விளம்பரம்
முகப்புகோலிவுட்

2017 அரையாண்டின் கவனிக்கத்தக்க தமிழ் திரைப்படங்கள்

  | July 16, 2017 20:55 IST
Top Best Tamil Films 2017

துனுக்குகள்

  • இதுவரை வெளிவந்த படங்களில் நாம் பார்க்க தவறக்கூடாத திரைப்படங்கள்
  • எதிர்பார்ப்பில்லாமல் வெளிவந்து வெற்றியடைந்த பல படங்களில் தொகுப்பு
  • பெரும்பாலான இயக்குநர்கள் அறிமுக இயக்குநர்களே
2017ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், தமிழ் சினிமாவில் இது வரை கிட்டத்தட்ட 95 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் ஜூன் வரை வெளியான சிறந்த தமிழ் திரைப்படங்களைப் பற்றியதே இந்த பதிவு.

‘2017 அரையாண்டின் சிறந்த தமிழ் திரைப்படங்கள்’ என்கிற இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 13 திரைப்படங்களும் இந்த வருடத்தில் வெளியான படங்களின் வசூலை வைத்தோ, அவற்றின் வெற்றி-தோல்வியை வைத்தோ தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக, இது போன்ற படங்கள் வெளியானால் திரைத்துறைக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நல்லது என்கிற அடிப்படையிலான படங்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த எல்லா படங்களுமே ஒவ்வொரு வகையில் தனித்துவம் வாய்ந்தது. இவை அனைத்துமே, பத்திரிக்கை மற்றும் பொதுமக்களால் பெருவாரியாக பாராட்டப்பட்ட திரைப்படங்கள். இதில் 3 திரைப்படங்களைத் தவிர, மற்ற அனைத்துமே தங்கள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தைத் தந்த திரைப்படங்கள்.

இந்த 13 படங்களில், 8 படங்களை இயக்கியவர்கள் அறிமுக இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 10 படங்கள் 'த்ரில்லர்' ஜானரை சேர்ந்தது என்பதும், தொடர்ந்து 4, 5 ஆண்டுகளாக இன்னும் 'த்ரில்லர்' பட டிரெண்ட்டே தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக தொடர்கிறது என்பதும், பெரும்பாலான பெரிய பட்ஜெட் படங்கள் தோற்கின்றன - சின்ன பட்ஜெட் படங்களே அதிகமாக ஜெயிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
(பின்வரும் 13 திரைப்படங்களும், எந்தவித தர வரிசைப்படியும் பட்டியலிடப்படவில்லை. இப்படங்கள் வெளியான தேதியின் படி மட்டுமே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது)


அதே கண்கள்
 
adhe kangal

அறிமுக இயக்குனர் ரோஹின் வெங்கடேஷன் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு கொலை வழக்கு மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க நினைக்கும் (சமீபத்தில் கண் பார்வை கிடைத்த) ஒரு கண் பார்வையற்ற இளைஞனை சுற்றி நடக்கிறது. இப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரமான தீபாவின் பாத்திரப் படைப்பும், அந்த கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஷிவடா நாயருமே இப்படத்தின் மிகப்பெரிய பலம். தீபா என்கிற எதிர்மறை கதாபாத்திரத்தில் வேறு யாரையுமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, வெகு இயல்பாக நடித்து அசத்தியிருந்தார் ஷிவடா. இப்படத்தின் ஒரு முக்கியமான ட்விஸ்டை முதற்பாதியிலேயே கணித்துவிட முடிந்தாலும் கூட, படத்தின் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாதபடி அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை உதவியுடன் ஜெயித்துவிட்டார் இயக்குனர்.


குற்றம் 23
 
kuttram 23

‘செயற்கை கருவூட்டல்’ சம்பந்தப்பட்ட மோசடிகளையும், மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களின் மூலம் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் பேசுகிறது ‘குற்றம் 23’. எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த க்ரைம் திரில்லரை இயக்கியவர் ‘ஈரம்’ ‘வல்லினம்’ ‘ஆறாது சினம்’ திரைப்படங்களின் இயக்குனர் அறிவழகன்.

