முகப்புகோலிவுட்

இசையில் ஜாதி இல்லையா?? - இயக்குனர் பா.ரஞ்சித் மீதான கருத்து யுத்தம்!

  | January 09, 2018 23:41 IST
Pa Ranjith The Casteless Collective Music Concert

துனுக்குகள்

  • 'The Caste-less Collective' இசை நிகழ்ச்சி பற்றி மிகப்பரவலாக பேசப்பட்டது
  • Rock, Rap மற்றும் கானா இசையின் கலவையாக இருந்தது இந்நிகழ்ச்சி
  • ரஞ்சித் செய்திருப்பது, கானா பாடல்களுக்கான ஒரு மரியாதை
சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'நீலம்' அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட 'The Caste-less Collective' இசை நிகழ்ச்சி பற்றி மிகப்பரவலாக பேசப்பட்டது. பலர் பாராட்டி தள்ளினர். சாதிய அரசியல் மற்றும் இன ஒடுக்குமுறைக்கு எதிரான தொடர் இயக்கங்களில், இந்நிகழ்ச்சி மிக முக்கியமான ஒன்றாக அடையாளம் காணப்பட்டது. Rock, Rap மற்றும் கானா இசையின் கலவையாக இருந்தது இந்நிகழ்ச்சி.

ஆனால், நேற்று மாலை முதல் 'இசையில் சாதியை கலக்கிறார் ப.ரஞ்சித்' என்பது போன்ற சில பதிவுகள் வந்தன. அதற்கு முக்கிய காரணம், பிரபல பின்னணி பாடகர் ஒருவர் சமூக வலைதளத்தில் சொன்ன ஒரு கருத்து. அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் என பார்த்தால், பார்த்த மாத்திரத்தில் கோபம் வந்தது. சொல்லிவைத்தாற் போல், இந்த மாதிரி எதிர்ப்பு பதிவுகள் இட்ட எல்லோருமே தங்கள் ஜாதிப் பெருமையை முன்னிறுத்துபவர்களாகவோ (அல்லது தங்கள் ஜாதியை வெளியில் சொல்லிக்கொள்வதைப் பற்றி கவலைப்படாதவர்களாகவோ) இருந்ததும் ஆச்சர்யமில்லை.

இவர்கள் எல்லோரும் சொன்ன இன்னொரு காரணம், 'The Caste-less Collective' என்கிற அந்த இசை நிகழ்ச்சியின் பெயர் ஜாதியை நேரடியாக குறிக்கிறதாம். சரி, நன்று. அந்த பெயர் பற்றி பேசுவதற்கு முன்னால், வேறு சில விஷயங்கள் இருக்கிறது சொல்வதற்கும் கேட்பதற்கும்.
இசையில் ஜாதி இல்லையா, அப்படியா? இசை மட்டுமில்லை, உண்ணும் உணவு பேசும் மொழியில் ஆரம்பித்து கும்பிடும் சாமி வரை ஜாதியை வைத்துதானே இங்கே பிரிக்கப்பட்டுள்ளது!?

சரி... மார்கழி மாதங்களில் நடத்தப்படும் 'சென்னையில் திருவையாறு' போன்ற நிகழ்ச்சிகளில் 'திருவையாறு' என்பது எதை குறிக்கிறது? அந்த இசை நிகழ்ச்சிகளின் போஸ்டர்களில் காணப்படும் பெயர்களிலும் முகங்களிலும் ஜாதியே இல்லையா?

கர்நாடக இசை என்பதே, இங்கே நேரடியாக ஒரு ஜாதியுடன்தானே தொடர்புற்று கிடக்கிறது. உங்களுக்கு தெரிந்த பிரபல கர்நாடக இசை கலைஞர்களை எல்லாம், ஒரு நிமிடம் நினைவு கூறுங்கள்... அதில், உங்களுக்கு ஏதேனும் racial diversity தெரிகிறதா என்ன?

3 ஆண்டுகளுக்கு முன், என் தோழி ஒருத்தி சென்னையில் உள்ள ஒரு பிரபல கான சபையில் பாடுவதற்கு கேட்டபொழுது... 'நாங்க எங்க ஆளுங்களுக்கு மட்டும்தான்மா கொடுப்போம்.. கர்நாடக இசையை எல்லோருமே பாடணும்ன்னு நினைக்கலாமா?' என சொன்னவர்கள் உண்டு... அந்த பதிலே, அவளுக்கு எவ்வளவு வலித்திருக்கும்? இசை - ஒரு ஜாதி சார்ந்த பிறப்புரிமையா என்ன?

