விளம்பரம்
முகப்புகோலிவுட்

மக்களால் கொண்டாடப்படும் 'பிக் பாஸ்', தன் பார்வையாளர்களுக்கு மன அழுத்தத்தை பரிசளிக்கிறதா?

  | August 09, 2017 18:13 IST
Bigg Boss Tamil

துனுக்குகள்

  • பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே ஏன் இவ்வளவு அதீத வரவேற்பு?
  • 3 வாரங்களுக்கு மேல் ஒரு விஷயத்தை செய்து வந்தால் அது பழக்கமாகவே மாறிவிடும்
  • இந்த நிகழ்ச்சி சிறுவர்களை மனதளவில் பாதிக்கக்கூடும்
கடந்த 6 வாரங்களாக, தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் ஓயாத பேச்சென்றால் அது ஒரேயொரு விஷயத்தைப் பற்றித்தான்; அது, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பற்றியே! ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரும், ஆரம்பிக்கப்பட்ட முதல் வாரத்திலும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பல எதிர்மறைக் கருத்துக்கள் இருந்து வந்தது. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஸ்க்ரிப்டட் என்றும், சொல்லி வைத்து எடுக்கிறார்கள் என்றும், பிக் பாஸ் வீட்டிலுள்ள பங்கேற்பாளர்கள் எல்லோரும் நடிக்கிறார்கள் என்றும் பல கருத்துக்கள் நிலவிய வண்ணம் இருந்தது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சிக்கான பார்வையாளர் எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே இருந்தது. மூன்றாம் வாரத்தில் இருந்து, கிட்டத்தட்ட மூன்றரை கோடி மக்கள் இந்நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர். அதிகம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்காத பலரைக் கூட, இரவு 9 மணியானால் தொலைக்காட்சி முன் சரணடைய வைத்துள்ளது இந்நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் மாலை மற்றும் இரவு நேர காட்சிகளுக்கான கூட்டமும் கூட வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மட்டுமல்லாது திரைப்பட நடிகர் நடிகைகள் சிம்பு, த்ரிஷா, ஸ்ரீப்ரியா, காமெடியன் சதீஷ், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி பிரபலங்கள் பாத்திமா பாபு, எழுத்தாளர் சாரு நிவேதிதா உட்பட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக்கொண்டும் அதைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி ஓடுவது என்னமோ ஒரு மணி நேரமோ ஒன்றரை மணி நேரமோ தான், ஆனால் நிகழ்ச்சியைப் பற்றியும் நிகழ்ச்சியில் வரும் சம்பவங்கள் பற்றியும் வீட்டிலும், அலுவலகத்திலும், நண்பர்கள் இடையேயும் இந்நிகழ்ச்சியின் பார்வையாளர்களால் மணிக்கணக்கில் பேசப்படுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் என எந்த வலைதளத்தில் நுழைந்தாலும் 'பிக் பாஸ்' பற்றிய பதிவுகளும் மீம்களுமே நிரம்பி வழிகிறது. 'இந்த நிகழ்ச்சியை எல்லாம் நான் பார்க்கமாட்டேன்' என சொன்ன பலரும் கூட நாட்கள் செல்ல செல்ல, 'பிக் பாஸ்' ரசிகர்கள் ஆகிவிட்டனர். 'ஓவியாவை காப்பாற்றுகிறேன்', 'பரணியை காப்பாற்றுகிறேன்', 'வையாபுரியை காப்பாற்றுகிறேன்' என எல்லா தரப்பினரும் தினமும் மாங்கு மாங்கென்று 50 ஓட்டுக்கள் அளிக்கின்றனர். தான் ஓட்டு போட்டது பத்தாது என்று தன் கணவன் கணக்கு, தம்பி தங்கை கணக்கிற்கெல்லாம் சேர்த்து ஓட்டு போடும் கதைகளும் உண்டு. மக்களின் இந்த ஆர்வமே, அன்புமணி ராமதாஸ் போன்ற சில அரசியல்வாதிகளைக் கூட இந்நிகழ்ச்சியைப் பற்றி மேடையில் பேச வைத்துள்ளது. எப்பொழுது 9 மணியாகும் 'பிக் பாஸ்' பார்க்கலாம் என்று காத்திருக்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் வெறித்தனமான ரசிகர்கள் ஒருபுறம் என்றால், இன்றைய புரோமோவில் என்ன போடப்போகிறார்கள் என தினமும் மதியம் விளம்பரத்தில் வரும் கிளிப்பிங்குகளைக் காணக்கூட மக்களுள் பலர் காத்திருக்கிறார்கள் என்பது மிரள வைக்கும் உண்மை.
ஒரு சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு, பொதுமக்களிடையே ஏன் இவ்வளவு அதீத வரவேற்பு? ஒரு நாள் கூட தவறவிடாமல் பார்க்கும் அளவிற்கு சிறப்பான நிகழ்ச்சியா இது? ஏதோ தன் வீட்டு பிரச்சினையைப் பற்றி பேசுவதைப் போல், எந்நேரமும் இந்நிகழ்ச்சியை பற்றியே மக்கள் பேசுவது ஏன்? தன் வீட்டை சேர்ந்த ஒருவரைக் காப்பாற்றுவதைப் போல், நாள் தவறாமல் இவர்களை எல்லாம் வாக்களிக்க வைத்த இந்நிகழ்ச்சியின் வெற்றி ரகசியம் என்ன?

