விளம்பரம்
முகப்புகோலிவுட்

திரைப்படம் இயக்குவதே எனது கனவு - 'நெருப்புடா' அருண்ராஜா காமராஜ் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

  | May 15, 2017 16:42 IST
Celebrities

துனுக்குகள்

  • ரஜினி சாரை இன்னும் நான் நேரில் பார்க்கவில்லை
  • சந்தோஷ் அண்ணாவுக்கு எனது நன்றிகள் பல
  • நானும் சிவகார்த்திகேயனும் கல்லூரி நண்பர்கள்
திரையுலகில் சாதிக்க வேண்டும் என்று எண்ணி சென்னைக்கு வந்தவர்கள் பலர் இருந்தாலும் யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர்களுக்கு திரையுலகில் நுழையும் தருணம் கிடைக்கும், அதன் பின் யாருக்கு திறமை இருக்கிறதோ அவர்கள் மட்டுமே திரை உலகில் நிலைத்திருக்கவும் முடியும் , பல திறமைகளை உள்ளடக்கிய நபர் தான் இன்று நாம் பேட்டிக்கண்ட நடிகர், பாடகர், பாடலாசிரியர் 'நெருப்புடா' புகழ் அருண்ராஜா காமராஜ்.

தன்னுடைய கரகர குரலால் பாடியே பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் அருண்ராஜா காமராஜ், 'ராஜா ராணி' திரைப்படத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர் போன்ற கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் சரி 'மான் கராத்தே' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் நண்பனாக நடித்தாலும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற முகம் கொண்டவர், நகைச்சுவை என்பது இவரது இயல்பான பேச்சிலேயே உள்ளது என்பதும் , தமிழ் மீது இவருக்கு உள்ள காதலும் இவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது என்பதும் அனைத்து தரப்பினரின் கருத்து.

சாங் ரிக்கார்டிங்கில் மிகவும் பிசியாக இருந்த அருண்ராஜாவிடம் பேட்டிக்கண்டோம் உங்களுக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையே உள்ள நட்பை பற்றி கூறுங்களேன்? "நானும் நடிகர் சிவகார்த்திகேயனும் காலேஜ் மெட்ஸ் திருச்சியில் பொறியியல் படித்தோம், எங்களுக்குள் எதிர் கருத்துக்கள் தான் அதிகம், இருந்தாலும் ஒன்றாகவே நிறைய படங்கள் பார்ப்போம் அதைபற்றி விவாதிப்போம், மாற்று சிந்தனை இருந்தால் தானே விவாதிக்க முடியும், அதனாலேயே நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே உள்ளோம், நட்பைத்தாண்டி எங்களுக்குள் ஒரு குடும்ப உறவு உள்ளது, பெற்றோர்களை பிரிந்து சென்னையில் நாங்கள் வசிப்பதாலும், என்னுடைய மனைவியும், சிவாவின் மனைவியும் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும் கூட எங்களின் நட்பு எந்த ஒரு இடரும் இன்றி தொடர்கிறது " என்று சிரித்துக்கொண்டார்.
 
