முகப்புகோலிவுட்

"பி.சி.ஸ்ரீராம் சாரின் வார்த்தைகள் எனக்கான வெளிச்சம்"- என்.ஜி.கே ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன்

  | October 24, 2018 18:56 IST
Sivakumar Vijayan

`விடியும் முன்' மூலம் பளிச் கவனம்,`இறுதிச்சுற்று' மூலம் பாலிவுட் என்ட்ரி, செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் `என்ஜிகே' என தனது சினிமா பயணத்தில் பரபரப்பாகியிருப்பவரிடம் உரையாடியவை

"எனக்கு பி.சி.ஸ்ரீராம் சாருடைய ஒளிப்பதிவு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுக்கும். ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்சிட்டிருக்கும் போது அங்க கெஸ்ட் லெக்சர் கொடுக்க பல ஆட்கள் வருவாங்க. அப்படி பேசறதுக்காக பி.சி சாரையும் கூப்பிட்டோம். ஆனா, அப்போ அவர் பிஸியா இருந்ததால வரமுடியாம போயிடுச்சு. நான் அவர்கிட்டதான் அசிஸ்டென்ட்டா சேரணும்னு நினைச்சு வெச்சிருந்தேன். என்னோட சீனியர்ஸ் சிலர் அவர்கிட்ட வேலைசெய்ததால, நம்பர் எல்லாம் வாங்கி அவரைப் போய் பார்த்தேன். என்னோட வொர்க் எல்லாம் காமிச்சேன், அதை எல்லாம் சரியாக் கூட பார்க்கல, என்ன நினைச்சாரோ தெரியல `இன்னைல இருந்து ஜாயின் பண்ணிக்கோ'னு சொல்லிட்டார். எங்கிட்ட அப்படி என்ன பார்த்திருப்பார்னு இன்னைக்கு வரைக்கும் எனக்குப் புரியல. சேர்ந்ததுக்குப் பிறகு அதைத் தெரிஞ்சுக்கவும் விரும்பல. அவருடன் வேலை செய்த அனுபவம் மிகவும் வித்தியாசமான பயணம்னு சொல்லுவேன். எப்போதுமே சிஷ்யன் குருவ தேர்ந்தெடுக்க மாட்டான், குருதான் சிஷ்யன தேர்ந்தெடுப்பார். அதான் உண்மை. அவர் இத்தனை வருஷமா சேர்த்து வெச்சிருக்கும் அனுபவம் கவனிக்க வேண்டியது. ஏன்னா, அவர் நமக்கு ஏதோ ஒண்ணு கற்றுக் கொடுக்கறத உணர்த்தாமலே பெரிய பெரிய விஷயங்களை சொல்லிக் கொடுத்திட்டிருப்பார். அதெல்லாம் எந்த இன்ஸ்டிடியூட்ல படிச்சும் கத்துக்க முடியாது" என தான் பாலபாடம் பெற்ற பி.சி.ஸ்ரீராம் பற்றி சிலிர்த்துப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன். `விடியும் முன்' மூலம் பளிச் கவனம்,`இறுதிச்சுற்று' மூலம் பாலிவுட் என்ட்ரி, செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் `என்ஜிகே' என தனது சினிமா பயணத்தில் பரபரப்பாகியிருப்பவரிடம் உரையாடியவை கீழே..

"ஒளிப்பதிவுக்கான தொழிநுட்ப அறிவை படித்துக் கற்றுக்கொள்வது எந்த அளவுக்கு பலம் சேர்க்கும்?"

