முகப்புகோலிவுட்

புத்தரை கொல்கிறோம்- 'முன்னவர்' நாடகவிமர்சனம்

  | January 06, 2019 22:08 IST
Munnavar

பௌத்தம் மதம் அல்ல, சங்கம் வைத்து மனித மாண்புகளை மீட்டெடுத்த அறநெறி என்பதையும். பௌத்தம் தனிமனித ஒழுக்கத்தையும் சமூக ஒழுக்கத்தையும் போதித்தவை என்பதையும் நாடகம் ஆழமாக பதிவு செய்திருந்தது.

இயக்குனர் பா,இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மய்யம் சார்பாக “வானம்” கலைத்திருவிழா 3 நாட்களாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்து வருகிறது.

இந்நிகழ்வில் நாடகவியலாளர் பிரளயன் இயக்கத்தில்  நீலம் அரங்காட்டத்தில் அரங்கேறியது “முன்னவர்”  நாடகம்.

புத்தர் என்பவர் யார், அவர் எப்படி துறவறம் மேற்கொண்டார். சமூகத்தில் உள்ள முரண்களை அவர் எவ்வாறு களை எடுக்க விரும்பினார் என்பது பற்றிய ஒரு சிறிய தொகுப்பு இந்நாடகம்.
குறிப்பாக பொது புத்தியில் உள்ள புத்தனுக்கும், வரலாறு கூறுகிற புத்தனுக்கும் உள்ள முரண்களை இந்த நாடகம் எடுத்துறைக்கிறது.

வர்ணாசிரமத்தின் படி சத்திரிய குலத்தில் , அதுவும் ராஜ குடும்பத்தில் பிறந்தவர் சித்தார்த்தன் (புத்தர்). உலகத்தின் அனைத்து துன்பங்களுக்கும் காரணத்தைத் தேடி, தேடியதோடு மட்டும் இல்லாமல், அதை தீர்ப்பதற்கான வழிகளையும் தேடியவர் புத்தர்.

அனைத்து துயரங்களையம் தீர்ப்பதற்கான வழி, தீர்ப்பதற்கான காரியத்தில் இறங்குவதுதான் என்பதையும் வலுவாக  குறிப்பிடுகிறார் புத்தர்.

சொத்தை சேர்க்கும் பேராசை, அதிகாரத்தை குவிக்கும் பேராசை, நிலத்தைக் குவிக்கும் பேராசை, நாடுகளை ஆக்கிரமிக்கும் பேராசை அனைத்தும் முரண்களுக்குக்கான அடிப்படை என நீலம் அரங்காட்டத்தில் நீளமான நாடகமாக “முன்னவர்” அரங்கேறியது.
 
“மன்னர் சுத்தோதனருக்கு மகனாகப் பிறந்த சித்தார்த்தன் சிறு வயதில் இருந்தே வன்முறையை விரும்பாத அனைத்து கலைகளையும் பயின்ற வீரம் மிக்க இளவரசனாக திகழ்கிறார்.

குறிப்பாக போர் முறையை அடியோடு அவர் வெறுக்கிறார். ஒரு போரின் முடிவு என்பது அடுத்த போருக்கான தொடக்கம் என்பதை ஆழமாக பதிவு செய்கிறது நாடகம்.

நாடகத்தின் தொடக்கமே ஒரு போரில் தான் தொடங்குகிறது. போரில் மாண்டவர்களின் துயரங்களை தத்ரூபமாக கண்முன் காட்சிப்படுத்தியது நாடகம்.

ஊரில் ஒருவர் இறந்து போகிறார் உற்றார்,உறவினர்,சொந்தபந்தம் என அனைவரும் அழுது கொண்டிருக்கும் போது ஊர்க்காரார் ஒருவர் வருகிறார். 

நாளை ஏர் உழும் நாள் ஊரே திருவிழா கோலம் பூண்டிருக்கும் போது ஊரில் பெரியவர் நீங்கள் இப்படி இருக்கலாமா என்று மற்றொருவர் கேட்க.

தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு இன்முகம் என்கிற முகமூடியை  அணிந்துக்கொண்டு ஏர் உழும் விழாவிற்கு தங்களை தயார் படுத்திக்கொள்ளும் உரையாடல் உணர்வுகளை சற்றே சீண்டி பார்க்கிறது.

சுத்தோதனர் வருகை,கூடவே சித்தார்த்தனும் வருகிறான். முதல் ஏரை சித்தார்த்தன் உழுகிறான் பெண்கள் விதைகளை தூவுகிறார்கள் அத்தோடு அவன் பணி முடிகிறது.

மீதி உள்ள அனைத்து விவசாய வேலைகளையும் கிராம மக்களே செய்கிறார்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த்தன் தன் தந்தையிடம் கேட்கிறான். ஏன் நாம் இந்த வேலைகளை செய்யக்கூடாது என்று.

