முகப்புகோலிவுட்

"செஃப் கனவு... புரூஸ் லீ ரசிகன்... மிஸ்ஸான VTV... தனுஷ் பற்றிய 35 சுவாரஸ்ய தகவல்கள்" #D35 #HappyBirthdayDhanush

  | July 31, 2018 18:47 IST
Dhanush

துனுக்குகள்

  • தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத சிறந்த நடிகர் தனுஷ்
  • கோலிவுட்டில் ஆரம்பித்து ஹாலிவுட் வரை சிறகடித்துவிட்டார்
  • அவரது பிறந்தநாள் சிறப்பு பகிர்வு இதோ
மிக இளம் வயதிலேயே `துள்ளுவதோ இளமை' படம் மூலம் சினிமா பயணத்தைத் தொடங்கியவர் தனுஷ். இன்றைய தேதிக்கு சிறந்த நடிகர்கள் பட்டியலில் தவிர்க்கமுடியாத ஒரு பெயர் அவருடையது. நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குநராக தனது எல்லைகளை மட்டுமின்றி, தனது இருப்பையும் ஹாலிவுட் வரை மிகக் குறுகியகாலத்தில் விரிவு செய்திருக்கிறார். 35வது வயதில் நுழையும் தனுஷ் பற்றி அதிகம் அறியாத, 35 பர்சனல் + புரொபஷனால் விஷயங்கள் கீழே.

1. அறிமுகப் படமான `துள்ளுவதோ இளமை' படத்தில் வெங்கடேஷ் பிரபு என்கிற ஒரிஜினல் பெயரை மாற்றி வேறு பெயரை வைக்க நினைத்தார் அப்பா கஸ்தூரி ராஜா. இளையதிலகம் பிரபு, பிரபுதேவா என சிமிலரான பெயர்கள் சினிமாவில் பிரபலமாக இருந்ததே காரணம். அப்போது கமலின் `குருதிப்புனல்' படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் பிரபு, ஆப்ரேஷன் தனுஷ் என்ற பெயரை கவனிக்க, அதிலிருந்து தனுஷ் என்கிற பெயரை தனது பெயராக தேர்வு செய்து கொண்டாராம்.

2. அண்ணன் செல்வராகவன் மற்றும் பாலுமகேந்திரா இருவருக்கும் தன் கெரியரை செதுக்கியதில் பெரும் பங்குண்டு என்பார். "அவர் கேட்டா கதை கூட கேட்காமல் நடிப்பேன்" எனச் சொல்வது வெற்றிமாறனை. `அது ஒரு கனா காலம்' படத்திலிருந்து துவங்கிய இவர்களது நட்பு இன்னும் அவ்வளவு பிணைப்புடன் உள்ளது.
3. பள்ளிக் காலங்களில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து செஃப் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தாராம் தனுஷ். திருப்தியான சாப்பாட்டை ஒருவருக்குக் கொடுத்து, வயிறாரா ருசித்து சாப்பிடுபவரின் கண்களில் தெரியும் சந்தோஷத்திற்கு இணையானது வேறு ஒன்றும் கிடையாது என்பாராம்.

4. நடிக்க வந்தது எதிர்பாராததாக இருந்தாலும், தயாரிப்பாளர் ஆனது மட்டும் தனுஷின் 'செஞ்சிருவேன் ஸ்கெட்ச்'. காரணம் செல்வா 'காதல் கொண்டேன்' பட கதைக்கு தயாரிப்பாளர் தேடிய போது கதையை பலரும் கதையை நிராகரித்திருக்கிறார்கள். "நாம் உள்ள போனதும் புது ஆள்னு எல்லாம் பாக்காம கதைக்காக படம் பண்ணணும்" என அப்போது செல்வாவிடம் தனுஷ் கூறிய வார்த்தைகளே 'வுண்டர்பார்' நிறுவனத்தின் அஸ்திவாரம்.

5. ``உன் ஸ்கின்டோன், எந்த ஒரு கேமராமேனும் ரசித்து லைட்டிங் வைக்கிற ஒன்று. இரண்டாவது, நீ ஒரு இத்தாலியன் மாடல் போல இருக்கிறாய்” என 'அது ஒரு கனா காலம்' படத்தில் க்ளோசப் வைப்பதைக் கண்டு தயங்கிய தனுஷிடம் கூறியிருக்கிறார் பாலுமகேந்திரா. எப்போதும் பெருமை கொள்ளும் ஒன்றாய் தனுஷ் நினைப்பது பாலுமகேந்திராவின் அந்த வார்த்தைகளைத்தான்.

