விளம்பரம்
முகப்புகோலிவுட்

பாகுபலி 2: இறுதிப் போர் காட்சிகளில் நடந்தது என்ன? விவரிக்கிறார் நடிகர் ராணா டகுபதி

  | April 26, 2017 10:59 IST
Movies

துனுக்குகள்

  • ராணா : முதன்முறையாக இவ்வளவு பிரம்மாண்ட தயாரிப்பில் பணிபுரிந்திருக்கிறேன்
  • "பாகுபலி , என் வாழ்வில் நான் பெற்ற ஆகச்சிறந்த அனுபவம்"
  • பாகுபலி - 2ம் பாகம், ஏப்ரல் 28ம் நாள் திரைக்கு வருகிறது
மகிழ்மதி நாட்டு வாரிசுகளான பாகுபலிக்கும் பல்வாள் தேவனுக்கும் நடக்கும் பிரம்மாண்ட போர்க்காட்சிகளுடன் விரைவில் வெளிவரவிருக்கும் பாகுபலி - இரண்டாம் பாகத்தின் டிரையிலர், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரபாஸுக்கும், ராணா டகுபதிக்கும் இடையே நடக்கும் மாபெரும் இறுதிப் போர்க் காட்சிகள், மிகுந்த கவனத்துடனும் கடும் உழைப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாகம், முந்தைய பாகத்தை விட பிரம்மாண்டமாகவும், பெரும் செலவுடனும் படமாக்கப்பட்டிருக்கிறது.

பல்வாள் தேவனாக நடித்திருக்கும் ராணா, நம்முடன் இறுதிப் போருக்கு தம்மை தயார்படுத்திக்கொண்ட சுவாரசியமான பயணத்தை பகிர்ந்துகொண்டார். உக்கிரமான, பெரும் பலசாலி பல்வாள் தேவனாக முழுமையாக உருமாற, தனது உடலினை பெரும் உழைப்பினை ஊற்றி உறுதியாக்கியிருக்கிறார். டிரையிலரில் காண்பதை வைத்து, ராணா, பேராற்றல் கொண்டு படத்தில் ஓங்கி உயர்ந்து நிற்பார் என்பதில் ஐயமில்லை.

முன்கதையான (prequel) இரண்டாம் பாகத்தின் கதையில் அமரேந்திர பாகுபலியும் பல்வாள் தேவனும் மோதி கொள்ளும் காட்சி, மாபெரும் போராய் விஸ்வரூபம் எடுக்கிறது. கடும் உடற்பயிற்சி, ஆரோக்கியம் பேணும் ராணாவுக்கு படத்தின் கடுமையான போர்க்காட்சிகள் படமாக்கியபோது சிரமங்கள் இருந்தனவா? ஏதேனும் குறிப்பிட்ட காட்சியின் படப்பிடிப்பு, அவரை முற்றிலும் சோர்வுறச்செய்திருக்கிறதா? அவரையே கேட்டோம்!
“ஒவ்வொரு காட்சியிலும் கடும் உழைப்பைக் கொட்டி, மொத்த குழுவும் ஒன்றிணைந்தே ஒவ்வொரு காட்சியும் படமாகியுள்ளது. தண்டாயுதங்கள், போர்வாள்கள், குதிரைப்படைகள், தேர்கள் முதலிய ஆயுதங்களும் உபகரணங்களும் பயன்படுத்தினோம். பொதுவாக வெளிநாட்டுப் தற்காப்புக் கலைகளைத் தான் நம் படங்களில் பார்த்திருக்கிறோம்.. ஆனால் பாகுபலியில் பழமைவாய்ந்த இந்திய கைப்போர் முறைகளைக் கையாண்டிருக்கிறோம். நான்கு வருடங்களுக்கும் மேலாக இந்த படத்திற்காக நான் பணி புரிந்துள்ளதால், காயங்களும் சோர்வுகளும் எனக்கு பழகிவிட்டன. எனவே, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காட்சியின் படப்பிடிப்பு தான் ஆகச் சிரமமாய் இருந்தது எனக் கூறவே முடியாது! அப்படி கூறிவிட்டால், அது மற்ற காட்சிகளை உருவாக்க நாங்கள் இட்ட கடும் உழைப்பை குறைப்பது போல் ஆகிவிடுமே!” என்கிறார் ராணா.
 
