விளம்பரம்
முகப்புகோலிவுட்

வாலி என்றும் வாழி - நினைவு தின பகிர்வு

  | July 18, 2017 19:30 IST
Lyricist Vaali Songs

துனுக்குகள்

  • மணிரத்னம்-வாலி-இளையராஜா கொடுத்த பாடல்கள் தமிழ் சினிமாவின் முத்துக்கள்
  • ரஹ்மான் இசையமைக்க இந்த "காவியக்கவிஞன்" மிகப்பெரிய களஞ்சியமாக திகழ்ந்தார்
  • வைரமுத்து வாலியின் மொழியிலியே ஒரு வேண்டுதலைச் சொல்லியிருந்தார்
'வானம்போல் சில பேர் வாழ்க்கையும் இருக்கும்'
இது 'உன்ன நினச்சேன் பாட்டு படிச்சேன்' பாடலில் வரும் வரி. வானம் போல ஒருவரது வாழக்கையென்றால் அந்த வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்க முடியும். வானம், உலகத்துக்கான ஒரு கூரை; மழை, ஒளி தரும் போர்வை; இல்லாதவன் கண்களுக்கு பரந்து விரிந்திருக்கும் துணை; நிலவை மட்டுமல்ல நட்சத்திரங்களையும் காட்டும் திரை. இப்படியெல்லாம் ஒருவரின் வாழ்க்கை அமைந்தால் அதுவே வானம் போல் வாழ்க்கை. அப்படி அமையப்பெற்றது தான் இந்த வரிகளை எழுதிய கவிஞர் வாலியின் வாழ்க்கையும். வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சி பிறரை மகிழ்வுறச்செய்வது தான். வாலி அப்படியொரு மகிழ்மேனி. அதனால் தான் அவர் வாழ்ந்த காலம் வரை அவரது வீடு கவிஞர்களின் சரணாலயமாக இருந்தது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் எல்லாம் தனக்கென ஒரு பாணியைக்கொண்டது போல வாலியின் எளிய தமிழ் அவரை சினிமா வெளிச்சத்தில் காட்டியது. தனக்கென எல்லைகளை வகுத்துக்கொள்ளாமல் கதையின், இயக்குனரின், இசையமைப்பாளரின் தேவைக்கு அவர்கள் கேட்ட வரிகளை எழுதிக்கொடுப்பது அவர் திறமை. 'அவர் பாட்டுக்கு எழுதுவார், அதுல நம்ம பாட்ட நாம எடுத்துக்கணும்' என்று கமல் ஒருமுறை வாலியைப் பற்றி குறிப்பிட்டார். அது உண்மை. அவர் எழுதாத தளங்கள் இல்லை; வடிக்காத வரிகள் இல்லை. காலத்திற்கு ஏற்றார் போல தன்னை புதுப்பித்துக்கொண்டார்.

1950களில் பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும் ஆண்டுகொண்டிருந்த காலக்கட்டத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க்க முடியுமென்றால் அதற்கு காரணம் வாலியின் இளமை. இளமையென்றால் வயதின் குறியீடு அல்ல. அது மனதின் சமநிலை. ஐம்பது ஆண்டுகளாக அந்த இளமையை தனது பேனாவுக்குள் பத்திரமாய் வைத்திருந்தார் வாலி. அந்த இளமையின் சூத்திரத்தால் "அழகு ஒரு மேஜிக் டச் .. ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்" என்று 1960களில் பாடல் எழுதியிருக்கிறார் வாலி. பன்முகம்கொண்ட கொண்ட வாலி தத்துவம், தேடல், காதல், புரட்சி என்று அனைத்து நிறங்களிலும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
வாலியின் அழகியல்களில் முக்கியமான ஒரு பாடல் 'இரு மலர்கள்' படத்தில் வரும் "மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள்" என்ற பாடல்.
 

'கூனல் பிறை நெற்றியில் குழலாட 

கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட 

கலை மானின் இனம் கொடுத்த  விழியாட 

அந்த விழிவழி ஆசைகள் வழிந்தோட’ 


'நிலவின் நிழலாட' என்ற வரி திகைக்க வைக்கும் சொல்லாடல். அத்தனை ஒளிகூடிய முகம் என்று சொல்ல நிலவின் நிழலென்று எழுதியிருப்பார்.

