பாலிவுட்டில் ‘எம்.எஸ்.தோனி’ படத்திற்கு பிறகு சுஷாந்த் சிங் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ராப்டா’. தினேஷ் விஜன் இயக்கிவரும் இப்படத்தில் சுஷாந்துக்கு ஜோடியாக கிரித்தி சனொன் டூயட் பாடி ஆடியுள்ளார். ப்ரீதம் இசையமைக்கும் இதனை தினேஷ் விஜனே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மேடாக் பிலிம்ஸ்’ மூலம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
படத்தின் டிரையிலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரல் ட்ரெண்டானது. இந்த டிரையிலரின் இறுதியில் ஒரே ஒரு ஷாட்டில் வயதான கதாபாத்திரம் தென்பட்டார். தற்போது, அவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘சிட்டி லைட்ஸ், ட்ரேப்ட்’ போன்ற படங்களில் தன் நடிப்பால் கவனம் ஈர்த்த ராஜ்குமார் ராவ் தான் அந்த வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். 32-வயதான ராஜ்குமார் இப்படத்திற்காக 324 வயதுடைய முதியவராக காட்சியளிக்க நிறைய மெனக்கெடலிட்டிருக்கிறாராம்.
இதற்காக 16 முறை லுக் டெஸ்ட் எடுத்து, 17-வது முறை ஓகே செய்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வரவழைக்கப்பட்ட டீம் ‘டர்டி ஹேண்ட்ஸ் ஸ்டுடியோ’ டீமுடன் இணைந்து ராஜ்குமாருக்கு ஸ்பெஷல் மேக்கப் போட்டுள்ளனர். இந்த மேக்கப் போடுவதற்கு 6 மணிநேரம் ஆகுமாம். நிச்சயம் இந்த கேரக்டர் படத்தில் சில நிமிடங்கள் வந்தாலும் ராஜ்குமாரின் நடிப்பு பேசப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தை ஜூன் 9-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.