விளம்பரம்
முகப்புகோலிவுட்

தலைமுறைகளை தாங்கி நிற்கும் பாலு மகேந்திரா

  | February 13, 2017 17:58 IST
Balu Mahendra

துனுக்குகள்

  • ஒளியின் மூலம் வாழ்க்கையை தொடங்கிய பாலு மகேந்திரா
  • தன்னுடைய கேமரா கண்களை பலரையும் பார்க்க வைத்தார் பாலுமகேந்திரா
  • இறுதிவரை ராஜாவும் பாலுவும் பிரியவே இல்லை
வாழ்க்கை புத்தகமாய் வாழ்ந்து மறைந்த ஒரு ஆகச்சிறந்த கலைஞன். அவர்களை உங்கள் முன் நினைவுகூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

நான் படித்த பல புத்தகங்கள் என்னை மகிழ்வித்த வேளையில், உன்னுடைய காட்சிப்புத்தங்கங்கள் என்னை ஒரு முழுமனிதனாக உணரவைத்தது. காட்சி ஊடகங்கள் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு ஈடுபாடில்லை உன்னுடைய படங்களை காணும் வரை, ஆம் உன்னுடைய ஒவ்வொரு பதிவிலும் ஒரு மாற்றத்தை கண்டேன் என்னுள்

இயல்பு வாழ்க்கையை சித்தரிப்பில்லாமல் அப்படியே பதிவிடுவதில் நீ ஒரு சிற்பி. உன் கையினால் உருவான சிற்பங்கள் பல அவற்றில் ஒரு சில சிலைகளை நான் தினம் தினம் தொட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்.
பாலுமகேந்திரா அவர்களின் இயற்பெயர் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன். ஒரு இலங்கை தமிழனாய் பிறந்த பாலுமகேந்திரா லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றவர். சிறுவயதிலிருந்தே தன்பால் இருந்த புகைப்பட ஆர்வத்தை இந்தியாவில் உள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தில் ஒளிப்பதிவுத்துறையில் சேர்ந்ததன் மூலம் மெருகேற்றினார்.

 
balu mahendra


ஒளியின் மூலம் வாழ்க்கையை தொடங்கிய பாலு

1970ன் இறுதியில் தன்னுடைய ஒளிப்பதிவுத்துறை சார்ந்த படிப்பை முடித்த பாலுமகேந்திரா, நெல்லு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் 1971ம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் ஒரு சில காரணங்களால் வெளிவர தாமதமாகவே, அதன் பிறகு பாலுமகேந்திரா பல படங்களில் பணியாற்றினார். 1974ம் ஆண்டு நெல்லு திரைப்படத்திற்கு கேரளா அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை பெற்றார்.

அறிமுகமான முதல் படத்திலேயே தன்னுடைய காமிரா கண்களை பலரையும் பார்க்க வைத்தார் பாலுமகேந்திரா. தமிழ் படத்தில் பணியாற்றுவதற்கு முன் ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றினார் பாலுமகேந்திரா.

கோகிலா திரைப்படம்

கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமாகினார் பாலுமகேந்திரா. இப்படம் கன்னடத்தில் மட்டுமில்லாமல் தமிழ் நாட்டிலும் மிக பெரிய வணிக வெற்றியை பெற்றது. சிறந்த ஒளிப்பதிவாளர்க்கான தேசிய விருதினை முதல் முறையாக கோகிலா திரைப்படத்திற்க்காக பெற்றார் பாலு மகேந்திரா.