"ஒளிப்பதிவுன்னு எடுத்துகிட்டாலே அது முறையா கத்துக்க வேண்டிய விஷயம்தான். ஒண்ணு குருவ வெச்சு கத்துக்கலாம், இல்லனா படிக்கறதுக்கு நிறைய இன்ஸ்ட்யூஷன்ஸ் இருக்கு. பதினைஞ்சு வருஷம் முன்னாடி எல்லாம் ஒண்ணு, ரெண்டுதான் இருந்தது. ஆனா, இப்போ நிறைய இருக்கு. அதுக்குப் பிறகு இண்டஸ்ட்ரி உள்ள வந்த பின்னால கிரவுண்ட் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். அதுதான் ரொம்ப முக்கியமானது. அதுதான் நாம எப்படி வேலை செய்யப் போறோம்னு சொல்லிக் கொடுக்கும். இன்ஸ்டிட்யூட்ல டெக்னிகலா தெரிஞ்சுக்க படிக்க, வெவ்வேறு ஆட்களை சந்திக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலமா பத்து வருஷம் நாம சேகரிக்க வேண்டிய தொழிநுட்ப அனுபவங்கள மூணு வருஷத்துக்குள்ள சேகரிச்சிட முடியும். ஆனா, நடைமுறையில் இருக்கும் வேலைகள கிரவுண்ட்டுக்கு வந்தாதான் புரிஞ்சுக்க முடியும். ஆனா, அதுக்கும் கூட சில அடிப்படைகளை கத்துக்கிட்டு வரணும். அதுக்கு இன்ஸ்டிடியூட்தான் போணும்னு இல்ல, இப்போ நிறைய புத்தகங்கள் இருக்கு, கூகுள், நூலகங்கள்னு இதற்கான வெளி பெரிதாயிடுச்சு. `எந்திரன்' படத்தில் ஒரு ரோபோவுக்கு உணர்வுகள கொடுப்பாங்க, அது போலதான். இங்க கேமராங்கற ரோபோவுக்கு எப்படி உணர்வுகள செலுத்தப் போறோம்ங்கறது அந்த கேமராமேன் கைல இருக்கு. அதற்குத் தொழிநுட்ப அறிவுடன், அனுபவ அறிவும் தேவையா இருக்கு.
எப்படி இருக்கு `என்ஜிகே' அனுபவம்?

ரொம்பவும் நல்லாயிருக்கு. படத்திற்காக குறைஞ்சது எண்பது நாட்களுக்கு மேல இயக்குநர் செல்வராகவன் சாரோடு பயணிச்சிருப்பேன். ஆரம்பத்தில் இருந்து அவரோட நிறைய படங்களை தியேட்டர்ல ரசிச்சுப் பார்த்திருக்கேன். அதனாலயோ என்னவோ, அவர் செய்யும் ஒவ்வொரு வேலைகளையும் ரசிச்சுப் பார்த்துகிட்டிருக்கேன். சூர்யா சார் பற்றி சொல்லவே தேவை இல்லை. அவருக்கு இங்க கிடைச்சிருக்கும் அங்கீகாரம் மிகப் பெரியது. அவருடைய வசன உச்சரிப்பு முதல்கொண்டு அவ்வளவு கச்சிதமா இருக்கும். இந்த ரெண்டு பேருடைய காம்போவே ரொம்ப வித்தியாசமான ஒண்ணு. கண்டிப்பா இது எல்லோருக்கும் ஆச்சர்யம் கொடுக்கும் படமா இருக்கும். படம் பற்றி இப்போதைக்கு எதுவும் வெளிய சொல்ல முடியாது. அனுபவமா சொல்லணும்னா, இது எனக்கு மறக்க முடியாத அனுபவம்.

"இன்ஜினியர், சினிமா ஒளிப்பதிவாளராக ஸ்பெஷல் காரணம் எதுவும் இருக்கா?"

"எனக்கு ஆரம்பத்தில் இருந்தே ஓவியங்கள் மீதான ஆர்வம் அதிகம், வரைவேன். நிறைய போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசுகளும் வாங்கியிருக்கேன். ஆனா, இதை அதற்கு மேல ஊக்கப்படுத்தும் விதமா என்னோட கல்வி அமைப்பு இல்ல. ப்ளஸ் டூக்குப் பிறகு விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கணும்னு ஒரு ஆர்வம் வந்தது. ஆனா, இன்ஜினியரிங்தான் சேர முடிஞ்சது. அங்க இருந்த நண்பர்கள் மூலமா போட்டோகிராபி, ப்ராசசிங், ஃப்ரேமிங், லைட்டிங், ஷட்டர் ஸ்பீட்னு அடிப்படியா விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சுகிட்டேன். காலேஜ் முடிக்கப் போற சமயத்தில் ஒளிப்பதிவு மேல் பெரிய ஆர்வம் வர ஆரம்பிச்சது. ஷூட்டிங் வேடிக்கை பார்க்கப் போய் அங்க நடக்கும் விஷயங்கள் அப்சர்வ் பண்ணுவேன். பிறகு சத்யஜித்ரே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிக்க வாய்ப்பு கிடைச்சது. அங்கப் போனதுக்குப் பிறகு பல விஷயங்கள் புரிய ஆரம்பிச்சது."

