முகப்புகோலிவுட்

நான்கு சுவற்றிற்குள் கோலிவுட்டை அதிரவைக்கும் மாயாவிகள்!

  | May 19, 2017 23:05 IST
Celebrities

துனுக்குகள்

  • என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர் செல்வராகவன்
  • பிட்ஸா திரைப்படம் தான் எங்களது முதல் திரைப்படம்
  • இளம் இயக்குநர்கள் சவுண்ட் டிசைனிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்
ஒரு திரைப்பட உருவாக்கத்தில் பலரது உழைப்பு இருக்கின்றது என்று பலர் கூற கேட்டிருப்போம். ஆம், நாம் திரையில் பார்க்கும் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிக்கு பின்னும் பலரது உழைப்பு உள்ளது. அந்த இருண்ட அறையில் நாம் காணும் ஒவ்வொரு பிம்பங்களையும் நம்மை அறியாமலே உண்மை என்று அறியவைத்து, அந்த உணர்ச்சிகளை நம் மனதில் பதிவேற்ற பலரது உழைப்பு ஒரே திரைப்படத்தில் தேவைப்படுகின்றது. ஒரு திரைப்படம் நமக்கு மிகவும் பிடித்துபோவதற்கான காரணம் என்ன? வெறும் காட்சிகளால் மட்டும் தான் நாம் ஈர்க்கப்படுகின்றோமா? அல்லது ஒரு நடிகன், நடிகையின் நடிப்பால் மட்டும் ஈர்க்கப்படுகின்றோமா? இவையெல்லாம் தாண்டி நாம் பார்க்கும் காட்சிகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சப்த அமைப்புகள் (சவுண்ட் டிசைன்) தான் அந்த காட்சியின் ஆழ்ந்த உணர்வை நமக்குள் பதிவிடுகின்றது. திரைப்படத்தின் ஒரு காட்சியால் ஈர்க்கப்பட்டு சிரிப்பதற்கும், அழுவதற்கும் சப்தங்களின்(சவுண்ட் எஃபக்ட்ஸ்) பங்கு இன்றியமையாதது என்றால் மிகையாகாது. இவ்வாறு நடிகர், நடிகை, இயக்குநர் இவர்களையெல்லாம் தாண்டி ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னிருக்கும் ஒவ்வொரு தொழிநுட்ப கலைஞர்களின் பங்கினை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு தொகுப்பே இந்த இன்சைட் கோலிவுட்.

ஒரு திரைப்படத்தில் சப்தங்களின்(சவுண்ட்) பங்கு என்ன? சப்தங்களின் உருவாக்கம் எப்படி? என ஒரு திரைப்படத்தில் நாம் பார்க்கும் சப்தங்களின் ஆதி, அந்தங்களை பற்றி இந்த தொகுப்பின் இறுதியில் ஒரு ஆழ்ந்த தெளிவு ஏற்படும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறோம்.

வனமகன் திரைப்படத்தின் சவுண்ட் டிசைன் பணிகளில் மிகவும் பிசியாக இயங்கிக்கொண்டிருந்த அந்த ஸ்டுடியோவின் சவுண்ட் டிசைனர்களான சச்சின் சுதாகரன், ஹரிஹரன் இருவரையும் ஒரு இடைவேளை நேரத்தில் சந்தித்தோம். அவர்கள் தங்களுடைய பயணத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.
 
sync cinema

"தமிழ்ல டெபியூட் டைரக்டரா அறிமுகமான கார்த்திக் சுப்புராஜோட பிட்ஸா படத்துக்கு தான் முதன்முறையா எங்க ஸ்டுடியோல சவுண்ட் டிசைன் பண்ணோம் அப்போ ஸ்டார்ட் ஆனா எங்க ஜர்னி இப்போ தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி என பல மொழிகள்ல, பல முன்னணி இயக்குநர்களோட ஒர்க் பண்ற வர தொடர்ந்துகொண்டிருக்கு" என்று தற்பொழுது தமிழில் பல முன்னணி படங்களில் சவுண்ட் டிசைன் பணிகளை மேற்கொள்ளும் உற்சாகத்தில் பதிலளித்தார் சவுண்ட் டிசைனர் சச்சின் சுதாகரன்.
ஒரு திரைப்படத்தில் சவுண்ட் டிசைனின் முக்கியத்துவம் என்ன?

