முகப்புகோலிவுட்

"மகேஷ் பாபு வெறும் மாஸ் ஹீரோ மட்டுமல்ல!" #HBD_Mahesh

  | August 09, 2018 14:24 IST
Mahesh Babu

கூடிய சீக்கிரம் யாரும் எதிர்பாராத ஒரு விஷயம் வரும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்போம்

ஆந்திர சினிமாக்களை பார்க்கும், பேசும் ஆட்களை எப்போதும் கேலிக்குரியவர்களாக பார்க்கும் மனநிலை இருந்தது. `பெல்லிச்சூப்புலு', `காஸி', `அர்ஜுன் ரெட்டி', `ஆ', `மகாநடி', `ஈ நகரானிக்கி ஏமாயிந்தி' எனப் பல படங்கள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. சினிமாவை மாற்றுப் பாதைக்கு கொண்டு செல்லும் புது இயக்குநர்களின் பிரயத்தனங்கள் அவசியமானதுதான். அதே நேரத்தில் சினிமா என்பது எல்லாவற்றின் கலவைதானே. இங்கு புது அனுபவம் தரும் சினிமா தேவை. அதேவேளையில் மாஸ் படங்களுக்கான தேவையும் உண்டு. சிரஞ்சிவி துவங்கி நேற்று அறிமுகமான ஹீரோ கூட அங்கு மாஸ் பண்ணும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் மாஸ் ஹீரோ லிஸ்டில் இருக்கும் ஹீரோ `ப்ரின்ஸ்' மகேஷ் பாபு. பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது 25வது படமான `மஹர்ஷி'யின் டீசர் இன்று வெளியானது. அதே சமயம் மகேஷ் வெறும் மாஸ் ஹீரோ மட்டும்தானா என்கிற கேள்வியும் எனக்குண்டு. காரணம் தன் சினிமாவில் மாஸ் எதிர்பார்க்கும் பெருவாரியான கூட்டம் இருந்தாலும், புது முயற்சிகளை எடுக்க ஒருபோதும் தயங்கியது கிடையாது. மூன்று வருடம் படமே வராத போதும் அவரது ரசிகர்கள் துளியும் குறையவில்லை என, அவர் பற்றி பேச பல இருக்கிறது. வாருங்கள் பார்க்கலாம்...

முதலில் தந்தை கிருஷ்ணாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக, பின்பு ஹீரோவாக என சினிமாதான் மகேஷுக்கான களம் என திட்டமிடப்பட்டதுதான். ஆனால், அவரின் ஆரம்பகால படங்கள் அப்படி இப்படி ரகம்தான். "அந்தப் பட சமயத்தில் எல்லாம் என் அப்பாவுக்காக என்ன மக்கள் சப்போர்ட் பண்ணினாங்களே தவிர. அதெல்லாம் அவ்வளவு நல்ல படங்கள் கிடையாது" என அவரே ஒப்புக் கொள்வார். ஓரளவு திருப்தியான மகேஷ் பாபு படம் `முராரி'தான். `முராரி' படமெல்லாம் ஒரு வளர்ந்து வரும் ஹீரோ நடிக்கக் கூடியதா என்பது சந்தேகம். காரணம் படத்தின் கதைப்படி நாயகனின் குடும்பத்திற்கு, துர்கையால் சாபம் வாய்த்திருக்கும். அதன் படி 48 வருடத்திற்கு ஒரு முறை அந்தக் குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிசு இறந்து போகும். அப்படி 48 வருடம் கழிந்த பின் பிறக்கும் ஆண் வாரிசாக மகேஷ் பாபு நடித்திருப்பார். மாஸ் பட்டாசாக நடிக்காமல், சாமி, சாபம், குடும்பம்னு ஒரு கதையில் நடிக்க மகேஷ் எடுத்த முடிவு ஆச்சர்யமானது.

அடுத்து இரண்டு படங்கள் கழித்து குணசேகர் என்பவர் வந்து கதை சொல்லியிருக்கிறார். வில்லனிடமிருந்து ஹீரோயினைக் காப்பாற்றும் ஹீரோ. மேலோட்டமாகப் பார்த்தால் படத்தின் ஒன்லைன் இதுதான். ஆனால், கபடி, ஏரியா சச்சரவுகள், ஸ்ட்ரிக்ட் அப்பா என பக்கா ஸ்கெட்ச் உள்ளே இருந்தது. படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்தப் படம்தான் `ஒக்கடு' (தமிழில் கில்லி). மகேஷின் அந்தக் கணிப்பு மிஸ்ஸாகவில்லை. படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்.
அதன் பின் அடிவாங்கி அடிவாங்கி க்ளைமாக்ஸுக்கு முன் பழிவாங்கப் புறப்படும் ஹீரோவாக `நிஜம்' படத்தில் நடித்திருப்பார் மகேஷ். இதற்கு அடுத்து அவர் நடிக்க முடிவெடுத்த படம்தான் நாம் கவனிக்க வேண்டியது. எட்டு வயது சிறுவனாக நடிக்க வேண்டும், படத்திற்கான வரவேற்பு எப்படி என்பது தெரியாது. ஆனால் புதிதாக ஒன்று செய்கிறோம் என்கிற நம்பிக்கை மட்டும் இருந்தது. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடித்த `நானி' (தமிழில் `நியூ') படம்தான் அது. படம் பெரிய வெற்றி ஒன்றும் பெறவில்லைதான். ஆனால் இப்போது எடுக்கப்படும் புது முயற்சிகளுக்கு ஒரு வகையில் இந்தப் படமும் ஒரு விதைதான்.

