முகப்புகோலிவுட்

இசைஞானி இளையராஜாவும் பிரபல இயக்குநர்களும்...

  | July 28, 2017 18:41 IST
Celebrities

துனுக்குகள்

  • இளையராஜாவுடன் அதிகமான வெற்றி பாடல்கள் அளித்தவர் மணிவண்ணன்
  • இளையராஜா - மணிரத்னம் இணைந்த கடைசி திரைப்படம் 'தளபதி'
  • பாலுமகேந்திரா இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் இளையராஜாதான் இசை
தமிழ் சினிமா உலகில் இசை துறையின் துவக்க காலத்தில் முடுசூடா மன்னர்களாக திகழ்ந்தவர்கள் இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பாராமன், இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு, இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், இசையமைப்பாளர் கே.வி மகாதேவன், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி போன்றவர்கள். ஆனால் இவர்கள் காலத்தைவிட தமிழ் இசை துறைக்கு உலகளாவிய ஈர்ப்பு கிடைத்தது இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் காலத்தில்தான். அவர் காலம் என்பது தமிழ் திரையிசையின் பொற்காலம் என்று கூறலாம் குறிப்பாக 1980 மற்றும் 1990 ஆண்டுகளின் காலக்கட்ட துவக்கத்தில் வெளியான பாடல்களில் பெரும்பான்மையை இசைஞானி இளையராஜா இசையமைத்தவையே. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இசைஞானி இளையராஜாவுடன் பல இயக்குனர்கள் இணைந்து பணியாற்றி இருந்தாலும் அதில் அதிகம் பேசப்பட்ட ஐந்து இளைஞர்கள் பற்றி இங்கு பார்ப்போம்:-

இளையராஜா மற்றும் இயக்குநர் 'இமயம்' பாரதிராஜா : -
 
ilaiyaraaja bharathiraja

தமிழ் சினிமா உலகின் மறக்க முடியாத பாடல்களைத் தந்த இணை இசைஞானி இளையராஜா - இயக்குநர் பாரதிராஜா தான். 'பதினாறு வயதினிலே' திரைப்படத்தில் துவங்கி, 'கிழக்கே போகும் ரயில்', 'கல்லுக்குள் ஈரம்', 'நிறம் மாறாத பூக்கள்', 'புதிய வார்ப்புகள்', 'நிழல்கள், 'உலகநாயகனின்'சிகப்பு ரோஜாக்கள்', 'காதல் ஓவியம்', 'அலைகள் ஓய்வதில்லை', 'மண்வாசனை', 'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்' வரை தடையின்றி பயணித்த இவர்கள் பயணம், 'வேதம் புதிது' என்ற திரைப்படத்தில் சில மனக்கசப்புகள் காரணமாக தடைப்பட்டு போனது.

இளையராஜா மற்றும் திரைஓவியன் இயக்குநர் மகேந்திரன் :
 
ilaiyaraaja mahendran

தமிழ் சினிமா உலகில் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத முக்கிய இணை இளையராஜா மற்றும் இயக்குநர் மகேந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் திரை உலகில் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களான முள்ளும் மலரும்,ஜானி ஆகிய படங்களில் துவங்கி 'உதிரிப் பூக்கள்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'பூட்டாத பூட்டுகள்', 'நண்டு', 'மெட்டி', 'கை கொடுக்கும் கை', 'கண்ணுக்கு மை எழுது', 'அழகிய கண்ணே' என இவர்கள் இருவரும் பயணித்த அனைத்து படப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்!
இளையராஜா - இயக்குநர்களின் ஆசான் மணிவண்ணன் :
 
ilaiyaraaja manivannan

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு பிறகு இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து அதிகமான வெற்றி பாடல்கள் அளித்தவர் இயக்குநர் மணிவண்ணன் தான் என்பது இன்றைக்கு இருக்கும் பல இயக்குனர்களுக்கு கூட தெரியாது. 'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தில் துவங்கி 'முதல் வசந்தம்' திரைப்படம் வரை தொடர்ந்து 14 திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். இவர்கள் பயணத்திற்கு இடையில் 'இனி ஒரு சுதந்திரம்' திரைப்படத்திற்கு மட்டும் இசையமைப்பாளர் கங்கை அமரன் இசையமைத்தார். மீண்டும் 'தீர்த்தக்கரையினிலே' திரைப்படத்தில் துவங்கி 'ஜல்லிக் கட்டு', 'ராசா மகன்', 'தோழர் பாண்டியன்', 'ஆண்டான் அடிமை' ஆகிய திரைப்படங்களில் இளையராஜாவும் மணிவண்ணனும் இணைந்து பயணத்தை துவங்கினர்.

இளையராஜா - 'திரைச்சிற்பி' இயக்குநர் பாலு மகேந்திரா :
 
ilaiyaraaja balu mahendra

இயக்குநர் பாலுமகேந்திரா தமிழில் இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் இசைஞானி இளையராஜாதான் இசை. 'மூடுபனி' படத்தில் துவங்கி உலகநாயகன் கமல் ஹாஸனின் மூன்றாம் பிறை, 'நீங்கள் கேட்டவை', 'உன் கண்ணில் நீர் வழிந்தால்', 'ரெட்டை வால் குருவி', 'வீடு', 'வண்ண வண்ண பூக்கள்', 'மறுபடியும்', 'சதி லீலாவதி', 'ராமன் அப்துல்லா', 'ஜூலி கணபதி', 'அது ஒரு கனா காலம்' ஆகிய திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் கொடி தான் பறந்தது. பாலுமகேந்திரா இறப்பதற்கு முன் இறுதியாக இயக்கி நடித்த 'தலைமுறைகள்' என்ற படத்தில் தான் இறுதியாக இணைந்தனர்.

இளையராஜா - இயக்குநர் மணிரத்னம் :
 
ilaiyaraaja mani ratnam

இசைஞானி இளையராஜா இசையமைத்த அத்தனைப் பாடல்களும் மிகப்பெரிய அளவில் பெயர்பெற்றது இயக்குநர் மணிரத்னம் திரைப்படங்களில் தான். இவர்கள் இருவரும் முதலில் இணைந்த திரைப்படம் 'பல்லவி அனு பல்லவி' எனும் கன்னட படத்தில் தான். பாடல்கள் அனைத்தும் அங்கு சூப்பர் ஹிட் அடித்தது. அதற்க்கு அடுத்து 'உணரு' என்ற மலையாள திரைப்படத்தில் இருவரும் இணைந்தனர். தமிழில் இவர்கள் இணைந்த அனைத்து படமும் மிக பெரிய அளவில் பேசப்பட்டது இவர்கள் இருவரும் இணைந்த கடைசி திரைப்படம் 'தளபதி'.

இங்கே நாம் தந்திருப்பது தமிழ் திரைத்துறை இயக்குநர் பற்றி மட்டுமே. இன்னும் மலையாளம், தெலுகு, கன்னடம், ஹந்தி ஆகிய மொழிகளில் இசைஞானி இளையராஜாவுடன் பணியாற்றிய இயக்குநர்களையும் இணைத்தால், அது ரொம்பப் பெரிய லிஸ்டாக மாறிவிடும்.!!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்