முகப்புகோலிவுட்

நவாஸுதீன் சித்திக்கை இயக்குகிறாரா ராஜுமுருகன்?

  | September 12, 2018 16:40 IST
`குக்கூ', `ஜோக்கர்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராஜுமுருகன். தற்போது ஜீவா நடிப்பில் `ஜிப்ஸி' படம் இயக்கிவருகிறார். அந்தப் படம் முக்கால்வாசி நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் மும்பை சென்ற ராஜுமுருகன் அங்கு, பாலிவுட் நடிகரான நவாஸுதீன் சித்திக்கை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது ராஜுமுருகன் இயக்கிய `ஜோக்கர்' படம் பற்றி பேசியிருக்கிறார் நவாஸ். "இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன். தென்னிந்தியாவில் மிக தைரியமான அரசியல் பேசும் படங்கள் அதிகமாக வருகின்றன. ஜோக்கர் பேசிய அரசியல் மொழியைத் தாண்டி என்னையும் பாதித்தது. இதை இந்தியில் ரீமேக் செய்தால் கலை ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறும்" என்று சொல்லி பாராட்டி பேசியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வருடம் தமிழில் ரஜினி நடிக்கும் `பேட்ட' மற்றும் இரண்டு வெளிநாட்டு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் அடுத்த ஆண்டு கால்ஷீட் தருவதாகவும் கூறியுள்ளாராம் நவாஸுதீன். "இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவரான நவாஸுதீன் என் படத்தைப் பாராட்டியது பெருமையாக இருக்கிறது. நவாஸை இயக்கும் அந்நாளுக்காகக் காத்திருக்கிறேன்" எனக் கூறியுள்ளார் இயக்குநர் ராஜுமுருகன். ஜீவா நடிக்கும் ஜிப்ஸி படத்தையடுத்து ஜெயமோகனின் `யானை டாக்டர்' கதையைப் படமாக்கவுள்ளார் ராஜுமுருகன்.
 
    விளம்பரம்