6. ட்விட்டரில் 70 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலாயர்கள் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் தனுஷ்தான்.

7. தனுஷ் வெஜிடேரியன் விரும்பி. அவ்வபோது முட்டை மட்டும் சேர்த்துக் கொள்வாராம். தனது உடல்வாகு கச்சிதமாக இருப்பதற்கு உணவு முறைதான் காரணம் என தீவிரமாய் நம்புபவர், "நொறுக்குத் தீனி, இனிப்புனு வெயிட் போடும் சமாச்சாரம் எல்லாம் இயல்பாவே எனக்குப் பிடிக்காது. அதனால வெயிட் போட்ருவேன்னு கவலையே கிடையாது. இதுதான் என் பிட்னஸ் சீக்ரெட்" என்பார்.

8. உலகம் முழுக்க ஹிட்டடித்த கொலவெறி பாடலை தனுஷ் எழுத எடுத்துக் கொண்டது ஆறு நிமிடங்கள். மொத்த பாடலும் அரை மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் தயாரானதுதான். இணையத்தில் அதன் ஸ்க்ராட்ச் வெர்ஷனை யாரோ வெளியிட, வைரலாக பற்றிக் கொண்டது. அதன் பின் ஒரிஜினல் பாடலை வீடியோவாக பதிவு செய்து அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.

9. கொலவெறி பாடலுக்கு பதிலாக ஒரு ஃபார்ஸ்ட் பீட் பாடலையும் போட்டு வைத்திருந்தார் அனிருத். அந்த ஃபார்ஸ்ட் பீட் பாடலை டீம் மொத்தமும் டிக் அடிக்க, தனுஷ் மட்டும் "இல்ல... நாம கொலவெறிய யூஸ் பண்ணுவோம்" என நின்றார். கடைசியில் தனுஷின் கணிப்பு வேற லெவல் ஹிட். அந்த ஃபார்ஸ்ட் பீட் பாடல் பின்பு சிவகார்த்திகேயனின் `எதிர்நீச்சல்' படத்தில் பயன்படுத்தினார் அனிருத். அதுதான் சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல பாடல்.

10. தனுஷ், புரூஸ் லீயின் மிகப் பெரிய அன்பு கொண்டவர். தனது வுண்டர்பார் அலுவலகத்தில் கூட அவரது மேஜை மீது சிறிய ப்ரூஸ் லீ சிலை வைத்திருப்பார்.

11. வெறித்தனமான ஃபுட்பால் ரசிகர் தனுஷ், ஷூட்டிங் பரபரப்புக்கு நடுவேயும் வேர்ல்டு கப் போட்டி அத்தனையும் பார்த்துவிடுவாராம்.

12. "எனக்குன்னு எந்த வின்னிங் தியரி எதுவும் கிடையாது, எல்லாம் பிராக்டிகல்ஸ்தான்" என்பது வாழ்க்கை குறித்த தனுஷின் தத்துவம்.

13. தனது படங்களின் டப்பிங்கை மிக வேகமாக முடித்துக் கொடுத்துவிடுவார். சில படங்களுக்கெல்லாம், ஒரே நாளில் முடித்துக் கொடுத்திருக்கிறாராம். ஆனால் டப்பிங்கிற்கே எட்டு நாட்கள் செலவிட்ட படம் `ராஞ்சனா'.

14. பாலிவுட்டில் `ராஞ்சனா' படத்துக்கு ஒப்பந்தமான போது தனுஷுக்கு சுத்தமாக இந்தி வராது. ஆனால், முதல் படத்துக்கே சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது வென்றார். அடுத்து அமிதாப் பச்சனுடன் இணைந்து `ஷமிதாப்' நடித்தார். மொழி எல்லைகள் தாண்டிய கலைஞன் அடுத்த இந்தி படத்துக்கும் ரெடியாகி வருகிறார். முதல் பாலிவுட் படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய்தான் அதற்கும் இயக்குநர்.

