முகப்புகோலிவுட்

​​1980கள் முதல் இன்று வரை – தமிழ் ரசிகர்கள் மறக்காத சில காதல் தருணங்கள்!

  | February 13, 2018 20:16 IST
Valentine 2018

துனுக்குகள்

  • தமிழ் சினிமாவுக்கும் காதலுக்கும் அழுத்தமான பிணைப்பு உண்டு
  • எல்லா டைப் காதல் படங்களும் தமிழ் சினிமா கண்டிருக்கிறது
  • ரசிகர்களால் மறக்க முடியாத காதல் தருணங்களின் தொகுப்பு இதோ
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனையோ நல்ல நல்ல காதல் திரைப்படங்களும், மறக்கமுடியாத சில ரொமாண்டிக் காமெடி படங்களும் வெளிவந்திருக்கின்றன, மக்களால் கொண்டாடப்பட்டிருக்கின்றன. பணக்கார ஏழை காதல், மேல்சாதி கீழ்சாதி காதல், இந்து கிறிஸ்டியன் காதல், இந்து முஸ்லிம் காதல், ஒரு தலைக் காதல், முக்கோண காதல், தற்கொலையில் முடிந்த காதல், பார்க்காத காதல், இண்டர்நெட் காதல், பெற்றோரை ஏமாற்றி சம்மதிக்க வைக்கும் காதல், பெற்றோருக்காக காதலையே தியாகம் செய்த காதல், பள்ளியில் காதல், கல்லூரியில் காதல், அலுவலக காதல், கல்யாணத்திற்கு பின் காதல், தூரத்து காதல், கேன்சர் காதல், ‘லிவிங் டுகெதர்’ காதல் என எத்தனையோ காதல்களை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது.

காதலர் தின சிறப்பு பதிவான இந்த கட்டுரையில் நீங்கள் பார்க்கவிருப்பது, தமிழ் சினிமாவில் வந்த சில மறக்கமுடியாத கதாபாத்திரங்களின் அழகிய காதல் தருணங்களின் தொகுப்பினைத்தான்.

சீனு – விஜி (மூன்றாம் பிறை)
 
moondram pirai

சிகிச்சை மூலம் விஜிக்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பிவிடுகிறது. இப்பொழுது அவள் சீனு என ஒருவன் இருந்ததையோ, விபத்திற்கும் சிகிச்சைக்கும் நடுவில் நடந்த எந்த விஷயமும் தெரியாமல் பெற்றோருடன் சென்னைக்கு கிளம்ப ஆயத்தமாகிறாள். இத்தனை நாட்களாக விஜியை தன் வீட்டிலேயே வைத்து பாதுகாத்து, அவளை ஒரு குழந்தையைப் போல பாவித்து தன் மொத்த அன்பையும் அவள் மீது கொட்டி, அவளே தனது உலகம் என வாழ்ந்து வந்த சீனு, இந்த விஷயம் அறிந்து ஓடோடி வருகிறான். ரயில் நிலையம் நோக்கி வருகையில், ஒரு காரில் அடிபட்டு நொண்டி நொண்டி ஓடி செல்கிறான். விஜியை பார்த்ததும், ‘விஜி.. நான் சீனு வந்திருக்கேன் பார்’ என கூப்பிடுகிறான். அவளது நிஜப்பெயர் விஜி இல்லையென்பதாலும், சீனு என்றொருவனையே அவளுக்கு ஞாபகம் இல்லாததாலும், அவன் காரில் அடிபட்டு ரத்தமும் சகதியுமாய் அழுக்காக இருப்பதாலும் அவனை பைத்தியம் என எண்ணி ஒரு சாப்பாடு பொட்டலத்தை தூக்கி எறிகிறாள். அவளுக்கு எப்படியாவது தன்னை ஞாபகப்படுத்திவிட வேண்டுமென ‘ஆடுறா ராமா ஆடுறா’ பாடல் பாடுவது, தலையில் குடத்தை வைத்து ஆடுவது என விஜிக்கு பிடித்தவற்றையெல்லாம் செய்துகாட்டிக்கொண்டே ரயில் பின்னால் ஓடி செல்கையில், ஒரு கம்பியில் மோதி கீழே விழுகிறான். ‘விஜி, விஜி’ என சீனு அழுதுக்கொண்டே கூப்பிட்டுக்கொண்டே இருக்க, ரயில் அவனை கடந்து மறைகிறது. தன் உயிருக்கு இணையாக நேசித்த விஜி, தான் யாரென்றே அடையாளம் தெரியாமல் போகும் சோகத்தில் அவன் நொண்டி நொண்டி நடந்து வர ‘காதல் கொண்டேன், கனவினை வளர்த்தேன்... உனக்கே உயிரானேன், இந்நாளில் எனை நீ மறந்தாயே.. நீயில்லாமல் எது நிம்மதி, நீதான் என்றும் என் சன்னிதி..’ என இளையராஜாவின் இசையில் யேசுதாஸ் அவர்கள் பாடுகையில் கல் நெஞ்சத்தையும் கரைய வைத்திடும் இந்த காட்சி!
மனோகர் – திவ்யா (மௌனராகம்)
 