"பி.சி.ஸ்ரீராம் உதவியாளராக இருந்தீர்கள். அவருடன் மறக்க முடியாத தருணங்கள் உண்டா?"

"நிறைய இருக்கு. அவர்கிட்ட நான் படம் பண்ணப் போறேன்னு சொன்ன தருணம் என் வாழ்க்கைல ரொம்ப முக்கியமானது. இத்தனை வருஷம் உதவியாளரா இருந்தாச்சு, அடுத்து நாம என்ன பண்ணப் போறோம்னு சுத்தி இருக்கவங்க கேட்டுகிட்டே இருப்பாங்கள்ல அது ஒரு தொந்தரவைக் கொடுக்கும். அதுமாதிரி ஒரு தவிப்பான மனநிலையில் இருந்தப்போ என்னைக் கூப்டாரு. `உனக்குள்ள என்ன ஓடிட்டிருக்கு?'னு கேட்டார். எதுவும் இல்லைன்னு சொன்னேன். `இல்ல நீ ஏதோ யோசிச்சிட்டே இருக்க. ஃபியூச்சர்ல என்ன பண்ணப் போறோம்னு யோசிக்கிறியா'னு கேட்டார். இருக்கலாம் சார்னு சொன்னேன். `என்னப் பண்ணப் போறோம்னு யாருக்குமே தெரியாது. ஆனா, என்ன நடக்கனும்னு நீ விரும்புற எதுவும் தப்பில்ல. அதில் உண்மை இருக்கு. என்னைக்கு நீ சேகரிச்சு வெச்சிருக்க எல்லா விஷயமும் உன்னை மீறி வெளிய வர ஆரம்பிக்குதோ, அப்போ உன்னைத் தேடி வாய்ப்புகள் தானா வரும். அது வரைக்கும் சேகரிச்சு வைக்கறதுதான் உன்னோட வேலை'னு சொன்னார். மனசு கொஞ்சம் அமைதியானுச்சு. அந்த வார்த்தைகள் எனக்கான வெளிச்சம்.

பிறகு எனக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு நான் பண்ணப் போறேன்னு சொன்னேன். `உனக்கு பண்ண முடியும்னு நம்பிக்கை வந்திடுச்சா'னு கேட்டார். வந்திடுச்சுனு சொன்னதும் `அப்போ சரி, நீ போய் பண்ணு'னு அனுப்பி வெச்சார். அப்படி நான் கமிட்டான படம்தான் `விடியும் முன்'. அந்தப் படத்துக்கான ப்ரீ ப்ரொடக்ஷன் எல்லாம் முடிச்ச பிறகு, பி.சி சார் கூப்பிட்டார். 'நான் ஷங்கருடைய ஐ படம் பண்ணப்போறேன். நீயும் வந்து ஜாயின் பண்ணிக்கிறியா?'னு கேட்டார். இல்ல சார் இந்தப் பட வேலைகள் தொடங்கியாகனும்னு என்னோட நிலைமைய சொன்னேன். `சரி உன்னோட வேலைகள்ல கான்சன்ட்ரேட் பண்ணு'னு விஷ் பண்ணார். படம் ரெடியானதும் ப்ரிவ்யூ ஷோவுக்கு அவரைக் கூப்பிட்டேன், ஃபேமிலியோட வந்து பார்த்தார். படம் முடிஞ்சதும் என்கிட்டே எதுவும் சொல்லல. என்னோட அம்மாவக் கூப்பிட்டு, `நீங்க இவன் ஃப்யூச்சர் பத்தி பயந்திருப்பீங்க. இவன் நல்லா வருவான், கவலைப்படாதீங்க'னு சொல்லிட்டுப் போயிட்டார். அதுவே எனக்கு பெரிய ஆசிர்வாதமா இருந்தது. இன்னும் ஒருபடி மேல போய் அந்தப் படம் பத்தின ஒரு ட்வீட் போட்டார். அதெல்லாம் அவர் பண்ணனும்னு அவசியமே இல்ல. ஆனா, வளர்ந்து வர்றவங்கள அவர் எவ்வளவு சப்போர்ட் பண்றார்ங்கறதுக்கு இதெல்லாம் பெரிய உதாரணம். இப்போ `கோலமாவு கோகிலா' பார்த்திட்டும் ட்வீட் பண்ணியிருந்தார். ஒரு குரு தன்னுடைய சிஷ்யன் திறமைய இவ்வளவு வெளிப்படையா பாராட்டறது, அவருடைய தூய்மையான அன்பைதான் காட்டுது."

