முகப்புகோலிவுட்

'மனுஷக்கவிஞன்' நா.முத்துக்குமார் - முதலாம் ஆண்டு நினைவு நாள் பகிர்வு

  | August 14, 2017 14:57 IST
Na Muthukumar  Lyricist

துனுக்குகள்

  • வாழ்க்கையை வரிகளால் சுவாரஸ்யமாக்கிய மனுஷக்கவிஞன்
  • நா.முத்துக்குமாருக்கு மரணமும் சரி மறதியும் சரி என்றுமே இல்லை
  • நினைவுகளோடு வாழப் பழகிக்கொள்பவன் வாழ்க்கையை நிரந்தரப்படுத்திக்கொள்கிறான்
மரணம் ஒரு விடுதலை.
மரணித்தலில் விட்டு விடுதலையாவது வேறு தன்னைத்தானே விடுவித்துக்கொள்வது வேறு. எப்படியாயினும் மரணம் நிரந்தரம். நேற்று வரை சரித்துப்பேசிய நண்பனொருவனின் அதிகாலை மரணச்செய்தி நமக்கு விடியலைத் தரப்போவதில்லை. மாறாக நேற்றைய அந்திசாய்வை ஒருகணம் நினைக்கவைக்கும். நேற்று வரை இருந்த ஒன்று இன்று இல்லை ஆகியிருக்கிறது என்று பின்னோக்கி திரும்பும் மனநிலை. அந்த பயணத்தில் வாழ்வு எத்தனை சுவாரஸ்யமானது என்று தெரிய வருகிறது.

இன்று நா.முத்துக்குமாரின் முதலாமாண்டு நினைவு நாள். சுவாரஸ்யமற்ற வாழ்க்கையை வரிகளால் சுவாரஸ்யமாக்கிய மனுஷக்கவிஞன்.
நா.முத்துக்குமாரின் வரிகளோடு செல்லும் பயணம் மரணத்தையும் வாழ்வையும் ஒரே புள்ளியில் சங்கமிக்க வைக்கிறது.

மரணம் விட்டுச்செல்லும் சுவடுகள் எல்லாம் ஞபாகத்தின் கீறல்கள் மட்டுமே. ஒன்றின் மீதான பிடிப்பு ஞாபகங்களாக உருமாறும்போது அந்த ஞாபகத்தின் முதலாளிகள் நம்மோடு இருப்பதில்லை. கூட்டாக பழகி, கொண்டாடி, பேசி களித்த பொழுதுகள் எல்லாம் வெறும் நினைவுகளாக மனதில் சஞ்சரிக்கும்பொழுது நம்மைச்சுற்றி தொற்றி நிற்கும் வெறுமைக்கும் தனிமைக்கும் அந்த நினைவுகளே மருந்தாவது தான் இதன் அழகு.
வலியை அழகாகக் கொண்டாட முடியுமா என்றால் நிச்சயம் முடியும். ஏனென்றால் அழகு பார்வை சம்மந்தப்பட்டது. நமது பார்வையில் நமக்கு வியாபிக்கும் வலியை அழகான நினைவுகளாக நமக்குள்ளே அசைப்போட்டுக்கொள்வது நம்மை ஆசுவாசப்படுத்தவும் சாந்தப்படுத்தவும் பெரிதும் உறுதுணையாகிறது.
மேலே சொன்ன மரணம், நினைவு, வெறுமை, அழகு, கொண்டாட்டம் என்று அத்தனையும் நமக்கு மீள்பதிவு செய்யும் ஒரு பெயர் 'நா.முத்துக்குமார்'.

கடற்கரையில் நடந்துசெல்லும்போது திடீரென்று விரல்விட்டு விலகும் குழந்தையை கூட்டநெரிசலில் திண்டாடித் தேடும் தாயின் மனநிலையை ஒத்திருக்கிறது நம்மோடு பயணித்து வந்த நா.முத்துக்குமாரின் இன்மை.

"ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது"


நா.முத்துக்குமார் ஒரு வண்ணத்துப்பூச்சி. பட்டுப்பூச்சிகளின் சரணாலயத்தில் முளைத்த இந்த வண்ணத்துப்பூச்சி சினிமாக்குடுவைக்குள் இயன்றவரை பறந்து திரிந்து தனது வண்ணங்களை நிரப்பிச்சென்றது. அந்த குடுவையில் பட்ட விரல்களில் எல்லாம் வண்ணங்கள் நிரந்தரமாய் இருக்கின்றன. அவர் எழுதிய வரிபோல இல்லாமல் வண்ணத்துப்பூச்சி இங்கயே தான் சுற்றிக்கொண்டிருக்கிறது. பார்வைகளுக்குப்புலப்படாத பறத்தலின் இசை செவிகளுக்குள் ரீங்கரிக்கும்போது நா.முத்துக்குமார் தனது இருப்பை உறுதிசெய்துகொண்டே இருக்கிறார்.
 

"உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடி
யரென்று நீயும் என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி"


மரணத்தைத்தாண்டிய வலி மறதி. மரணிப்பவர்கள் ஞாபகங்களைத் தருகிறார்கள் என்றால் மறந்து செல்பவர்கள் நினைவுகள் தந்த சிராய்ப்பில் அமிலத்தைப்பூசி செல்கிறார்கள். நாட்கள் கடந்த சந்திப்பில் 'யார் நீங்க?' என்று இரண்டமானவர்கள் கேட்கும் கேள்வியில் அமிலத்தின் அடர்வு அதிகமாகிறது.

“கல்லறையில் கூட யன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி"


வரிகளில் வாழும் நா.முத்துக்குமாருக்கு மரணமும் சரி மறதியும் சரி என்றுமே இல்லை. நா.முத்துக்குமாரைத் தின்ன தீயில் ஜன்னல் இருக்குமேயானால் அந்த ஜன்னலின் வழி அவரது சுவாசம் காற்றோடு கலந்துகொண்டிருப்பதும் சாத்தியம் தானே. நெருப்பால் எதையும் தடுத்துவிட முடியாது என்பது தான் நா.முத்துக்குமாரின் வாக்கும் கூட.

"நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு"


பிரிவின் வலியை மரணம் தருமாயின் அது ஒரு தியான நிலை. நினைவுகளோடு வாழப் பழகிக்கொள்பவன் வாழ்க்கையை நிரந்தரப்படுத்திக்கொள்கிறான். நினைத்து பார்த்து வாழ்தலின் சுகத்தை தன்னோடு நிலைப்படுத்திக்கொள்கிறான். அருந்திய காபி, கூடிபேசிய மரநிழல், பயணித்த பேருந்து, முதல்நாள் சினிமா, பழைய சோகப்பாடல், ரசித்த கவிதை, காலுடைந்த நாய்க்குட்டி, சிக்னல் பிச்சைக்காரர் என்று ஏதோ ஒன்று நினைவுகளை தக்கவைத்துக்கொண்டே இருக்கும்.

"உயிரும் போகும் உருவம் போகுமா"


நினைவுகளுக்கு உருவம் செய்வது தான் இதன் பக்குவம். நா.முத்துக்குமாரின் உயிரும் உருவமும் இந்த வரிகளுக்குள் தான் இருக்கின்றது.

"உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே"


வண்ணங்களைத் தந்த நா.முத்துக்குமாரின் விரல்கள் தான் உள்ளங்கையிலும் உள்ளத்திலும் மென்சூட்டை விதைத்து வைத்திருக்கிறது.

"காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலியொன்றும் மரணமில்லை"


அஞ்சிவாழும் காட்டினுள் இடர்படும் முட்கள் ஒன்றும் மரணவலியை கொடுப்பதில்லையென்று சொல்லும் நா.முத்துக்குமாரின் சமாதானம் இது.
நா.முத்துக்குமாருக்கு இயற்கையளித்த மரணம் அவருக்கு வேண்டுமானால் முள்ளாக இருக்கலாம் ஆனால் அது தரும் வலி அவருக்குக்கிடைத்த மரணத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

முத்துக்குமார்,

"கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்"

என்று எழுதிய உங்கள் மேகங்கள் கலைந்தாலும் நீங்களே மேகமாக இன்றும் மிதந்துகொண்டிருக்கிறீர்கள்.

"உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருப்போம்…
நடப்பவை நாடகமென்று
நாமும் சேர்த்து நடித்திருப்போம்…"


வாழ்வின் சுவாரஸ்யங்களை நமக்கு முன்னர் நிகழ்ந்த மரணங்களை ஒன்றாக பார்த்துக்கொண்டிருந்தோம் முத்துக்குமார்.
இப்பொழுது நீங்கள் இல்லாமல் தனித்து நடித்துக்கொண்டிருக்கிறோம்.

உணர்வுகளில் இருக்கிறீர்கள், கண்ணீரில் இருக்கிறீர்கள், அரிதாரத்தில் இருக்கிறீர்கள், புன்னகையில் இருக்கிறீர்கள், கனவுகளில் இருக்கிறீர்கள்.
ஆம்.
இருக்கிறீர்கள், முத்துக்குமார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்