இப்படியெல்லாம் எழுதிய வாலி நேரெதிரான பாடல்களும் கொடுத்திருக்கிறார். அவரிடம் கேட்டால் 'ஒன்று கற்பனைத்தமிழ், மற்றொன்று விற்பனைத்தமிழ்' என்று எளிமையாகச் சொல்வார். சில சொற்களை இயக்குனர்களே டம்மியாக எழுதித்தந்து அதை வைத்து கவிஞர்களிடம் பாடல்கள் எழுதி கேட்பது வழக்கம். இன்று வரை "சமஞ்சது எப்படி" என்று எழுதிய வாலிக்கு வசவுகள் குறைந்தபாடில்லை. ஆனால், அது இயக்குனரின் கைவண்ணத்தில் அமைந்த தொடக்கம்.

காதல் தோல்விகளில் அதிகம் ஆணே பெண்ணைப்பற்றி வசைபாடுவது போல இருக்கும் தமிழ் சினிமாவில் காதல் தோல்வியடைந்த பெண்ணின் கேள்வியாகவும் அதற்கு பதிலாக ஆண் சொல்வதையும் 'மங்காத்தா' படத்தில் அழகாக எழுதியிருந்தார்.
 

"என் நண்பனே என்னை எய்த்தாய்...... ஓ
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன் ......ஓ
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ
கண்டுக்கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே"


"காதலென்பது கனவு மாளிகை" என்று எழுதிய வாலி காதலின் நிதர்சனங்களை "நாடோடிகள்" படத்தில் எழுதினர்.
 

"உலகில் எந்த காதல், உடனே ஜெயித்தது ?
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது !

காதல் தோற்றதாய் கதைகள் ஏது?
தோற்றால் தோற்றது காதலாகாது!

எல்லாமே சந்தர்ப்பம்,
கற்பிக்கும் தப்பர்த்தம்."


மணிரத்னம்-வைரமுத்து-ரஹ்மான் போல மணிரத்னம்-வாலி-இளையராஜா கூட்டணி கொடுத்த பாடல்கள் தமிழ் சினிமாவின் முத்துக்கள். மௌன ராகமும், தளபதியும் தமிழ் சினிமாவில் எளிதில் கடந்துவிடமுடியாத படைப்புகள்..

வாலியின் இளமைக்கு முக்கியமான உதாரணமாக ரஹ்மானின் நட்பைச் சொல்லலாம்.வாலியும் ரஹ்மானும் வயதுகளைக் கடந்த வகுப்புத்தோழர்கள் போன்றவர்கள். ஒவ்வொரு புத்தாண்டுக்கும் சென்னையில் இருந்தால் நேரடியாக வாலியின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துபெறும் வழக்கத்தை வாலி உயிருடன் இருந்த காலம் வரை தவறாது கடைபிடித்தார் ரஹ்மான். 'சிக்குபுக்கு ரயிலே' பாடலுக்கு வெறும் இசையை மட்டும் வைத்து ட்யூன் அனுப்பியிருந்தார் ரஹ்மான். இப்படி இருந்தால் நான் எழுத மாட்டேன் என்று வாலி மறுத்ததும் ரஹ்மான் அதில் டம்மியாக பாடி கொடுத்தார். பிறகு தான் வாலி எழுத சம்மதித்தார். இருவருக்கும் அப்படி ஒரு நட்பு இருந்தது. "அன்பே வா என் முன்பே வா" என்று பல்லவி எழுதியதும் "முக்காலா", "முஸ்தபா", "மாயா மசீந்திரா" போல 'ம' வரிசையில் மாற்ற வேண்டுமென்று எண்ணி மாற்றப்பட்டு "முன்பே வா அன்பே வா" என்று வெற்றியடைந்த ஒரு பாடல் சொல்லி விடும் இருவருக்குமான புரிதலை. "சில்லுனு ஒரு காதல்" படத்துக்கு வாலி தான் பாடல் எழுத வேண்டுமென்று ரஹ்மான் தான் கேட்டுக்கொண்டதாக சூர்யாவும் சொல்லியிருந்தார். நாடக பின்னணியைக்கொண்ட "காவியத்தலைவன்" படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க இந்த "காவியக்கவிஞன்" மிகப்பெரிய களஞ்சியமாக திகழ்ந்தார். வாலி மட்டுமே நாடகத்திற்கும் டிஜிட்டல் சினிமாவுக்கும் பாலமாக இருப்பதாக ரஹ்மானும் வசந்தபாலனும் உணர்ந்திருந்தார்கள்.