mouna ragam
 
பொது இடத்தில் நடந்த ஒரு அடிதடியில், மனோகரைப் பற்றி போலீசில் புகார் அளிக்கிறாள் திவ்யா. பின்னர், மனோகர் மேல் எந்த தவறும் இல்லையென தெரிந்து, தனது செயினை அடகுவைத்து தானே அவனை பெயிலிலும் எடுக்கிறாள். திவ்யா மேல் காதல் கொள்ளும் மனோகர், அதை அவளிடம் சொல்கிறான். முதலில் மறுக்கும் திவ்யா, கொஞ்சம் கொஞ்சமாக அவன் மீது காதல் வயப்படுகிறாள். செயினை திருப்பித் தருவதற்காக திவ்யாவின் தந்தைக்கு விபத்தில் அடிபட்டுவிட்டதாக பொய் சொல்லி வகுப்பைவிட்டு வெளியே அழைத்து வருவது, திவ்யாவை தன்னை சந்திக்க வைப்பதற்காக பைக்கை பஸ் முன் நிறுத்தி டிராஃபிக் ஜாம் ஆக்குவது, ரெஸ்டாரண்டில் திவ்யாவுடன் காபி குடித்துக்கொண்டிருக்கையில் அங்கு வரும் அவளது தந்தையை ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என அழைத்து கலாய்ப்பது, பிரின்சிபல் அறையிலிருந்து மைக் மூலமாக தன் காதலை சொல்வது, கடைசியில் தான் செய்யாத தப்பிற்காக போலீசால் தவறுதலாக சுடப்பட்டு பரிதாபமாக இறப்பது என ‘மனோகர்’ கதாபாத்திரமும் அந்த காதல் காட்சிகளும் என்றுமே தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு ரொமான்ஸ் டிராக்!! ‘மௌன ராகம்’ கார்த்திக் கதாபாத்திரம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை உருவாக்க வேண்டுமென முயற்சித்து, கடந்த 30 ஆண்டுகளில் எத்தனையோ இயக்குனர்களும் நடிகர்களும் தோற்று போயிருக்கிறார்கள் என்பது வரலாறு.

அப்பு (அபூர்வ சகோதரர்கள்)
 
aboorva sagotharargal

மனோவுடன் கல்யாணம் ஆகப்போகிறது என்று அவளுடன் சந்தோஷமாக செல்லும் அப்புவிற்கு, சார்-பதிவாளர் அலுவலகத்தில் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவள் தன்னை விரும்பவில்லை, சாட்சி கையெழுத்து போடத்தான் தன்னை அழைத்திருக்கிறாள் என தெரிந்துகொள்கிறான். ஏற்கனவே மனமுடைந்து போயிருக்கும் அப்புவை, மனோவின் நண்பர்களும் கல்யாணத்தை நடத்தி வைக்கும் பதிவாளரும் அப்புவின் உருவத்தை வைத்து கேலி செய்கிறார்கள். கல்யாணம் முடிந்து வந்ததும் ‘எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டியே, அப்பு’ என அப்புவின் முதலாளி அவனிடம் சொல்கிறார். எல்லாவற்றிற்கும் மேல், ‘என் புள்ள அப்பு மாதிரி குள்ளமா உடல் ஊனமா ஒரு பையனை மனோ கல்யாணம் பண்ணிட்டு வந்திருந்தா, இந்த கல்யாணத்தை நீங்க எதிர்க்குறதுல அர்த்தம் இருக்கு’ என தன் தாயே சொல்வதை கேட்டு மொத்தமாக உடைந்து போகிறான் அப்பு.

சார்-பதிவாளர் அலுவலகத்தில் மனோ தன்னை காதலிக்கவில்லை என்கிற அதிர்ச்சியிலிருந்து இன்னுமே மீளாத அப்புவின் விரலில் மாட்டியிருக்கும் மோதிரத்தை கழட்ட முயற்சிக்கும்பொழுதும், ‘ஊருக்கெல்லாம் நான் குள்ளன், கோமாளி... உனக்கு மட்டும்தானம்மா நான் மனுஷன்’ என தன் அம்மாவிடம் அழும்போதும் பிரமாதப்படுத்தும் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பும், இளையராஜா அவர்களின் பின்னணி இசையும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காதல் தோல்வி கதாபாத்திரமாக அப்புவை என்றும் நம் நினைவில் நிறுத்திவிட்டது!

சூர்யா (தளபதி)
 
thalapathy

தனக்கு வேறொருவரோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதை, சூர்யாவிடம் சொல்ல வருகிறாள் சுப்புலக்ஷ்மி. தனக்கு வேறு வழி தெரியவில்லை, தந்தை சொல்லை மீற முடியவில்லை என அவள் சொன்னதும், ஏதும் பேசாமல் 'போ, போய் கல்யாணம் பண்ணிக்கோ. அவன் தான் உனக்கு சரியான பொருத்தம். படிப்பு, நிறம், தகுதி எல்லாவற்றிலும் அவன்தான் சரியானவன்' என குத்திக்காட்டுவது போல் சொல்லி அவள் மனம் நோகும்படி பேசுகிறான் சூர்யா. அவளை ஏதும் பேச அனுமதிக்காமல், 'அழாதே' என சொல்லி வீட்டிற்கு போக சொல்கிறான்.