rana daggubati baahubali 2

அனைத்து காட்சிகளையும் விட பிரம்மாண்டத்தில் தனித்து உயர்ந்து நிற்கும் அளவிற்கு எடுக்கப்பட்ட ராணாவுக்கும் பிரபாஸுக்கும் இடையேயான இறுதி உச்ச போர்க்காட்சிகள், பெரும் வரவேற்பைப் பெறும். காட்சியின் பிரமாண்டத்தை மனதில் கொண்டு, ஒவ்வொரு நொடியும் திட்டமிட்டப்படி அமைய, பெரும் ஆயத்தங்களையும் உழைப்பையும் குழு செய்திருக்கிறது.

“ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் ஜான் கிரிஃபித் தலைமையில் சிறப்புக் குழு, துல்லியமாய் காட்சிகளை வரைவு செய்து செயல்படுத்தினர். கிரிஃபித், ‘தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’, X மென் ஃபிர்ஸ்ட் கிளாஸ் படங்களில் பணிபுரிந்தவர். மேலும், ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் லீ விட்டேகர் மற்றும் சாலமன், இறுதிப் போர் காட்சிகள் படப்பிடிப்பின் போது எங்களுடன் இருந்தனர். ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இதற்கெனவே சிறப்பாக போர் செட் அமைக்கப்பட்டது. முன்னணி நடிகர்கள் தவிர 3,000 துணை நடிகர்கள் சிப்பாய்களாய் நடித்தனர். இறுதிப் போர் காட்சிகள் எடுக்கவே 65 நாட்கள் ஆனது! இறுதி படப்பிடிப்பில் எல்லாம் தடையின்றி நடைபெற, அதற்கு முன்பு நாங்கள் அனைவரும் சேர்ந்து நான்கரை மாதங்கள் ஒத்திகைகள் பார்த்தோம். இந்த ஒத்திகைப் பயிற்சியிலும், பிரபாஸ், நான், சண்டைப் படக்குழு, இயக்குநர்கள் என ஒருவர் விடாமல் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தோம். பொதுவாக படங்களுக்கு சண்டைக் காட்சிகள் எடுப்பதற்கு முன் ஒரு நாள், அல்லது சில மணி நேரங்கள் மட்டுமே ஒத்திகைக்கென ஒதுக்குவோம். உச்ச உழைப்பைக் கொட்டி, மாபெரும் அளவிலான போர்க்காட்சிகளில், நிறைய வகை ஆயுதங்கள் தாங்கி முதன் முறையாக நான் நடித்திருக்கிறேன். படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட கயிறுகள் கட்டமைப்பு-போன்ற தொழில்நுட்பங்களைக் கையாள்வது பெரும் சவாலாக அமைந்தது,” என்கிறார் ராணா.

பாகுபலியில், SS ராஜமௌலியுடன் பணிபுரிந்த அனுபவத்தை ஒரு பெரும் கல்விப் பயணமாகக் கருதுகிறார் ராணா. "பாகுபலி, என் வாழ்வில் நான் பெற்ற ஆகச்சிறந்த அனுபவம். பாகுபலியில், இந்திய திரைத்துறையில் இதுவரை எவரும் முயற்சிக்காதவையை துணிந்து செய்ததன் மூலம், எனது அடுத்த பத்து வருட திரைப் பயணத்துக்கு என்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன் என நம்புகிறேன்", என்று பெருமைப் பட கூறுகிறார் ராணா.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்