ஒரு தேவாலயத்தில் நடந்த கொலையைப் பற்றிய விசாரணையில் ஒரு சாதாரண க்ரைம் திரில்லராக தொடங்கும் இத்திரைப்படம், வரிசையாக தொடரும் மர்ம தற்கொலைகளின் பின்னனியில் உள்ள மிகப்பெரிய மோசடியைப் பின்தொடரும் மெடிக்கல் த்ரில்லர் ஆக முடிவடைகிறது. நோய்களும், மருத்துவமும், சிகிச்சையும் வியாபாரம் மட்டுமே என ஆகிவிட்ட இன்றைய நிலையில், இப்படியொரு திரைப்படம் மிகவும் அவசியமாகிறது. மருத்துவத் துறையில் உள்ள ஊழல்களையும் மோசடிகளையும் பற்றி மட்டும் பேசும் படமாக அல்லாமல், உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்தி புதுமணத் தம்பதிகளுக்கு கொடுக்கப்படும் உளவியல் ரீதியான அழுத்தம் குறித்தும், ஆதரவற்றிருக்கும் லட்சக்கணக்கான தாய் தந்தையற்ற சிறுவர்களைத் தத்தெடுப்பது பற்றியும் பேசும் படமாக இருந்தது ‘குற்றம் 23’.


மாநகரம்
 
maanagaram

ஒருவொருக்குருவர் எந்த சம்பந்தமும் இல்லாத 4 நபர்களையும், அவர்களை ஒன்றிணைக்கும் பிரச்சினையையும் பற்றிய த்ரில்லர் 'மாநகரம்'.

ஒரு புறம் தொட்டதற்கெல்லாம் வன்முறை, கெட்ட வார்த்தை, பொதுமக்களை அதட்டும் போலீஸ், எங்கு திரும்பினாலும் ஏமாற்றுக்காரர்கள் என சென்னைக்கு புதிதாக வந்த ஒரு இளைஞனின் பார்வையிலும், மறுபுறம் மற்றகதாபாத்திரங்களின் பார்வையில் சென்னையின் இயல்பை சொல்வதும் என அட்டகாசமாய் படத்தை ஆரம்பிக்கும் அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இறுதி வரை எந்த பிசிறும் இல்லால் திரைப்படத்தை கொண்டு செல்கிறார்.நல்ல நடிகர் தேர்வு, கச்சிதமான திரைக்கதை மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் எந்தவித தேவையற்ற கமர்ஷியல் சமரசங்களுக்கும் இடம் கொடுக்காத 'மாநகரம்' இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று!


கடுகு
 
kadugu

'தப்பு நடக்கும்பொழுது தடுக்காத நல்லவங்க, கெட்டவங்களை விட மோசமானவங்க' என்கிற கருவை மையமாக வைத்து 'கடுகு' திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.

சாதாரண கதை மற்றும் கணித்துவிடக்கூடிய காட்சிகளாக இருந்தாலும் கூட புதிய கதைக்களம், நாம் நிஜத்தில் கவனிக்கத் தவறிடும் இயல்பான கதாபாத்திரங்கள் என தனக்கே உரிய பாணியில் வெற்றிக்கொடி காட்டுகிறார் விஜய்மில்டன். 'ஒரு தனி மனுஷன் சின்சியரா இருக்கக்கூட, இந்த சிஸ்டம் அனுமதிக்கிறது இல்லேல்ல?', 'ஒரு கலை அழியும் போதே, அந்த கலைஞனும் செத்திடுறான்' என்பது போல சுருக்கென நெஞ்சில் தைக்கும் வசனங்களும் 'கடுகு'படத்தின் மிகப்பெரிய பலம்!


கவண்
 
kavan

பணத்திற்காகவும் டி.ஆர்.பி'க்காகவும் உண்மையை திரித்துக் கூறிடும், பொய்களைப் பரப்பிடும் ஊடகங்களின் மோசமான மறுமுகத்தைப் பற்றி பேசிய 'கவண்', இயக்குனர் கே.வி.ஆனந்தால் இயக்கப்பட்டது.