arunraja kamaraj

உங்களுடைய லட்சியமே திரைத்துறையில் பாடவேண்டும் என்பது தானா? "அட போங்க பிரதர் டைரக்ஷனுக்காக வந்தேன் கையில இருக்க காசு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது அப்போது கிடைத்த வாய்ப்பு தான் நடிப்பும், பாடுதலும்.... நானும் சிவாவும் சென்னையில் ரூம் மெட்டாக இருந்தபோது இயக்குநர் அட்லீ அடிக்கடி வருவார் அப்போது ஏற்பட்ட நட்பு தான், பின்பு 'ராஜா ராணி' திரைப்படம் துவங்கும் போது என்னை அழைத்து நடிக்கிறியா என்று கேட்டார் ? உடனே ஓகே சொன்னேன் அப்படி துவங்கியது தான் என்னுடைய நடிப்பு, ஆனால் அதற்கு முன்னதாகவே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அண்ணன் ஒரு முறை என்னை அழைத்து பிட்ஸா திரைப்படத்திற்கு பாடல் எழுத சொன்னார் 'ராத்திரி' மற்றும் 'எங்கோ ஓடுகின்றாய்' என்ற பாடல்கள் எழுதினேன் அதன் பின் மீண்டும் ஒரு முறை அழைத்து இம்முறை பாடல் எழுதுவது மட்டுமின்றி சின்ன தீம் சாங் பாடணும் கொஞ்சம் கனத்த குரலில் என்று கூறினார், பாடினேன் நல்ல இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை, அதன் பின் என்னிடம் சந்தோஷ் அண்ணா அந்த பாட்டு ஜிகர்தண்டா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது என்று கூறினார், அந்த பாடல் தான் 'டிங் டாங்' அப்படியே பாடகனாக பயணித்துக்கொண்டிருக்கிறேன் இன்று உங்கள் முன் நான் பேட்டி அளிப்பதற்கு முக்கிய காரணம் சந்தோஷ் அண்ணா தான் அவருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
எப்போ டைரக்ஸன்? "விரைவில் பிரதர் கதையெல்லாம் ரெடி தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறேன் கூடிய சீக்கிரம் எல்லாம் நல்ல படியாக அமையும்" அப்போ ஹீரோ சிவகார்திகேயனா? என்று நாம் கேட்ட கேள்விக்கு "இல்ல பிரதர் நான் தயார் செய்து வைத்துள்ள கதை அவருக்கு பொருத்தமான கதையாக இருக்காது ஆனால் சிவாவையும் கண்டிப்பா ஒரு நாள் இயக்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு".

சினிமா துறையில் பணிபுரிய விரும்புவார்களோ அல்லது பணிபுரிபவர்களோ சினிமா ரசிகர்களோ அவர்களுக்கு மனதில் இருக்கும் பெரிய ஆசை என்பது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களை நேரில் பார்த்துவிடவேண்டும் என்பது தான் ஆனால் நீங்கள் அவருக்காக பாடியுள்ளீர்கள் எப்படி இருந்தது அந்த தருணம், சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார்? "உண்மையைச்சொல்லணும்ணா நா இன்னும் சூப்பர் ஸ்டாரை நேரில் பார்க்கவில்லை, ஒரு நாள் இரவு சந்தோஷ் அண்ணா எனக்கு ஃபோன் செய்து ஒரு படத்துக்கு பாடல் எழுதி படணும்டா காலையில ஸ்டூடியோ வா என்று அழைத்தார்,அடுத்த நாள் சென்றேன் அங்கு இயக்குநர் ரஞ்சித் சந்தோஷ் அண்ணாவுடன் அமர்ந்திருந்து 'மாய நதி' படலைப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர், நான் உள்ளே நுழைந்த உடன் ரஞ்சித் சார்யை பார்த்து கை நீட்டி சிட்சுவேஷன் சொல்லிடுங்க சார் என்று சொன்னார் அந்த தருணம் வரை நான் ரஜினி சார் படத்திற்கு பாடல் எழுதப்போறேன்னு கனவுல கூட எண்ணவில்லை, ரஞ்சித் சார் எண்ணிடம் சில தகவல்களை சொன்னார், எனக்கு 'தளபதி' சூர்யா கதாப்பாத்திரம் மிகவும் பிடிக்கும் அதனை மையப்படுத்தி ஒரு பாடல் 20 நிமிடங்களுக்குளாக எழுதி கொடுத்தேன் ஒரு மாற்றமும் சொல்லவில்லை டேக் போய்ட்டோம், அதன் பின் ஒரு முறை இயக்குநர் என்னிடம் சூப்பர் ஸ்டார் கேட்டுட்டாரு நல்ல இருக்குனு சொன்னாரு என்று கூறினார் அதுவே பெரிய பாக்கியம் என்று எண்ணுகிறேன், விரைவில் சூப்பர் ஸ்டாரை சந்திப்பேன் என்ற எண்ணமும் எனக்குள் உள்ளது" என்று தனது வழக்கமான கரகர சிரிப்புடன் பேட்டியை முடித்துக்கொண்டார் .

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்