முகப்புகோலிவுட்

"அதுமாதிரி சினிமா எடுப்பது போதை மருந்து விற்பதற்கு சமம்!" - இயக்குநர் லெனின் பாரதி நேர்காணல்

  | August 30, 2018 10:26 IST
Merku Thodarchi Malai

ஆதிக்க சக்திகளுக்கும், முதலாளிகளுக்கு, வலதுசாரிகளுக்கும் எதிரா அவன் என்னத்த போராடிடுவான்?

" `இன்னும் மீண்டு வர முடியவில்லை தான்.

ரங்கசாமியை காற்றாடி காட்டுக்குள் தனியாய் விட்டுட்டு வந்தோமே. அப்புறம் அவருக்கு என்ன ஆனது?

சொந்த நிலத்தை இழந்து விட்டு அதே நிலத்தில் நடப்பட்ட வர்த்தக காற்றாடிக்கு அடியில், நடுஉச்சி வெயிலில் குடை கூட இல்லாமல் காவலாளியாய் அமர்ந்திருந்த ரங்கசாமிக்கு அங்க குடிக்க தண்ணீர் கிடைச்சுதா? மதியத்துக்கு எடுத்துட்டு போன சாப்பாட்டை சாப்பிட்டாரா? கார்ப்பரேட் காற்றாடியின் நிழல் கூட அவரை விட்டு விலகிச் சென்றிருக்குமே...
ரங்கசாமிக்கு அந்த காவலாளி வேலையாவது நிலைத்ததா?

இன்றைக்கு நாம் பார்க்கும் காற்றாடிகளுக்கு வேலிகள் தானே காவலாய் நிற்கிறது. அப்படியானால் ரங்கசாமி அந்த வேலையில் இருந்தும் வெளியேற்றப்பட்டாரா?

விடுதியில் சேர்க்கப்பட்ட சுருளியின் படிப்பு என்ன ஆனது? அந்த பாய் பழசாகி இத்துப் போயிருக்குமே... அடுத்த மழைக்கு எப்படி வெறும் தரையில் படுத்து தூங்கப்போறான்?

அத்தனை காற்றாடிகளும் கர்வமாய் நின்றனவே. அந்த ரங்கசாமிக்கள் எல்லாம் இப்போ என்ன ஆனார்கள்?

