முகப்புகோலிவுட்

ஆண்டுக்கு 2 படங்கள் நடிங்க சிம்பு – நடிகர் தனுஷ்

  | December 08, 2017 19:09 IST
Dhanush Speech At Sakka Podu Podu Raja Audio Launch

துனுக்குகள்

  • ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது
  • இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார்
  • இதன் ஆடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டார்
‘தில்லுக்கு துட்டு’ படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. சேதுராமன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா டூயட் பாடி ஆடியுள்ளார். நடிகர் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு இசையமைத்துள்ள இதனை ‘VTV புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் VTV கணேஷ் தயாரித்துள்ளார். படத்தை வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (06-12-2017) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷ், சிம்பு, சந்தானம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் எம்.ராஜேஷ் மற்றும் ‘சக்க போடு போடு ராஜா’ படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் தனுஷ் பேசுகையில் “சந்தானம் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சந்தானம் ஒரு காமெடியனாக என்ட்ரியாகி, இன்று ஒரு ஹீரோவாக தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார். நம்பிக்கையோடு போராடினால், வாழ்க்கையில் எதுவுமே சாத்தியம் தான். சந்தானத்தின் கடின உழைப்பு, டிரையிலர் மற்றும் பாடல்களை விஷுவல்ஸ் பார்க்கும்போதே தெரிகிறது. இன்னும் தொடர்ந்து அவர் பல வெற்றிகளை தர வேண்டும். என்னுடைய 'பொல்லாதவன் மற்றும் பரட்டை (எ) அழகுசுந்தரம்' ஆகிய 2 படங்களில் சந்தானம் நடித்திருக்கிறார். 'பொல்லாதவன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் நானும், அவரும் நிறைய பேசியிருக்கிறோம். அப்போதே சந்தானம் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என நான் வெற்றிமாறனிடம் சொன்னேன். சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்னை மொழியை அவ்வளவு அழகாக பேசுவார்.
 

சிம்பு தான் இசையமைத்த பாடல்களை என்னிடம் கேட்க சொல்லி அனுப்பி வைத்திருந்தார். இந்த ஆடியோ ரிலீஸுக்கு சிம்பு என்னை கூப்பிட்டதாலையே வந்தேன். என்னோட பட விழாவுக்கு நான் அவரை அழைத்தாலும், நிச்சயம் அவரும் வருவார். சிம்புவும் நானும் நல்ல நட்புடன் உள்ளோம். மற்றவர்கள் சொல்வதுபோல் எங்களுக்குள் எந்த பிரச்னையுமே இல்லை. ஆனால், எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குத்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என நான் நினைக்கிறேன். பல வெற்றிகள், தோல்விகள், விமர்சனங்கள் என எங்கள் இருவருக்குமே இருந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமாவில் முன்பெல்லாம் வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு கடினமாக இருந்தது. ஆனால், இப்போது டிஜிட்டல் யுகத்தில் வாய்ப்பு கிடைப்பது மிக எளிதாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம், ஜெயிக்கலாம். ஆனால், நிற்பது தான் கடினம்.

15 ஆண்டுகள் ஆனாலும் சிம்பு நின்று கொண்டு தான் இருக்கிறார். 'துள்ளுவதோ இளமை' ஷூட்டிங் டைமில் எனக்கு சுத்தமா நடனமாடவே வராது. அப்போது, சிம்பு மாதிரி ஆடுங்கள் என்று என்னிடம் சொல்லுவார்கள். இப்போதும் சொல்கிறேன், சிம்பு மாதிரி என்னால் நடனமாட முடியாது. என்னுடைய ரசிகர்கள் சிம்பு நடிச்ச படத்தை பார்க்க வேண்டும். சிம்பு ரசிகர்கள் நான் நடிச்ச படத்தை பார்க்க வேண்டும். எல்லா ரசிகர்களும் எல்லாருடைய படத்தையுமே பார்க்க வேண்டும். ஏன்னா அப்போது தான் தேய்ந்து கொண்டிருக்கும் நமது சினிமாத்துறை புத்துணர்ச்சி பெறும். சிம்பு உங்களுடைய தீவிர ரசிகர்களுக்காகவாவது நீங்கள் ஒரு ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும். அது உங்களின் கடமையும் கூட. உங்கள் ரசிகர்களின் சார்பில் நான் இதை கேட்டுக்கொள்கிறேன்” என்று தனுஷ் கூறினார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்