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்கள் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும், 1000 எபிசோடுகளுக்குப் பிறகு இப்படித்தான் முடியப் போகிறது என்று தெரிந்தாலும் கூட, அவற்றையே விழுந்து விழுந்து ரசிக்கும் நம் மக்கள் அடுத்து என்ன நடக்குமோ, யார் என்ன செய்ய போகிறார்களோ, இந்த வாரம் யார் யார் நாமினேட் ஆவார்கள், யார் எலிமினேட் ஆகப் போகிறார்கள் என பல சுவாரஸ்யங்கள் கொண்ட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை உட்சபட்ச ஆர்வத்தோடு ரசிப்பதில் பெரிய ஆச்சர்யமேதும் இல்லையே? நெடுந்தொடர்களையாவது பெரும்பாலும் பெண்களும் முதியவர்களும் மட்டுமே பார்ப்பர், ஆனால் வீட்டிலுள்ள அனைவருமே வயது வரம்பின்றி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை பார்க்கின்றனரே! பொதுவாக ஒரு பெரிய நட்சத்திர நடிகரின் திரைப்படம் வெளியானாலோ அல்லது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் நடந்தாலோ, அதைப் பற்றி அதிகபட்சம் 2 மணிநேரம் பேசும் மக்கள் அதையெல்லாம் விட இன்னும் அதிக நேரம் 'பிக் பாஸ்' பற்றி பேச முக்கிய காரணம் - இந்நிகழ்ச்சிக்கு இருக்கும் அதிகப்படியான பார்வையாளர்கள். அதிக பார்வையாளர்கள், அதனால் அதிக அரட்டை. 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சமயங்களில், பொதுவாக ஒரு வழக்கம் உண்டு. தெரிந்தவர்கள் யாரேனையும் எதிரில் பார்த்தால் கேட்கக்கூடிய கேள்விகளில் முக்கியமான ஒன்றாக 'கபாலி பார்த்துட்டீங்களா? சிவாஜி பார்த்துட்டீங்களா? படையப்பா பார்த்துட்டீங்களா?' என்கிற கேள்வியும் அடங்கும். அதைப் போல, ‘நேத்து எபிசோட் நீ பார்த்தியாப்பா?’ என 'பிக் பாஸ்' பற்றிய பேச்சே அதிகம் காணப்படும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது இந்நிகழ்ச்சி.