தன் போன்ற ரவுடியுடன் அவள் சந்தோஷமாக இருப்பாளா என தெரியாது, கலெக்டர் போன்ற ஒரு நல்ல வசதியான மாப்பிள்ளையை அவள் திருமணம் செய்வதே சரியாக இருக்கும் என எண்ணி தன் காதலை தியாகம் செய்ய முடிவெடுக்கிறான் சூர்யா. அவள் முன்னால் தன் உணர்வுகள் எதையும் காட்டிக்கொள்ளாமல், தனியாக நின்று அவளை எண்ணி உருகுகிறான் சூர்யா.

குணா – அபிராமி (குணா)
 
guna

மனவளர்ச்சி குன்றிய குணா, தன் கனவு காதலியான அபிராமி என நினைத்து ரோஹிணி எனும் பணக்கார வீட்டுப் பெண்ணை கடத்தி வந்து தன்னுடன் வைத்திருக்கிறான். அவளுக்கு ஒரு ஆபத்து என்றதும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றுகிறான். முதலில் ஒரு பைத்தியம், காட்டுமிராண்டி என எண்ணி குணாவை ஒதுக்கி வெறுக்கும் ரோஹிணி கொஞ்சம் கொஞ்சமாக அவனது அப்பாவித்தனத்தையும், கள்ளம் கபடமற்ற மனதையும், அபிராமி மீது அவன் வைத்திருக்கும் நிபந்தனையற்ற பேரன்பையும் பார்த்து அவன் மீது காதல் கொள்கிறாள்.

'என் மேல ஏன் இவ்ளோ அன்பு வெச்சிருக்க?' என ரோஹிணி கேட்க, 'ஏன்னா, நீ அபிராமி' என்கிறான் குணா. 'நான் அபிராமி இல்லை' என அவள் மறுத்தும், 'எனக்கு, நீ அபிராமி தான்' என உறுதியாக சொல்கிறான். தன் மீது அன்பு காட்ட தாயோ தந்தையோ இல்லாமல், தன்னை சுற்றியிருக்கும் சிலரும் தன்னிடம் இருக்கும் பணத்திற்காக மட்டுமே இருப்பதை அறிந்த ரோஹிணி 'யாருமே இல்லாத ரோஹிணியை விட, நீ நேசிக்கிற அபிராமி ரொம்ப அதிர்ஷ்டசாலி' என தன்னைத் தானே சொல்லிக்கொள்கிறாள். மேலும், குணாவைப் பார்த்து 'நான் நல்லவ இல்ல, குணா. நான், என் அப்பா, அம்மா, SK யாருமே நல்லவங்க இல்ல. இங்கே எல்லோருமே பைத்தியம். பணம் பைத்தியம், பொம்பள பைத்தியம். இந்த உலகமே பைத்தியம். ஆனா, நீ பைத்தியம் இல்ல குணா' என ரோஹிணி சொல்லும் இந்த காட்சியும், அதை தொடர்ந்து வரும் 'கண்மணி அன்போடு' பாடலும் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காதல் காட்சிகளில் ஒன்று!

எவனோ ஒருவன் பாடல் - கார்த்திக், ஷக்தி (அலைபாயுதே)
 
alaipayuthey

பெண் கேட்டு வந்த இடத்தில் தங்கள் பெற்றோருக்கிடையே நடந்த தகராறால், 'நமக்குள் சரிப்பட்டு வராது' என முடிவெடுத்து கார்த்திக்கை பிரிய நினைக்கிறாள் ஷக்தி. சில நாட்களாக இருவரும் பார்க்காமல் பேசாமல் இருக்கிறார்கள். ஒரு மருத்துவ முகாமிற்காக, ஷக்தி 3 வார பயணமாக வெளியூர் சென்றிருக்கிறாள் என அறிந்து மேலும் சோர்வுற்று போகிறான் கார்த்திக்; உடனே, அவளை பார்க்க வேண்டுமென கிளம்பி செல்கிறான். பிரிய வேண்டுமென முடிவெடுத்துவிட்டாலும், அவனது நினைப்பிலேயே வாடுகிறாள் ஷக்தி. ஷக்தியின் பிரிவு தந்த சோகத்தில், அவள் தன் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவள் என உணர்கிறான் கார்த்திக். பயணத்தினூடே கார்த்திக்கின் சோகத்தையும், ஷக்தியின் வெறுமையையும் 'கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன், கேட்பதை அவனோ அறியவில்லை..' 'எந்தன் சோகம் தீர்வதற்கு, இதுபோல் மருந்து பிறிதில்லையே.. அந்தக் குழலை போல் அழுவதற்கு, அத்தனை கண்கள் எனக்கில்லையே' போன்ற வரிகளில் அற்புதமாய் சொல்லியிருப்பார் 'கவிப்பேரரசு' வைரமுத்து. இந்த சந்திப்பிற்கு பின்னர்தான், ஷக்தியும் கார்த்திக்கும் உடனடியாக திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற முடிவையும் எடுக்கிறார்கள்.