"ஒரு படத்துல சீன்ஸ் இல்லாம வெறும் கருப்பு ஸ்க்ரீன்ல வெறும் சவுண்ட மட்டும் வச்சு கூட ஒரு விஷயத்த விளக்கமுடியும். சீன்ல டயலாக்கே இல்லாம வெறும் சவுண்ட் மட்டுமே வச்சு கூட ஒரு விஷயத்த புரியவைக்கமுடியும். இப்படி நெறய இடங்களை சவுண்ட்ஸ மட்டுமே வச்சு கதை சொல்லமுடியும், சீனோட வேகத்த கூட அதிகரிக்க முடியும். ஆனா சவுண்ட் டிசைன் இல்லாம ஒரு சீன மூவ் பண்றது ரொம்ப கஷ்டம்" என்று சவுண்ட் டிசைனின் முக்கியத்துவத்தினை கூறி ஒரு சில திரைப்படங்களின் காட்சிகளையும் எடுத்துக்காட்டுடன் கூறுகின்றார் சவுண்ட் டிசைனர் ஹரிஹரன்.

ஒரு திரைப்படத்தில் உங்களுடைய ஒர்க் எப்ப ஸ்டார்ட் ஆகும்?

"ஒரு படத்தோட ஸ்டோரி டிஸ்கஷன்ல இருந்தே எங்க ஒர்க் ஸ்டார்ட் ஆயிரும். டைரக்டர் எங்க கிட்ட வந்து ஸ்டோரி சொன்னதும் நாங்க அந்த எண்டயர் ஸ்டோரிக்கும் சவுண்ட் ஸ்கிரிப்ட் ஒன்னு ரெடி பண்ணுவோம். அது மட்டும் இல்லாம அந்த ஸ்டோரில எமோஷன் இன்க்ரிஸ் பண்ண ஒரு சில  சவுண்ட் பாக்டேர்ஸ் சேர்க்க சொல்லுவோம் . எடுத்துக்காட்டுக்கு மழை பேஞ்சாலே அது ஒரு மாதிரியான எமோஷன வெளிப்படுத்தும் சோ இந்த மாதிரியான ஒரு சில ஐடியா எங்ககிட்ட இருந்தும் டைரக்டர்ஸ்க்கு போகும். ஒரு சிலர் அத ஏத்துப்பாங்க. ஒரு சிலர் அத ஏத்துக்கமாட்டாங்க. ஆனா பெரும்பாலான டைரக்டர்ஸ் எல்லா ஒர்க்கும் முடிச்சுட்டு லாஸ்ட்டா தான் எங்க கிட்ட வருவாங்க." என்று ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டே பதிலளித்தனர்.

நீங்க பணிபுரிந்த படங்களில் மிகவும் சவாலாக இருந்த விஷயங்கள் ஏதேனும் உண்டா?
 
sync cinema

"பிட்ஸா, மாயா, என்னை அறிந்தால், துருவங்கள் பதினாறு, மாநகரம் நெஞ்சம் மறப்பதில்லை இப்படி எல்லா படத்துலயும் ஒர்க் பண்ணது சேலஞ்சான விஷயம் தான். ஆனா எஸ்பெஷலி பிட்ஸா, ,மாயா ரெண்டு படங்களுமே ஹாரர் படங்கள்னால சவுண்ட் சைட் நிறைய ஒர்க் பண்ணோம். பிட்ஸா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், மாயா இயக்குநர் அஸ்வின் சரவணன் ரெண்டுபேருமே சவுண்ட் சைட் ரொம்ப ஆர்வம் உள்ளவங்க. எங்களோட ஒர்க்குக்கு ரொம்ப பிரைவசி குடுத்தாங்க. குறிப்ப பிட்ஸா மூவில அந்த வீட்டுக்குள்ள நல்ல எக்கோவோட ஒரு சுத்தியல் சவுண்ட் கேக்கும். நாங்க என்னென்னமோ செஞ்சு பாத்தும் அந்த சவுண்ட் எங்களுக்கு சரியா வரல. லாஸ்ட்டா முதல் மாடில கேஸ் சிலிண்டரை தூக்கிப்போட்டு கீழ இருந்து அந்த சவுண்ட ரெகார்ட் பண்ணோம்." என்று பணிபுரிந்ததில் சவாலான விஷயம் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

இயக்குநர் செல்வராகவனிடம் பணிபுரிந்த அனுபவம் எப்படி?

