விளம்பரம்
முகப்புகோலிவுட்

⁠⁠⁠தன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் ஒரு வாழ்வியலை சுமந்து செல்லும் கலைஞன் - சீனு ராமசாமி

  | April 22, 2017 17:51 IST
Celebrities

துனுக்குகள்

  • பெரும்பாலான படங்களில் நேரத்தை கடத்தவே பாடல்கள் இடம்பெறுகின்றன
  • விஜய் சேதுபதியிடம் மூன்று படங்களில் இணைந்துள்ளார் சீனு ராமசாமி
  • வாழ்வியலை சரியாக கையாளும் இயக்குநர் சீனு ராமசாமி
சினிமா என்பது வணிகரீதியான ஒன்று மட்டுமல்ல தான் வாழ்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாக பார்க்கும் மிக சில இயக்குநர்களில் அவரும் ஒருவர். தன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் ஒரு வாழ்வியலை சுமந்து செல்லும் வெகுசில படைப்பாளிகளில் அவரும் ஒருவர்

சினிமா என்பது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வடிவத்தை பெரும் ஆனால் தான் எண்ணி வந்த வடிவத்தின் அழகியலை சற்றும் மாற்றாமல் இன்று வரை அதனை நோக்கி மட்டுமே பயணித்துக்கொண்டிருக்கிறார் அந்த மனிதர்

வணிக ரீதியை அடைவது மட்டுமல்ல ஒரு கலைஞனின் வெற்றி காலங்கள் சென்றாலும் பார்க்கும் மனிதன் வயோதிகத்தினை எட்டினாலும் தான் கடந்து வந்த பாதையை திருப்பி பார்க்க வைப்பதே ஆகச்சிறந்த வெற்றி என்பதே அவருடைய சூத்திரம்
சினிமாவின் மீது கொண்ட ஆசையை காதலாக்கி அந்த காதலை தன்னுடைய எண்ணத்திற்க்கேற்ப உருமாற்றி, அந்த உருமாறிய எண்ணங்களை திரைப்படங்களின் வாயிலாக மக்களின் மனதில் வேரூன்ற வைத்துள்ளார் என்றே கூறலாம்.

இயற்கையின் மீது அளவுகடந்த காமம், காதல் உடையவர் இயக்குநர் பாலுமகேந்திரா அவரின் பட்டறையில் இருந்து வந்த தீப்பொறியும் எரிமலையாகும். அந்த ஒப்பற்ற கலைஞன் எத்தனை எத்தனை தீப்பொறிகளை உருவாக்கிச்சென்றுள்ளான். தீப்பொறிகள் அனைத்துக்கும் ஒரே வடிவம் கொடுத்தால் சாத்தியமில்லை. ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய வண்ணம் தான் உள்ளது.

தமிழ் சினிமாவில் அவ்வாறு தன்னுடைய சமூகம் சார்ந்த வாழ்வியல் சிந்தனையின் மூலம் ஆதிக்கம் செலுத்திவரும் பாலுமஹேந்திராவின் பல தீப்பொறிகளில் ஒருவர் தான் இயக்குநர் சீனுராமசாமி. கூடல்நகர் தொடங்கி தர்மதுரை வரை தன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் ஒரு தாக்கத்தினை மக்கள் மனதில் பதிவேற்றம் செய்துள்ளார்.
 
seenu ramasamy movies

ஒரு படைப்பாளியின் திறனை விருதுகளின் மூலம் கணக்கிடுவதில் எனக்கு பெரிதும் உடன்பாடில்லை. இருப்பினும் அவருடைய படைப்புகள் பெற்ற விருதுகளை அடையாளப்படுத்த விரும்புகின்றேன். இதுவரை நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளது சீனு ராமசாமியின் திரைப்படங்கள்.

இவருடைய இயக்கத்தில் வெளியான தென்மேற்குப்பருவக்காற்று திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை சில ஆகச்சிறந்த திரைப்படங்கள் விருதுகளின் வாயிலாகத்தான் வெளிச்சத்திற்கு வருகின்றன. அந்த ஒரு சில திரைப்படங்களில் "தென்மேற்குப்பருவக்காற்று" திரைப்படமும் ஒன்று

இன்றைய திரையுலகில் இரண்டு மணியும் ஒரு சில நிமிடங்களும் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் நேரத்தை கடத்துவதற்காகவே பாடல்கள் இடம்பெறுகின்றன. பாடல்கள் என்பது காட்சியை நகர்த்தும், உணர்வுகளை பிரதிபலிக்கும் முக்கிய காரணியாக பயன்படுத்தப்படவேண்டும். அவ்வாறே தன்னுடைய படங்களில் இடம்பெறும் பாடல்களை உணர்வுகளை பிரதிபலிக்கும் காரணியாக பயன்படுத்தும் ஒரு சில இயக்குநர்களில் கை தேர்ந்தவர் இயக்குநர் சீனு ராமசாமி.

கள்ளிக்காட்டில் பொறந்த தாயே
 
thenmerku paruvakaatru

பல வருடங்களுக்கு முன்பு பார்த்திருந்தாலும், பத்து வருடங்களை திரைத்துறையில் கடந்த இயக்குநர் சீனு ராமசாமி அவர்களை பற்றி பேசும் பொழுது இந்த பாடலை நிச்சயம் நினைவு கூர்ந்தாகவேண்டும். நேர செலவினத்திற்காக பாடல்களை வைக்கும் பெரும்பாலனான இயக்குநர்களுக்கு மத்தியில் படத்தின் தலைப்பையும், கலைஞர்களின் அறிமுகத்தையும் ஒரு தாயுள்ளதின் கஷ்டத்தை விவரிக்கும் பாடலின் மூலம் விவரித்திருப்பர் இயக்குநர் சீனு ராமசாமி.

கவிஞர் வைரமுத்து அவர்களின் எழுத்தாக்கத்தில், இசையமைப்பாளர் ரகுநந்தனின் இசையில் தாயின் பாசத்தை எண்ணி ஒரு மகன் பாடும் விதத்தில் அமைத்திருக்கும். தொடக்கத்தில் வரும் அந்த பாடல் அந்த படத்தின் சிறுகதையை கூறிய உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இப்பாடலின் வரிகளுக்காக கவிஞர் வைரமுத்து அவர்கள் தேசிய விருதினை பெற்றார்.

எந்தப்பக்கம் காணும் போதும்

"மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதி தான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய மறுகாதல் நதியுண்டு"
 
dharmadurai

தன்னுடைய கடந்த கால வலிகளால் சூழப்பட்ட ஒருவனின் வாழ்க்கையெனும் கேள்விக்கு பதிலாய் வரும் மற்றொரு கடந்தகால அன்பின் வரிகளால் அமைந்த பாடல் இது. தர்மதுரை படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் வாழ்க்கையை இழந்த மனிதர்களுக்கு நிச்சயம் ஒரு உத்வேகம் தான். இப்பாடலின் வரிகளுக்காகவும் கவிஞர் வைரமுத்து அவர்கள் இந்த வருடம் தேசிய விருதினை பெற்றார்.

திரைத்துறையில் 10 வருட மைல்கல்லை கடந்த இயக்குநர் சீனுராமசாமியிடமிருந்து நிச்சயம் ஒரு மாமனிதனை எதிர்பார்க்கலாம்.

வாழ்த்துக்கள் சீனுராமசாமி.

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்