மனோகர் - சௌம்யா (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
 
kandukondain kandukondain

தான் பரிந்துரைத்த படத் தலைப்பை மனோகர் அவனது படத்திற்கு வைக்காததால், எல்லோரையும் போல் அவனும் தன்னை ஒரு துரதிஷ்டசாலி என எண்ணிவிட்டதாக நினைத்து வருந்துகிறாள் சௌம்யா. தனது கனவை துரத்தும் வேகத்திலும் பரபரப்பிலும் தன்னை மறந்துவிட்டானோ என குழம்பிப் போய், வெளிநாடு செல்லவும் அரை மனதாக தயாராகிவிட்டாள். இதற்கிடையில், பல போராட்டங்களுக்குப் பிறகு தான் எடுத்த திரைப்படம் வெற்றியடைந்த சந்தோஷத்தில் சௌம்யாவை பார்க்க ஓடோடி வருகிறான் மனோகர். அவள் வெளிநாடு செல்ல ஆயத்தமாகிவிட்டதைப் பார்த்து 'நான் வரவே மாட்டேன்னு நினைச்சுட்ட இல்ல?' என கேட்கிறான். அவள் கதவை அடைத்து அழுகையில் 'நான் இவ்வளவு கஷ்டப்பட்டதும், நமக்காகத்தான்... நீ இல்லாம, இந்த வெற்றிக்கு அர்த்தமே இல்ல' என மன்றாடுகிறான். எவ்வளவு முயற்சித்தும் சமாதானம் ஆகாததால், விரக்தியில் கீழே வந்து சௌம்யமாவின் பால்கனியை பார்த்துக்கொண்டே சோகமாக நடக்கிறான். சௌம்யா அங்கே வந்து நின்ற நொடியில், இருவரும் ஒருவரையொருவர் பார்த்து அழுதுகொண்டே சிரிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் 'என்ன சொல்லப்போகிறாய்' பாடலின் பின்னணி இசை ஒலிக்கும் இந்த 'ஹேப்பி எண்டிங்' கிளைமாக்ஸை எளிதில் மறக்கமுடியுமா என்ன?

சிவா - ஜெனி (குஷி)
 
kushi

ஊடலும், ஈகோ சண்டைகளும் அன்றி காதல் என்ன சுவாரஸ்யம்? :) 'Men are from Mars, Women are from Venus' ஸ்டைலில் ஒரு ஆணும், பெண்ணும் எப்பொழுதுமே எதிரும் புதிருமாக இருப்பது, காதலை யார் முதலில் சொல்வது என்பதில் தொடங்கி எல்லாவற்றிலும் ஈகோ பார்க்கும் அவர்களது உறவை பற்றி சொல்லும் படங்களாக 'சச்சின்' 'திருடா திருடி' 'சிவா மனசுல சக்தி' என எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும், அவற்றிற்கெல்லாம் முன்மாதிரியாக பிள்ளையார் சுழி போட்டது விஜய், ஜோதிகா நடித்த 'குஷி' திரைப்படம். அந்த படத்தின் மிக முக்கியமான காட்சி, இடைவேளையின் பொழுது வரும் அந்த 'மொட்டை மாடி' காட்சி. 'சிவா, என் இடுப்பை பார்த்தியா?' என்ற கேள்வியில் தொடங்கி, 'உன் புத்தி சந்தேக புத்தி' என சிவா சொல்வதில் தொடர்ந்து, 'அன்னைக்கு கார் ஸ்டார்ட் ஆகலைன்னு பொய்தானே சொன்ன?' 'உன் அப்பாகிட்ட என்னை அறிமுகப்படுத்துனப்போ ஏன் தடுமாறுன?' என்றெல்லாம் ஜெனி கேட்க, பதிலுக்கு 'ஏன் எனக்கு ash tray கொடுத்த?' 'கீதா யாருன்னு தெரிஞ்சுக்க ஏன் அவ்ளோ ஆர்வம்' என சிவா பதில் கேள்விகள் கேட்பது தொடர்கிறது. இருவருக்குள்ளுமே காதல் இருந்தும், அது இருவருக்குமே நன்றாகவே தெரிந்தும் கூட, யார் அதை முதலில் ஒப்புக்கொள்வது என்கிற ஈகோ சண்டையின் உச்சக்கட்டமான இந்த காட்சி இத்தனை ஆண்டுகளில் என்றுமே போரடித்ததில்லை.

