ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரது கவனத்தையும் ஈர்த்து இன்றளவும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறான் பவர்பாண்டி. நல்ல திரைக்கதை, நேர்த்தியான
நடிப்பு, தொய்வில்லாத படத்தொகுப்பு, எதார்த்தமான ஒளிப்பதிவு, நினைவுகளை மீட்டெடுக்கும் இசை இவை அனைத்தும் தான் பவர்பாண்டி வெற்றியின் ரகசியங்கள்.
ஒரு படத்தின் வெற்றிக்கு இயக்கத்தை தாண்டி நடிப்பு, படத்தொகுப்பு, இசை, ஒளிப்பதிவு என பலவிஷயங்கள் உண்டு. இவையனைத்தும் ஒருசேர நன்றாக அமைந்தால் வெளிவரும் அணைத்து படங்களும் வெற்றிப்படங்கள் தான் என்று அடித்துக்கூறலாம். ஒரு நல்ல திரைப்படத்திற்கு படத்தொகுப்பு என்பது உயிரை போன்றது.
படத்தொகுப்பின் மூலம் சோர்வான திரைப்படத்தையும் வெற்றிப்படமாக்கமுடியும், வெற்றிப்படத்தையும் சோர்வாக்கமுடியும் என்பது திரைத்துறையின் கூற்று. பல திரைப்படங்கள் எடிட்டர் மேடையில் தான் உயிர்பெறும் என்றால் மிகையாகாது.
அவ்வகையில் இளம் படத்தொகுப்பாளர் ஜி.கே. பிரசன்னா ஒரு வெற்றிகரமான படத்தொகுப்பாளராக கோலிவுட்டில் தற்பொழுது வலம்வந்து கொண்டிருக்கிறார். பிரசன்னாவின் படத்தொகுப்பில் மாரி, பவர்பாண்டி என இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியிருந்தாலும், ரிலீசிற்கு காத்திருக்கும் பலப்படங்களை கைவசம் கொண்டிருக்கிறார் ஜி.கே. பிரசன்னா. தற்பொழுதைய தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் படத்தொகுப்பாளர் ஜி.கே. பிரசன்னா என்றால் மிகையாகாது.
வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தின் படத்தொகுப்பு பணிகளில் பிசியாக இருந்த பிரசன்னாவிடம் ஒரு ஸ்மால் இன்டெர்வியூ.
உங்களுடைய கோலிவுட் என்ட்ரி எப்படி பிரசன்னா?
மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில விஸ்காம் படிச்சு முடிச்சுட்டு எல்.வி. பிரசாத் பிலிம் இன்ஸ்டிடியூட்ல எடிட்டிங் படிச்சேன். படிச்சு முடிச்சதும் எடிட்டர் லியோ ஜான் பால்கிட்ட காதல் டூ கல்யாணம் படத்துல அசிஸ்டன்ட்டா ஒர்க் பண்ணேன். அதுக்கு அப்பறம் டி.எஸ் சுரேஷ் கிட்ட தமிழ்ப்படம், தீராத விளையாட்டுப்பிள்ளை, காதலில் சொதப்புவது எப்படி படங்கள்ல அசிஸ்டன்ட்டா ஒர்க் பண்ணேன். எடிட்டர் டி.எஸ். சுரேஷ் கிட்ட ஒர்க் பண்ணிடு இருக்கும்போதே எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் சார் கிட்ட அசிஸ்டன்ட்டா ஒர்க் பண்ண ட்ரை பண்ணிடிருந்தேன். திடீர்ன்னு ஒரு நாள் ஸ்ரீகர் பிரசாத் சார்கிட்ட இருந்து போன்கால் வந்தது. இப்ப என்கிட்டே வந்து அசிஸ்டன்ட்டா ஒர்க் பண்ணுங்கன்னு சொன்னாரு. அதுக்கு அப்புறம் கிட்டத்தட்ட ஒரு இரண்டற வருஷம் ஸ்ரீகர் பிரசாத் சார்கிட்ட ஒர்க் பண்ணேன்.
உங்களுடைய முதல் படமே தனுஷோட, அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?

நான் காதலில் சொதப்புவது எப்படி படத்திலுள்ள எடிட்டர் டி.எஸ். சுரேஷோட அஸோசியேட்டா ஒர்க் பண்ணேன். அதுமட்டும் இல்லாம அந்த படத்தோட டைரக்டர் பாலாஜி மோகன் எல்.வி. பிரசாத் பிலிம் இன்ஸ்டிடியூட்ல என்னோட சீனியர். அதனால தான் அவரோட அவரோட மாரி படத்துல என்ன எடிட்டரா அறிமுகப்படுத்துனாரு.