"தொடர்ந்து நீங்கள் பண்ணிய `இறுதிச்சுற்று', `இறைவி', `கோலமாவு கோகிலா', இப்போ பண்ணிகிட்டிருக்கும் என்ஜிகே எல்லாமே வித்தியாசமான படங்கள். அவை பற்றிய சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்?"

" `விடியும் முன்' படத்துக்குப் பிறகு ஏதாவது வித்தியாசமான படமா பண்ணனும்னு காத்திருந்தப்போ சுதா கோங்கரா மேடம் ஒரு ஸ்க்ரிப்ட் அனுப்பினாங்க. படிச்சுப் பார்த்தா எக்ஸ்ட்ராடினரியா இருந்தது. நான் படிச்சிட்டிருக்கும் போது பாக்சிங் சம்பந்தமா ஒரு படம் பண்ண வேண்டியதா இருந்தது. அதற்காக நிறைய ரிசர்ச் பண்ணிவெச்சிருந்தேன். பிறகு அதைப் பண்ண முடியல. ஆனா, அது எல்லாமும் எனக்கு `இறுதிச்சுற்று' பண்ணும்போது உதவிகரமா இருந்தது. அது தொடங்கறதுக்கு முன்னால எனக்கு நிறைய வாய்ப்புகளும் வந்தது. ஆனா, `இறுதிச்சுற்று' பண்ண முடியாம போயிடுமோனு எல்லாத்தையும் மறுத்திட்டு காத்திருந்தேன். பல இடங்களுக்குப் போனது, பல நபர்கள சந்திச்சது, தமிழ், இந்தினு இரண்டு மொழிகள்ல ஒவ்வொரு காட்சியையும் எடுத்ததுன்னு அது ரொம்பவும் ஸ்பெஷலான அனுபவம்.

கார்த்திக் சுப்பராஜ் `இறைவி'ல வேலை செய்ததும் வித்தியாசமான அனுபவம். ஏன்னா அது டீமாவே புதுசு எனக்கு. கார்த்திக்கு என்னோட வயசுதான், அந்த டீம்ல இருந்த பெரும்பாலான ஆட்கள் ஒரே செட் ஆட்களாதான் இருப்போம். ரொம்பவே ஃப்ரெண்ட்லியா பண்ணோம் அந்தப் படம். வழக்கமான ஸ்ட்ரக்சர்ல இருக்கணும்னு எந்தக் கட்டுப்பாடும் இருக்காது, இதுமாதிரி ட்ரை பண்ணலாமானு கேட்டா ஓகே பண்ணுனு சொல்லுவார். இப்போ ரஜினி சார் படம் `பேட்ட' எடுத்து முடிச்சிட்டார். அவருடைய வளர்ச்சி எனக்குப் பெரிய சந்தோசம் கொடுக்குது. அவரும் பெரிய ரஜினி ஃபேன் வேற, சொல்லவே வேணாம் படம் வேற லெவல்ல இருக்கும்னு எதிர்பார்க்கறேன். `பேட்ட' ஃபர்ஸ்ட்டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க நான் வெயிட்டிங்.

