முகப்புகோலிவுட்

பூதத்திடமிருந்து 'சீயான்' விக்ரமை காப்பாற்ற வந்த ஜான்! #துருவநட்சத்திரம் #சாமி2

  | June 05, 2018 16:37 IST
Vikram Films

துனுக்குகள்

  • ரசிகர்கள் எடிட் செய்த fan made டிரைலர்கள் கிரியேட்டிவ்வாக இருந்தது
  • சால்ட் & பெப்பர் லுக், ஹாலிவுட் தரத்திலான ஆக்ஷன் பெருமளவில் வரவேற்கபட்டது
  • தன்னைத்தானே புதிதாக reinvent செய்யவேண்டிய ஒரு அவசியம் உண்டாகிவிட்டது
இரண்டு நாட்களுக்கு முன் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கிய 'சாமி 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியானபொழுது, அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்களே எழுந்தது. சமுக வலைதளங்கள் முழுக்க, அனைத்து தரப்பினராலும் கிண்டல் செய்யப்பட்டது அந்த டிரைலர். 15 வருடங்களுக்கு முன் வெளியான 'சாமி' படத்தின் முதல் பாகத்தின் தரத்தில் கால்வாசி கூட இல்லாததை போல் இருந்தது 'பார்ட் 2'வின் முன்னோட்டம். 

கிட்டத்தட்ட ஹரியின் 'பூஜை' படத்தையும் 'சிங்கம் 3' படத்தையும் கலந்து எடுத்தாற்போல, ஒரே இரைச்சலாகவே இருந்தது டிரைலர். 'சாமி' படத்தின் sequel என்பதால் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களை கண்கள் வலிக்கும்படியான எடிட்டிங்கும், 'நான் தாய் வயித்துல பொறக்கல, பேய் வயித்துல பொறந்தேன்' 'நான் சாமி இல்ல... பூதம்' மாதிரியான ரைமிங் வசனங்களும், படு சுமாரான பின்னணி இசையும் பெருமளவில் ஏமாற்றமடைய செய்தது. இது வரை ரசிகர்களால் அதிகம் கலாய்க்கப்படாத ஒரே பெரிய நடிகர் என்கிற அந்தஸ்தில் இருந்த 'சீயான்' விக்ரம் அவர்களை ஒரேயொரு டிரைலர் மூலம் எல்லோரும் கேலி செய்யுமளவிற்கு ஆகிவிட்டது என்றே சொல்லவேண்டும். இதையெல்லாம் விட மோசம் என்னவென்றால், அதே டிரைலரை வைத்து ரசிகர்கள் எடிட் செய்த fan made டிரைலர்கள் ரொம்பவே கிரியேட்டிவ்வாக இருந்தது, சமூக வலைதளங்களில் வைரலாக share ஆகவும் செய்தது. 'சாமி 2' திரைப்படம் நன்றாக இருக்குமோ இல்லையோ, அது வேறு விஷயம். ஆனால் இந்த டிரைலரையும் படத்தின் மேக்கிங்கையும் பார்க்கையில், படம் மீதான ஒரு அவநம்பிக்கை ஏற்படுவது உண்மை.    

ஒரு காலத்தில் தனது அற்புதமான நடிப்புத்திறனுக்காகவும், சினிமா மீதான அர்பணிப்பிற்காகவும் புகழப்பட்ட விக்ரம் அவர்கள் தொடர்ந்து 'ராஜாப்பாட்டை, 'கந்தசாமி', 'இருமுகன்', 'தாண்டவம்', '10 எண்றதுக்குள்ள', 'ஸ்கெட்ச்' போன்ற மோசமான படங்களிலும் படு சுமாரான கமர்ஷியல் படங்களிலுமே நடித்து வருவதும், தொடர் தோல்விகளின் ஆற்றாமையில் எப்படியாவது ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டுமென ஒரே மாதிரியான கதைகளில் நடிப்பதும் ரசிகர்களால் விமர்சிக்கப்படாமல் இல்லை. 
இந்நிலையில், இன்று விக்ரம் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் புதிய டீசர் வெளியாகி இணையம் முழுக்க டிரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. 