இன்னும், இன்னும் நிறையவே கேட்டுக் கொண்டு இருக்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலை ஒரு திரைப்படமாக மட்டும் கடந்து போகவில்லை. இன்னமும் அந்த வலிகள் உள்ளுக்குள் கிடந்து உதைத்துக் கொண்டு இருக்கின்றன' னு பத்திரிகையாளர் கதிர்மாயா கண்ணன் எழுதியிருந்த பதிவு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. படம் முடிஞ்ச இடத்திலிருந்து அதைத் தொடரும் அளவுக்கு, இந்தப் படம் கனெக்ட் ஆகியிருக்குல. இப்படி ஒண்ணு ரெண்டுன்னு சொல்லமுடியாது படம் பற்றிய ஏராளமான பார்வைகளைப் பார்க்க முடிந்தது. ஒரு கதாசிரியரா, திரைக்கதையாசிரியரா நிறைய நுட்பமான விஷயங்களைப் படத்தில் பதிவு பண்ணியிருக்கோம். எல்லோரும் நூறு சதவிகிதம் அதைப் புரிஞ்சுகிட்டாங்களானு தெரியல. ஆனா, ஒவ்வொருத்தரும் ஒண்ணு பத்திப் பேசறாங்க. `பர்ஃப்யூம்' பட க்ளைமாக்ஸ்ல ஹீரோவை மக்கள் எல்லோரும் பிச்சி தின்பதைப் போல மக்கள் இந்தப் படத்தை பிச்சி தின்னு, செரிச்சுட்டாங்க. அதோட நிறுத்திக்காம அடுத்தவங்களுக்கும் கடத்துறாங்க. மக்கள் மாதிரியே திரைத் துறைய சேர்ந்த பாரதிராஜா சார், ராம், சீனு ராமசாமினு பலர் பாராட்டினாங்க. பாசங்கே இல்லாம ரொம்ப நேர்மையான படமா இருக்கு. இதுக்கு நான் என்னென்ன பண்ண முடியும்னு சொல்லுங்க, நான் பண்றேன்னு கண்கலங்கி சொன்னார் பா.இரஞ்சித்.இதை எல்லாம் தாண்டி எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது ஆர்.செல்வராஜ் சார் போன் பண்ணினது. அன்னக்கிளி, முதல் மரியாதை தொடங்கி அலைபாயுதேனு பல படங்களின் கதை எழுதினவர் என்கிட்ட "ரொம்ப நல்லாயிருந்தது. தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். ஒரு நாள் உன்னை நேர்ல சந்திக்கணும்"னு சொன்னார். நீங்க எப்பனு சொல்லுங்க சார் நான் உடனே வரேன்னு சொன்னேன். "நீ வர வேணாம். நானே ஏற்பாடு பண்ணிட்டு சந்திக்கிறேன்"னு சொன்னார். அவங்க எல்லாம் ஒரு வகையில் நமக்கு முன்னோடிகள். வழக்கமான கதைகளை உடைச்சு கதை எழுதின ஒருத்தார் நம்மகிட்ட இப்படியான வார்த்தைகள் சொல்லும் போது அது தரும் உற்சாகம் பயங்கரமானதா இருக்கு. மக்களுக்கு எந்த விதப் பூச்சும் இல்லாத உண்மையான சினிமாவைக் கொடுத்தா, கொண்டாடுவாங்கன்னு இங்க நிரூபணம் ஆகியிருக்கு. ஏன்னா இங்க வியாபாரம் வேற ஒரு வேலியப் போட்டு மக்கள் இதை எல்லாம் ஏத்துக்கமாட்டாங்கனு இதுநாள் வரைக்கும் எல்லோரையும் பயமுறுத்தி வெச்சிருந்தது. இப்போ அந்த வேலி எவ்வளவு போலியானதுன்னு `மேற்குத்தொடர்ச்சி மலை'க்கான வரவேற்பு உணர்த்தியிருக்கு. இதுதான் கலையோட பலம்." என இயக்குநர் லெனின் பாரதியின் வார்த்தைகளில் உற்சாகம், அதையும் மீறி சமூகத்தின் மீதான அக்கறையும், இன்றைய அரசியல், சினிமா போக்கின் மீதான கோபத்தையும் உணர முடிந்தது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய சினிமாவாக `மேற்குத்தொடர்ச்சி மலை'யை கொடுத்தவரிடம் உரையாடியதிலிருந்து...

"மேற்குத்தொடர்ச்சி மலைன்னு மட்டும் இல்ல... உலகமயமாக்கலுக்குப் பின்னால நம்மளோட வேகமான வாழ்க்கை முறை இருக்குல அதில் நாம எதையும் கவனிக்கறதில்ல. ஆஃபீஸ விட்டு கீழ இறங்கினா தெருவ சுத்தப்படுத்தும் பணியில் இருக்கவங்க, ஹவுஸ் கீப்பிங்ல இருக்கவங்கனு எல்லாரையும் கடந்துதானே போயிருக்கோம். அவங்களுக்கு இருக்கும் வலியான வாழ்க்கை, அடையாளம், உரிமைகள் இல்லாமைனு நிறைய பிரச்சனை இருக்கு. இன்னுமும் கூவ நதிக்கரை ஓரம் குடிசை போட்டு சுகாதாரம் இல்லாமதான் வாழ்ந்துகிட்டிருக்காங்க. அவங்கள அப்புறப்படுத்தறதா சொல்லி வேற எங்கயோ கொண்டு போய் குடி அமர்த்தி வேர அறுத்து எறிவாங்க. அந்த மாதிரி மைக்ரேஷன் பண்ண நிறைய ரூல்ஸ் இருக்கு, அதை நாம பின்பற்றுறோமா? அவங்க மேல தொடர்ந்து வைக்கப்படும் குற்றவாளி சித்தரிப்பு மாறியிருக்கா? இப்படியான கேள்விகள் நீளும். மேற்குத்தொடர்ச்சி மலைனு இல்ல அடித்தட்டு மக்கள் மீதான சுரண்டல் எல்லா இடங்கள்லயும் நடந்துகிட்டேதான் இருக்கு"