மௌனம் பேசியதே 
 
mounam pesiyadhe

தன்னை காதலிப்பதாக நினைத்து சந்தியாவின் பின் பல நாள் அலைந்து, இத்தனை வருடங்களாக தன்னையே சுற்றி வரும் தன் கல்லூரி தோழியை கவனிக்க மறந்ததை கெளதம் உணரும் 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் கிளைமாக்ஸ், பலருக்கு இதயத்திற்கு நெருக்கமான ஒரு காட்சி!

அன்புச்செல்வன் - மாயா (காக்க காக்க)
 
kaka kaka

'மாயா, உனக்கு என்ன வேணும்?' என பேச ஆரம்பிக்கிறான் அன்புச்செல்வன். தான் எந்தளவிற்கு அன்புச்செல்வனை விரும்புகிறாள் என்பதையும் 'இன்னைக்கு மாதிரியே, என்னைக்கும் நான் உங்க மேல பைத்தியமா இருக்கணும்' என தனது ஆசைகளையும் மாயா சொல்லும் இந்த காட்சியில், தன்னால் முடிந்தவரை பல காரணங்களை சொல்லி 'வேண்டாம்' என மறுக்க முயற்சிக்கிறான் அன்புச்செல்வன். ஒரு கட்டத்திற்கு மேல், தன் உணர்வுகளை மறைக்க முடியாமல் / விரும்பாமல் 'சரி ஓகே, கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, மாயா. என்னைக்கு உன்னை முதன்முதல்ல பார்த்தேனோ, அன்னையில இருந்தே... நான் காமிச்சுக்கல, இதுக்கு மேலயும் மறைக்க முடியாது' என அன்புச்செல்வன் சொல்லும் இந்த காட்சி, இப்படத்திலேயே மிகவும் அழகானதொரு காட்சி. சினிமாவில் பெரிதும் ரசிக்கப்பட்ட அன்புச்செல்வன் - மாயா ஜோடி, நிஜவாழ்விலும் இணைந்திட விதையிட்ட படம் இது.
அனிதா - கதிர் (7ஜி ரெயின்போ காலனி) தன்னை காதலிக்கும் கதிர் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைக்கும் அனிதா, அவனை நன்றாக படிக்க சொல்கிறாள். ஆனால் எவ்வளவு முயன்றும் அவனுக்கு படிப்பு ஏறாததால், அவனுக்கு இருக்கும் ஒரு திறமையை அறிந்து ஒரு மிகப்பெரிய மோட்டார் கம்பெனிக்கு அவனை அழைத்து செல்கிறாள். அங்கே அவனை ஒரு பைக்கின் பாகங்களை பிரித்து பின்னர் பொருத்த சொல்கிறார்கள். எதுவும் செய்ய தெரியாமல், எப்படி தொடங்குவதென தடுமாறி நிற்கும் அவனை 'முயற்சித்து பார்' என ஊக்கப்படுத்துகிறாள் அனிதா. அவன் 'முடியாது' என சொன்னதும், பளார் என அறைகிறாள். ஆர்வமே இன்றி நிற்கும் அவனை பார்த்து, 'ஐ லவ் யூ, கதிர்' என அத்தனை நாட்களாய் சொல்லாமல் இருந்த தன் காதலை அவனிடம் சொல்கிறாள். 'நான் உனக்கு வேண்டாமா? என்னை நீ எப்படி பார்த்துப்ப? உனக்கு இந்த வேலை அவசியம்' என அவனை தெளிவுபடுத்தி அந்த தேர்வில் ஜெயிக்க வைக்கிறாள். அதற்கடுத்த காட்சியில், வேலை கிடைத்துவிட்டது என்கிற சந்தோஷத்தில் தந்தையை உதாசீனப்படுத்தும் அவனது போக்கை திட்டி அவனை மீண்டும் நல்வழிப்படுத்தும் அனிதா, கதிருக்கு மட்டுமல்ல நமக்கும் தேவதையாகவே தெரிகிறாள்!

சச்சின் - ஷாலினி (சச்சின்)
 
sachin

'30 நாள்ல உன்னை லவ் பண்ண வெச்சு காட்டுறேன்' என சவால்விட்டு, ஷாலினியிடம் சச்சின் தோற்கும் காட்சியில் விஜயின் நடிப்பு, அவரை வெறுப்பவர்களைக் கூட அவர் மேல் காதல் கொள்ள செய்யும். படம் முழுக்க எப்பொழுதும் ஜாலியாக இருக்கும் சச்சின் 'இப்படியொரு நாள் வந்திடக்கூடாதுன்னு, நான் பயந்த நாள்... கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்ஸ், நம்ம ஷாலினிங்கிற திமிரு.. பொய்யா கூட சிரிக்க முடியல, ஷாலினி..’என உணர்ச்சிகரமாக பேசும் காட்சியும், 'இத்தனை நாள்ல ஒரு நாள், ஒரு நிமிஷம், ஒரு செகண்ட்.. உனக்கு என் மேல லவ் வரலையா, ஷாலினி?' என சோகமாக கேட்கும் காட்சியும் இப்படத்தின் மிகச்சிறந்த காட்சிகள் என சொல்லலாம்.

