விளம்பரம்
முகப்புகோலிவுட்

நா.முத்துக்குமார் - மறக்கக்கூடாத ஞாபகம்

  | July 13, 2017 10:40 IST
Na Muthukuamr Birthday

துனுக்குகள்

  • கவிஞன் என்ற நிலையிலிருந்து உற்ற தோழனை மாறிய நா. முத்துக்குமார்
  • நா. முத்துக்குமார் பாடல் வரிகளில் பெயர் சூட்ட முடியாத பந்தம் இருக்கும்
  • பல பாடல்கள் இவருடைய கைவண்ணத்தில் உதித்த அற்புத நிமிடங்கள்
காதல், ஏக்கம், காமம், தனிமை, மோகம், பாசம், இப்படி எந்தவொரு உணர்வின் சாயலையும் மனதுக்கிணைந்த பாடலாகக் கொண்டாட ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு கவிஞன் படைக்கப்படுகிறான். அப்படி படைக்கப்படும் கவிஞனின் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பரவிக்கிடந்தால் அவன் கவிஞன் என்ற நிலையிலிருந்து ஒரு உற்ற தோழனாக உருமாறுகிறான். கண்ணதாசன், வைரமுத்து என்று தலைமுறைகள் தாண்டி வாழும் நமது நண்பர்களின் மத்தியில் நா.முத்துக்குமார் இந்த தலைமுறைக்கான நண்பன். நமது அறையில் நமது பாயில் படுத்துறங்கி நமது உணவுகளில் பங்குபோட்டு காயம் துடைத்து கண்ணீர் ஆற்றி தோள் பற்றும் அறைத்தோழன் நா.முத்துக்குமார்.

பாடல்களில் கொடுத்த சிந்தனைகள் எல்லாம் எல்லா நேரங்களிலும் எல்லா தளங்களிலும் நமது வாழ்க்கையின் பல பகுதிகளுக்குள் பொருந்திப்போகிறது. நா.முத்துக்குமார் காலங்களின் கவிஞன். இரவு, பகல் என்ற காலங்கள் இல்லாமல் அவரது கவிதைகளின் தாக்கங்கள் ஒவ்வொரு தருணங்களையும் அழகாக்கின்ற பேரன்பின் ஆதியூற்று.

அழுதால் கைபிடிக்கவும், சிரித்தால் உடன் சிரிக்கவும் வைக்கும் பாடல்களுக்கு புகழாரம் சூட்டுவதை விட அதில் மயங்கிக்கிடப்பதே மிகப்பெரிய நியாயம்.
 

"வெயில்" - "இறைவனை உணர்கிற தருணம்"

"வெயில்" படம் நா.முத்துக்குமாருக்கு முக்கியமான படம். படத்தில் அனைவரும் "வெயிலோடு விளையாடி", "உருகுதே மருகுதே" என்று கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் அதே படத்தில் சத்தமில்லாமல் ஒரு பாடல் தனித்து ஒலித்துக்கொண்டிருந்தது. பாடலின் இசை மற்ற பாடல்களின் ஈடுக்கு இல்லையென்றாலும் அந்த பாடல்கள் தராத இனிமையை அந்த "இறைவனை உணர்கிற தருணம்" பாடல் தந்தது. நா.முத்துக்குமாரின் வரிகளில் பெயர்சூட்ட முடியாத ஒரு பந்தத்தை சொல்லும் பாடல் அது.
 

"இந்த உறவின் பெயரினை யார் சொல்வது
தொலைந்தததை விதி வந்து இணைக்கின்றது
முகவரி மாறிய கடிதம் ஒன்று
மறுபடி இங்கே வருகின்றது"


தொலைந்து போன உறவின் மீளாக்கத்தை முகவரி மாறிய கடிதம் திரும்ப வருவதாக சொல்லும் சொல்லாடல் எத்தனை ஆத்மார்த்தம். சில வரிகளில் சில நொடிகள் ஒலித்தாலும் நா.முத்துக்குமாரின் விடுபட்ட பாடல்களில் இதுவுமொன்று.
 

"மதராசப்பட்டினம்" - "பூக்கள் பூக்கும் தருணம்"

மதராசப்பட்டினம் படத்தில் வரும் "பூக்கள் பூக்கும் தருணம்" இவரது கைவண்ணத்தில் உதித்த அற்புத நிமிடங்கள். பாடலின் துவக்கம் "மறந்துட்டியா" என்னும் ஒரு சாதாரண சொல்லில் இருக்கும். சொல்ல வந்ததை மறந்துவிட்டு திணறும் சமயம் சொல்ல வந்தது இது தானென்று எதிரிலுள்ளவர்கள் புரிந்துகொள்ளும்படி அமைவது மறதியில் ஒரு வரம். தேசம், மொழி, நிறம் என்று அனைத்திலும் இரவும் பகலுமாக இருதிணைகளில் இருக்கும் இரண்டு உயிர்களின் சந்திப்பு. நீர் சுற்றம், சூரிய முற்றம், தனித்த பயணம் என்று அவர்களுக்கிருக்கும் இணைகள் வெகு குறைவு. ஆனால், அந்த வெளியில் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத ஒரு
உணர்வு காற்றெங்கும் பரவிக்கிடக்கிறது. அந்த உணர்வுகளை நா.முத்துக்குமார் தனது வரிகள் மூலம் செய்யுளாக்கியிருப்பார். ஆங்கிலம் மட்டுமே பேசத்தெரிந்த பெண்ணிடம் தட்டுத்தடுமாறி கற்ற ஆங்கிலச்சொற்களை உதிர்க்க எதிர்முனையிலிருந்து தமிழில் ஒரு சொல் வருவது வரம். மாறமுடியாத தேசமும் நிறமும் விடுத்து மாறும் மொழியில் ஒன்றிணைகிறது அந்த உறவு. நமது ஆனந்தியின் "நெஜமாத்தான் சொல்றியா" போல அந்த குஸ்திக்காரனுக்கு துரையம்மாவின் இந்த "மறந்துட்டியா" மலர்ந்த பிரியத்தை மிதக்கின்ற ஓடத்தில் பூ போல பூக்க வைக்கிறது. பூ பூக்கும் ஓசையும், தருணமும் எத்தனை ரகசியமானதோ அதுபோல இந்த காதல் இருவர் மனதுக்கு மட்டுமறிந்த ரகசியம். மனம் சொல்வதை காதல் கேட்கிறது, மனம் சொல்ல வருவதை வாய் பேசுகிறது. ஆனால், பேசமுடியாத சூழ்நிலைகளும் காதலில் வாய்க்கிறது.
 

"பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லை உனதருகே நேரம்
போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ"


இது தான் காதலென்ற வரையறைகள் வகுத்தவர்கள் வரலாற்றில் இல்லை. அது ஒரு சுயம்பு. ஒவ்வொருவருக்குள்ளும் மலரும் காதலுக்கு முழு மூலமும், ஆதியும் அவர்களே தான் என்பது நா.முத்துக்குமாரின் பார்வை. அந்த உணர்வை தூண்ட காதல் மலர்ந்த பின் காலமும், உரையாடலும் முன்னுக்கு வருகிறது. காதலிப்பவர்கள் உடனிருந்தாலும் பார்வை மொழியாகும், காலம் உறைந்து போகும்.
 

"வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவையில்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே"


எங்கோ பிறந்த இந்த அயல்நாட்டுக்காரியின் நேசம் எதுவரை போகுமென்ற கேள்விகள் எழாமல் இல்லை. ஆனால், தெரியாத உறவை அந்த உறைந்த காலத்திலேயே வாழ ஆசைப்படுகிறது காதலென்று பெயர்கொண்ட உறவு.
 

"எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து 
எங்கும் ஈர மழைத் தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை 
என்றபோதும் இது மீளுதே 
யார் என்று அறியாமல் பேர்கூட தெரியாமல் 
இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்"


"இது எதுவோ" என்று கேட்க கேட்க இது தான் காதலென்று இருவரும் உணரத்தொடங்க பறவை பிறந்தபின் அசையும் இலைகளைப்போல அந்த தேசம் கடந்த மனங்கள் அசையத்தொடங்குகின்றன. பூக்கள் பூக்கும் தருணத்தை ஆதவனும், ஆதவனின் ஆருயிரும் காதலின் பெயரால் ரசிக்கிறார்கள். நா.முத்துக்குமார் நம்மையும் ரசிக்க வைத்தார்.
 

"குள்ளநரிக்கூட்டம்" - "விழிகளிலே"

முழுப்பாடல்களைப்போல, நா.முத்துக்குமார் பாடல்களில் சேர்க்கும் சிறு வரிகள் பாடலை மீறிய அர்த்தம்கூடி நிற்கும். "குள்ளநரிக்கூட்டம்" படத்தில் "விழிகளிலே" பாடலில் ஒரு வரி வரும்.
 

"இது என்ன பகலா இரவா
நிலவின் அருகில் சூரியன் வெளிச்சம்"


வாழ்வின் இருதுருவங்கள் மரணம் ஜனனம் என்றால் அதன் உள்சுழற்சி இரவும் பகலும். எப்பொழுதுமே ஒரு பகலும் - அது தொடரும் இரவும் இல்லையென்றால் ஒரு பகலும்-அது தொடரும் இரவும், வாழ்வின் தீர்க்கத்தினை பூர்த்தி செய்கிறது. இரவும் பகலும் யாருக்கும் வேறுபடுவதில்லை. கண்களை மூடினால் பகலும் இரவு தான், வெளிச்சத்தில் வாழ்ந்தால் இரவும் பகல் தான். ஆனால், இந்த வாழ்க்கையில் அனைத்துமே உறுதிப்படுத்தப்பட வேண்டும். பகலென்றால் விழிப்பும் இரவென்றால் உறக்கமும் தான் ஊர்ஜிதங்கள். விழிப்புக்கு சூரியனும் உறக்கத்திற்கு சந்திரனும் இங்கு இயற்கையளித்த கொடைகள். விழித்திருப்பவனுக்கு சூரியனைக்காண வழியில்லை உறக்கத்திலிருப்பவனுக்கு நிலவினைக்கான நேரமில்லை.
ஆனால் காதலில் இருப்பவனுக்கு "நிலவின் அருகில் சூரியன் வெளிச்சம்". காதலின் அற்ப சாத்தியங்களில் இதுவுமொன்று. இந்த சாத்தியம் நா.முத்துக்குமாரால் சாத்தியமானது.

எப்பொழுதும் அழகு என்றால் மழையென்று சொல்லப்படுகிற வேளையில்
 

"மழை மட்டுமா அழகு வெயில் கூட அழகு"


எப்பொழுதும் பெண்ணை அழகாக வர்ணித்து எழுதிய வேளையில்
 

"அவள் அப்படியொன்றும் அழகில்லை"


எப்பொழுதும் வெட்கம் பெண்ணுக்கானது என்றபொழுது
 

"ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டுகொண்டேன்"


இப்படியெல்லாம் எழுதிவைத்த நா.முத்துக்குமாரின் கைகளுக்கு பேரன்பின் பெருமுத்தங்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்