"உலகமயமாக்கலின் மினிமல் வடிவமா படத்தில் வரும் `லோகு' கதாபாத்திரத்தை எடுத்துக்கலாமா?"

"எடுத்துக்கலாம். உலகமயமாக்களுடைய உற்பத்தி சக்திகள் இருக்கில்ல, அவன் பயங்கரமானவன். லோகுனு அந்தக் கதாபாத்தித்தின் பெயர் குறிக்கறதே உலகமயமாக்கலதான். இரண்டாம் உலகப்போர் முடிஞ்ச பின்னால, அங்கப் பயன்படுத்தப்பட்ட யூரியா எல்லாத்தையும் அவனால வேஸ்ட் பண்ண முடியல. அப்பத்தான் உள்ள வர்றாங்க. நம்ம கிராமங்கள்ல இயற்கை விவசாயம்தான் பண்ணிட்டிருந்தோம். ஆயுத தயாரிப்புக்கான உற்பத்திப் பொருளான யூரியாவ யார் தலைல கட்டலாம்னு பார்த்து, முதல்ல கூவிக் கூவி இலவசமா கொடுக்கறான். இது போட்டா நல்லா வருமான்னு ஒருத்தனாவது ஆசைப்படுவான்ல. அதுதான் அவனுக்கான முதல் படி. இதைப் பயன்படுத்தும் பழக்கத்தையும், மண்ணை மலடாக்கறதையும் ஒரே நேரத்தில் செய்யறான். இதுக்குப் பிறகு அவன் கொடுக்கறததான் நீங்க வீங்குவீங்க. இந்த சக்கரம் இப்படித்தான் இயங்குது. நம்ம கண்முன்னாலேயே வருவான், நம்ம மூலமாவே வளருவான், பிறகு நமக்கெதிரா வளர்ந்து நிப்பான்.

"பசுமை வழிச்சாலை, மீத்தேன்னு மக்களை நிலத்தை விட்டு விரட்டியடிக்க தொடர்ந்து பல திட்டங்கள் எடுத்துவரப்படுது. எதிர்த்துக் கேள்வி கேட்டகும் போதெல்லாம் இதை எல்லாம் தடுத்தா எப்படி வளர்ச்சி உண்டாகும்னு பல குரல்களும் கேட்க முடிகிறதே?"

"இந்தக் கதை எழுதும் போது எட்டு வழிச்சாலைனா என்னானே தெரியாது. இந்தக் கதை எழுதி முடிக்கும் முன்னே எத்தனையோ வந்திடுச்சு. பொதுவாவே இவங்க சொல்லும் வளர்ச்சிங்கறது யாருக்கானதுன்னு நாம யோசிக்கணும். அது மக்களுக்கான வளர்ச்சியா, அவங்களுக்கு அடிப்படை உரிமைகளைக் கொடுக்குமா? கல்விய கொடுக்குமா? சமுதாயத்தின் பாதுகாப்புக்கான வளர்ச்சியா? இதைதான் நாம திரும்பத் திரும்ப கேட்டுக்கணும். ஏன்னா நாம வளர்ச்சிக்கு எதிரான ஆள் கிடையாது. மக்களுக்கான வளர்ச்சியா இருந்தா எல்லோருக்கும் சந்தோசம்தானே. ஆனா, அது பாதிப்பா இருந்தா எப்படி வழிவிட முடியும். தன்னை பாதிக்கறதாலதானே போராடுறாங்க. படத்தின் முடிவில் காற்றாடிகள் காட்டப்படும். காற்றாலைகள் மூலமா மின்சாரம், அதன் மூலமா ஃப்ரிட்ஜ், ஏசி, டிவினு அந்த சாதனங்களைத் தயாரிக்கும் முதலாளிகளுக்குதானே அதன் மூலமா வளர்ச்சி போய் சேருது. இப்படி வளர்ச்சின்னு நம்ம முன்னாடி வைக்கப்படும் பல திட்டங்கள் நமக்கான வளர்ச்சியா இல்லாம, யாருக்கோ போய் சேரும் வளர்ச்சியின் பற்சக்கரமா மட்டும் நாம பயன்படுறதுதானே பிரச்சனை."

