முகப்புகோலிவுட்

ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன் - இயக்குநர் அமீர் பிரத்யேக பேட்டி

  | May 20, 2017 15:11 IST
Celebrities

துனுக்குகள்

  • ரஜினிகாந்தை தமிழராக மக்கள் ஏற்றுக்கொண்டனர்
  • இந்திய அளவில் அவருக்கு செல்வாக்கு உண்டு
  • ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்
கடந்த 5 நாட்களாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகேவேந்திர திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் தனது ரசிகர்களுடன் தனி தனியே புகைப்படம் எடுத்துக்கொண்டார், துவக்க நாள் அன்று 'இத்தனை வருடங்களாக உங்களை சந்திக்காமல் இருந்தது சில அரசியல் நிர்பந்தங்களால்" என்று கூற அது மிகப்பெரிய விவாதத்தை தமிழகத்தில் கிளப்பியது, அன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்களாக ரஜினி காந்த் அவர்களை மையப்படுத்திய அரசியல் பேச்சு பரிணாம வளர்ச்சி அடைய இறுதி நாளில் "போர் வரும்போது எல்லோரும் தயாராகிக்கொள்வோம்" என்றார், துவங்கியது ரஜினியின் அரசியல் பயணம், தனி கட்சி துவங்க போகிறார் ரஜினி, தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினி தான் என்று ஆளாளுக்கு மகிழ்ச்சியில் சில செய்திகளை பரப்பி விட அவர் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி என்றும் அவர் அரசியலுக்கே வரக்கூடாது என்றும் அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நாங்கள் எதிர்ப்போம் என்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கைகளின் வாயிலாகவும் நேரடி பேட்டிகளிலும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதைப்பற்றி இயக்குநர் அமீரிடம் ரஜினி காந்த் அரசியல் பேச்சை பற்றி பேட்டி கண்டோம், பேட்டியின் துவக்கத்திலேயே பதிலளித்த அமீர் "இந்த ஜனாநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அவர்களை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் மக்களின் கையில் உள்ளது, ஆக யாரையும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு ஜனநாகயத்தில் இடமில்லை, அதனால் தான் ஜெயலலிதாவின் அண்ணன் மகளாக பிறந்த ஒரே காரணத்திற்காக தமிழ் மக்களோடு எந்த தொடர்பும் இல்லாத தீபா ஒரு கட்சியும், தீபாவோடு தொடர்பே இல்லாத அவரது கணவரும் ஒரு கட்சியும் ஆரம்பிக்கிறார்கள். இந்த கொடுமையை எல்லாம் தமிழகத்தில் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகி விட்டோம். ஆனால் திரு. ரஜினி காந்த் அவர்களை இவர்களோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது. 1996ல் இருந்தே தமிழக அரசியலிலும், அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களிலும் ரஜினி அவர்களின் பெயர் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படுத்தப்பட்டே இருந்திருக்கிறது. மேலும் எனக்கு நினைவு தெரிந்து மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பிறகு தனது ரசிகர்களால் அரசியலுக்கு அழைக்கப்பட்ட முதல் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான். இந்த விஷயத்தில் விஜயகாந்த் அவர்கள் இரண்டாவது இடத்தில் தான் இருந்தார். ஆனால் இப்போது போலவே திரு. ரஜினி அவர்கள் நீண்ட நாட்களாக கடவுளின் முடிவுக்காக காத்திருந்திருந்ததால் அந்த காலதாமதத்தை பயன்படுத்தி தனது ரசிகர்களின் முடிவைக்கேட்டு இரண்டாம் இடத்தில் இருந்த விஜயகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து முதல் இடம் பிடித்தார்.

இந்நிலையில் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது
போல் ஒரு தோற்றத்தை ஊடகங்கள் அனைத்தும் ஏற்படுத்த இப்போது மீண்டும் திரு. ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய கடைசி இன்னிங்ஸ்ஸை ஆரம்பித்திருக்கிறார். வாழ்த்துகள்.
ஆனால், திரு. ரஜினி அவர்கள் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், தமிழகம் என்பது இன்று மட்டும் அல்ல என்றுமே வந்தோரை வாழவைக்கும் பூமி தான், இந்த வாசகத்திற்கு பின் மிகப்பெரிய செய்தி ஒளிந்துள்ளது, இந்த மண் என்றுமே சாதி மதங்கள் என்ற பெயரால் தவறு செய்பவர்களுக்கும், அதனை தன் சுயலாபத்திற்காக பயன்படுத்துவோரையும், பதவி வெறி பிடித்தவர்களுக்கும் எதிராகவே இருந்தது என்பது தான் சரித்திர சான்று.

