விளம்பரம்
முகப்புகோலிவுட்

சாமானிய மனிதர்களின் வாழ்க்கையை உலகறிய செய்த கலைஞன் - இயக்குநர் பாலா

  | July 11, 2017 17:35 IST
Celebrities

துனுக்குகள்

  • புதியதோர் திரை மொழியின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் பாலா
  • தமிழ் சினிமாவில் பல நடிகர்களை கண்டுபிடித்த பெருமைக்குரியவர்
  • இயக்குநர் பாலுமகேந்திராவின் சீடராய் திரைவாழ்க்கையை தொடங்கியவர்
தமிழக திரைத்துறையில் தவிர்க்கமுடியாத ஆளுமைகளில் ஒருவன் அவன். தமிழக திரைத்துறையை உலக அளவில் பறைசாற்றிய பெருமையை உடைய கலைஞன் அவன். திரைத்துறை தனக்கென ஒரு வடிவம் கொண்டு இயங்கி வந்த வேளையில், அந்த வடிவத்தை உடைத்து தன்னுடைய படைப்பாற்றலின் மூலம் வெற்றிகண்ட படைப்பாளி அவன். கமர்சியல் வட்டத்தில் அடைபட்டுக்கிடந்த திரைத்துறையை சாமானியனின் வாழ்வியலை திரைக்கதைகள் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பெருமை இவனை நிச்சயம் சேரும்.

ஒரு கலைஞனின் வெற்றி எங்குள்ளது?....என்ற கேள்விக்கு இன்றைய சமூகம் எப்படி பதிலளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், ஒரு கலைஞனின் வெற்றி அவனுடைய ஒவ்வொரு படைப்பு ஏற்படுத்தும் தாக்கத்தில் தான் உள்ளது, வசூலில் இல்லை என்பதை தன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் அழுத்தமாக பதிவு செய்துவரும் இயக்குநர் பாலா உன்னத தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞன்.

தமிழகமே அறிந்துகொள்ள முற்படாத சாமானிய மனிதர்களின் வாழ்க்கையை தன் படைப்புகளின் மூலம் உலகறிய செய்தார். இப்படியும் படங்கள் எடுக்க முடியுமா? என்ற கேள்வி எங்கிருந்தாவது கிளம்புமாயின் அது நிச்சயம் இந்த மனிதரை நோக்கி எழுந்த கேள்வியாகத்தான் இருக்க முடியும். இவருடைய அறிமுகம் தமிழக திரைத்துறையின் மாற்றத்திற்கான அறிமுகம் என்றே கூறலாம். இந்த மாதிரியான திரைப்படங்களும் எடுக்கமுடியுமா!!! என்று பலரும் வியப்பில் இருந்த தருணம் அது.
 
sethu

தமிழக திரைத்துறை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான மாற்றங்களை சந்தித்து கொண்டு தான் வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் பாலாவின் சேது திரைப்படம் ஒரு அசாதாரண தமிழ் சினிமாவின் விதை என்றே கூறலாம். சேதுவின் விழுதில் முளைத்த செடியாக ராம், சுப்ரமணியபுரம் என்று பலப்படங்களை கூறிக்கொண்டே போகலாம்.

தன்னை கொண்டாடிய இந்த சமுதாயத்திற்கு தன்னை போன்ற ஒரு சில படைப்பாளிகளை உருவாக்கிச்செல்வதே ஒரு படைப்பாளியின் வெற்றி. அந்த வகையில் ராம், சசிகுமார் போன்ற படைப்பாளிகளை உருவாக்கியதன் மூலம் ஆகச்சிறந்த வெற்றியை கண்டுவிட்டார் இயக்குநர் பாலா.

தன்னுடைய படைப்பு என்பது கேளிக்கைக்கு மட்டுமில்லை, மனதில் பல கேள்விகளையும் எழுப்ப வேண்டும் என்பதில் ஆணித்தனமான நம்பிக்கையை உடைய கலைஞன் தான் பாலா.

அறிமுக திரைப்படம் இவரை ஒரு இயக்குநராக மட்டுமில்லாமல், அதுவரை வெற்றி ருசிக்காத விக்ரமிற்கும் வெற்றியை கொடுத்த திரைப்படம். இளமையின் துள்ளலையும், ஆழ்மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்தும் நடிப்பையும் வெளிப்படுத்தி தன்னை ஒரு ஆகச்சிறந்த நடிகனாய் நிலை நிறுத்திக்கொண்டார் விக்ரம். சேதுவில் சிவக்குமார் தொடங்கி இயக்குநர் பாலாவின் அனைத்து படங்களிலும் கதாநாயகனாய் விட திரையில் ஆளுமை புரியும் ஒரு கதாபாத்திர வடிவமைப்பு இருக்கும் அதுவே பாலாவின் தனி சிறப்பு.
paradesi

நிகழ் காலத்தை நம் கண்முன் நிறுத்தும் திரைப்படங்களில் நாம் அறிந்த விஷயங்களை பார்க்க முடியும். எதிர்காலத்தை நோக்கிய படங்களில் எந்த வித எதிர்பார்ப்புமில்லாமல் வியப்பின் மூலமாக மட்டுமே கண்டுகளிக்கமுடியும். ஆனால், நம் முன்னோர்கள் வாழ்ந்த விதத்தையும், அந்த கால அரசியல் சூழ்நிலைகளையும் காட்சி படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல, அதற்க்கான புரிதல் என்பது நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது. அதையும் பரதேசி என்ற படத்தின் மூலம் காட்சிபடுத்தி வெற்றிகண்டார் இயக்குநர் பாலா.

சாமானிய மக்களின் வாழ்வியலையும், வலிகளையும் மட்டுமே இவருடைய படங்களில் காண முடிகின்றது என்று அரைகூவலிடுவதை விடுத்து, அதுவே அந்த கலைஞனின் தனிசிறப்பென எண்ணி கொண்டாடுவதே சாலச்சிறந்தது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலா

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்