விளம்பரம்
முகப்புகோலிவுட்

சமரசமற்ற உணர்வுப்பூர்வமான கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! #HBDSelvaraghavan

  | March 05, 2018 14:56 IST
Selvaraghavan Next Film

துனுக்குகள்

  • தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர் செல்வராகவன்
  • பல வித்தியாசமான கதைகளால் ரசிகர்களின் ரசனையை வளர்த்தவர்
  • அவரின் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை இதோ
இந்த நிமிடம் வரை எதுவும் தோன்றவில்லை... என்ன எழுத செல்வராகவன் பற்றி. அவரது பிறந்தநாள்தான் என்று இல்லை, பல நேரங்களில் அவரது படங்கள் குறித்தும், காட்சியமைப்பு குறித்தும் பலர் பேசிக் கேட்டிருப்போம், படித்திருப்போம், பகிர்ந்திருப்போம், எழுதியிருப்போம். தவிர ஒரு நாள் மட்டும் கொண்டாடப்பட வேண்டிய கலைஞனா செல்வா? ஆனால், அவரது படங்களில் இருக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகளை பற்றி பேசலாம் எனத் தோன்றியது. பிறந்தநாள் வாழ்த்துகளுடன் ஆரம்பிக்கிறேன் செல்வா சார்!

`காதல் கொண்டேன்' படத்தில் வரும் டஸ்டர் சீனைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் தூக்கம் கெட்டு அலைந்தவர்களையும் பார்த்திருக்கிறேன். அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒன்று இருக்கும். `புதுப்பேட்டை'யில் குழந்தை தன் ஜாடையில் இருக்கிறதா என முகத்துடன் ஒட்டி வைத்து குமார் கதவின் கண்ணாடியில் பார்ப்பதோ, `7ஜி ரெய்ன்போ காலனி' படத்தில், எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும் அப்பா, மகன் வேலைக்கு செல்கிறான் என்றதும் அவனை எதிர்கொள்வது, `மயக்கம் என்ன' படத்தில் தனது புகைப்படங்கள் நிராகரிக்கப்பட்டதை சொல்லி, "எனக்கு வேற எதுவும் தெரியாது யாமினி" என கார்த்திக் கலங்கும் காட்சி என ஏதோ ஒன்று அனிச்சையாய் மனதில் இறங்கும். செல்வா காண்பிக்கும் உணர்வுகள் வேறு வகையானவை, சில சமயம் அதிகம் பேசாததாகக் கூட இருக்கும்... ஆனால், அதை எந்த சமாளிப்புகளும் இல்லாமல் தூய்மையாகப் படமாக்கிய விதம் நம்மை இழுக்கும்.

காதல் இல்லை இது காமம் இல்லை:
 
selvaraghavan

வினோத் தன்னுடைய சிறுவயது தோழியை... அவள் கண்களை நினைவுகூர்வான். அவளுடன் இன்னொரு முறை பழக அமைந்த வாய்ப்பாக திவ்யா அவனின் வாழ்வில் நுழைவாள். அவனது தயக்கங்களை உடைப்பாள், அவனுக்கான முதல் கைதட்டல்களைப் பெறச் செய்வாள், அழுக்காகத் திரிந்தவனை பரிசுத்தம் செய்வாள். ஆனால் ஒரு இடைஞ்சல் மீண்டும் உண்டாகிறது. தன் தோழியை காமத்தால் பரித்துக் கொண்டு சென்றவனில் இருந்து, ஆதியை வித்தியாசப்படுத்திப் புரிந்து கொள்ள அவனுக்குத் தெரியவில்லை. வினோத்திற்குத் தெரிந்ததெல்லாம் திவ்யா தன்னுடன் இருக்க வேண்டியவள், அவளை தன்னிடம் இருந்து பிரிக்க முயல்பவன்தான் ஆதி. அவனிடமிருந்து திவ்யாவை பரிபூரணமாகப் பிரித்து, திவ்யாவுடன் வாழவேண்டும். அதற்காக எத்தகைய செயலும் செய்யலாம். கடைசியில் வினோத் இறந்துவிடுவான். அன்பிற்காக மட்டுமே ஏங்கிய வினோத்... இரண்டு முறை அது கிடைத்தும், தக்கவைத்துக் கொள்ள முடியாத கோபத்தில் மாபெரும் மிருகமாய் மாறி... குழந்தையின் விசும்பலுடன் உயிர் விடுவான். கடைசி வரை திவ்யாவிடம் அவன் எதிர்பார்த்து அன்பு மட்டுமே... காதல் இல்லை... காமம் இல்லை... அன்பு மட்டுமே. படம் முழுக்க அதை அத்தனை உணர்வுப்பூர்வமான காட்சிகளால் படமாக்கியிருப்பார் செல்வா. காதலும் அன்றி, காமும் அன்றி மத்தியில் ஒரு உறவை, உணர்வை செல்வா படமாக்கியிருந்ததே சிலிர்ப்பானது.