முத்தழகு - பருத்திவீரன் 
 
paruthiveeran

சின்ன வயதிலிருந்தே தன்னையே சுற்றிவரும் முத்தழகின் அன்பை உதாசீனப்படுத்தும் பருத்திவீரன், ஒரு நாள் தனது சித்தப்பாவை திட்டிவிட்டதால் அவளை அறைந்துவிடுகிறான். அதை சற்றும் எதிர்பாராத முத்தழகு அத்தனை வருடங்களாக தன் மனதில் பேசாமல் வைத்திருந்தவற்றை எல்லாம் பேசி தீர்க்கிறாள். ‘எதுக்குடி அவனை போய் பார்க்குறன்னு அந்தாளும் என்னை அடிக்குறான்... ஏன்டி வர்றன்னு நீயும் என்னை அடிக்குற.. நான் என்னதான்டா செய்யட்டும்? சொல்லு.. செத்துப் போய்ரட்டுமா? நான் உன்னை இம்சையாடா பண்றேன்? நானும் இல்லைன்னா, நீ அனாதை ஆகிப் போய்டுவ’ என சொல்லிவிட்டு, ‘எனக்கு நீதான்டா வேணும், எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா’ என அழுது அவன் தோளில் சாய்கிறாள். முத்தழகு எந்தளவிற்கு வீரனை கண்மூடித்தனமாய் நேசிக்கிறாள் என காட்டும் இந்த காட்சியிலும் ஒட்டுமொத்த படத்திலும் முத்தழகாகவே வாழ்ந்திருந்த பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்ததில் ஆச்சர்யமில்லை.

பிரபாகர் – ஆனந்தி (கற்றது தமிழ்)
 
kattradhu thamizh

கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்டவர்களை கொலை செய்துவிட்டு, மனநிலை பிறழ்ந்த நிலையில் இருக்கும் பிரபாகர் ஒரு விபாச்சார விடுதியில் ஒரு பெண் அலறும் சத்தத்தைக் கேட்டு உள்ளே செல்கிறான். அங்கே தனது பள்ளித் தோழியும், காதலியுமான ஆனந்தியை பார்க்கிறான். தன் வாழ்க்கையின் பொக்கிஷமாக நினைத்தவளை விபச்சாரியாக பார்த்தும் யோசிக்காமல் ‘நீயும் என் கூடவா’ என அவளை அழைக்க, ‘நிஜமாதான் சொல்றியா?’ என கேட்கிறாள். ‘நிஜமாதான் சொல்றியான்னு அவ கேட்டப்போவே, எனக்குள்ள இருந்த அந்த பழைய குட்டி பிரபாகர்... மரணமும், கொலையும் அறியாத அந்த குட்டி பிரபாகர் திரும்பவும் வந்துட்டான்னு எனக்கு புரிஞ்சது’ என்கிறான் பிரபா.

பேருந்தில் செல்கையில் ‘3 வருஷமா என்னென்னமோ நடந்திடுச்சு, ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.. அதெல்லாம் உன்கிட்ட சொல்லணும்’ என ஆனந்தி சொல்ல, ‘இதோ பாரேன், எனக்கு தெரிஞ்ச ஆனந்தி வாழ்க்கையில எதுவுமே நடக்கல... நடக்காததைப் பத்தி எதுக்கு கேட்கணும், பேசணும்’ என அமைதியாக சொல்கிறான் பிரபா. பேருந்தில் அவர்கள் இருவரின் பின்னால் அமர்ந்திருக்கும் ஒருவன் பிரபாவிடம் ‘போன வாரம்தான் இவகிட்ட போனேன், 3000 ரூபா. வெளியே கூட்டிட்டு போனா, எவ்வளவு?’ என கேட்கிறான். ‘இப்போல்லாம் அப்படி இல்ல, அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு’ என சொல்கிறான். ‘எப்போ’ என அவன் கேட்கையில், ‘ஏழு வயசுலயே எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு’ என கூறி முறைத்து செல்கிறான் பிரபா.

மாரி (பூ)
 
poo

தனது மாமன் தங்கராசை பைத்தியக்காரத்தனமாக நேசிக்கும் மாரி,
அவன் தனக்கு இல்லை என தெரிந்த பிறகும் அவனை அதே அளவு நேசிக்கிறாள். எந்த குற்ற உணர்வுமில்லாமல் தங்கராசு சந்தோஷமாக திருமணம் செய்துகொள்ள வேண்டுமென, இவளும் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். ஒரு நாள், திருவிழாவின் பொழுது தங்கராசு வீட்டுக்கு செல்லும் அவள், தங்கராசின் மனைவியிடம் ரொம்ப பிரியமாக பேசுகிறாள். அவள் கையைப் பிடித்து ஆசை ஆசையாக ‘‘மாசமாயிருக்கிகளா’’ என்று ஆர்வத்துடன் கேட்கிறாள். பட்டென்று ‘‘ஆமா, அது ஒண்ணுக்குத்தான் கேடு இப்ப’’ என்று முகத்திலடித்தாற்போல் சொல்கிறாள் தங்கராசின் மனைவி. மேலும், தங்கராசும் அவன் மனைவியும் பேசியதிலிருந்து, தங்கராசுக்கு அவன் மனைவியிடம் மரியாதை இல்லையென்றும், வீட்டோடு மாப்பிள்ளையாக மிகத் தரக்குறைவாக நடத்தப்படுகிறான் என்றும் புரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்புகிறாள் மாரி. வீட்டிலிருந்து பையை எடுத்துக்கொண்டு வந்து, பொட்டல் வெளியில் கொழுத்தும் வெயிலில் அமர்ந்திருக்கிறாள்.