படத்தின் தாறுமாறான மேக்கிங், விக்ரமின் 'சால்ட் & பெப்பர்' லுக் மற்றும் கூலான ஸ்டைல், ஹாலிவுட் தரத்திலான ஆக்ஷன் காட்சிகள் என எல்லாமே ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. கண்டிப்பாக, விக்ரமிற்கு இது ஒரு 'comeback film' ஆக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் சினிமா ரசிகர்களிடையே பரவலாக உள்ளது. 

இரண்டு நாட்கள் இடைவெளியில் வெளிவந்துள்ள விக்ரமின் இந்த இரண்டு படங்களின் முன்னோட்டங்களும், ரசிகர்களிடையே முற்றிலும் வெவ்வேறு மாதிரியான வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒன்று - சுலபமாக ஹிட் கொடுக்கும் பாணியில், சலிப்படையும்படியான ஒரு கமர்ஷியல் படத்தின் டிரைலர் கழுவி ஊற்றப்பட்டுள்ளது. இரண்டு - முற்றிலும் புதுமையாக தன் வயதிற்கேற்ற ஒரு வேடத்தில், கதைக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு படத்தில் நடித்திருப்பதால் அதே நடிகரின் படத்தின் டிரைலர் கொண்டாடப்பட்டு வருகிறது. 

படத்தின் நாயகனோ, இயக்குனரோ யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டமும் மார்க்கெட் வேல்யூவும் அவர்களுக்கு இருந்தாலும் கூட, கதைதான் இங்கே நாயகன் என்பதைத்தானே இது காட்டுகிறது. ரசிகர்களை மதித்து அவர்களின் புத்திசாலித்தனத்திற்கும் பொழுதுபோக்கு தேவைக்கும் ஒருசேர தீனி போட நினைக்கும் படங்களே வெல்லமுடியும் என்பதையே இது குறிக்கிறது. எல்லா முறையும், மோசமான படங்கள் ஜெயித்துவிடுவதில்லை. 

தொடர் தோல்விகளால் தன் கேரியரில் தேங்கிப் போய் நிற்கும் விக்ரம் போன்ற ஒரு நல்ல நடிகர், தன்னைத்தானே reinvent செய்துகொள்ள வேண்டிய தருணம் இது. உச்சத்தில் இருந்து அதள பாதாளத்திற்கு போய் மீண்டும் எழுந்து வந்த அமிதாப் பச்சன் அவர்களைப் போல, 'வேட்டைக்காரன்' 'குருவி' 'சுறா' படங்களின் தோல்விகளுக்கு பின் 'நண்பன்' 'துப்பாக்கி' 'காவலன்' என தன் கதை தேர்வுகளிலும் நடிப்பிலும் மாற்றம் கொண்டுவந்த நடிகர் விஜயைப் போல, தன்னைத்தானே புதிதாக reinvent செய்யவேண்டிய ஒரு அவசியம் உண்டாகிவிட்டது நடிகர் விக்ரமிற்கு. சின்ன சின்ன வேடங்களிலும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும், தோல்விப்பட நாயகன் என்கிற முத்திரையுடனும் இதே தமிழ் சினிமாவில் பல வருடங்கள் போராடி அதன் பின்னர் தன் முதல் வெற்றியை 'சேது' திரைப்படம் மூலம் சுவைத்த விக்ரம் அவர்கள், மீண்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அது அவசியம். ஏனெனில், ஒவ்வொரு முறையும் பூதத்திடமிருந்து காப்பாற்ற ஒரு இது போல ஜான் வருவானா என தெரியாது. 

ரசிகர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என சொல்லிக்கொண்டு 'ராஜாப்பாட்டை, 'தாண்டவம்', '10 எண்றதுக்குள்ள', 'ஸ்கெட்ச்' போன்ற பாடாவதியான கமர்ஷியல் படங்களாக மட்டுமே நடித்துக்கொண்டிருப்பதால் யாருக்குத்தான் லாபம்? 

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்