விளம்பரம்
முகப்புகோலிவுட்

மிக்சர் தின்றது போதும், அரசியல்வாதிகளை வைத்து செய்யும் கமல், சூர்யா

  | February 21, 2017 17:02 IST
Celebrities On Tn Politics

துனுக்குகள்

  • முன்னணி நடிகர்கள் அரசியல் பேசி புதியதொரு தொடக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்
  • பதில்களை ஆராயும் போது தான் புரிதல் வரும்
  • அரசியலே பேசியிராத மக்களை அரசியல் பேசவும் தூண்டும் முக்கிய தூண்டுகோள்

"இங்கு அரசியல் பேசக்கூடாது" என எழுதி வைக்கப்பட்டிருக்கும் பலகைகளை தமிழ்நாட்டு தேநீர் கடைகளில் நீங்கள் பரவலாக பார்க்கலாம், ஆனால் தேநீர் கடைகளில் மட்டும் அல்ல, மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திலும் நாம் அரசியல் பேச மிகவும் தயங்கியே வந்திருக்கிறோம்.

அதனால் தான் கமல் ஹாசன், சூர்யா போன்ற முதல் மட்ட நடிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அரசியல் நிலைப்பாட்டையோ பொதுப்பிரச்சினை சார்ந்த கருத்தையோ முன்வைக்கும் போது அவர்கள் வலைதள முகவரி ஹேக் செய்ய பட்டிருக்கிறதா அல்லது அவர்கள் பெயரில் வேறு யாரேனும் பதிவிடுகிறார்களா என்று நாம் உடனடியாக சரி பார்க்கும் உளவியல் நமக்குள் வரக்காரணம்.

பட்டும் படாமல் சூர்யா "நாம் தான் மிக்சர் தின்கிறோம்" என கூற, கமல் ஹாசன் மற்றொரு புறம் ஒரு அரசியல் நோக்கர்களை விஞ்சும் அளவிற்கு ஆழமான முகத்திலடித்தார் போல தன் கருத்துக்களை கூறுகிறார்.
 


அரவிந்த் சுவாமி, சித்தார்த் என பல முன்னணி நடிகர்கள் இன்று அரசியல் பேசி புதியதொரு தொடக்கத்தை ஏற்படுத்துகிறார்கள், இது தமிழ் நாட்டில் மிக அபூர்வம். 
பிரபலம் ஆகிவிட்டாலே அனைத்து கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் கும்பிடு போட்டு தான் வாழவேண்டும் எனும் என்ற நிலை இருந்த சமூகத்தில் இது புதியதொரு எழுச்சி.
இது இன்று நேற்று என இல்லை, கடந்த அறைநூற்றாண்டு காலமாக தம்மை அரச பரம்பரையை சார்ந்தோர் போல, எதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதையே மறந்து, குடும்பம் குடும்பமாக தமிழ் நாட்டையே சூறையாடிய அரசியல்வாதிகள் மேல் இருக்கும் தணியாத, தணிக்கவும் முடியாத கோபம்.

ஏன் திரைப்பட பிரபலங்கள் கருத்து முக்கியத்துவம் அடைகிறது, ஏன் இதை இவ்வளவு பெரிதாக பேசுகிறோம் எனும் தயக்கம் எழலாம்.

எழுத்து, ஒளி, ஒளி, என அனைத்து வகை ஊடகங்களிலும் தனிப்பெரும் கவனத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் பிரபலங்கள் கருத்து கூற தயங்குவது மக்களின் பேச்சுரிமை சாரத்தையே கேள்விக்கு உள்ளாக்கக்கூடியது.

நடந்துகொண்டிருக்கும் பிரச்சினையின் வீரியத்தை அறியவும், அரசியலே பேசியிராத மக்களை அரசியல் பேசவும் தூண்டும் முக்கிய தூண்டுகோள் பிரபலங்களின் கருத்து.

அவர்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும், யாரை வேண்டுமானாலும் எதிர்க்கட்டும், ஆதரவும் வரும் எதிர்ப்பும் வரும்,

ஆனால் ஒரு ஆக்கப்பூர்வமான விவாதத்தை உருவாக்கும் காரணியாக பிரபலங்கள் இருப்பது அத்தியாவசியம் , அதுவே முற்போக்கான கலாச்சார மாறுதலுக்கு விதையாக இருக்கும்.

அரசியல்வாதிகள் தம்மை சுற்றி அமைத்து கொண்டிருக்கும் புனிதர் பிம்பங்களை உடைத்து எறியவும், அவர்கள் மக்களால் மக்களுக்காக உழைக்க தேர்ந்தெடுக்கப்பட்டோர் என்பதை உணர்த்தவும்,

மக்கள் கேள்விக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல கடமை பட்டோர் என்பதையும் உணர்த்த இத்தகைய விமர்சனங்களும் கருத்துக்களும் இன்றியமையாததாகின்றன, சாமானியனிடம் இருந்து வரும் விமர்சனத்தை விட சமூக பிரபலங்களின் விமர்சனங்கள் இங்கு தான் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தியாவே பார்த்து சிரிக்கும் நிலைக்கு தமிழகத்தை கொண்டு வந்த இத்தகைய அரசியல்வாதிகளைக்கண்டு நாம் பயப்படுவது வெட்கக்கேடு, நியாயமாக இவர்கள் மேல் நமக்கு தணியாத கோபம் தான் வரவேண்டும், பிரபலங்களின் கருத்தும் இந்த தணியா கோபத்தின் வெளிப்பாடு தான்.

வளர்ந்த மேலை நாடுகளில் தன் நாட்டின் ஜனாதிபதியையோ பிரதமரையோ கூட பொது மேடைகளில் எதிர்த்து குரல் கொடுப்பது மிகச்சாதரணமாக நடக்கும் ஒன்று, அப்படிப்பட்ட ஒரு கலாச்சாரத்தை நோக்கிய ஒரு தொடக்கமாகவே நாம் இதை பார்க்க வேண்டும்.

அரசியல் பேசுங்கள், சரியோ தவறோ, பேசினால் தான் அதற்கு பதில் வரும், அப்பதில்களை ஆராயும் போது தான் புரிதல் வரும், அப்புரிதல் தான் தெளிவான முடிவுகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும்.

அப்புரிதல் இருந்திருந்தால் இத்தனை வருடம் நாம் கொள்ளை கூட்டங்களின் நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது,

விவாதிப்போம் அரசியலை...

இது புதியதோர் தொடக்கம்....

     விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்