அதற்கு சுத்தோதனர் கூறுகிறார் “அது நம்முடைய வேலை இல்லை. அது சூத்திரர்களின் வேலை அவர்கள் சத்திரிய குலத்திற்கு இன்முகத்தோடு பணிவிடை செய்வதுதான் அவர்களுக்கு வர்ணாசிரமம் அளித்துள்ள விதி என்கிறார்”.

இங்கு தான் முதன் முதலில் புத்தன் தன் சுய சிந்தனையை கேள்வி கேட்க தொடங்குகிறான்.

அவர்களின் உண்மை முகத்தை பாருங்கள் அவர்கள் வலிகளோடும், வேதனைகளோடும் வேலை செய்கிறார்கள் என்பதை தன் தந்தைக்கு எடுத்துரைக்க முற்படுகிறான் சித்தார்த்தன். சாதி அந்த இடத்தில் மனிதாபிமானம் அற்றது என்பதற்கு உதாரணமா சுத்தோதனன் அந்த இடத்தில் விட்டு விடைபெறுகிறார்.
 
வர்ணத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட பிளவுகளையும், வேலை பிரிவினைகளையும் உணர்கிறான் சித்தார்த்தன்.

புத்தனின் வாழ்க்கையை 1 மணி நேரத்தில் சொல்லிவிட முடியாது ஆனால் அவனின் தம்மத்தின் நோக்கத்தையும், பொது புத்தியில் இருக்கும் முரண்களை தெளிவு படுத்துகிறது நாடகம்.

இளம் வயது சித்தார்த்தனுக்கு திருமணம் நடந்துவிடுகிறது. அமைச்சர்களும், ஆலோசகர்களும், சத்ரிய குல கவுரவம் பெண்களை மோக வலையில் வீழ்த்துவதுதான் அதனால் நீங்கள் நம் குல வழக்கத்தை மீறாமல் அந்தப்புரம் செல்லத்தான் வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
 
இந்த இடத்தில் சித்தார்த்தனின் சுய ஒழுக்கம் வெளிப்படுகிறது. அந்தப்புரப் பெண்களின் அறியாமையை தெளிவு படுத்துகிறான். அறிவும்,ஆற்றலும் மிக்க அந்த பெண்களுக்கான உரிமைகளை இந்த சமூகம் அவர்களை எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை விவரிக்கும் காட்சிகள் சிந்திக்க வைக்கிறது.

அதன் பின் மனைவி யசோதரையுடனான உரையாடலில் ஆண் பெண் சமத்துவத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறது நாடகம்.
 
தன் மனைவியுடனான ஒவ்வொரு உரையாடலின் போதும் சித்தார்த்தன் புரிதலை அடைகிறான் என்பதை நாடகம் இறுதி வரை விவரிக்கிறது.

சில காட்சிகள் மெதுவாகவும் எளிமையாக புரிந்துக்கொள்ள முடியாததுமாக இருந்தன.

கோலியர்களுக்கும், சாக்கியர்களுக்கும் ஆற்று நீர் பங்கீடு பிரச்னையில் போர் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக சங்கம் கூட்டப்படுகிறது. 

போரில் நான் கலந்துகொள்ள மாட்டேன். இந்த போர் நிச்சயம் தீர்வை தராது அடுத்த போரை உருவாக்கும் என்பதை ஆழமாக பதிவு செய்கிறார் சித்தார்த்தன்.

தன்னுடைய தீவிர எதிர்ப்பின்னால் போர் நிறுத்தப்படுகிறது. அதன் விளைவாக தண்டனையை ஏற்று வனத்திற்குச் செல்கிறான் சித்தார்த்தன். இது ஒருவகையில் சித்தார்த்தனை நாடு கடத்துவதுதான் என்று சங்கம் ஏற்கிறது.
 
காட்டில் அமர்ந்து எப்போதும் இந்த உலக வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் துக்கத்தின் வேரான பேராசையை எப்படி அழிப்பது என்பதை சிந்தித்துக்கொண்டிருக்கிறார்.

ஆசையை துறப்பது, வன்முறையை எதிர்ப்பதுமே மாற்றத்திற்கான வழி என்பதை கண்டறிகிறார். அதுதான் அவர் பெற்ற புத்தொளி, ஆகவே அவர் புத்தர் என்றாகிறார்.
சாதியை அழிப்பதும், பேராசைகளை இழப்பதும், வன்முறையை தவிர்ப்பதே தம்மம்.

தம்மம் அறத்தின் வழி, மனித மாண்புகளை பாதுகாக்கும் வழி தம்மம் என்று தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு போதிக்கிறார். பவுத்த சங்கம் அமைக்கிறார். அறநெறிகளை போதிக்கிறார்.
 
தன்னுடைய மனைவியும், தாயும் சங்கத்தில் இணைந்து கொள்ள விரும்புகிறார்கள். அதற்கு புத்தர் பெண்கள் சங்கத்தில் இணைந்தால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என்கிறார், அப்போது நடக்கும் உரையாடலில் மனைவியிடம் மீண்டும் ஒரு புத்தொளி பெறுகிறார்.

