முகப்புகோலிவுட்

ஆர்யா, த்ரிஷா, காஜல் அகர்வால் நடிக்கும் ரீமேக் படங்கள் இவைதான்

  | January 23, 2018 20:13 IST
Popular Tamil Remakes Of 2018

துனுக்குகள்

  • தமிழில் ப்ரண்ட்ஸ், காவலன் படங்களை இயக்கிய சித்திக் இயக்கும் படம் பாஸ்கர்
  • ஷாலினி பாண்டே 100% காதல் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்
  • உத்தம வில்லனுக்கு பிறகு ரமேஷ் அரவிந்த் இயக்கும் படம் பாரீஸ் பாரீஸ்
தமிழ் சினிமாவுக்கு ரீமேக் படங்கள் புதிது கிடையாது. ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு மொழிப் படங்கள் தமிழில் ரீமேக் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் முதல் ரீமேக் படமாக வெளியானது `தானா சேர்ந்த கூட்டம்'. இந்தி படமான ஸ்பெஷல் 26 படத்தைத் தழுவி உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த வாரம் மலையாளத்தில் திலேஷ் போத்தன் இயக்கி பெரும் வரவேற்பைப் பெற்ற `மகேஷின்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்கான `நிமிர்' படம் வெளியாகவிருக்கிறது. ஃபகத் பாசில் நடித்த கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்திருக்கிறார். இது போல இன்னும் இந்த வருடத்தில் வெளியாகவிருக்கும் படங்களில் எவை ரீமேக், என்ன படத்தின் ரீமேக், அதன் கதைச் சுருக்கம் ஆகியவை இதோ...


பாஸ்கர் ஒரு ராஸ்கல்
bhaskar oru rascal

2015ல் மலையாளத்தில் வெளியான படம் `பாஸ்கர் தி ராஸ்கல்'. `ப்ரண்ட்ஸ்', `காவலன்' போன்ற படங்களை இயக்கிய சித்திக் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். தமிழிலும் அவரே இயக்க, மம்மூட்டி நடித்த கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமியும், நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் அமலா பாலும் நடித்திருக்கிறார்கள். பாஸ்கர் (மம்மூட்டி) ஒரு தொழிலதிபர், அடிதடி ஆளும் கூட. அம்மா இல்லாத குறை தெரியாத அளவுக்கு மகனை பாசமாக வளர்க்கிறார். மம்மூட்டியின் கோபம், முரட்டு நடவடிக்கையால் அவருக்கு ராஸ்கல் என்ற பெயரும் உண்டு. பாஸ்கரின் மகன் ஆதியும், ஹீமாவின் (நயன்தாரா) மகள் ஷிவானியம் ஒரே பள்ளியில் படிப்பவர்கள். பாஸ்கரின் அடிதடி குணத்தால் அவரை ஹீரோவாகப் பார்க்கிறார் ஷிவானி. பள்ளியில் ஷிவானி மீது அடிதடி கம்ளைண்ட்கள் வருகிறது, இதனால் பாஸ்கர் - ஹீமா இடையில் சண்டை சச்சரவுகள். ஹீமா தன் மகளை அடிதடி பக்கம் ஏன் நெருங்க விடவில்லை, அவருக்கான முன் கதை என சிம்பிளான கதையில் நிறைய காமெடி கலந்து படமாக்கியிருப்பார் இயக்குனர் சித்திக்.

டெய்ல் பீஸ்:
படத்தில் அரவிந்த்சுவாமியின் மகனாக மாஸ்டர் ராகவனும், அமலா பால் மகளாக தெறி பேபி நைனிகாவும் நடிக்கிறார்கள்.


கஜினிகாந்த்
 
ghajinikanth

2015ல் மாருதி தசாரி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான படம் `பலே பலே மகாடிவோய்'. நானி, லாவண்யா திரிபாதி, முரளி ஷர்மா ஆகியோர் நடித்திருந்த இப்படம் பெரிய ஹிட்டானது. நானி நடித்த கதாபாத்திரத்தில் ஆர்யாவும், லாவண்யா திரிபாதி நடித்த கதாபாத்திரத்தில் ஷாயிஷாவும் நடிக்கிறார்கள். `ஹரஹர மஹாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். கதைப்படி நானிக்கு ஒரு பிரச்சனை. ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போது இன்னொரு வேலை வந்தால் செய்து கொண்டிருந்த வேலையை மறந்துவிட்டு புது வேலைக்குள் சென்றுவிடுவார். உதாரணமாக, அரை மணி நேரத்தில் பாஸ் பிடிக்கும் அவசரத்தில் சென்று கொண்டிருக்கிறார் என வைத்துக் கொள்வோம். வழியில் அவரின் நண்பர் ஒருவர் மறித்தால், "அப்பறம் என்ன மச்சான் பஸ் டிக்கெட் ரேட் தாறு மாறா இருக்கு, வீட்ல எல்லாம் சௌக்யமா?" என பஸ் பிடிக்க கிளம்பியதை மறந்துவிட்டு, அந்த நாள் ஞாபகம், நெஞ்சிலே வந்ததே எனப் பேச ஆரம்பித்துவிடுவார். இப்படியான பிரச்சனை உள்ள நானிக்கு லாவண்யாவைப் பார்த்ததும் காதல். தன் மறதி பிரச்சனையை மறைத்து காதல் செய்யும் நானி, எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை. தமிழில் படத்தின் பெயர் `கஜினிகாந்த்'

டெய்ல் பீஸ்:

`கஜினிகாந்த்' படத்துடன் சேர்த்து கௌதம் கார்த்திக் நடிக்கும் `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார் சந்தோஷ்.