"இரஞ்சித்தின் `காலா' படத்திலும் நில உரிமை, அதை சுற்றிய அரசியல் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால், அதற்கு எதிர்மறையான கருத்துகளும் வந்தது. அந்தப் படத்தின் மீது பூசப்பட்ட சாயங்களையும், அது புரிந்து கொல்லப்பட்ட விதத்தையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?"

" `காலா' எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இரஞ்சித்த ரொம்பப் பாராட்டியாகணும். ஏன்னா அவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட வெச்சு, அவங்க பேசறதுக்கு நேர்மாறான கருத்தைக் கொண்டு போறதுனு ஒண்ணு இருக்குல, அது ரொம்ப சவாலான விஷயம். நான் எளிய மக்களை வெச்சு, நான் பேச விரும்பியதை பேசிட்டேன். ஆனா, `காலா'ல எத்தனை சவால்கள் இருந்திருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. இங்க இரஞ்சித்னாலே இனம் புரியாத ஒரு வெறுப்பதான் பலரும் வெளிக்காட்டுறாங்க. இப்படியான சூழல் உள்ள இடத்தில் அவர் பேசும் அரசியலும், கருத்துகளும் கவனிக்கப்பட வேண்டியது. அந்தப் படம் எந்தப் பிரச்சனையும் நடக்காம சாதாரணமா வந்திருந்தா அது பேசின அரசியலின் வீரியம் எவ்வளவு ஆழமா மக்கள்கிட்ட பரவியிருக்கும். இரஞ்சித் பேச நினைச்சதும் எந்தத் தடங்கலும் இல்லாம போய் சேர்ந்திருக்கும். இதை எல்லாம் தாண்டி இப்படியான விஷயங்கள கலை மூலமா செய்ய ஒரு பெரும் துணிவு வேணும், சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையும் இருக்கணும். அதை இரஞ்சித்கிட்ட நான் உணர்றேன்."

"ஆனாலும், சினிமாவை பெரும் வணிகமா நினைத்து, மிக மலினமான சினிமாக்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படியான பட இயக்குநர்களுக்கு தங்களுடைய பொறுப்பு பற்றிய விழிப்பு உணர்வு இருப்பதில்லையே?"