மேலும்,சாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறிய முண்டாசு கவிஞன் பாரதி முதல் சாதி கொடுமைகளுக்கு எதிராக தனது நரைத்த தாடி மார்பில் தொடக்கூடிய 94 வயதில் மூத்திர பையை சுமந்துக்கொண்டு பிரச்சாரம் செய்த பெரியார், இந்திய பாராளுமன்றத்திலே தமிழ் மொழிக்காக வாதாடி அன்றைய பிரதமர் நேருவை தோற்க்கடித்த காயிதே மில்லத், எளிமையின் மொத்த உருவமான கக்கன்,நேர்மையின் உதாரணமாக வாழ்ந்த காமராசர், பேரறிஞர் அண்ணா வரை அரசியலுக்காகவும், சுதந்திரத்திகற்காகவும், மொழிக்காகவும், தனி மனித உரிமைக்காகவும் போராடிய மறைந்த போராளிகளும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல கண்ணு ஐயா போன்ற தலைவர்களும் பிறந்த பூமி இது என்பதை திரு. ரஜினிகாந்த் அவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார் என்றே நான் நம்புகிறேன். எனவே அவர்களைப்போல தமிழக மக்களுக்கு இதுவரை இவர் எந்த தொண்டும் செய்யவில்லை என்றாலும் இருக்கின்ற மீத காலத்தை அதுபோல் செலவு செய்ய அவர் தயாராகி இருக்கிறார் என்றால் நான் உளப்பூர்வமாகவே அவரை வரவேற்கவே செய்கிறேன். ஏனெனில் இதுவரை இந்திய தேசம் முழுவதும் அவர் சம்பாதித்து வைத்திருந்த புகழ் அவர் சேர்த்து வைத்திருந்த அரசியல் நட்பு அனைத்தையும் பயன்படுத்தி தமிழகத்தை வளம் பெறச்செய்யட்டும்.

ஆனால், பலர் சொல்வது போல அவர் அரசியலுக்கெல்லாம் வரமாட்டார் தனது திரைப்படங்கள் வெளியாகும் நேரத்தில் எல்லாம் அவர் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வணிக ரீதியாக வெற்றியை கையாள்வார் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும் இப்போது அவர் அரசியல் பேச்சை எடுத்திருப்பதை நாம் அந்த கோணத்தில் பார்த்து விட முடியாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் தமிழக அரசியலிலே எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் சில மனித பிணம் திண்ணும் கழுகுகள் இன்றைக்கு தமிழகத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன, அந்த கழுகுகள் ரஜினி காந்த் அவர்களையும் ஏற்கனவே வட்டமிட்டது இன்றும் வட்டமிடுகிறது என்பது அவருக்கும் அரசியல் தெரிந்தவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.எனவே தான் அவர் இற்றைக்கு திடீரென்று அவர் அரசியல் பற்றி பேசுவது பலருக்கு சந்தேகத்தையும், எரிச்சலையும், பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. எதுவாகினும் அவர் உறுதியாக அரசியலில் இறங்குகிறேன் என்று கூறியபிறகும், அவர் யாருடன் கை கோர்க்கிறார் என்பதையும் வைத்தே அவருடைய அரசியல் பயணம் நிலைக்குமா? மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்களா? என்பதை உறுதி செய்ய முடியும் என்று கூறினார்.