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் செல்வராகவனிடம் பணிபுரியும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
நான் மாரி திரைப்படம் முடித்த பிறகு ஒருசில படங்களுக்கு ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். திடிர்னு ஒரு நாள் தனுஷ் சார் என்ன கூப்பிட்டு அண்ணன் ஒருபடம் பண்ணப்போறாரு அதுல ஒர்க் பண்ணமுடியுமானு கேட்டாரு.
நான் ஓகே சொல்லி செல்வராகவன் சார ஆஃபீஸ்ல போய்ப்பார்த்தேன். அவரு ஒரு சில சீன்ஸ் குடுத்து என்ன எடிட் பண்ண சொன்னாரு. நானும் பண்ணி குடுத்தேன் இப்படி தான் நெஞ்சம் மறப்பதில்லை படத்துல ஒர்க் பண்ண ஸ்டார்ட் பண்ணேன்.
இயக்குநர்கள் செல்வராகவன், தனுஷ் இருவரிடம் பணிபுரிந்த அனுபவம் எப்படி பிரசன்னா?

எப்பயுமே செல்வராகவன் சார் ஒரு சில சீன்ஸ் என்ன எடிட் பண்ண சொல்லுவாரு. அதுக்கு அப்புறம் அதுல ஒரு சில கரெக்சன்ஸ் சொல்லி மாத்தச்சொல்லுவாரு. ஒரு எடிட்டரா செல்வராகவன் சார்கிட்ட இருந்து நெறய விஷயம் கத்துக்கிட்டேன். ஸ்பெஷல் என்னன்னா!!! செல்வராகவன் சாரோட மன்னவன் வந்தானடி படத்துலயும் நான் தான் ஒர்க் பண்றேன்.
தனுஷ் சார்ட்ட பவர்பாண்டில நான் ஒர்க் பண்ணும் போது செல்வராகவன் சார்கிட்ட என்னென காத்துக்கிட்டேனோ எல்லா விஷயங்களையும் பவர்பாண்டில அப்ளை பண்ணேன். அதுமட்டுமில்லாம மாரி படத்துல ஒர்க் பண்ணதுல இருந்து எனக்கும் தனுஷ் சாருக்கும் ஒரு நல்ல பாண்டிங் இருந்தது. நாங்க ரெண்டுபேரும் நெறய விஷயம் டிஸ்க்ஸ் பண்ணி தான் ஒர்க் பண்ணுவோம்.
பவர்பாண்டி திரைப்படத்தில் பணிபுரிந்ததில் மறக்க முடியாத நிகழ்வு?
பவர்பாண்டி ரிலீஸ்க்கு அப்புறம் இப்பவர நிறைய பேர் கால் பண்ணி வாழ்த்துக்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்க. தனுஷ் சார் இயக்குநரா அறிமுகமான திரைப்படம் நல்ல ஹிட், நல்ல டாக் இருக்குறதால ரொம்ப சந்தோசமா இருக்கு. ஒரு வெற்றிக்கு பின்னாடி இருக்க கொண்டாட்டம் என்னைக்குமே ஹாப்பி தானே!
உங்களுடைய அடுத்தடுத்த படங்கள்...
எனக்கு பவர்பாண்டி ஒன்பதாவது படம். ஆனா அந்த படம் தான் மாரிக்கு அடுத்து ரெண்டாவது ரிலீஸ் ஆகிருக்கு. யானும் தீயவன், சைனா, ரங்கூன், நெஞ்சம் மறப்பதில்லை, மரகதநாணயம், சத்ரு என ரிலீஸிற்க்காக நிறைய படங்கள் லைனப்பில் உள்ளது.
மாரி, நெஞ்சம் மறப்பதில்லை, பவர்பாண்டி, மன்னவன் வந்தானடி, வேலையில்லா பட்டதாரி 2, மாரியப்பன் என தனுஷ் குடும்பத்தில் உள்ள அனைத்து இயக்குநர்களுக்கும் எப்படி ஒரே எடிட்டர்? அப்ப மாரி இரண்டாம்பாகத்திற்கும் நீங்க தான் எடிட்டரா!!
சிரித்துக்கொண்டே!!!! பாலாஜிமோகன் நான் தான் அந்த படத்துக்கும் எடிட்டர்னு சொல்லிருக்காரு ஆனா இன்னும் கன்பார்ம் ஆகல!!!