சிறிது நேரத்தில், அவளது கணவன் அங்கே வந்து சேர்கிறான். கடையில் அன்று நல்ல வியாபாரம் என்றும், 48 தேங்காய் விற்றுப்போனதாகவும், கடையை அடைக்க மனமேயில்லாமல் மாரி அழைத்ததால் மட்டுமே வந்ததாகவும் உற்சாகமாக ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கிறான். இவள் ஏதுமே பேசாமல் ஊமையாக இருப்பதைக் கண்டு, ‘‘ஏன்டி, நான் பாட்டுக்கு கத்திக்கிட்டிருக்கேன். நீ என்ன கல்லுக்கணக்கா இருக்கே’’ என்று முடியைப் பிடித்து உலுக்குகிறான். அத்தனை நேரம் அழுகையை அடக்கி வைத்திருந்ததைப் போல, ஓவென அழ ஆரம்பிக்கிறாள் மாரி. அவன் பதறிப்போய் ‘தெரியாம பண்ணிட்டேன்’ என சொல்லி பார்க்கிறான். அவள் அழுகை நிற்கவில்லை. மேலும் மேலும் பெருமூச்சு விட்டுக்கொண்டே அழுதுகொண்டே இருக்கிறாள். தன்னால் தான் அவள் இப்படி அழுகிறாள் என்று நினைத்துக்கொண்டு, மாரியை தேற்றுகிறான் அவள் கணவன். தமிழ் சினிமாவில் நம்மை அழவைத்த வலி மிகுந்த கிளைமாக்ஸ்களில், ‘பூ’ திரைப்படத்திற்கும் பங்கு உண்டு.

கார்த்திக் – ஜெஸ்ஸி (விண்ணைத்தாண்டி வருவாயா)
 
vtv

கார்திக்கும் ஜெஸ்ஸியும் பிரிந்து சில வருடங்களுக்கு பின், அமெரிக்காவில் யதேச்சையாக சந்திக்கிறார்கள். ‘உன் வாழ்க்கையில இப்போ வேற யாராவது இருக்காங்களா, கார்த்திக்... கண்டிப்பா, இருப்பாங்கன்னு நெனைக்குறேன்... அவளைப் பத்தி சொல்லு, கார்த்திக்’ என கேட்கிறாள் ஜெஸ்ஸி. ‘யா ஜெஸ்ஸி, இருக்கா’ என அவளைப் பற்றி பேசத் தொடங்கும் கார்த்திக், அவளது அழகைப் பற்றியும் குணத்தைப் பற்றியும் புகழ்கிறான். ‘அவளுக்கு படம் பார்க்க பிடிக்காது.. அவ பேச்சுல ஒரு மலையாள வாசம் வீசும்’ என சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, தன்னைப் பற்றித்தான் கார்த்திக் சொல்கிறான் என புரிந்து அதிர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறாள் ஜெஸ்ஸி. ‘அவ பேரு ஜெஸ்ஸி, ஜெஸ்ஸி... அவதான் இருக்கா, இன்னும் வாழ்க்கையில’ என சொல்லிவிட்டு, ‘உன்கிட்ட இருந்து போனதுக்கு அப்புறம், I moved on to her’ என்கிறான் கார்த்திக். அதாவது, ‘நீ என்னை விட்டு போனதுக்கு அப்புறம், உன் நினைவுகளோட வாழ ஆரம்பிச்சுட்டேன்’ என சொல்கிறான். எவ்வளவு அழகான வசனம்! இந்த காட்சியை மனதை மயக்கும் இசைப்புயலின் பின்னணி இசையுடன் ரசிப்பதே ஒரு பெரும் போதை என சொல்லலாம்.