சராசரியாக ஒரு மனிதன் 3 வாரங்களுக்கு மேல் ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து வந்தாலே, அது பின்வரும் சில நாட்களுக்கு ஒரு பழக்கமாகவே மாறிவிடும். காலையில் சீக்கிரம் எழுவதோ, உணவு பழக்கமோ, உடற்பயிற்சி செய்வதோ அல்லது குடிப்பழக்கத்தை தவிர்ப்பதோ - எதுவாக இருந்தாலும் சரி. அந்த வகையில், 'பிக் பாஸ்' வீட்டிலுள்ள ஒவ்வொரு மனிதரையும் அவர்களது குணநலன்களையும் ரசிப்பதும் வெறுப்பதும் விமர்சிப்பதுமே இந்நிகழ்ச்சியின் பார்வையாளர்களுக்கு ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. 'பிக் பாஸ்' வீட்டில் ஒருவர் ஒரு நல்லதை செய்யும்பொழுது அவரை தம் குடும்பத்தில் ஒருவர் போல பாவிப்பதும், எவரேனும் வெறுக்கும் வகையில் ஏதாவது செய்கையில் அவரை வேண்டாதவர் போல பார்க்கும் மனோபாவமும் அவ்வாறே வளர்ந்தது என்றே சொல்லவேண்டும். தொலைக்காட்சி நெடுந்தொடர்களைப் பார்த்து அதில் வரும் வில்லன்களை நம் வீட்டு பெண்கள் திட்டுவதையும், தொடரின் நாயகன் அல்லது நாயகி படும் கஷ்டங்களை சொல்லி அவர்கள் வருத்தப்படுவதையும் பொதுவாக ஆண்கள் கிண்டல் செய்வதுண்டு. ஆனால், அதையே தான் இப்பொழுது ஆண்கள் 'பிக் பாஸ்' விஷயத்தில் செய்து வருகின்றனர். ஓவியாவைக் கொண்டாடுவது, ஜூலி-காயத்ரியைத் திட்டி தீர்ப்பது எல்லாம் அதிலேயே அடங்கும்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியை மக்கள் இந்தளவிற்கு கொண்டாடுவதற்கு முக்கியமான காரணம் - இந்நிகழ்ச்சி பொதுமக்களின் நம்பிக்கையை முழுதாக வென்றிருக்கிறது என்பதேயாகும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த புதிதில், யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்கிற வாக்கெடுப்பில் தொடங்கி மற்ற விஷயங்களிலும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஏதேனும் செய்துவிடுவார்களோ என்றே நினைத்தனர். உதாரணத்திற்கு, கஞ்சா கருப்பு மற்றும் ஆர்த்தி போன்றோர் வெளியேற்றல் பட்டியலில் இருந்தபொழுது 'விஜய் தொலைக்காட்சி அவர்களை வெளியே அனுப்பாது, அவர்கள் இருந்தால் தான் நிகழ்ச்சி சூடுபிடிக்கும்' என பெரும்பாலான மக்கள் நினைத்தனர். ஆனால், அப்படி ஏதும் செய்யாமல் இதுவரை ஓரளவு நேர்மையாக இருந்ததாலேயே மக்களுக்கு இந்நிகழ்ச்சி சரியாக நடத்தப்படுவதாக நம்பிக்கை ஏற்பட்டது. அதன் பிறகும், யார் வெளியே செல்ல வேண்டும் என மக்கள் முடிவு செய்தவர்களே வெளியேறியதால் அந்த நம்பிக்கையும் தொடர்ந்தது. அதே போல, இந்நிகழ்ச்சியைப் பற்றியும் 'பிக் பாஸ்' வீட்டில் நடக்கும் சம்பவங்கள் பற்றியும் மக்களிடையே எதிர்மறையான கருத்துக்கள் ஏற்படும்போதெல்லாம் ஒவ்வொரு வார இறுதியிலும் 'மக்களின் பிரதிநிதி' ஆக இருந்து நிகழ்ச்சியின் நடுநிலையைக் காப்பாற்றுகிறார் உலக நாயகன். அது 'கேல்ஷியம் குறைபாடு' பற்றியதாக இருந்தாலும் சரி, '5 செகண்ட் வீடியோ' பற்றியதாக இருந்தாலும் சரி, ஓவியா ஜூலியை கீழே தள்ள முயற்சித்தது பற்றியதாக இருந்தாலும் சரி, 'மருத்துவ முத்தம்' பற்றியதாக இருந்தாலும் சரி, ஒரு கண்டிப்பான ஆசிரியரைப் போல கமல்ஹாசன் எவரையும் மன்னிப்பதில்லை! நீண்ட நாட்களாக கேள்வி கேட்கப்படாமல் இருந்த பரணி தனிமைப்படுத்தப்பட்ட பிரச்சினையையும், காயத்ரியின் கர்வ குணத்தைப் பற்றியும் அவர் பேசும் கேட்ட வார்த்தைகள் பற்றியும் கூட கமல் இந்த வாரம் கேள்விக்கணைகளாக தொடுத்துவிட்டார்.