கண் பேசும் வார்த்தைகள்:
 
selvaraghavan


காதல் என்றாலே உடல்சார்ந்த தீண்டலாக மட்டுமே பாவிக்கும் கதிர் அனிதாவின் மேல் காதல் கொள்கிறான். முதலில் அவளைக் கவர ஏதேதோ செய்கிறான். அனிதாவோ அவனைக் கவனிக்கவே மறுப்பாள். இங்கு செல்வராகவன் புரிய வைக்க முயன்றதெல்லாம் காதல் உடல் தாண்டிய, உன்னத உணர்வு என்பதைத்தான். இங்கு செல்வாவின் கதாநாயகி கதாபாத்திரங்களுக்குள் இருக்கும் ஆளுமையை கவனிக்க முடியும். கதிர் வேலைக்கே ஆகதவன் என வசை வாங்கிக் கொண்டிருப்பான். ஆனால், அவனை ஏதாவது ஒரு முறையில் உயர்த்த வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருப்பாள் அனிதா. தன் மீது அவன் வைத்திருக்கும் அன்பை, சட்டை போல் சுழற்றி அவனுக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்டுவருவாள். இந்த இருவரின் காதல் தாண்டி, தந்தைக்கும் மகனுக்குமான தாக்குதல்கள் முடியும் இடத்தில் நம்மால் ஒரு மனநிறைவை உணரமுடியும். எட்டி மிதித்து, திட்டி அடித்து வன்மத்துடன் இருக்கும் தந்தை, கதிருக்கு வேலை கிடைத்ததும் அவன் முகத்தைப் பார்க்க தயங்குவார். இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் அந்த இடம் கவிதையின் தன்மை கொண்டது. ஒரு தந்தைமையின் உணர்வு, காதலியின் பரிவு என செல்வா இந்தப் படத்தில் எடுத்திருந்த இரண்டு விஷயங்களையும் ஒரு சேர சொன்ன விதமே அலாதியானது.


ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடி போகாது:
 