"காட்சி ஊடகம் மிக வலிமையானது. நாலு பேர் கூடிப் பேசுறோம்னா மூணாவது நிமிஷத்திலேயே சினிமாவ பத்தின பேச்சு தொடங்கும் அளவுக்கு நம்மளோட இணைஞ்சிடுச்சு சினிமா. ஆனா, அந்த சினிமா திரையைத் தாண்டி உங்களுக்கு எதைக் கடத்துதுங்கறதுதான் ரொம்ப முக்கியம். இப்போ மெகாலயா பாடத்திட்டம் நம்மள ஒரு க்லரிக்கள் செயல்பாடுகளுக்கு உள்ளேயே வைத்திருக்கும்படியா வடிவைக்கப்பட்ட மாதிரிதான். யுகே, ஐரோப்பிய நாடுகள்ல கல்வி அமைப்பு வேற. ஆனா, நாம இன்னும் அதுக்குள்ளேயேதான் சுத்திகிட்டிருக்கோம். அதே போலதான் காட்சி ஊடகமும் பயன்படுத்தப்பட்டு வருது. ஒரு சமூகம் விழிப்படையவே கூடாது, காலுக்கு கீழ உள்ள பிரச்சனைகள் பற்றி யோசிக்கக் கூடாது, ஜனநாயக ரீதியா நீங்க பேசிடக்கூடாது, உரிமைகள நீங்க தெரிஞ்சுக்கக் கூடாது. அப்போ உங்கள மயக்கத்திலே வெச்சுக்கணும். இப்போ இருக்கும் இரட்டைக் கதாநாயகர்கள் முறையும் அதுக்கான ஒரு உதாரணம்தான். ரெண்டு முன்னணி நடிகர்கள் வரவழைக்கப்பட்டு அதுக்குள்ளே ஒரு கேம் நடக்கும். இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல எதையாவது ஒன்னை நீங்க தேர்ந்தெடுத்து அதை பின்பற்றணும். அது ஒவ்வொரு காலகட்டத்துக்கும் மாறிகிட்டே இருக்கும். இதுவரை வந்த சினிமாக்களில் பெரும்பான்மையானத ஒரு ஜூஸ் மாதிரி பிழிஞ்சு பாத்தா ஐந்து படத்துக்கான கதைகள்தான் மிஞ்சும். காதல் படமா ஓகே, ஆக்ஷன் படமா ஓகே, ஹீரோவா புகழும் படமா ஓகே. ஆனா, இதையே எத்தனை நாளைக்குதான் காட்டுவீங்க? இப்படியான சினிமாக்களாக் காட்டிக் காட்டி எதார்த்தத்த உங்க மனசுக்குள்ள ஏற விடறதே கிடையாது. ஏன்னா எதார்த்தம் புரிய ஆரம்பிச்சா நீங்க கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவீங்க. அவங்களுக்கு அது தேவை கிடையாது. நீங்க கட்டவுட் வைக்கணும், பாலாபிஷேகம் பண்ணனும், உங்களை அப்படியே வெச்சுக்கணும். படங்களின் பெயர் மூலமாவே மக்களை தியேட்டர் உள்ள அழைச்சிட்டு வரும் சீட்டிங் நடக்குது. கேட்டா அடல்ட் காமெடின்னு சொல்றாங்க. அந்தப் பெயர்களே வக்கிரமும், சுயநலமும், பெரு வணிகமும் தெரியிதுல்ல. விடலைப்பருவத்தில் உள்ள இளைஞர்கள தியேட்டருக்குள் கொண்டு வந்து காசாக்கணும்ங்கற சிந்தனை கிட்டத்தட்ட போதை மருந்து வித்து சம்பாதிக்கற மாதிரிதானே. ஓரு சமூகத்துடைய சிந்தனையைக் கெடுத்து, மதிப்புகளைக் கெடுத்து மயக்கத்தில் வைத்திருப்பது தப்பான வழியில் சம்பாதிக்கறதுக்கு சமம் இல்லையா? இது பெயர்ல இருந்தே ஆரம்பிக்கும் போது, நாம எவ்வளவு தூரம் அறத்தை தொலைச்சிருக்கோம்னுதான் காட்டுது"

"நம்மை சுற்றிய பிரச்சனைகள் தெரிந்தும், பெரும்பான்மை சமூகம் அதன் மீது பெரிய அக்கறை காட்டுவதில்லையே?"