வாலி காலத்தை வென்ற கவிஞர் என்று சொல்ல தனது இறுதிக்காலத்தில் எழுதிய பாடல்களே சாட்சி. பிரிவில் வாடும் காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் நினைவுகளை அடுக்குககளாக சொல்லும் பாடலாக 'மரியான்' படத்தின் "நேற்று அவள் இருந்தாள்" பாடல் அமைந்தது. 'நேற்று' என்ற ஒரு வார்த்தையை ஒரு காலமாக மாற்றி நினைவுகளைக் குழைத்து "நேற்று எந்தன் ஏட்டில் சோகம் என்னும் சொல் இல்லை" என்றும், 'நேற்று எந்தன் கை வளையல் இசைத்ததெல்லாம் உன் இசையே' என்றும் வாலி எழுதிய ஒவ்வொரு வரியும் அற்புதம்.
 

"நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே
நேற்று எந்தன் ஏட்டில்
சோகம் என்னும் சொல்லும் இல்லையே இல்லையே
நேற்று எந்தன் கை வளையல்
இசைத்ததெல்லாம் உன் இசையே
வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா"


அனைத்தையும் எழுதி "வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா" என்று எழுதி வாலி தன்னை நிரூபித்திருப்பார்.

இதற்கு நேர்மாறாக "சோனப்பரியா" என்ற பாடலையும் அதே படத்தில் அவரால் எழுத முடிந்தது.

திரையிப்பாடல்கள் தாண்டி பல படைப்புகளைத் தந்திருந்தாலும் ரஹ்மானின் "MTV Season 3 - Coke Studio" எழுதிய "நான் ஏன் பிறந்தேன்" அனைவரும் அறியாத பாடலாக இருப்பதாக தோன்றுகிறது. ஏன் பிறந்தோமென்ற ஏக்கத்தையும், பதிலாக அதன் காரணத்தையும் சொல்லும் பாடல் இது.
 

"பச்ச கரு யாவும் பாவக்கரு அல்ல ..

நீயும் நானும் யாரு குத்தம் கொற சொல்ல ...

பொத்தல் உள்ள மூங்கில்ல சத்தமுள்ள பாட்டு வரும்

கன்னங்கரு மேகம் தான் உயிர்வாழ பயிர்வாழ மழ கொட்டுதே"


சமகால கவிஞர்களிடம், கலைஞர்களிடம் வாலி காட்டிய பரிவும், வழியும் எதிர்காலத்தினருக்கு மிகப்பெரிய பாடம். கண்ணதாசன், வைரமுத்து தொடங்கி கார்கி வரை, MSV, இளையராஜா, ரஹ்மான் முதல் அனிருத் வரை அனைவருக்கும் அவர் ஒரே வாலியாகவே இருந்தார்.

வாலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சமயம் அவரைப்பார்த்து விட்டு வந்த வைரமுத்து வாலியின் மொழியிலியே ஒரு வேண்டுதலைச் சொல்லியிருந்தார்.

"சீராக வேண்டும் வால்வு; நேராகிவிடும் வாழ்வு, அவர் மீள வேண்டும்; பாட்டுலகை மீண்டும் ஆள வேண்டும்"

அந்த இறைஞ்சல் இயற்கையின் செவிகளில் அன்று கேட்டிருந்தால் இன்று காவியக்கவிஞன் அதே இளமையோடும் அதே தாடியோடும் பாட்டெழுதிக்கொண்டிருந்திருப்பார்.

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்