"டைரக்டர் செல்வராகவன் சார் சவுண்ட் டிசைன் சைடு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாரு. நெஞ்சம் மறப்பதில்லை ஹாரர் மூவி. அந்த படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை எந்த மாதிரியான சவுண்ட் வேணுங்கிறதுல அவர் ரொம்ப தெளிவாவே இருந்தாரு. குறிப்ப நெஞ்சம் மறப்பதில்லை படத்துல ஒரு ஃபாரஸ்ட் சீன்ல கேரக்டேர்ஸோட மூடுக்கு ஏத்த மாதிரி ஃபாரஸ்ட்டோட சவுண்டும் மாறும் அந்த ஒரு விஷயம் ரொம்பவே சேலஞ்ஜிங்கா இருந்தது" என்று இயக்குநர் செல்வராகவனுடன் பணிபுரிந்த அனுபவத்தினை இருவரும் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். மேலும் திரைப்படங்களில் வரும் சத்தங்களின் உருவாக்கம் குறித்து நாம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதத்தில் சச்சின் சூதகரனும், ஹரிஹரனும் நம்மை ஒரு ஸ்டுடியோவுக்கு அழைத்து சென்றனர். அங்கு பார்த்தால் பழைய சாமான்களை விலைக்கு வாங்கும் இடத்தை போல ஒரு தோற்றம். எங்கு பார்த்தாலும் பழைய பொருட்களாக கண்களில் தென்பட்டது.

"இவர் தான் ஃபோலே ஆர்ட்டிஸ்ட்(Foley Artist) புருசோத்தமன் படங்களில் வரும் சப்தங்களை இவர் தான் இந்த ஸ்டுடியோல உருவாக்குவாரு" என்று சிரித்தபடியே ஹரிஹரன் புருசோத்தமன் என்பவரை அறிமுகப்படுத்தினார்.
 
sync cinema

"என் பேரு புருசோத்தமன் நான் பல வருசமா ஃபோலே ஆர்ட்டிஸ்ட் ஒர்க்ல இருக்கேன். இங்க இருக்க பொருளால பாத்த உங்களுக்கு தேவையில்லாத பொருள் மாதிரி தெரியும் ஆனா இந்த பொருட்கள் தான் எங்களுக்கு ரொம்ப எக்ஸ்பென்சிவ்" என்று மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். அந்த சிறு அறையில் பறவை பறக்கும் சப்தம், துப்பாக்கியிலிருந்து வரும் சப்தம், படிக்கட்டில் ஏறும் சப்தம், தீயிலிருந்து வரும் சப்தம் என தன் கையிலேயே பல வித்தைகளை செய்துகாண்பித்தார் புருசோத்தமன்.

எதாவது ஒரு காட்சிக்கு உங்களால் போலே செய்து காண்பிக்க முடியுமா? என்றதும் துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் இறுதியில் வரும் ஆக்சிடென்ட் காட்சியை நமக்காக செய்து காண்பித்தார் புருசோத்தமன். அந்த காட்சி திரையில் எப்படி இறுதி வடிவம் பெறுகிறது என்பதை சச்சின் சுதாகரனும், ஹரிஹரனும் விளக்கினார்கள்.
 

"என்னதான் பெரிய படங்களுக்கு சவுண்ட் டிசைன் பண்ண ஆரம்பிச்சாலும் நாங்க தொடங்குனது குறும்படங்கள்ல இருந்து தான் அதனால இப்பவும் நிறைய குறும்படங்களுக்கு சவுண்ட் டிசைன் பண்ணிட்டு இருக்கோம்" என்று நம்மிடமிருந்து சச்சின் சுதாகரனும், ஹரிஹரனும் குட்பை சொல்லி விடைபெற்றனர்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்