இந்நிகழ்ச்சியின் இந்த அதீத வரவேற்பிற்கு இன்னொரு காரணம் - இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் முக்கால்வாசி பேர், மனதளவில் இந்த நிகழ்ச்சியுடன் ரொம்பவே பின்னிப் பிணைந்துவிட்டனர் என்பதேயாகும். அதாவது ஜூலி சொன்ன பொய்களையும், ஓவியா மீது மட்டுமே தப்பிருந்ததாக ஆரவ் சொன்ன பொய்யையும் கமல் ஆதாரத்தோடு நிரூபிப்பதை தங்கள் வெற்றியாகவே நினைப்பது அல்லது ஓவியா தொடர்ந்து ஒதுக்கப்படுவதைப் பார்த்து அதை ஏதோ தங்கள் சொந்த பிரச்சினையைப் போல எடுத்துக்கொள்வது ஆகியவற்றை சொல்லலாம். ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், 'பிக் பாஸ்' வீட்டில் நடக்கும் சம்பவங்களை தங்கள் நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டே பார்க்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி ஸ்க்ரிப்டட் தானோ என சிலருக்கு எழுகிற சந்தேகம், உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் காயத்ரி ரகுராமோ, சினேகனோ, ஷக்தியோ, நமீதாவோ எந்த பிரபலமாக இருந்தாலும் தங்கள் பெயரை தாங்களே கெடுத்துக் கொள்ள விரும்பமாட்டார்கள். இந்த நிகழ்ச்சி ஸ்க்ரிப்டட் அல்ல, ஆனால் இந்த நிகழ்ச்சி எப்படி செல்ல வேண்டும் என்கிற ரீதியில் தான் ஒவ்வொரு விஷயமுமே இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஓவியாவும் ஆரவ்வும் சண்டை போட்டு பேசாமல் இருக்கும்பொழுது ரைஸாவை ஆரவ்வின் நிழல் ஆக்குவது முதல் மனநலம் குன்றியவராக நடிக்கும்பொழுது ஓவியாவை காதல் தோல்வி அடைந்தவராக நடிக்க சொல்வது என நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தும் நோக்கில், வேண்டுமென்றே இது போன்ற சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறார்கள்.