15. "எல்லோரும் எனக்கு இந்தி பட வாய்ப்பு கிடைக்க காரணம் கொலவெறிடி பாடல்தான் என நினைக்கிறார்கள். உண்மையில் அந்த வாய்ப்பை எனக்குப் பெற்றுத்தந்தது, வெற்றிமாறானின் `ஆடுகளம்'. அந்த சமயம் யார் `இந்த முறை தேசிய விருது வென்றிருக்கிறார்?' என ஆனந்த் எல்.ராய் அவரது உதவியாளரிடம் கேட்டிருக்கிறார். அவர் ஒத்த சொல்லால பாடலை காண்பித்து இவர்தான் எனக் காட்ட, 'அட `ராஞ்சனா' படத்திற்கு இப்படி ஒரு ஹீரோவைத் தானே தேடுகிறோம்' என்று என் போல சாயலுள்ள பலரைத் தேர்வு செய்து பயிற்சி கொடுத்தனர். ஆனால், அவர்கள் யாரும் திருப்தி அளிக்காததால், `ஏன் இவரைப் போன்று ஒரு ஆள், இவரையே நடிக்க வைத்தால் என்ன' என யோசித்து என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவர்கள் ஒரு இயக்குநரை அணுகி என்னிடம் பேச சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்த இயக்குநர் என்னிடம் பேசாமலே, அவர் இந்தி படத்தில் எல்லாம் நடிக்க மாட்டார் என சொல்லிவிட்டார். பின்பு கொலவெறி பாடல் வெளிவந்த பிறகு பலருக்கும் என்னைத் தொடர்பு கொள்ள வசதி ஏற்பட்டது. பின்புதான் ஆனந்த் எல்.ராய் என்னிடம் பேசினார், ராஞ்சனா துவங்கியது..." என தன் பாலிவுட் என்ட்ரி பற்றி கூறுவார் தனுஷ்.

16. ஆரம்பத்தில் தனுஷ் இயக்கிய குறும்படங்களுக்கு இசையமைத்து வந்தார் அனிருத். அப்போதே அவரை கவனித்த தனுஷ் "இந்தப் பையன் பின்னால பெரிய ஆளா வருவான் பாருங்க" எனச் சொல்லி, தான் நடித்த `3' படத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். இப்போது விஜய், அஜித் என ஒரு ரவுண்டு ஆடிவிட்டு, செகண்ட் இன்னிங்க்ஸில் ரஜினிகாந்த் படத்துடன் நிற்கிறார் அனி.

17. திறமையானவர்களை அடையாளம் காண்பதும் அவர்களை ஏதாவது ஒரு வகையில் பிளாட்ஃபார்ம் அமைத்துத் தருவது தனுஷின் ஸ்பெஷல் குவாலிட்டி. சிவகார்த்திகேயன், `காக்கா முட்டை' மணிகண்டன் என முக்கியமானவர்கள் இந்தப் பட்டியலில் உண்டு. `பரட்டை என்கிற அழகு சுந்தரம்' படத்தில் தனக்கு அறிமுகமான வேல்ராஜின் திறமையைப் பார்த்து வெற்றிமாறனிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். `பெல்லாதவன்', `ஆடுகளம்' இப்போது `வடசென்னை' என மிரட்டுகிறது அந்தக் கூட்டணி.

18. `சினிமா பாரடைசோ' தமிழில் செல்வராகவனின் `7ஜி' இரண்டும் தனுஷின் ஆல்டைம் ஃபேவரைட். இப்போதும் `7ஜி'யை மிஸ் பண்ணிட்டோமே என்ற வருத்தம் தனுஷுக்கு உண்டு.

19. டார்க், நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரங்களின் மீது தனுஷுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 3 போன்ற படங்களில் அதைச் செய்திருந்தாலும் முழுக்க முழுக்க மிரட்டலான நெகட்டிவ் ரோலுக்காக தனுஷ் வெயிட்டிங்.

20. வாட்ச் கலெக்ஷன் மீது மிகுந்த ப்ரியம் கொண்டவர் தனுஷ். புது இடங்களுக்கு செல்லும் போது அங்கிருந்து வாட்ச் வாங்குவது தனுஷின் வழக்கம். அதிலும் ரேடோ வாட்ச் மீது தனி பாசம் தனுஷுக்கு.