ஊடங்கங்களும் பத்திரிக்கையும் எந்தளவிற்கு மாறிவிட்டது, நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சினைகளை மக்களிடம் கொண்டுசெல்லாமல் போலியான செய்திகளால் அவர்கள் கவனத்தை திசை திருப்புவது, ஏற்கனவே பேசி வைத்துஎடுக்கப்படும் ரியாலிட்டி ஷோக்கள், விளம்பரத்திற்காக மட்டும் நடத்தப்படும் விருது விழாக்கள், காசு வாங்கிக்கொண்டு குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளையும் பிரபலங்களையும் பெருமையாக பேசுவது என்பதையெல்லாம் விரிவாககாட்டியிருந்தார் இயக்குனர். திரைக்கதையில் பல லாஜிக் ஓட்டைகளும் ஆங்காங்கே சில போரடிக்கும் காட்சிகளும் இருந்தாலும் கூட, ஊடகங்களின் தற்போதைய போக்கையும் இந்த துறையில் உள்ள அதிநவீனதொழில்நுட்பங்களை எல்லாம் எவ்வாறு தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதையும் பாமரனுக்கும் எளிதில் புரியும்படி துகிலுரித்துக் காட்டிய வகையில் கவனிக்கத்தக்க படமாக அமைந்தது 'கவண்'.


8 தோட்டாக்கள்
 
8 thottakkal

புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒரு காவல் அதிகாரியின் துப்பாக்கி, ஒரு குற்றவாளியின் கையில் தோட்டாக்களுடன் கிடைத்தால் என்னாகும் என்பதே '8 தோட்டாக்கள்' படத்தின் கதை.

துப்பாக்கியை தேடிடும், குற்றவாளியை துரத்திப் பிடித்திடும் வெறும் ஆக்ஷன் த்ரில்லராக மட்டுமல்லாமல் போலீஸ், குற்றவாளி என பலதரப்பட்ட மனிதர்களின் உணர்ச்சிகளைப் பேசும் உணர்வுப்பூர்வமான த்ரில்லராக இருந்ததேஇப்படத்தை தனித்துக் காட்டியது. சிறுவயதில் தான் செய்யாத ஒரு தப்புக்காக மிகப்பெரிய தண்டனையை அனுபவித்ததால் யார் வம்பிற்கும் போக விரும்பாத கதாநாயகன் சத்யா, சூழ்நிலையால் தப்பு செய்ய தூண்டப்பட்டசாமானியனான கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தியின் கூட்டாளிகளின் பின்னணியையும் பணத்தேவையையும் சொல்லும் குட்டி ஃப்ளாஷ்பேக், 'காயமும், வலியும் மனுஷனுக்கு முக்கியம்.. அது மட்டும்தான் ஒருத்தனை மாத்தும்' போன்றஇயல்பான வசனங்கள், படம் முடிந்த பின் இந்த படம் எடுக்க இன்ஸபிரேஷனாக அமைந்த படங்களின் பெயரை குறிப்பிட்ட நேர்மை என சின்ன சின்ன விஷயங்களில் கவனம் ஈர்த்தார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். ரொம்பவே சுமாராகநடித்திருந்த கதாநாயகன் (தயாரிப்பாளரின் மகன்), தேவையில்லாத பாடல், தேவைக்கதிகமாக ரொம்பவே மெதுவாக பயணித்த இரண்டாம் பாதியும் அதன் நீளமும் என சில குறைகள் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி பெரிதும்ஈர்த்தது '8 தோட்டாக்கள்'.


பவர் பாண்டி
 
pa paandi

வெகு சில படங்களே, படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே நம்மையும் கதைக்குள் ஒருவராய் இழுத்துக் கொண்டு படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு உறவாட செய்யும். அப்படியொரு அழகான திரைப்படம் 'பவர் பாண்டி'. எந்தகாட்சியிலும் நாம் ஒரு படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வைத் தராத அளவிற்கு பாத்திரப் படைப்பும் காட்சிகளும் பார்வையாளர்களின் மனதிற்கு மிக நெருக்கமாகவும், நட்சத்திரங்களின் நடிப்பு அவ்வளவுஇயல்பாகவும் அமைந்திருந்ததையும் பார்க்கையில், இயக்குனராக தனுஷ் அவர்களுக்கு இது முதல் படம் என்பதை நம்ப இயலவில்லை.