அந்த அளவிற்கு, இன்னும் சாதிய சிந்தனைகளும், சாதி சார்ந்த பெருமையும் இருக்கிறது என்பதே உண்மை. சும்மா 'ஜாதி இல்லை.. ஜாதி இல்லை..' என சொல்லிக்கொண்டு மட்டுமே வேண்டுமானால் இருக்கலாம். இசைக்கருவிகளில் கூட 'இந்த சாதிக்காரன் இதைத்தான் வாசிக்க வேண்டும்' என்கிற பழக்கம் கூட பல நூறு ஆண்டுகளாய் இருக்கத்தானே செய்தது!

உலகம் முழுக்க இருக்கும் கறுப்பின மக்களின் இசையாக எழுச்சி பெற்ற இசை வடிவமே 'Rap'.. அதை போல, தமிழ் மக்களின் இசையாக உருவானது 'கானா'. ஆனால் அதை ஒரு இசை வடிவமாக பார்க்காமல், இன்று வரை கானா பாடுபவர்களை சற்றே இளக்காரமாகத்தானே இந்த 'இசை சமூகம்' பார்க்கிறது. அந்த அடையாளத்தை கொடுத்தது யார்?

இவன் மாடு மேய்க்கணும், இவன் பன்னிதான் மேய்க்கணும் என பிரித்தது யார்...? இவன் படிக்கணும், இந்த சாதிக்காரன் மட்டும் சாக்கடை அள்ளணும் என சொன்னது யார்...? இவர்கள் மட்டும்தான் கர்நாடக சங்கீதம் பாடணும் என வரையறுத்தது யார்? உயர்ந்த சாதிக்காரனுக்கு ஒரு சுடுகாடு, கீழ்சாதிக்காரனுக்கு ஊருக்கு வெளியே வேறு ஒரு சுடுகாடு என இன்று வரை பல பழக்கவழக்கங்களை ஊட்டி வளர்ப்பது யார்? டீக்கடைகளில் 'இந்த சாதிக்காரன் எல்லாம், கண்ணாடி டம்ளரில் டீ குடிக்கலாம்; மத்தவன்லாம், தேங்காய் மட்டையிலும் பேப்பர் கப்பிலும் டீ குடிக்கலாம்' என சொன்னது யார்? பீஃப் சாப்பிடுவது கேவலம், அது தலித்துகளுக்கு மட்டும்தான் என உருவாக்கியது யார்?

இங்கே வேலை, மொழி, உணவு, சாமி எல்லாமே 'சாதிய அடையாளம்' தான்... 'இப்போல்லாம் யாருப்பா ஜாதி பார்க்குறாங்க' என்கிற மடத்தன பேச்சுக்கள் போதும்.

சரி... இசை நிகழ்ச்சிக்கு ரஞ்சித் ஏன் அப்படியொரு பேர் வைக்க வேண்டும்? 'அயோத்தி தாசர்' என்கிற பேரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெரியாருக்கு எல்லாம் முன்னாலேயே 19ஆம் நூற்றாண்டிலேயே, ரொம்ப பலமாக சாதிக்கு எதிரா குரல் கொடுத்தவர். தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி மற்றும் தமிழறிஞர். அது மட்டுமில்லை, திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். பிற்படுத்தப்பட்ட சாதியினர் மீது நடத்தப்பட்ட கொடுமைகளைப் பார்த்து, அவர் 1891 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் பொழுது "இங்கே உங்களுக்கு மரியாதை இல்லை. இந்த சாதிய கட்டமைப்பில், உங்களை சக மனிதர்களாக சரிசமமாக நடத்தவே மாட்டார்கள்" என்றும், உங்களை "இந்துக்கள்" என அடையாளப்படுத்திக் கொள்ளாமல், "சாதியற்ற தமிழர்கள் (Casteless Tamils)" எனப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார். அந்த Casteless Tamils என்கிற பெயரால் ஈர்க்கப்பட்டே, இந்த 'The Caste-less Collective' என்கிற பெயரை வைத்துள்ளார் ரஞ்சித்.

ரஞ்சித் செய்திருப்பது, கானா பாடல்களுக்கான ஒரு மரியாதை. திறமையான கானா பாடகர்களை மேடையேற்றி கெளரவித்திருக்கிறார். இதனால் யாருக்கேனும் வயிறெரிந்தால், அது அவரவர் பாடு...
அந்த நிகழ்ச்சியின் பெயர் 'இசைக்கு சாதியில்லை' என உரக்க சொல்லவேண்டுமென்ற நோக்கத்துடன் செய்யப்பட்டதாகவே பார்க்கிறேன். அதில், எந்த தவறும் இல்லை.

