முகப்புகோலிவுட்

"இவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பது அவசியம்!" - `மனுஷங்கடா' பேசும் அரசியல்

  | October 25, 2018 12:31 IST
Manusangada

துனுக்குகள்

  • அம்ஷன் குமார் இயக்கியுள்ள படம் `மனுஷங்கடா'
  • தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகள் பற்றிய படம்
  • மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் பற்றி பேசியுள்ளது
சென்ற மாதம் வெளிவந்த `மேற்குத்தொடர்ச்சி மலை', இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்த `பரியேறும் பெருமாள்' என எளிய மனிதர்களின் வலியை, தாழ்த்தப்படுவதன் கொடுமையையும் பேசிய படங்கள். இதன் நல்ல தொடர்ச்சியாகத் தான் இந்த வாரம் வெளியாகியிருக்கும் `மனுஷங்கடா' படத்தையும் பார்க்கிறேன். அது ஒரு சினிமாவாக எப்படி வந்திருக்கிறது, குறைகளே இல்லையா, நாடகத்தனமாக இல்லையா, நடிப்பு, ஒளிப்பதிவு போன்றவற்றை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு அது பேச முற்படும் விஷயம் பற்றி மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே இதை விமர்சனமாக இல்லாமல், `மனுஷங்கடா' படத்தின் பேசு பொருள் பற்றி மட்டும் சொல்லத் தோன்றியது.

சென்னையில் வேலை பார்க்கும் கோலப்பனின் (ராஜீவ் ஆனந்தன்) தந்தை இறந்து போய்விட்டார் எனத் தகவல் வருகிறது. உடனடியாக சிதம்பரம் பக்கத்தில் இருக்கும் தன் சொந்த கிராமத்திற்குச் செல்கிறார் கோலப்பன். சென்று கொண்டிருக்கும் போதே `அப்பா போயிட்டார்னு கவலை ஒரு பக்கம், என்ன நடக்கப் போதோனு பயம் இன்னொரு பக்கம்' என போனில் சொல்லியபடி ஊர் வந்து சேர்கிறார். கோலப்பன் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தைச் சார்ந்தவர். எனவே, அவர்களின் பிணங்களை ஊரின் பொதுப் பாதை வழியே எடுத்துச் செல்லக் கூடாது என அங்கிருக்கும் ஆதிக்க சாதிகள் கட்டுப்பாடு வைத்திருக்கிறது. முட்கள் மண்டிக்கிடக்கும் தனிப்பாதை வழியே எடுத்துச் செல்ல சொல்லி எச்சரிக்கிறது ஊரில் இருக்கும் காவல்துறையும், அதிகார வர்க்கமும். நியாயம் வேண்டி நீதிமன்றத்தை நாடுகிறார் கோலப்பன். பிணத்தை பொது வழியில் எடுத்துச் வேண்டும். அதற்கு தகுந்த பாதுகாப்பை காவல்துறை செய்து கொடுக்க வேண்டும்" என நீதிமன்றமே சொன்ன பின்பும் கூட நிகழும், ஜாதி திமிரின் குரூரத்தனைத்தை காட்டுகிறது படம்.

மேலே சொன்னதை கதைச் சுருக்கமாக எடுத்துக் கொள்ளலாம். படமும் மிக சுருக்கமாக, தான் சொல்லவேண்டிய எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. மொத்தமே 95 நிமிடங்கள்தான் ஓடுகிறது. பாடல்கள் இல்லை, அச்சுப் பிச்சு காமெடிகள் இல்லை, வணிக ரீதியாக இந்த மாதிரி சினிமா தரும் அனுபவத்தை கெடுக்கும் எதுவும் இல்லாமல் படத்தைக் கொடுக்க முனைந்ததே மிகப்பெரிய சவால்தான். அந்த விதத்தில் ஒரு முக்கியமான சினிமா கொடுத்ததற்கு இயக்குநர் அம்ஷன் குமாருக்கு வாழ்த்துகள். இன்றும் பற்றி எரிந்து பரவிக் கொண்டிருக்கும் ஜாதிய ஒடுக்குமுறை, ஜாதி ரீதியாக இழைக்கப்படும் கொடூரம் போன்றவற்றை பேச நினைத்து, அதை பார்ப்பவர்கள் உணரும்படி படமாக்கிய விதத்திற்காகவே படத்தில் உள்ள பல குறைகளை மறந்து, முக்கியப் பதிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
"தாழ்த்தப்பட்டவங்களா பொறந்தது எங்கதப்பா? உங்கவீட்டு வயல நாங்கதான் உழறோம், உங்க வீட்டு பொணத்த நாங்கதான் பொதைக்கறோம், எரிக்கறோம், உங்க வீட்டுப் பீய நாங்கதான் அள்ளறோம். இதே தெரு வழியாத்தானே ஆடு மாடு எல்லாம் போகுது. நாங்க போகக்கூடாதா?" என கோலப்பன் கேட்கும் கேள்வி படத்தில் ரொம்ப முக்கியமானது.

உண்மை சம்பவத்தைத் கையில் எடுத்து, அதை முடிந்த வரை நிஜத்திற்கு நெருக்கமாக படமாக்கியிருந்தது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. எனவே இதில் உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள் சொல்லத்தான் தோன்றுகிறது. விமர்சனம் செய்ய தோன்றவில்லை. பெரிய பேனர், முகம் தெரிந்த நடிகர், பிரபலத்துவம் என எதுவும் இல்லாமல் வந்திருப்பதால், எவ்வளவு தூரம் மக்களைச் சென்று சேரும் என்கிற பதற்றமும் உண்டாகிறது. இது போன்ற சினிமாக்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, அதை அவர்கள் திருத்திக் கொள்ள அவகாசமே கிடையாது. ஏனெனில் மறுபடி இப்படி ஒரு சினிமா வரும்போது, அது யாராலும் கவனிக்கப்படாமலே கூட போய்விடும். அடுத்தடுத்த வாரங்கள் வெளியாகவிருக்கும் படங்களும், வாரா வாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கையும், தற்போது இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும் இடங்களுமே இதற்கு சாட்சி. பேசிய விஷயத்தில் உள்ள நேர்மை, அதை வீரியமாகவே கொடுத்த விதம் இரண்டும் முக்கியம்.

கொண்டாட்டத் தேவை இல்லை, ஆனால் செவி சாய்ப்பது அவசியம். படம் பேசும் விஷயம் இன்றும் நடந்து கொண்டிருக்கும் கொடூரம். அதனாலேயே `மனுஷங்கடா' பேசும் அரசியல் கவனம் பெற வேண்டியது, அவசியமானதும் கூட!
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்