100% காதல்
 
100 percent kaadhal

2011ல் தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் `100% லவ்'. ஆர்யா, ஆர்யா 2 என இரண்டு பிளாக்பஸ்டர் காதல் படங்களைக் கொடுத்த சுகுமார், நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் இயக்கிய இந்தப் படமும் செம ஹிட். இதில் நாக சைதன்யா கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ், தமன்னா கதாபாத்திரத்தில் `அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டேவும் நடிக்கிறார்கள். கதைப்படி பாலு (நாக சைதன்யா) பயங்கர படிப்ஸ். எப்போதும் காலேஜ் டாப்பர் பாலுதான். அவனது முறைப் பெண் மகாலட்சுமி (தமன்னா). படிப்பில் வீக்கான மக்காவுக்கு பாலு டியூஷன் சொல்லிக் கொடுக்கிறான். எதிர்பாராத விதமாக மகாலட்சுமி காலேஜ் டப்பார் ஆகிறார். இருவருக்கும் இங்கு தொடங்கும் ஈகோவால் அடிக்கடி பிரச்சனை வருகிறது. ஆனால், அதைத் தாண்டி தங்களுக்குள் இருக்கும் தங்களின் காதலை உணர்ந்து எப்படி இணைகிறார்கள் என்பதே கதை.

டெய்ல் பீஸ்:

தமிழில் ரீமேக் ஆகும் சுகுமாரின் இரண்டாவது படம் இது. இதற்கு முன் இவரது `ஆர்யா' படம் தமிழில் தனுஷ் நடிப்பில் `குட்டி'யாக ரீமேக் செய்யப்பட்டது


கர்ஜனை
 
garjanai

2015ல் இந்தியில் நவ்தீப் சிங் இயக்கத்தில் உருவான படம் `என்.ஹெச்.10'. 2007ல் நிஜமாக நடந்த ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் அனுஷ்கா ஷர்மா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காதலர்களான மீரா (அனுஷ்கா ஷர்மா) மற்றும் அர்ஜுன் (நீல் பூபாளம்), ஒரு ரோட் ட்ரிப் கிளம்புகிறார்கள். போகும் வழியில் இருக்கும் தாபா ஒன்றில் நிற்கும் போது, ஒரு கும்பல் காதல் ஜோடி ஒன்றை, கொலை வெறியில் தாக்குவதைப் பார்க்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற செல்லும் அனுஷ்கா - நீல் ஜோடி கொலைக்கான சாட்சியாகிறார்கள். இப்போது அந்த கும்பல் இவர்களைக் கொள்ளாத துரத்த, என்ன ஆகிறது என்பது மீதிக்கு கதை. இப்படத்தை சுந்தர் பாபு இயக்குகிறார்

டெய்ல் பீஸ்:

பிரபல நடிகை வடிவுக்கரசி இப்படத்தில் மிரட்டலான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.


பாரீஸ் பாரீஸ்
 
paris paris

2014ல் விகாஷ் பால் இயக்கத்தில் உருவான படம் `குயின்'. கங்கனா ரணாவத் அதி முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்தியில் கங்கனா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் காஜல் அகர்வால் நடிக்கிறார். தமிழில் இப்படத்தை ரமேஷ் அரவிந்த் `பாரீஸ் பாரீஸ்' என்கிற பெயரில் ரீமேக் செய்கிறார். கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட ராணிக்கு (கங்கனா ரணாவத்), விஜயுடன் (ராஜ்குமார் ராவ்) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. விடிந்தால் திருமணம், ஹனிமூனுக்குப் பாரீஸ் என ராணி சந்தோஷமாக இருக்கிறாள். திருமணத்துக்கு முந்தைய நாள், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என விஜய் சொல்ல திருமணம் நின்றுவிடுகிறது. விரக்தியில் இருக்கும் ராணி, ஹனிமூன் ட்ரிப்புக்காக போக இவ்த்தை பாரீஸுக்குத் தனியாக கிளம்புகிறாள். பாரீஸ் நகரம் ராணிக்குள் என்ன மாற்றத்தைக் கொடுக்கிறது, அங்கு சந்திக்கும் மனிதர்களை ராணி எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் படம்.

டெய்ல் பீஸ்:

ரமேஷ் அரவிந்த் இந்தப் படத்தை தமிழுடன் சேர்த்து கன்னடத்திலும் ரீமேக் செய்கிறார். கன்னட வெர்ஷனில் பருல் யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்