selvaraghavan


`புதுப்பேட்டை' என்னளவில் முக்கியமான தமிழ் சினிமா. சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆன போதும் அதற்கு கிடைத்த வரவேற்பு பெரிய அளவில் இருந்தது. இந்தப் படத்திலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் இரண்டு. ஒன்று, ஒருநாளில் வாழ்க்கை எங்கும் ஓடிபோகாது. படத்தில் குமார் என்கிற கொக்கி குமாரின் வாழ்வில் பல திருப்பங்கள் திடீரென்று ஒரு நாளில் நிகழும். அது எத்தகைய முன் தயாரிப்புகளும் கொண்டதாய் இருக்காது. குமார் சினிமாவுக்கு போய் வீட்டு திரும்பும் போது அவனின் அம்மா, அவனது தந்தையால் கொலை செய்யப்பட்டுக் கிடப்பாள், வீட்டை விட்டு பள்ளி சீருடையில் ஓடி வந்தவனை, ரௌடி கும்பலுடன் சேர்த்து போலீஸ் அழைத்துச் சென்று வெளுக்கும், தீடீரென ஒரு சண்டை, அதிலிந்து தப்புதல் ஒருகட்டத்தில் தனக்கு மேல் உள்ளவனைக் கொலை செய்வது என அவனுக்கு எங்கெல்லாம் பிரச்சனை வருகிறதோ, ஒரே ஒரு நாள் அது எல்லாவற்றையும் மாற்றியமைக்கும். கடைசியில் மேடையில் ஏறி தான் கொலை செய்த மூர்த்தி பற்றி இப்படி சொல்வான் குமார், "எனதருமை மூர்த்தி... உன்னை நினைக்கையில் எத்தனை எத்தனை நினைவுகள்". எந்தப் பிரச்சனையும் நிரந்தரம் கிடையாது, அது நீ எதிர்பார்க்காத ஒருநாளில் சரியாகிவிடும் என்பதை ஒரு கேங்ஸ்டர் படத்தின் மூலம் படு சுவாரஸ்யமாக சொல்லியிருப்பார் செல்வா. "ஓவரா ஆடக்கூடாதுபா" இது இந்த படம் சொல்லும் நன்னெறி. கிட்டத்தட்ட குமார் தன் நிலை தவறும் போது நடக்கும் தவறுகள் எல்லாம்தான் அவனுக்குப் பகையாக மாறி நிற்கும். தாலி எடுத்துக் கொடுக்கச் சென்றவன் தாலியைக் கட்டுவான், அவள் எப்போது அவனைக் கொலை செய்வது எனக் காத்திருப்பாள், அவளின் அண்ணன் அவனுக்கு எதிராக திரும்புவான், எதிராளிகளுக்கு பயந்து தன் குழந்தையை மறைத்து வைத்து கடைசி வரை அதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவான். "உனக்கு வேண்டியது உன் கண்ணு முன்னால இருக்கு, உன்னால அத எடுத்துக்க முடியும், நீ எடுத்துப்பியா மாட்டியா?" இந்த மனநிலை ஒருவனை, அவனைச் சுற்றியிருப்பவர்களை எப்படி பாதிக்கிறது என்பதை தெளிவாக விளக்கும் செல்வாவின் புதுப்பேட்டை.


எங்கேயோ பார்த்த மயக்கம்:
 
selvaraghavan


செல்வாவின் முதல் நேரடித் தெலுங்குப் படம் `ஆடவாரி மாட்டலுக்கு அர்தாலே வேருலே' (தமிழில் `யாரடி நீ மோகினி'). இங்கேயும் அப்பா - மகன் பிரச்சனை இருக்கும், மகனின் காதல் பிரச்சனையும் இருக்கும். `7ஜி'யில் சொல்லாமல் விட்ட அப்பா மீதான அன்பை இங்கே தொடர்ந்திருப்பார்.

"அப்பா மேல கைபட்டதும், அவ்வளோ கோபப்பட்டியே, அப்பான்னா அவ்வளோ பாசமா?"

"என்னப்பா அப்பிடிக் கேட்டுட்ட?"


"தெரியாம கேட்டுட்டேன் போ" அடுத்த காட்சியில் அப்பா கதாபாத்திரம் இறந்துவிடும். இங்கு மகன் தன் மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்து கொள்ள அந்தக் கான்ஃப்ளிக்ட் முடிந்துவிடும். அடுத்த கான்ஃப்ளிக்ட் காதல். முதலில் காதலை மறுக்கும் கதாநாயகி, மெல்ல மெல்ல தன் காதலை வெளிப்படுத்த ஆரம்பிப்பாள். அதுவும் திருமண நிச்சயதார்த்தம் வேறு ஒருவனுடன் நிகழ்ந்த பிறகு. இதைப் பற்றி இன்னும் விரிவாய் `மயக்கம் என்ன'வில் பார்க்கலாம்.


பிறை தேடும் இரவிலே:
 