21. விஐபி படத்தில் தனுஷ் சிகரெட் பிடிக்கும் சீனுக்கு பயங்கர மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஆனால், நிஜத்தில் தனுஷுக்கு சிகரெட் என்றாலே அலர்ஜி. முடிந்த அளவு அந்தக் காட்சிகளைத் தவிர்க்கப்பார்ப்பார்.

22. நடக்க இருந்து பின்பு சில காரணங்களால் இணையாமல் போன கூட்டணியில் மணிரத்னம் - தனுஷ் கூட்டணியும் ஒன்று. "கண்டிப்பாக ஒரு சரியான சூழலில் இந்த கூட்டணி இணைந்தால் எனக்குக் கிடைத்த ஆசிர்வாதமாக உணர்வேன்" என இதைப்பற்றிக் கூறுவார்.

23. ஸ்பெஷல் நிகழ்வுகள், திரைப்பட விழாக்கள் என வெளியிடங்களுக்கு தனுஷ் அணிந்து வரும் உடைகளுக்கு காஸ்ட்யூம் டிசைனர் யாரும் கிடையாது. வேஷ்டியோ, கோர்ட் சூட்டோ எல்லாமே தனுஷின் பெர்சனல் செலக்ஷன்தான்.

24. `Inglourious Basterds' படத்தில் அடிக்கடி வந்த `Wunderbar' என்கிற ஜெர்மன் வார்த்தையைத் பார்த்துதான் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு `Wunderbar' எனப் பெயரிட்டார் தனுஷ். திரைப்படங்கள் தயாரிக்கும் முன்பு, தனுஷ் - அனிருத் ஆகியோர் இணைந்து குறும்படங்கள் எடுத்து அதில், Wunderbar Films Presents என விளையாட்டாகப் போட்டுக் கொள்வார்களாம். `Wunderbar' என்றால் ‘Wonderful’ என்று அர்த்தம்.

25. பல ஹிட் பாடல்களை எழுதியிருந்தாலும், தனுஷுக்கு தன்னைப் பாடலாசிரியராக அடையாளப்படுத்திக் கொள்வதில் கொஞ்சம் கூச்சம் உண்டு. ஆனால், தான் எழுதியதிலேயே விஐபி படத்தில் இடம்பெற்ற அம்மா அம்மா பாடல் மிக ஸ்பெஷல் என சொல்வார். காரணம் பாடல் வெளியாகி பல காலத்திற்குப் பிறகும் "எங்க அம்மா என் கூட இருந்த மாதிரி இருந்தது சார்... பாட்ட கேட்கும் போது கண்கலங்கிட்டேன்" எனப் பலரும் தனுஷிடம் சொன்னதுதான்.

26. இளையராஜாவின் தீவிரமான ரசிகர் தனுஷ். கார் பயணங்களில் இசைஞானி இசையில் மூழ்கிக்கிடப்பாறாம். பிடித்த ஹீரோயின் என சுஷ்மிதாசென், ஸ்கார்லெட் ஜோஹன்சன், குஷ்பு எனப் பலரை சொன்னாலும், பிடித்த ஹீரோ என சொல்வது ஒன் அன்ட் ஒன்லி `சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தை மட்டுமே.

27. `எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்திற்கு முன்பே கௌதம் மேனன் படத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்தது. தேதிகள் காரணமாக இந்தக் கூட்டணி இணையாமல் போன அந்தப் படம் `விண்ணைத்தாண்டி வருவாயா'

28. பர்சனல் வேற, புரஃபஷன் வேற என்பதில் தெளிவான நம்பிக்கை உள்ளவர். "மகன்கள் வளர்ந்து வருகிறார்கள், படத்தைப் பார்ப்பார்களே அவர்களுக்காக இது வேண்டாம், இது முடியாதுனு என்னால் கதையை சிதைக்க முடியாது. இது சரியா தவறா என்றெல்லாம் தெரியாது... ஆனால், ஒரு கதைக்கு என்ன தேவையோ அதை செய்வதில் எந்தத் தயக்கமும் கிடையாது" என்பார்.

