முகப்புகோலிவுட்

I am Sorry ஐய்யப்பா ... நான் உள்ள வந்தா என்னபா..பட்டையை கிளப்பும் கானா பாடல்

  | January 06, 2019 22:25 IST
Vaanam Arts Festival

இந்தப் பாடலின் தேவை குறித்தும் அந்த பாடல் சொல்லும் அரசியல் குறித்தும் பாடலாசிரியர் அறிவிடம் பேசினோம்

இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா மூன்று நாட்களாக சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்வு கலைப் பண்பாட்டுச் சூழலில் மாற்றங்களை உருவாக்க பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட கலைகளை மேடை ஏற்றும் வேலையை தொடங்கி இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் கலைகளை அரங்கேற்றுவதை இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதனடிப்படையில் பழங்குடியின மக்கள் மலைவாழ் மக்கள் என அனைத்து மக்களின் கலைகளும் அந்த மேடையில் அரங்கேறியது.
குறிப்பாக சென்னையில் உழைக்கும் மக்களின் கலையாக விளங்கும் கானா பாடல்கள் அரங்கேற்றப்பட்டது.casteless collective இசைக்குழுவினரால் கானா பாடல்கள் மேடையில் பாடப்பட்டது. இதில் ஐயம் சாரி ஐயப்பா என்கிற பாடல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் தற்போது சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு நீண்டகாலமாக தடை இருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. பல ஆண்டு காலமாக பெண்களின் மாதவிடாய் பற்றிய தவறான புரிதலே பெண்கள் சபரிமலையில் செல்ல தடையாக இருந்து வந்தது நாம் அறிந்த ஒன்றுதான்.

 சபரிமலைக்கு பெண்கள் செல்ல  சட்டப் போராட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்றம் பெண்களை அனுமதிக்க தீர்ப்பு வழங்கிய பிறகும் இந்து அமைப்புகள் பெண்களை கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

இத்தகைய சூழலில்தான் ஐ எம் சாரி ஐயப்பா என்கிற பாடல் மிகவும் பிரபலமாகி வருகிறது. காரணம் இதில் பெண்களுக்கான உரிமை நிலைநாட்டப்படுகிறது. பெண்களை தீட்டு பொருளாக பார்க்கும் ஒரு தவறான கண்ணோட்டத்தை இந்த பாடல் உடைத்தெறிகிறது.

"ஐ அம் சாரி ஐயப்பா நான் உள்ள வந்தா என்னப்பா" என்று பாடல் தொடங்குகிறது
"தீட்டான துப்பட்டா..
உன் சடங்க காரி துப்பட்டா...

I am Sorry ஐய்யப்பா ...
நான் உள்ள வந்தா என்னபா...
பயம் காட்டி அடக்கி வைக்க..
பழைய காலம் இல்லபா.!!"

என பெண்கள் உரிமையை பறிக்கும் சடங்குகள் மீது அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறது இந்த பாடல். இந்த பாடலை casteless collective பாடலாசிரியர் அறிவு எழுதி பெண் கானா பாடகர் இசைவாணி பாடினார்.

இந்தப் பாடலின் தேவை குறித்தும் அந்த பாடல் சொல்லும் அரசியல் குறித்தும் பாடலாசிரியர் அறிவிடம் பேசினோம்

"Casteless collective நிகழ்விற்காக பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் தயாராகினோம். இந்த நிகழ்வில் பெரியார் சிந்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக பெருமையை போற்றும் ஒரு பாடலை எழுத வேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு ஆசை இருந்தது.

அந்தப் பாடலை இசைவாணிதான் பாடவேண்டும் என்று எழுதினேன். பெரியாரின் பார்வையில் பெண்ணியம் என்பது என்ன பெண்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் மூட நம்பிக்கைகளையும் பெண்களை தீட்டாக பார்க்கும் சமூக அவலத்தை பெரியார் எப்படி உடைக்கிறார் என்பதை தெரியப்படுத்தவே இந்த பாடலை எழுதினேன்.

அதற்கு "தாடிக்காரரின் பேத்தி என்று பெயரிட்டேன்" தற்போது சபரிமலையில் பெண்கள் செல்ல சட்டம் வழி விட்டாலும், இந்து மத சடங்குகளை ஊக்குவிக்கும் பாசிச வாதிகள் பெண்களை அனுமதிக்க மறுத்து போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்த பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. எனவே அதையும் அரசியல்படுத்த வேண்டும் என்று இந்த பாடலில் சேர்த்தேன்.
இசைவாணியின் குரலில் இந்த பாடல் கம்பீரமாக அரங்கேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு casteless collective நிகழ்விற்காக புதிதாக பத்து பாடல்களை தயார்படுத்தி வைத்திருந்தோம். அதில் மூன்று பாடல்களை மட்டுமே அரங்கில் பாட முடிந்தது. இன்னும் ஏழு பாடல்களை வேறு ஒரு நிகழ்வில் வெளியிட காத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது."என்று அவர் தெரிவித்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்