'பிக் பாஸ்' ஒரு மோசமான நிகழ்ச்சி இல்லையென்றாலும் கூட, இந்நிகழ்ச்சியால் பல குறைகளும் உண்டு. இந்நிகழ்ச்சி தன் ரசிகர்களுக்கு தரும் மன அழுத்தம், அதில் முக்கியமான ஒன்று. எவரையும் எளிதில் திட்டிடும் பழக்கம் இல்லாதவர்களைக் கூட, இந்நிகழ்ச்சியில் வரும் சிலரை துவேச வார்த்தைகளில் வசை பாட வைத்திருக்கிறது 'பிக் பாஸ்'. எந்நேரமும் இந்த நிகழ்ச்சியைப் பற்றியே நினைத்துக் கொண்டும், அதைப் பற்றியே பேசிக்கொண்டும் இருக்கும்படி பெரும்பான்மை மக்களை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு obsessive ஆக்கியதே உளவியல் ரீதியான ஆபத்து இல்லையா? இந்த இரண்டு பழக்கமுமே ஒரு தனி நபருடைய பாசிட்டிவிட்டியை பல மடங்கு குறைக்கும். 'பிக் பாஸ்' வீட்டினரின் பிரச்சினைகளை பெர்சனலாக எடுத்துக் கொண்டு யோசிப்பதே, ஒரு வித மனச்சோர்வைத் தரும். எல்லோருமே குற்றம் சொல்வதைப் போல, கடந்த 40 நாட்களாக நாட்டில் நடக்கும் மற்ற எல்லா பிரச்சினைகளையும் நம் மக்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள் என்பதும் நிதர்சனமான உண்மைதான். அதே போல, என்னதான் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட 'பிக் பாஸ்' வீட்டில் நடக்கும் சில சம்பவங்கள் சிறுவர்களை மனதளவில் பாதிக்கக்கூடும் என்பதனால் பெற்றோர் கண்காணிப்பில் பார்ப்பதே நல்லது.

பொதுமக்கள் 'பிக் பாஸ்' வீட்டிலுள்ள பிரபலங்களை கலாய்ப்பதும், திட்டுவதும் வேறு. ஆனால், இந்த நிகழ்ச்சியை நடத்தும் 'ஸ்டார் விஜய்' தொலைக்காட்சியே 'பிக் பாஸ்' ஹவுஸ்மேட்ஸை கிண்டல் செய்வது முறையல்ல. 'அது இது எது' நிகழ்ச்சியின் சீசன்-2 ப்ரோமோவில் 'ஜெய் ஜூலி' என சொல்லி மக்களுக்கு ஜூலி மீதிருக்கும் வெறுப்பை பிரதிபலித்துக் காட்டுவதும், விஜய் தொலைக்காட்சியின் வேறு சில நிகழ்ச்சிகளில் இது போல செய்வதும் அறிவற்ற செயல். அதே போல, காயத்ரி வையாபுரியை எச்சை என சொன்னதால் வையாபுரி தேம்பி தேம்பி அழுவதைப் போல காட்டுவது என தினசரி புரோமோக்களில் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறேன் என்கிற பெயரில் எதையாவது செய்யும் தொலைக்காட்சியின் நெறிமுறையற்ற செயல்களை பல முறை காண நேர்ந்தது. அதற்கெல்லாம் சேர்த்துதான் தொடர்ந்து இரண்டு நாட்களாக தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தார் கமல்! வேறு எந்த நடிகராக இருந்திருந்தாலும், தொலைக்காட்சி நிர்வாகம் சொன்னதை அப்படியே செய்யும் ஒரு கைப்பாவையாக மட்டுமே இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

இத்தனை குறைகளையும் தாண்டி, இந்த நிகழ்ச்சியில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் 'பிக் பாஸ்' வீட்டில் உள்ள மனிதர்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ளவும், நம்மை நாமே திருத்திக்கொள்ளவும் எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் காயத்ரி, ஷக்தி, ஜூலி, நமீதாவை எல்லாம் பார்த்து குறை சொல்லும் நாமும் குற்றமற்றவர்கள் இல்லையே! அந்த வகையில் தான் 'பிக் பாஸ்' ஒரு நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதைத் தாண்டி, தமிழில் வந்த சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகவும் ஆகிறது! இதையெல்லாம் தாண்டி 'மனநலம் குன்றியவர்களை கேலி செய்தது கண்டிக்கத்தக்கது', 'ஜூலி மீதான வெறுப்பை வெளியே காட்டாதீர்கள்' என தான் தோன்றும் ஒவ்வொரு எபிசோடிலும் சமூக பொறுப்போடு பல விஷயங்களைப் பகிர்ந்திடும் கமல்ஹாசனும் அவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமுமே ரொம்ப ஸ்பெஷல்!
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்