இரண்டாம் பாதியில் வரும் ராஜ்கிரண்-ரேவதி சம்பந்தப்பட்ட காட்சிகளும் அவர்களுக்கு இடையிலான அழகான உறவும், கத்தி மேல் நடப்பதை போன்றது. அதை ரொம்பவே முதிர்ச்சியுடன் கையாண்ட விதத்திலும், தந்தை-மகன்பாசம் மற்றும் பிளாஷ்பேக் உட்பட படத்தில் வரும் ஒவ்வொரு உணர்வுப்பூர்வமான காட்சியையும் நெஞ்சை வருடும் வகையில் இயக்கியதிலும் 'பவர் பாண்டி'யை நம் இதயத்தில் இடம் கொள்ள செய்தார் தனுஷ்!


பாகுபலி 2
 
baahubali 2

1500 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய சினிமா என்கிற சாதனை, வட இந்தியர்களையும் வெளிநாட்டினரையும் கூட ஒரு தென்னிந்திய சினிமாவை 3, 4 முறை திரையரங்கில் பார்க்கவைத்த பெருமை என்பதையெல்லாம்தாண்டி, படத்தின் டைட்டில் கார்டு முதல் இறுதி வரை ஒரு சினிமா ரசிகனை இவ்வளவு மகிழ்வித்த திரைப்படம் சமீபத்தில் வரவேயில்லை என்பதே உண்மை.

வாயைப் பிளந்து பார்க்க வைத்த பிரம்மாண்டம், 'பாட்ஷா' 'படையப்பா' 'கில்லி' போன்ற படங்களைப் போல காட்சிக்கு காட்சி விசில் கைத்தட்டல் என ஆர்ப்பரிக்க வைத்த ஹீரோயிசம், 'பாகுபலி' முதல் பாகத்தை விட பல மடங்குவலுவான திரைக்கதை என பெரும்பாலான சினிமா ரசிகர்களை அவர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு திருப்திபடுத்திய 'பாகுபலி 2'வின் பெருமையை இன்னும் பல தலைமுறைகள் பேசும்!


லென்ஸ்
 
lens

அதிவேகமாக மாறிக்கொண்டே இருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எந்தளவிற்கு அபாயகரமானது என்பதையும், தினந்தோறும் எங்கோ நடந்துகொண்டிருக்கும் சைபர் க்ரைம் குற்றங்களின் சங்கிலியில் எப்படி நாம்ஒவ்வொருவருமே பங்காற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் முகத்தில் அறைந்தாற்போல் காட்டுகிறது அறிமுக இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் 'லென்ஸ்' திரைப்படம்.

ஒன்றரை மணிநேரத்திற்கும் குறைவாக ஓடும் த்ரில்லரின் முதற்பாதியில் சோர்வை உண்டாக்கும் சில காட்சிகளும், அநியாயத்திற்கு மெதுவாக நகரும் திரைக்கதையும், பல இடங்களில் உதட்டசைவு பொருந்தாமல் டப்பிங் படம்பார்க்கும் உணர்வு ஏற்படுவதும் என குறைகள் இருந்தாலும், சொல்ல வந்த விஷயத்தை அழுத்தமாக பதிய வைத்ததில் 'லென்ஸ்' கவனிக்க செய்கிறது.


ஒரு கிடாயின் கருணை மனு
 
oru kidayin karunai manu

குலதெய்வ கோவிலுக்கு கிடா வெட்ட போகிற வழியில், ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுவிடுகிறது. அந்த பிரச்சினையை நடுவப்பட்டி கிராம மக்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்கிற கதையைக் கொண்ட 'ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு நிஜமாக இருக்கிறார்கள். அந்த கதாபாத்திரங்கள் தான் மொத்த படத்தையுமே தாங்கிப் பிடிக்கின்றன.

