என்னால் மிக உறுதியாய் கூறமுடியும். வசனம்தான் என்பதுகூட அல்ல, ஒரு சின்ன செயல் கூட. நண்பர் ஒருவருடன் நேற்று மாலை பேசிக் கொண்டிருந்தபோது "என்னோட பொறுப்ப எல்லாம் இன்னொருத்தர் தல மேல வைக்கலாம்தான். ஆனா, 'வில்லு' படத்துல வடிவேல் சுடுதண்ணிய விஜய் மேல கொட்டப் போயி, தம்மேலயே கொட்டிகிட்ட கதையாயிடும்" என சொல்ல நானும் உடன் நின்றிருந்த நண்பரும் சத்தம் போட்டு சிரித்துவிட்டோம். அது அப்படித்தான், நம்மையும் மீறி நமக்குள்ளேயே ஒரு ஆழத்தில் பல ரூபங்களாய் உலவிக் கொண்டிருக்கிறார் மனிதர்.

என் சீனியர் அண்ணன் ஒருவர் இந்தத் தகவலை எனக்குக் கூறினார். காமெடியன் வேடம் என்றால் சுத்தி சுத்தி என்ன வந்துவிடப் போகிறது? திருடன், போலீஸ், தாய்மாமன், சாமியார்... இத்யாந்திகள்தான். வடிவேலுவும் பலமுறை திருடனாக நடித்திருக்கிறார். ஆனால், ஒரு திருடன் கெட்டப் போல் இன்னொரு திருடன் கெட்டப் வந்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துவாராம். ஸ்டைல் பாண்டிக்கும், அலார்ட் ஆறுமுத்துக்கும், கீரிப்புள்ளைக்கும் சின்ன அளவிளான தோற்ற மாறுபாட்டையாவது காட்டிவிட துடிப்பாராம். எனக்குக் கேட்கும் போது 'அட ஆமப்ப்ப்பா' என வடிவேலு பாணியிலேயே ஒரு ரியாக்ஷன் வந்தது. நீங்களும் 'சேம் அப்பீலா?'
கிட்டத்தட்ட புரட்சி போலத்தான் ஒன்றை செய்து வைத்திருக்கிறார். உருவ கேலியை மட்டுமே வைத்து சென்று கொண்டிருந்ததை, "ஏய் அத ஏய்யா எடுக்குற? உள்ள வையா" என சொல்லி மிக இலகுவாக தன்னையே ஒரு ஆயுதமாக்குகிறார். இங்கு பின்லேடன் வீட்டுக்கு வழி கேட்கும் மனநோயாளியோ, 'அதெப்பட்றா உம் பாக்கெட்னு நெனச்சு எம் பாக்கெட்ல கைய விட்ட?!' என சீறும் போலீஸோ, இவ்வளவு ஏன் ஃபாரின் நாய்களின் கும்பலோ எல்லா தாக்குதலையும் தன் மீது வாங்கிக் கொண்டு "இதென்ன சாதாரண ஒடம்பா வல்லார லேகியத்த வளச்சு வளச்சு சாப்ட்ட ஒடம்பாச்சே" என என்ட் பன்ச் வரை சிரிக்க வைப்பார். பின்பு அவரின் மாடுலேஷன்களும் பாடி லாங்குவேஜும். சுந்தரா ட்ராவல்ஸில் சட்டென இரண்டு சொல்லலாம். 'கோபி நம்ம பஸ்ஸ விக்கப்போறானாம்', பின்பு அதென்னடா பஸ்ஸுக்குள்ள ஏதோ மினுமினுனு என்றதும், சமாளித்தபடி "அதுவா... மின்மினிப் பூச்சி" அதெல்லாம் மிரட்டல் ரகம். ஊருக்குள்ள பெர்ய பெர்ய ரௌடியெல்லாம் எனப் பேசிவிட்டு எல்லோரும் மாயமானதும் "என்ரா இங்க இருந்தக் காரக் காணோம்" இது எல்லாம் இந்த செக்ஷனுக்குள் அடங்கும் என நினைக்கிறேன்.

ஊடால ஒன்னு சொல்லிக்கிறேன். இது ஏன் வடிவேலு ஜெயித்தார் என்பது மாதிரியான சமாச்சாரம் இல்லை. எப்படி எல்லாம் நம்மை கவர்ந்திருக்கிறார், யானைகிட்ட எத்தன ஹைலைட்ஸு இருக்கு என்பதை உணர்த்த மட்டுமே. வடிவேலுவின் ஒரு ஸ்லாங். மர்தக்காரைங்கடா ஸ்லாங் என இல்லை, "அந்த ஜீவாவே புடிங்கோ அன்னா வேணா பண்ணுங்கோ... வேலுங்குற அப்பாவிய தேடுறீங்களே க்யூம்?" என்பார். இப்படி ஸ்லாங்க் மூலமும் எதாவது புதுமயாய் செய்ய 'மணியார்ட்ர நாங்க கட்டலாமா?' என தோளை சொறிந்தபடி அசால்ட்டாய் நிற்பார்.