தமிழ் திரைப்பயணம்

1971ல் தன்னுடைய திரைவாழ்க்கையை தொடங்கிய பாலு மகேந்திரா தமிழில் பணியாற்ற ஆரம்பித்ததோ 1978ல் தான், இயக்குனர் மகேந்திரன் அவர்களின் முதல் படமான "முள்ளும் மலரும்" என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தன்னுடைய தமிழ்திரைவாழ்வை தொடங்கினார். அதன் பின் அவர் அடைந்த உயரங்கள் பல,

அழியாத கோலங்கள்
 
aliyaatha kolangal

பருவ வயதில் இருக்கும் மூன்று இளைஞர்களின் வாழ்க்கையை அரிதாரங்கள் பூசாமல் அப்படியே பதிவிட்டதால் என்னவோ இப்படத்தை பார்க்கும் பொழுது அதனை நம்முடைய வாழ்க்கையுடன் இணைத்து பார்க்கமுடிந்தது. இப்படியும் ஒரு திரைக்கதைக்கு நிறைவு இருக்கமுடியுமா! என்று, நம்மை கண்டிப்பாக சிந்திக்க வைக்க தூண்டும் இத்திரைப்படம். பின்னணி குரலின் போக்கில் செல்லும் இத்திரைப்படத்தில் கமல் ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

மூடு பனி
 
moodu pani


மூடு பனி திரைப்படத்தின் மூலம் வெற்றிக்கூட்டணி இணைந்தது என்றே கூறலாம், ஆம், இப்படத்தில் தான் பாலுமகேந்திரா, இசையமைப்பாளர் இளையராஜாவுடன் முதன்முறையாக இணைந்தார். இப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் பிரியவே இல்லை.

கண்ணே கலைமானே
 
moondrampirai


இன்றளவும் இந்த பாடலை கேட்கும் பொழுது நமக்குள் ஒரு சிறு ஏக்கம் ஏற்படும். இளையராஜா - பாலுமகேந்திரா வெற்றிக்கூட்டணியில் உருவான மூன்றாம் பிறை திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் தான் "கண்ணே கலைமானே"

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை தன்னுடைய  கேமரா  கண்களிலும், இயக்கத்திலும் பார்க்கும் நம்முடைய கண்களில் பதிவு செய்திருப்பார் பாலு.

கதாநாயகனான கமல், ஸ்ரீதேவியின் மீது வைத்திருக்கும் அன்பை காதல் என்று கூறிவிட முடியாத அளவிற்கு காட்சிகளை அமைத்திருப்பார் பாலுமகேந்திரா

இளம் வயது பெண் தனக்கென கிடைக்கவேண்டிய சந்தோசத்தை தேடி கதாநாயகனை நெருக்கும் நேரத்தில், அவன் விலகி செல்லும் பொழுது கதாநாயகனின் கண்ணியம் வெளிப்பட்டிருக்கும்.

இன்றளவும் இப்படத்தின் இறுதிக்காட்சிக்கு இணையான காட்சி தமிழ் திரையுலகில் வரவில்லை என்று தான் கூறவேண்டும். அவள் தன்னை விட்டு பிரிந்து செல்கின்றாள் என்று கதாநாயகன் அறியும் நேரத்தில், அவன் தன்னை மீண்டும் ஒரு முறை அறிமுகம் செய்ய முற்ப்பட்டு அதில் தோற்றுப்போகின்றான்.

இப்படம் இரண்டு தேசிய விருதினை பெற்றது. மீண்டும் ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதினை பாலுமகேந்திரா இப்படத்தின் மூலம் பெற்றார்.

இவ்வாறு இவருடைய ஒவ்வொரு படங்களும் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை. இவருடைய படங்களில் என்றும் எதார்த்தம் மிஞ்சியதில்லை.

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை திரையுலகத்திற்கென்றே அர்ப்பணித்த பாலுமகேந்திரா, தன்னுடைய இறுதி நாட்களிலும் தலைமுறை எனும் படத்தின் மூலம் வருங்கால தலைமுறைக்கு பாடமாகிவிட்டு தான் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார்.

நீ மட்டும் தமிழ் திரையுலகை ஆளவில்லை உன்னுடைய விழுதுகளும் தமிழ் திரையுலகை ஆண்டவண்ணம் தான் உள்ளன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்