கிடாவெட்டு, குழந்தைக்கு மொட்டை அடித்தல், காது குத்துவது என வீட்டின் ஒவ்வொரு சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஊரையே அழைத்து குலதெய்வத்தை வணங்கி கறி சோறு ஆக்கி உண்ணும் நம் மக்களின் பழக்க வழக்கங்களை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா. இத்தனை எளிமையான ஒரு கிராமிய படத்தைப் பார்த்து எத்தனை நாளாயிற்று? ‘சுவத்துக்கு நாலுன்னு மாட்டினாலும், கதவுக்கு மூணு மிஞ்சும் போலயே’, ‘கிடாவுக்கு வேப்பிலை தின்னக் கொடுத்து, கறியைக் கசக்க வைக்கவா கெழவி இவ்வளவு கஷ்டப்பட்டுச்சு?’ என படம் முழுக்க ரொம்பவே யதார்த்தமான வசனங்கள் நிரம்பி வழிகிறது. இந்த படத்தின் மிகப்பெரும் பலமே, இந்த படத்தின் எளிமை தான். இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு, குறைகள், சில இடங்களில் சுவாரஸ்யமின்மை என எல்லாவற்றையும் தாண்டி ஒரு சிறந்த படமாக்குவது அதுவே!


ரங்கூன்
 
rangoon

அறிமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய 'ரங்கூன்' கள்ள சந்தை வணிகம் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் தங்க வியாபாரம் பற்றிய ஆக்ஷன் த்ரில்லர்.

தங்க கடத்தல், இந்தியாவில் கடத்தல் தங்கத்திற்கு என உள்ள மிகப்பெரிய கள்ளச்சந்தை, அந்நிய செலவாணி பரிவர்த்தனைகள், இதையெல்லாம் செய்யும் இடைத்தரகர்கள் பற்றியெல்லாம் தெளிவாக, ரொம்பவே சுவாரஸ்யமாக சொல்லும் திரைக்கதை மூலம் ரசிகர்களை ஈர்த்தது 'ரங்கூன்'. தனது 5 வருட திரையுலக பயணத்தில், நடிகர் கவுதம் கார்த்திக்கின் முதல் வெற்றி படமும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.


மரகத நாணயம்
 
maragatha naanayam

தமிழ் சினிமாவில் நல்ல பேண்டஸி காமெடி திரைப்படங்கள் வருவது ரொம்பவே அரிதான விஷயம். அந்த வகையில், அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கிய 'மரகத நாணயம்' ஒரு அட்டகாசமான பொழுதுபோக்கு திரைப்படம். நிக்கி கல்ராணியின் கதாபாத்திரம் உட்பட படம் முழுக்க சின்ன சின்னதாய் ஆச்சரியப்படுத்தும் ஐடியாக்களுடனான, இப்படியொரு ஜாலியான ஹாரர் காமெடி படத்தை சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்கவில்லை. இரண்டு மணி நேரம் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும்படியான காமெடி திருவிழா இந்த 'மரகத நாணயம்'!


இவன் தந்திரன்
 
ivan thanthiran

ஒரு சாதாரண பொழுதுபோக்கு திரைப்படத்தில், நம் சமுதாயத்தின் பிரதானமான பிரச்சினை ஒன்றைப் பற்றி பேச முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கண்ணன். சேவையாக இருக்க வேண்டிய கல்வித்துறை, இன்று மிக மோசமாக வணிகமயமாக்கப்பட்டுள்ளதையும், அதை சுற்றிய அரசியல் விளையாட்டுகளையும், இதனால் எல்.கே.ஜி சேர்க்கைக்கே லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் சாமானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது 'இவன் தந்திரன்'.

ஜி.எஸ்.டி வரியுடன் கூடுதலான தமிழக அரசின் வரிவிதிப்பை எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் செய்த ஸ்ட்ரைக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்ட 'இவன் தந்திரன்' படத்திற்கு, 4 நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட பொழுது மக்கள் பெரும் ஆதரவு தந்தது குறிப்பிடத்தக்க விஷயம். இயக்குனர் கண்ணனின் முதல் படமான 'ஜெயம் கொண்டான்' படத்திற்கு பிறகு, அவரது எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை. நல்ல படங்கள் எடுத்தால், மக்கள் கைவிட மாட்டார்கள் என்பதற்கு இப்படம் மற்றுமொரு உதாரணம் என்றும் சொல்லலாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்