selvaraghavan


காதலுக்கு ஒரு சின்ன இடைவெளி தந்து, `ஆயிரத்தில் ஒருவன்' மூலம் நம்மை ஒரு அட்வென்சர் பயணம் அழைத்துச் சென்றார் செல்வா. பிறகு மீண்டும் காதல். கார்த்திக்கிற்கு போட்டோகிராஃபியில் சாதிக்க துடிக்கிறான், நண்பர்கள் சூழ அவன் வாழ்க்கை மிக அமைதியாக செல்லும். யாமினி நண்பனின் காதலியாக அறிமுகமாவாள். அங்கிருந்து மனதில் சின்ன குழப்பம், யாமினி தன்னிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? என ஆரம்பிக்கும். ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் மூலம் இணைந்த பின்னும், அவனின் புகைப்பட கனவு பெரிய மனத் தடையைக் கொடுக்கும். தான் குருவாக மதிக்கும் ஒருவர், தனக்குக் கிடைக்க வேண்டிய பெயரை அபகரித்துக் கொண்டதன் விளைவாக, மந்தமாகிறான் கார்த்திக். இடையில் குடியும் வேறு. படம் முழுக்கவே, காதலும் - பேஷனும் மோதிக்கொள்ளும். இறுதியில் யாமினிக்கு வரும் அந்த போன் கால் வரை இந்த மோதல் நிகழ்வதை பதிவு செய்து கொண்டே இருப்பார் செல்வா. தான் விரும்பிய துறையில், திறமை இருந்து ஜெயிக்க முடியாதவனின் உணர்வுகள், இறுதியில் அவனது வெற்றி இதுதான் படத்தின் பிரதானமாக இருக்கும். அதை மிக அழகாக காட்சிபடுத்தியிருப்பார் செல்வா.


என் காதல் தீ:
 
selvaraghavan


செல்வாவின் முந்தைய படங்கள் எல்லாவற்றிலும், இரண்டு பிரச்சனைகளைக் கையாள்வார். ஒன்று பர்சனல், அதாவது காதல், குடும்பம்... இன்னொன்று அவனது தொழில். இதில் இரண்டு பிரச்சனையும் காதல்தான். ஒன்று காதலியை இழந்த மதுவின் வலி. இரண்டு மனைவியாய் ஆக்கிக் கொண்ட பின்னும் வர்ணாவிடம் நெருங்க முடியாத மறவனின் குழப்பம். எதேர்ச்சையாக மறவன் - வர்ணா வசிக்கும் இரண்டாம் உலகத்தில் நுழைகிறான் மது. காதல் என்றால் என்னவென்றே தெரியாத பூமி. காதல் இல்லாததால், அந்த நிலப்பரப்பில் பூக்கள் கூட மலரவில்லை. மறவன் - வர்ணா இருவரையும் சந்திக்கிறான் மது. அவர்களுக்கு காதலை சொல்லித் தருகிறான். மரத்துப்போன அந்த மண்ணில் பூக்கள் துளிர்விட, கூடவே சேர்ந்து பூக்கிறது அந்த இரண்டாம் உலகின் முதல் காதல். ஒரு பேண்டசி டைப்பில் சொல்லப்பட்ட மிக எளிமையான கதை. உள்ளே வந்து இது இல்லை, அது ஏன்? எனப் பல கேள்விகள் எழுந்தாலும், செல்வாவின் மிக முக்கியமான முயற்சி இது.

அடுத்து மூன்று இருக்கிறது. ஒன்று செல்வா இதுவரை தொடாத ஹாரர் ஜானர். `நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் எல்லாம் படத்தின் மீதான அன்பை அதிகமாகவே பெற்றிருக்கிறது. அதனாலேயே எப்போது வெளியாகும் என்கிற ஆவலையும் சேர்த்துள்ளது. பிறகு `மன்னவன் வந்தானடி', அதன் பிறகு சூர்யா - செல்வா காம்போவில் உண்டாகிக் கொண்டிருக்கும் படம்.
 
selvaraghavan


எப்போதும் செல்வா தரும் உணர்வுகளில் போலித்தன்மையை இருக்காது. உங்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கலையோ, அது உண்மையாகவே இருக்கும். வணிக சமரசங்கள் படத்தின் ஆன்மாவை, ரசிகனின் ரசனையை சிதைத்துவிடக் கூடாது என்பதில் அவரது உறுதி எப்போதும் குலையாமல் இருக்கும். செல்வாவிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், எங்களுக்கான ஆறுதலாக, துணையாக, ரசனையின் வழிகாட்டியாக தொடர்ந்து உங்கள் கை விரல் பற்றி நடந்து வருகிறோம். தொடர்ந்து நடப்போம்... எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர்த் தொடுப்போம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்வா!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்