சத்தமே இல்லாமல், சிலர் ஜாதி உணர்வை ஊட்டுவதும் வளர்த்துவிடுவதும் தவறில்லை என்றால்... சத்தம் போட்டு 'ஜாதி பார்க்காதீங்கடா நொன்னைங்களா' என சொல்வதும் தப்பே இல்லை.

அந்த பிரபல பின்னணி பாடகரின் பதிவில், ஒரு வரியில் 'The film scene is a place where only musical talent speaks...' என்று சொல்லியிருந்தார். அது ஏதோ 'இங்கே திறமை இருக்கிறவன் மட்டும்தான் ஜெயிப்பான்.. தோத்தவன் எல்லாம் திறமை இல்லாதவன்.. ஜாதிகள் அடிப்படையில், திறமைகள் ஒதுக்கப்படுவதில்லை... ஜாதிகளற்ற தேசம் இது' என சொல்வதைப் போல தோன்றியது... எனக்கு மட்டுந்தான் அப்படி தோணியிருந்தது என்றால், சந்தோஷம்.

ஃபேஸ்புக்கிலும் சரி, என் நண்பர் வட்டத்திலும் சரி... சாதி அரசியல் பேசுவதாலேயே ரஞ்சித்தை திட்டும் அவர் மீது கோபப்படும் சிலரைப் பார்க்க முடியும். அந்த சமயத்தில், அவர்களது உண்மை முகமும் வெவ்வேறு சாதியை சேர்ந்த அவர்களது சாதிப் பெருமையும் படமெடுத்து ஆடும். கீழே இருக்கிற ஒருவன் திரும்ப பேசியதுமே, இவர்களுக்கு இத்தனை கோபமா? அவனை எதிர்க்க மட்டும், இவர்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? ஆண்டாண்டு காலமாய் இப்படித்தானே மிதித்திருப்பார்கள் என்கிற வரலாறே கண்முன் தோன்றி மறைகிறது.

ஆனால், இவர்களது கதறல்கள் தான் ரஞ்சித்தின் வெற்றி... "நல்லா கதறு, கதறு... 50 60 வருஷமா, சாதிய ஒதுக்கீடு கூடாதுன்னு கதறுன மாதிரியே கதறு.." என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

கர்நாடக இசை பிரபலங்களிலே கூட T.M.கிருஷ்ணா போன்ற சிலர், கர்நாடக இசைத்துறையில் உள்ள சாதி ஆதிக்கம் பற்றியும், இசைக்கலைஞர்கள் சாதிகள் தாண்டி கவனிக்கப்படாமல் போனது பற்றியும் சாடியுள்ளனர், வருத்தப்பட்டுள்ளனர். வெவ்வேறு காலகட்டங்களில் உயர்சாதியை சேர்ந்த பலரும் இத்தகைய விஷயங்களை எதிர்த்து குரல் கொடுத்தும், போராடியும் இருக்கின்றனர். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் T.M.கிருஷ்ணா அவர்கள், இந்த சாதி ஆதிக்கத்திலிருந்து தப்பிக்கவே M.S.சுப்புலஷ்மி போன்ற ஒரு மேதையே கூட தன்னை ஒரு உயர்சாதியை சேர்ந்தவராக காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது என குறிப்பிட்டிருந்தார். ஒரு வேளை அவர் அப்படி செய்திருக்காவிட்டால், தன்னை உயர்சாதியை சேர்ந்தவராக காட்டிக்கொள்ளாமல் இருந்திருந்தாலோ அல்லது கறுப்பினத்தை சேர்ந்தவராக இருந்திருந்தாலோ, அவரை மக்கள் இந்தளவிற்கு வியந்து கொண்டாடியிருப்பார்களா என்பது சந்தேகமே என்றொரு வாதத்தையும் அவர் முன்வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'இங்கே சாதி இல்லை, சாதி இல்லை' என சமூகம் மொத்தத்தையும் ஏமாற்றுவதை தவிர்த்து, 'இந்த சமுதாயமும் மக்களும் எந்தளவிற்கு சாதியில் ஊறிப்போய் இருக்கிறார்கள்' என்பதை ஒப்புக்கொண்டு, இந்த அசிங்கங்களை கலைய என்ன செய்யலாம் என தீர்வுகளை நோக்கி முன்னடப்பது மட்டுமே எல்லோர்க்கும் நன்மை பயக்கும்.

(இந்த பதிவில் உள்ள கருத்துக்கள் யாவும் இந்த பதிவை எழுதியவரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே, NDTV தமிழ் சினிமாவுடையது அல்ல)

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்