பலருக்கும் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம் வடிவேலுவின் கைப்புள்ள அவதாரம். 'வின்னர்' படத்தில் இந்தக் கைப்புள்ள கதாபாத்திரத்தில் நடிக்க கேட்க சென்ற போது, வடிவேலுவின் காலில் ஒரு பிரச்சினை. 'இத வெச்சிகிட்டு ஒழுங்கா நடக்கவே முடியாதேன்ணே' என சுந்தர் சியிடம் கைபிசைந்திருக்கிறார் வடிவேலு. சட்டென ஒரு ஜடியா வந்து, 'உனக்கென்ன ஒழுங்கா நடக்க முடியாது அவ்வளோதானே. படத்தோட ஸ்டார்ட்டிங்கிலயே உன்னோட கால் ஒடயற மாதிரி ஒரு சீன் வெச்சுர்றேன். அதனால படம் முழுக்க நீ நொண்டியே நடந்துக்கோ எதுவும் தப்பா இருக்காது' என சொன்னதுதான் தாமதம். 'சூப்பர்ணே... எந்த மாதிரி எல்லாம் நொண்டலாம்னு சொல்லி சாம்பிள் காட்றேன், பாத்துட்டு எது நல்லாருக்குன்னு சொல்லுங்க' என இன்ஸ்டன்ட்டாக கைப்புள்ளயாக மாறினாராம் வடிவேல். இதை மனதில் வைத்தபடி 'வேணாம் வலிக்கிது' சீனை ஓட்டிப்பாருங்கள். சரியாக அந்த சீன் முடியும் போது ஸ்க்ரீன் ஃப்ரீஸ் ஆகி 'ஐயோ அம்மா காலு... காலு... காலு' என வடிவேல் கத்துவது நினைவுக்கு வரும். இப்படி தன்னிடம் மக்களை சிரிக்க வைக்க வாய்ப்பு கிடைத்தால் போதும் 'அடிமட்டம் வரைக்கும் போய் அலசுவோம்' என குஷியாவார்.

மதுர சட்னிக்குமட்டுமில்ல கிட்னிக்கும் ஃபேமஸ் என்ற காமெடி போல, வடிவேலு காமெடிக்கு மட்டுமல்ல பாட்டுகளுக்கும் பேமஸ். உயிரே உயிரே, ஒரு பொய்யாவது சொல் கண்ணே இதை படித்ததும் இப்பாட்டை இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் கூட தாமதமாகத்தான் நினைவுக்கு வருவார். வடிவேலுதான் முதல் ஆளாக பளிச் என நினைவுக்கு வருவார். 'இனிமே கூல்ட்ரிங்க்ஸ் பாக்கும் போதெல்லாம்..." என்பது மாதிரி இனிமே இந்தப் பாட்டு கேக்கும் போதெல்லாம் வடிவேலு ஞாபகம் தானடா வரும் என நிறைய பாடல்களை தன்னுடைய அடையாளமாக மாற்றி வைத்திருக்கிறார். என்ன என்ன ஐட்டங்களோ... 12பி ஃப்ளாட்டினிலே...

இன்னொன்றை கவனித்திருக்கிறீர்களா? சிலசமயம் அவரின் முழுநகைச்சுவைக் காட்சியும் மனப்பாடமாய் நினைவில் இருக்கும். ஆனால் அது என்ன படம் என்றே தெரியாமல் 'வாய்ல பீடா போட்டு வடிவேல் அடிவாங்குற காமெடி' என சர்ச் செய்து யூட்யூப், கூகுலை பைத்தியமாக்கி சுத்தவிடுவோம். அந்தப் படங்கள் வந்த காலகட்டங்களில், சின்ன ஹீரோவோ, பெரிய ஹீரோவோ படத்தில் வடிவேலு இருந்தே ஆகணும் என தயாரிப்பாளர்கள் அலைந்த கட்டாயம் இருந்தாய் உணர்கிறேன். ஒரு கலைஞன் அவன் நடித்த காட்சியால் அறியப்படுகிறான், படத்தின் பெயராலோ உடன் நடிக்கும் நபராலோ இல்லை என்பதை விட ஒரு சாதனை இருக்க முடியுமா என்ன?

இன்னும் எழுதவும் பேசவும் ஒரு கோடி விஷயங்கள் உண்டு. ஆனால் அள்ள அள்ள குறையாத அவரின் காமெடிகளைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் போதாது. நான் சொன்னதும் போக, அவர் செய்ததும்... பதிந்ததுமாக இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அவை எல்லாம் நமக்குள்ளேயே ஒரு 24 மணிநேர நகைச்சுவை சேனலாய் விளம்பர இடைவேளை இன்றி ஓடிக்கொண்டே இருக்கும். இப்போது வரைக்கும் அந்த இடத்தில் வேறு ஆள் இல்லை. அதை வடிவேலிடம் ஒரு பேட்டியில் கேட்ட போது. "ஊருக்குள்ள இருக்க பூரப்பேரும் வடிவேலுதான்ணே" என பதில் சொல்கிறார்.

ஆமாண்ணே, எங்கும் பூரணமாய் நிறைந்திருக்கும் போது உன் பிரதியாகத்தானே எல்லோரும் இருப்பார்கள். மறுபடியும் வயிறு வலிக்க சிரிக்க வைக்க சீக்கிரம் வான்ணே. ஏன்னா நீயேதான் சொல்லிருக்க, "எண்டுகார்டு போட்டு எகத்தாளமா பண்றீங்க. எனக்கு எண்டே கெடையாது டா!"

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்