29. அதே சமயம் தனது மகன்களுக்கு, குடும்பத்துக்கு தேவையான நேரங்களில் உடன் இருக்க வேண்டும் என விரும்புபவர். முதல் குழந்தை பிறக்கும் சமயத்தில், ஊட்டியில் `திருவிளையாடல்' பட ஷூட்டிங்கில் இருந்தவர், ஐஸ்வர்யாவை மருத்துவமனையில் சேர்த்தது தெரிந்ததும் காரை எடுத்துக் கொண்டு கோயபுத்தூரில் ஃப்ளைட் ஏறி அடுத்த நான்கு மணிநேரத்தில் மனைவியின் பக்கத்தில் வந்து அமர்ந்துவிட்டாராம்.

30. சமூக வலைத்தளங்களில் பல விஷயங்களுக்காக உங்கள் பெயர் சர்ச்சையில் சிக்குகிறதே. அதை எல்லாம் எப்படி அமைதியாகக் கடந்து போகிறீர்கள்? எனக் கேட்டால், "நம்மை சுற்றி நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. நமக்கு என்ன வேணும்னு நாமதான் தேர்ந்தெடுக்கணும். நான் நல்லதை மட்டும் பார்க்கறேன். இந்தப் பக்குவம்தான் என்னை அமைதியா வெச்சிருக்கு" என்பார்.

31. தான் எழுதிய கதையை செல்வராகவனிடம் கொடுத்திருக்கிறார் தனுஷ். படித்து முடித்தவர் "இந்தக் கதையை எனக்குக் கொடுக்குறியா... நானே இதை எடுக்கறேன்" எனக் கூறியிருக்கிறார். "செல்வா... உனக்கு ஒரு கதை பிடிச்சிருக்குன்னா அதுதானே நான் முதல்ல டைரக்ட் பண்ற படமா இருக்கணும்' எனச் சொல்லி தனுஷ் இயக்கிய படம்தான் `பவர் பாண்டி'

32. ப.பாண்டியில் இன்னொரு ஸ்பெஷல் காம்பினேஷனும் அமைந்தது. தனுஷின் அப்பா இயக்கிய முதல் படமான `என் ராசாவின் மனசிலே' படத்தில் ராஜ்கிரண்தான் ஹீரோ. தனுஷ் இயக்கிய முதல் படத்தின் ஹீரோவும் அவரே. "ஒரு வகையில் நாங்கள் இந்த நல்ல நிலைமையில் இருக்க ராஜ்கிரண் சார் அன்னைக்கு அப்பா படத்தில் நடிச்சதும் ஒரு காரணம்தானே" என்பாராம் பணிவாக.

33. `யாரடி நீ மோகினி' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த தனுஷ், `பொல்லாதவன்' வெளியாகி ஹிட்டானது தெரிந்ததும் வெற்றிமாறனுக்கு போன் செய்திருக்கிறார். போனில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்க வெற்றிமாறனுக்கு ஒன்றும் புரியவில்லை. சத்தம் ஓய்ந்ததும் "சார் இன்னிக்கிதான் எனக்கு தீபாவளி" என சிரித்தபடி பேசியிருக்கிறார் தனுஷ். காரணம் பல தயாரிப்பாளர்கள் நிராகரித்தும் அந்த ஸ்க்ரிப்ட் மீது தனுஷ் வைத்திருந்த நம்பிக்கை மட்டும் மாறவில்லை. அதனாலேயே தனுஷுக்கு அந்தப் பட வெற்றியில் எல்லையில்லா மகிழ்ச்சி.

34. தனது படங்கள் இப்படி அப்படி என சொல்வதில் எப்போதும் தனுஷுக்கு உடன்பாடு கிடையாது. ஆனால், "இந்தப் படம் கேங்க்ஸ்டர் படங்களுக்கெல்லாம் ஒரு பென்ச் மார்க்கா இருக்கும்" எனப் பல இடங்களில் பதிவு செய்வது வெற்றிமாறனின் `வட சென்னை' படத்தை.

35. `துள்ளுவதோ இளமை' துவங்கி இப்போதைய வளர்ச்சி எப்படிப் பார்க்கறீங்க என்றால், "வளர்ச்சின்னு எடுத்துக்கறதான்னு தெரியல... ஓரளவு விஷயம் தெரிஞ்சு, என் வேலையை ரசிச்சுப் பண்றேன்" என்பார் தனுஷ்.

பிறந்தாள் வாழ்த்துகள் தனுஷ்!
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்