அவர் அரசியலுக்கு வந்தால் எதிர்ப்போம் என்று உங்கள் நண்பர் சீமான் கூறியுள்ளாரே அதற்கு உங்கள் பதில், அது அவருடைய ஜனநாயக உரிமை , அவர் யாரை வேண்டுமானாலும் கொள்கை ரீதியில் எதிர்க்கலாம், ஆதரிக்கலாம்... தேர்தலுக்காக மட்டும் கொள்கையை புறந்தள்ளிவிட்டு கூட்டணி அமைப்பது தான் என்னை பொறுத்தவரை தவறு, ஆனால் அவரும் கூட ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று என்றைக்குமே சொன்னதில்லை அப்படி சொல்வதற்கும் ஜனநாயகத்தில் உரிமையில்லை. திரு. சீமான் அவர்கள் எந்த மொழி பேசக்கூடியவர்களும் எம்மண்ணிலே வாழட்டும் ஆளுகின்ற உரிமையை மட்டும் நாங்கள்எ டுத்துக்கொள்கிறோம் என்று தானே முழங்கிக்கொண்டு இருக்கிறார். இதை திரு. ரஜினி அவர்களும் நன்று உணர்ந்ததன் காரணத்தினாலேயே தான் நேற்று தன்னை பச்சை தமிழர் என்று கூறியுள்ளதை நீங்கள் கவனிக்கவில்லையா என்று நம்மிடமே கேட்டார்.

இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது தன்னை பச்சைத் தமிழன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு "மகிழ்ச்சி" இது காலத்தின் கட்டாயம் என்றதோடு மட்டுமல்லாமல் இதே கருத்தை நான் 2009 ஆம் ஆண்டே ஒரு தனியார் வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தேன், 'ரஜினி காந்த் அவர்கள் சினிமாவில் நடிப்பதற்காக தமிழகம் வந்து இருந்தாலும், இங்கேயே தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்து, தமிழ் பெண்ணையே திருமணம் செய்து தமிழர்களுடனே வாழ்ந்து தமிழை பற்றி பெருமையாக பேசியும் வருகிறார், அவரால் பயனடைந்த பெரும்பாண்மையான தயாரிப்பாளர்கள் தமிழர்கள் தான் என்றும் தேர்தல் விளம்பரம் முதல் பாக்கு விளம்பரம் வரை அவரை பயனபடுத்திவிட்டு இப்போது தண்ணீர் பிரச்சனை வந்தவுடன் அவரை கன்னடராக பார்ப்பது தவறானது என்றும் அவர் தனது இறுதி காலம் வரை இந்த மண்ணில் தான் வாழ்வார், அவர் சொல்லத் தயங்கினாலும் மக்கள் அவரை தமிழராக ஏற்றுக் கொண்டார்கள் என்றும் தமிழ் சமூகத்திற்கு அவரால் நன்மை பயக்குமெனில் தவறில்லை, அதனை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தேன்' அதனையே அவர் காலம் கடந்துவந்து இன்று பொது மேடையில் கூறியுள்ளதும் தன்னை தமிழராய் எண்ணி பெருமை கொள்ளுவதையும் நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதே நேரத்தில் அவர் இப்போது தன்னை பச்சைத்தமிழன் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக பிற மாநிலங்களில் அவருக்கான எதிர்ப்பு அலை துவங்கிவிடும் என்பதையும் நான் எதிர்பார்க்கிறேன்.

பணமதிப்பிழக்க விவகாரத்தில் ரஜினி காந்த் அவர்களின் கருத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தீர்களே என்ற நம் கேள்விக்கு கொஞ்சம் சிரித்து விட்டு, கடுமையான விமர்சனங்கள் இல்லை சிந்திக்க வைக்கும் கேள்விகள் அது என்றார். மேலும் அது என்னுடைய ஜனநாயக உரிமை, பணமதிப்பிழக்க நடவடிக்கையில் அவர் தவறாக வழிகாட்டப்பட்டு அதனை நம்பி அவர் சொன்ன வார்த்தைகளை உரிமையுடன் எதிர்த்தேன், இதற்க்கு காரணம் அவரை எதிர்த்து பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, அவர் மீது எனக்கு இருக்கும் உரிமையின் வெளிப்பாடு தான், அதனை அவரும் புரிந்துக்கொண்டார் என்பதையும் நான் அறிவேன். இனி அவரது அரசியல் வாழ்க்கை தமிழக மக்களின் கையில் தான் உள்ளது" என்று தனது பேட்டியினை முடித்துக்கொண்டார்.

ரஜினி அவர்கள் என்னை தன்னுடைய நண்பர் என்று கூறியதாக அமீர் அவர்களும் அதை ஆமோதித்து ரஜினி காந்த் அவர்களும் "லிங்கா"இசை வெளியீட்டு விழா மேடையில் கூறியதும் "கபாலி" திரைப்படத்தில் தனது உற்ற நண்பனாக இருந்த கதாபாத்திரத்திற்கு அமீர் என்று பெயரிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்