நெல்சன் எனக்கு சில வருடங்களா தெரியும். `கோ கோ'வுக்கு முன்னால நாங்க வேற ஒரு படம் பண்றதா இருந்தது. ஆனா, சில காரணங்களால அது பண்ண முடியல. பிறகு அவர் திருப்பிக் கூப்பிட்டு, ஒரு கதை சொன்னார், எனக்குப் பிடிச்சிருந்தது. நயன்தாரா படத்திற்குள்ள வந்ததுக்குப் பிறகு இன்னும் சுவாரஸ்யமானுச்சு. லேடி சூப்பர்ஸ்டார் ரேஞ்ல இருக்கவங்க நயன், அதுக்குத் தகுந்த மாதிரி நாமளும் ட்ரீட் பண்ணனும், கூடவே அது ஓவர் டோஸும் ஆகிடக் கூடாது. அதோட படத்தின் ஒவ்வொரு சீனுக்கும் அதோட மூடுக்கும் தகுந்த மாதிரி கலர் பேர்ட்டன் பயன்படுத்தியிருப்போம். நயன்தாரா கூட ஒர்க் பண்ண அனுபவமும் சூப்பரானது. அவங்க அவ்வளவு டிசிப்ளின்னான ஆர்டிஸ்ட். டைமுக்கு வந்திடுவாங்க, அவங்க வேலைய அவ்வளவு பக்காவா முடிப்பாங்க. இத்தனை வருஷமா சினிமால இருந்து நிறைய அனுபவம் சேர்த்திருக்கறதுதான் காரணம். ஒரு சீன்ல கண் சிமிட்டனுமா கூடாதானு கூட கவனமா இருக்கற அளவு பெர்ஃபக்ஷன் பார்ப்பாங்க.

ஒவ்வொரு இயக்குநர்களோட வேலை செய்றதும் புது அனுபவம். அந்த வகைல இப்போ செல்வராகவன் சார் இயக்கத்தில் வேலை செய்யற `என்ஜிகே' முற்றிலும் புதிய அனுபவம். நானும் அவருடைய படங்கள் எல்லாம் பார்த்து ரசிச்ச ஒரு ஆள்தான். இப்போ அவரோட வேலை செய்யறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒவ்வொன்னையும் நோட் பண்றது, நடிச்சுக்காட்றதுனு மிக நுணுக்கமா வேலை செய்யக் கூடியவர் செல்வா சார். அவர் வேலைய ரசிக்கரதால ரொம்ப என்ஜாய் பண்ணி வேலை செய்யறேன். படம் பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனா, எல்லாருக்கும் வித்தியாசமான ட்ரீட்டா இருக்கும். சூர்யா சார் மாதிரி ஒரு ப்ரில்லியன்ட் ஆக்டர் - செல்வா சார் காம்போவ நான் ஷூட் பண்ணும்போது எனக்கு ஒரு சிலிர்ப்பு இருந்தது. படம் பார்க்கும் போது அதை ஆடியன்ஸும் உணர்வாங்க.

இதுக்குப் பிறகு அமீர் சார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் `சந்தனத்தேவன்' பண்றேன். அதுவும் ரொம்ப வித்தியாசமா இருக்கும். மண் சார்ந்த, மரபு சார்ந்த விஷயங்கள் அந்தப் படத்தில் இருக்கும்"

"ரஜினிகாந்த் `கோலமாவு கோகிலா' படத்திற்காக பாராட்டினாராமே?"

"ரஜினி சார் அவ்வளவு பெரிய உயரத்துக்குப் போயிட்ட ஒருத்தர். அவரை எல்லாம் நாம பார்க்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும். சார் `கோலமாவு கோகிலா' படம் பார்த்திட்டு எங்க டீம மீட் பண்ணனும்னு சொல்லி கூப்பிட்டுவிட்டார். எங்க எல்லாரையும் மீட் பண்ணி, எல்லாரோடையும் போட்டோ எடுத்துகிட்டதெல்லாம் சரித்திர சம்பவம்தான்."

"இதுக்குப் பிறகான சினிமா பயணம் ஒளிப்பதிவு சார்ந்ததா மட்டுமே இருக்குமா? வேறு திட்டங்களும் இருக்கிறதா?"

"வேற எந்த யோசனைகளும் இப்போதைக்கு இல்ல. ஏன்னா, ஒளிப்பதிவுலையே இன்னும் நிறைய பண்ண வேண்டியது இருக்கு. இதில் நான் ட்ராவல் பண்ண வேண்டியது நிறைய இருக்கு. அதனால வேற எந்த சிந்தனைகளும் இப்போ இல்ல."

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்