துறவரம் மேற்கொள்வது என்பது மண், பொன், பெண் என இந்த மூன்று ஆசைகளையும் துறப்பது என்பது பொது புத்தியில் திணிக்கப்பட்ட விளைச்சல்.

ஆனால் பொன்,மண், இரண்டும் உயிரற்றது பெண்ணை அவைகளோடு ஒப்பிடமுடியாது என்னும் காட்சி பொதுப்புத்தியில் இருக்கும் பெண்கள் மீதான தவறான சித்தரிப்பை உடைக்கிறது.
 
பௌத்தம் மதம் அல்ல, சங்கம் வைத்து மனித மாண்புகளை மீட்டெடுத்த அறநெறி என்பதையும். பௌத்தம் தனிமனித ஒழுக்கத்தையும் சமூக ஒழுக்கத்தையும் போதித்தவை என்பதையும் நாடகம் ஆழமாக பதிவு செய்திருந்தது.

“அனைவருக்கும் முன்னால் நான் புத்தொளி பெற்றேன் அதனால் நான் முன்னவர் என்று உங்களால் அழைக்கப்படுகிறேன், நீங்களும் புத்தொளி பெற வேண்டும். சமத்துவம் பெற வேண்டும்” என்கிறார்
 
ஒரு சீடன் எழுந்து கேட்கிறான் “ முன்னவரே நீங்கள் அனைத்தும் அறிந்தவர், நீங்கள்தான் எங்கள் கடவுள், இல்லை கடவுளுக்கும் மேலானவர் என்று முக மூடி அணிந்து கேட்கிறார்”
 
“நான் கடவுள் இல்லை, கடவுள் என்று எதுவும் இல்லை.  நீங்கள் என்னை கடவுள் என்று அழைக்காதீர்கள். சடங்குகளுக்குள் என்னை திணிப்பது என்பது மூடநம்பிக்கையை வளர்ப்பதாகும்.
 
 என்று பேசிக்கொண்டிருக்கும் போதே சூழ்ச்சமக்காரர்களால் புத்தர் கொல்லப்படுகிறார். கொல்லும் போது நீங்கள் கடவுள், நீங்கள் தான் எங்கள் கடவுள் என்கிறார்கள்” புத்தர் சொல்கிறார் இவர்கள் என்னை கொல்கிறார்கள், ஆனால் நான் மீண்டும் மீண்டும் உயிர்தெழுவேன் தம்மத்தின் மூலம் நான் உயிர்தெழுவேன் என்கிறார்.
 
இன்று சடங்குகளில் புத்தரை நாம் கொல்கிறோம். கடவுள் என்று கொல்கிறோம் ஆனால் அவர் தம்மத்தின் மூலம் உயிர்தெழுகிறார்.

இந்த நாடகத்தில் புத்தர் பயணிக்கும் பெரும்பாலான காட்சிகளில் அரசமரம் அவரின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஆனால் இன்று அரசமரம் எதனுடைய குறியீடாக பார்க்கப்படுகிறது என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது.

போர்க் காட்சிகளில், மூன்று வெள்ளை உருவங்கள் வந்தாடியதை என்னவென்று புரிந்துக்கொள்ள முடியவில்லை.  பெண்கள் சங்கத்தில் சேர 8 விதிகள் என்னவென்று சொல்லியிருக்கலாம். போர் காட்சிகளில் நேரம் கடத்தாமல் இருந்திருக்கலாம் என்று சில இடங்களில் தோன்றியது.  மேடை சிறியதாக இருந்ததால் கவனத்தோடு நடிகர்கள் நடிப்பதாக இருந்தது.

குறிப்பாக ஒலி குறையாடு, மேடையின் அருகில் இருந்தவர்கள் தவிற  சற்று தெலைவில் இருந்தவர்களுக்கு யாருக்கும் சரியாக சத்தம் கேட்கவில்லை என்பது பெரும் குறைபாடாக இருந்தது.

புத்தனின் புத்தொளியை மிகக்குறுகிய காலகட்டத்தில் மிகப்பிரகாசமாக மேடை ஏற்றியிருக்கிறார் நாடகவியலாளர் பிரளயன்.

கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய தேவையாக இன்று புத்தர் இருக்கிறார் அதை உணர்ந்து அதற்கான மேடையை அமைத்துக்கொடுத்த “நீலம்” அமைப்பிற்கும் இயக்குனர் பா, இரஞ்சித்திற்கும் வாழ்த்துகள்.

அனைத்து நடிகர்களும், தங்களுக்கான கதாபாத்திரங்கள் நிரம்ப நிறைவாக நடித்திருந்தார்கள். பின்னனி இசை நம்மை கதையோடு பயணிக்க வைத்தது.

இந்நாடகம் இன்னும் சிறிய மாற்றங்களுடன் பல மேடைகளை அடைய வேண்டும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்