முகப்புகோலிவுட்

வடிவேலுவுக்கு ரெட் கார்டா? - ஷாக் மோடில் ரசிகர்கள்

  | September 14, 2018 17:38 IST
Imsai Arasan 24am Pulikecei

துனுக்குகள்

  • முதல் பாகமான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ மெகா ஹிட்டானது
  • தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளித்தார் ஷங்கர்
  • வடிவேலு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று ஷங்கர் கூறியிருந்தார்
விஜய்யின் ‘புலி’ படத்திற்கு பிறகு இயக்குநர் சிம்புதேவன் இயக்கி வந்த புதிய படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. 2006-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகமான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’-யில் வைகைப்புயல் வடிவேலு டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். ‘புலிகேசி – 1’ஐ தயாரித்த இயக்குநர் ஷங்கரே பார்ட் 2-வையும் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’வுடன் இணைந்து தனது ‘S பிக்சர்ஸ்’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வந்தார். இதில் வடிவேலு மூன்று வேடங்களில் நடித்து வந்ததாக கூறப்பட்டது. அவருக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடித்து வந்தார். ஜிப்ரான் இசையமைத்து வந்த இதற்கு ஆர்.சரவணன் ஒளிப்பதிவு செய்து வந்தார்.

ஏற்கெனவே, படக்குழுவால் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. கடந்த ஆண்டு (2017) இப்படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது. படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட அரண்மனை செட்டும் போடப்பட்டது. இதனையடுத்து சில காரணங்களால் படப்பிடிப்பில் கலந்து கொள்வதை வடிவேலு தவிர்த்தார். இதனால் இந்த படம் டிராப்பாக, தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளித்தார் ஷங்கர். பின், இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கமும் வடிவேலுவுக்கு 2 முறை கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தது. பின், வடிவேலு நடிகர் சங்கத்திற்கு அனுப்பிய பதில் கடிதத்தில் “இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் நடிக்க 1-6-2016-யில் ஒப்புக் கொண்டேன்.

2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்து விடுவதாகவும், அதுவரை வேறெந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன். ஆனால், டிசம்பர் 2016 வரை படத்தை தொடங்காமலே காலம் தாழ்த்தினர். இருந்தாலும், தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி, அதன்பிறகும் பல்வேறு தேதிகளில் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன். இந்நிலையில்,என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் நீக்கியது. அத்துடன், கெட்ட நோக்கத்தோடு எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தைக் கொடுத்து, ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். நான் நடித்து தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016-க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்திற்கு பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2016 – 2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு, என்னை அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது. இந்த படத்தில் நாசர் நடிப்பதால், நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது. இதில் தொடர்ந்து நடித்தால், நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும். பொருளாதார, குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வடிவேலு தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த படத்தின் மூலம் ரூ.9 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், அதற்கு வடிவேலு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினார் ஷங்கர். இதற்கு இதுவரை வடிவேலு எந்த பதிலும் சொல்லவில்லை என்பதால், இப்படத்தின் பிரச்சனை முடியும் வரை வடிவேலுவை வைத்து எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க வேண்டாமென தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்