கார்த்திக் – யாமினி (மயக்கம் என்ன)
 
mayakkam enna

விபத்திற்கு பிறகு கார்த்திக்கின் செயல்கள் அனைத்துமே வினோதமாக இருப்பதாலும் கல்யாண வீட்டில் குழப்பம் ஏற்பட்டதாலும், திரும்பி வரும் வழியில் சங்கர் காருக்குள் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறாள் யாமினி. பின் சீட்டுக்கு வரும் சங்கர், “இவ்ளோ வருஷமா நீயும் நரக வேதனை அனுபவிச்சுட்ட, யாமினி... பேசாம அவனை டைவர்ஸ் பண்ணிடு... உனக்கு வயசு இருக்கு, இப்போவும் பசங்க கியூவுல நிப்பாங்க. அவனுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு. டெய்லி அடிக்குறானாமே உன்னை, நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? தி நகர்ல எனக்கு ஒரு அபார்ட்மெண்ட் இருக்கு.. நீ அங்கேயே தங்கிடு. இவ்ளோ தூரம் வந்து கஷ்டப்பட வேணாம். எதுவா இருந்தாலும், நான் உன்னை பாத்துக்குறேன்” என சங்கர் பேசிக்கொண்டே போக, யாமினி விரல் காட்டி தன் கோபத்தை வெளிப்படுத்துகிறாள். “ஸாரி... ஏதோ நான் அவசரத்துல... ரொம்ப கீழ்த்தரமா” என்று சட்டென தன் தவறுக்காக சங்கர் வருந்த, “இட்ஸ் ஓகே... தப்பு உன் மேல இல்ல. நான் உன் முன்னாடி இந்த மாதிரி அழுதுருக்க கூடாது... ஆம்பளை இல்லையா... அதான்.... weakness … விடு, thanks..” என்று சொல்லி காரை விட்டு இறங்குகிறாள். “யாமினி... நான்... அசிங்கமா... இனிமே...” என குற்ற உணர்ச்சியில் சங்கர் மீண்டும் புழுங்க, “ப்ளீஸ் சங்கர்... நீ தாராளமா இந்த வீட்டுக்கு வரலாம், எனக்கு பிரச்சினையே இல்ல. இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்துச்சுன்னே நாம ரெண்டு பேரும் மறந்துடலாம்.. ஓகே? நான் கார்த்திக் கிட்ட கூட சொல்லமாட்டேன். but, சீக்கிரம் கல்யாணம் பண்ணு... அதான் உன்னை இப்படியெல்லாம் பேச வைக்குது. உன் பொண்டாட்டியை நீதான் தேடிக்கணும், இன்னொருத்தர் பொண்டாட்டி மேல ஆசைப்படக்கூடாது.. ம்ம்.. ஆங்... இன்னொரு வாட்டி என் புருஷனை பைத்தியம்ன்னு சொல்லாத, அவன் ஒரு ஜீனியஸ்... எனக்கு தெரியும்” என சொல்லி நடக்கிறாள். இந்த காட்சியும், அதை தொடர்ந்து வரும் ‘பிறை தேடும் இரவிலே’ பாடலும், அபார்ட்மெண்ட் அசோசியேஷன் தலைவரிடம் “என் புருஷன் கிறுக்கனா வேணா இருக்கலாம், ஆனா நல்லவன்... யார் வம்புக்கும் போகமாட்டான்” சொல்லும் காட்சியும் யாமினி கார்த்திக்கை எவ்வளவு நேசிக்கிறாள் என்பதை சொல்லும்.

கபாலி – குமுதவள்ளி (கபாலி)
 
kabali

25 வருடங்களுக்கு முன்னால் இறந்து போன தன் மனைவி குமுதவள்ளி இன்னும் உயிரோடு தான் இருக்கிறாள் என்கிற செய்தியைக் கேட்டு, அவளைத் தேடி மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு வருகிறான் கபாலி. எங்கெங்கோ அலைந்து, கடைசியில் அவள் பாண்டிச்சேரியில்தான் இருக்கிறாள் என தெரிந்து, அங்கே சென்று அவள் இருக்குமிடத்தையும் கண்டுபிடித்து, அடுத்த நாள் காலையில் அவளை பார்க்கப்போகிறோம் என்கிற ஆர்வத்தில் பதின்வயது இளைஞனைப் போல தூக்கமின்றி தவிக்கிறான். இத்தனை வருடங்களுக்கு பிறகு குமுதவள்ளியும் கபாலியும் பார்த்துக்கொள்ளும் அந்த காட்சியும், அதைத் தொடர்ந்து வரும் ‘மாயநதி’ பாடலும் வயதால் முதிர்ந்து மனதால் இருபதாய் இருக்கும் அந்த கணவன் மனைவியின் காதலை நமக்கு காட்டுகிறது. ‘நீ செத்துப் போய்ட்டன்னு நான் நெனச்சேன்’ என கபாலி கேட்க, ‘நான் செத்துதான் போயிருந்தேன், நீ என்னை வந்து பார்க்குற வரைக்கும்’ என குமுதவள்ளி சொல்வதும், 25 வருடங்களாக நாம் இருவரும் இணைந்து வாழ்ந்த அந்த 2 ஆண்டுகளைத்தான் நினைத்திருந்தேன் என குமுதவள்ளி சொல்வதும், ஒரு கோபக்கார இளைஞனாக மட்டுமே இருந்த கபாலியை பண்பானவனாக குமுதவள்ளி மாற்ற முயற்சிக்கும் ஃபிளாஷ்பேக் காட்சிகளுமாக அப்பாடல் முழுக்க நிறைகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்