"நம்ம காலத்துல்லையே எந்தப் பிரச்சனைக்குமான முழு தீர்வ பார்த்திட முடியாது. இன்னைக்கே விடிஞ்சிடணும்னு ஒரு ஆதங்கத்தில் தான் நாம இருப்போம். ஆனா, அதுக்கு ஒரு காலம் தேவைப்படும். ஏன்னா ஒவ்வொரு விஷயத்தையும் பல வருட திட்டங்களா உருவாக்கி, பழக்கமாக்கி விதைக்குது அதிகார வர்க்கமும், முதலாளி வர்க்கமும். ஒவ்வொரு தொழிலாளியும் என்ன செய்வான்னு, மேல இருக்கவனுக்குத் தெரியும். நமக்குதான் அவங்கள எப்படி எதிர்க்கணும்னு தெரியல. நமக்கான விழிப்பு நாம அரசியல்படுத்தப்பட்டாதான் கிடைக்கும். நாம எந்த அளவுக்கு விழிப்பு இல்லாம இருக்கோம்னா, நம்ம வீட்டு முன்னால ரோடு போடுவான், வாசல் பள்ளமாகும் மழை தண்ணி உள்ள வரும். ரோடு போடும் போதே ஏற்கெனவே இருக்கும் ரோட்ட சுரண்டி எடுத்துட்டு அதுமேல ரோடு போடுறதுதான் வழக்கமே. ஆனா, அந்த காண்ட்ராக்டரோ, சம்பந்தப்பட்ட ஆளோ சுரண்டுவதற்கு ஆகும் செலவ குறைச்சு லாபம் பார்ப்பான். இத்தனைக்கும் அது நம்ம சொந்த வீடா இருக்கும். நாம, நமக்குப் பின்னால வர்ற குடும்பம் எல்லாம் வாழப் போற வீடு. அதுக்கு ஒரு சிக்கல் வரும்போது, பழைய ரோட சுரண்டிட்டுப் போடுன்னு அந்தத் தெருவுல இருக்க அத்தனை பேரும் சேர்ந்து குரல் கொடுத்தா, பிரச்சனையே இருக்காதில்ல. நாம வசிக்கும், நம்மள பாதிக்கும் ஒரு விஷயத்து மேல கூட அக்கரைப்படாமதான் நாம இருக்கோம். பிறகு எப்படி நாம சமுதாயத்தைப் பற்றி யோசிப்போம். அப்போ நமக்குள்ள இருந்தே பெரிய மாற்றம் தேவையா இருக்கு. பிறகுதான் வெளிய இருக்கும் விஷயங்கள். இது ஒரு நாள், ரெண்டு நாள்ல மாறும் விஷயம் இல்லையே. எனவே நமக்கு பண்பாட்டு ரீதியாவே பெரிய மாற்றம் தேவை. அதுக்கு கலை பெரிய பங்களிப்பா இருக்கும்."

"மக்களின் பிரச்சனைகளை சினிமா மூலமாக மக்களுக்கு சேர்ப்பது ஏன் அவசியம் என நினைக்கிறீர்கள்?"

"இதுக்கு தீர்வுன்னு எதுவும் சொல்ல முடியாது. படத்திலுமே கூட ரெங்கு கதாபாத்திரத்தால என்ன பண்ணமுடியும். நிலமற்ற உழைக்கும் மக்கள்னு சொல்லும் போது அவனுடைய வர்க்கம் என்னனு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். உங்கள வர்க்க ரீதியாவும், வகுப்பு ரீதியாவும் அங்கேயேதான் வெச்சிருப்பான். ஆதிக்க சக்திகளுக்கும், முதலாளிகளுக்கு, வலதுசாரிகளுக்கும் எதிரா அவன் என்னத்த போராடிடுவான்? கதையோட தொடர்ச்சியக் கூட எடுத்துப்போம். ரெங்குவுடைய மகன் விடுதியில படிச்சு வந்து உடனே தன் குடும்ப சூழல மாற்றிட முடியாது. அதுக்கே கூட ஒரு நாலைஞ்சு தலைமுறை ஆகும். இந்தப் படம் மட்டுமல்ல என்னுடைய அடுத்த எல்லாப் படங்களுமே உலகமயமாக்கலின் பிரச்சனைகள கேள்வி கேட்கும். இதைப் பார்க்கும் மக்களுக்கு, படம் மூலமா ஒரு உறுத்தல் உண்டாகும். இப்படி ஒண்ணு நடக்குதுன்னு காட்டிடோம், இது உங்கள சங்கடப்படுத்திகிட்டே இருக்கும்ல, அங்க நாம முழிச்சுகுவோம். முழிக்கணும்!"

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்