'அர்ஜுன்' படத்திற்கு ஒரு ஸ்பெஷல் உண்டு படம் முழுக்க ஹீரோ மகேஷ் பாபுவின் பெயர் குறிப்பிடப்படாது. படம் பார்த்தவர்களுக்கு அது நன்றாக நினைவில் இருக்கும். படத்தின் க்ளைமாக்ஸில்தான் மகேஷ் பாபுவின் பெயர் சொல்லப்படும்.

அதடு, போக்கிரி இரண்டும் பயங்கரமான ஹிட். அடுத்த இரண்டு படங்களான `சைனிகுடு', `அதிதி' இரண்டும் கிட்டத்தட்ட ஃப்ளாப். ஆனால், உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற பதற்றம் மகேஷுக்கு இல்லை. அந்த நேரத்தில்தான் நிகழ்ந்த, அவரது பாட்டியின் மறைவு பர்சனலாக மகேஷை ரொம்பவே பாதித்தது. சிகரெட் பழக்கமுள்ள மகேஷ் பாட்டியின் மறைவுக்குப் பிறகு அதை நிறுத்திவிட்டார். மூன்று வருடம் மகேஷிடம் இருந்து எந்தப் படமும் இல்லை. ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்திருக்கக் கூடும். ஆனால்,

'அதடு' படம் இயக்கியவரும் நெருங்கிய நண்பருமான த்ரிவிக்ரமை அழைத்து தனக்கொரு படம் இயக்க சொல்கிறார். அதுதான் `கலீஜா'. "இது மகேஷ் பாபு படமாக இல்லை என்றால் ஓடுவதற்கு வாய்ப்பே இல்லை" என அந்தப் படம் வெளியான சமயத்தில் விமர்சனங்களிலேயே கூட இதை எழுதினார்கள். படமும் ஓரளவு வெற்றிப் படமாக அமைந்து மகேஷுக்கு கௌரவமான கம் பேக் கொடுத்தது.

கில்லி, போக்கிரி ஆகிய படங்களை விஜய் ரீமேக் செய்ததால். எப்போதும் மகேஷ் - விஜய் ஒப்பீடு இருந்து கொண்டே இருந்தது. உங்கள் படத்தை விஜய் ரீமேக் செய்கிறார். நீங்கள் அவர் படத்தை ரீமேக் செய்வீர்களா? என்ற போது, "எனக்கு ரீமேக் மேல நம்பிக்கை இல்ல. விஜயின் `துப்பாக்கி' பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சொல்லிக் கேட்டாங்க. ஆனா, அது ஹீரோ படம் கிடையாது, டைரக்டர் படம். ஆனால், விஜயின் `கத்தி' படத்தை ரீமேக் பண்ணனும்னு ஆசை இருந்தது." எனச் சொல்லியிருந்தார் மகேஷ்.

கிட்டத்தட்ட மணிரத்னத்தின் `பொன்னியின் செல்வன்' படத்தில் விஜய் - மகேஷ் பாபு இணைந்து நடிக்க வேண்டியது. எல்லாம் தயாராக இருந்தது, விஜய் - மகேஷ் பாபு சந்தித்துப் பேச வேண்டியது மட்டும்தான் பாக்கி. ஆனால், சில பல காரணங்களால் படம் நின்றுபோனது.

திரும்பத் திரும்ப மகேஷ் பாபுவை வெறும் மாஸ் ஹீரோவுக்குள் அடைக்க முடியாது என நான் சொல்ல இன்னொரு காரணம் `சீதம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு'. ஆக்ஷன் கிடையாது, பன்ச் வசனம் கிடையாது. ஆனால் பல மாஸ் ஹிட் கொடுத்த ஒரு ஸ்டார் அந்தப் படத்தில் நடிக்கிறார், அதுவும் இன்னொரு பெரிய ஹீரோ வெங்கடேஷுடன் இணைந்து. படம் பம்பர் ஹிட்டடித்தது.

அடுத்து மகேஷ் நடித்த படம் தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான முயற்சி. சுகுமார் இயக்கிய `நேநோக்கடினே'. இப்போதும் மகேஷ் முகத்தில் எமொஷனே வராது என பல கேலி கிண்டல்கள் இருக்கிறதுதான். அது உண்மையும் கூட. ஆனால், தனக்குக் கிடைத்த ஒரு பெரிய இடத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு வித்தியாசமான படங்களைக் கொடுக்க வேண்டும் என்கிற விதத்தில் மகேஷ் முக்கியமானவர். அதற்கு சாட்சி `நேநோக்கடினே'.

ஆனால் ரசிகர்கள் `நேநோக்கடினே' படத்தை பெரிதாக வரவேற்கவில்லை. கண்டிப்பாக அந்தப் படம் ஹிட்டாகி இருந்தால் இன்னும் புதுப்புது முயற்சிகள் மகேஷ் பாபுவிடம் இருந்து வந்திருக்கும். ஆனால், இப்போது அப்படியே வேற ரூட் எடுத்து சென்று கொண்டிருக்கிறார். கூடிய சீக்கிரம் யாரும் எதிர்பாராத ஒரு விஷயம் வரும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்