விளம்பரம்
முகப்புகோலிவுட்

கமல் அவர்களை குருவாக பெற்றது நான் செய்த பாக்கியம் - இயக்குநர் ஐக் ஓபன் டாக்

  | May 18, 2017 19:50 IST
Celebrities

துனுக்குகள்

  • எனக்கு சினிமா ஆசை வந்ததது மாமா ராதா ரவி அவர்களால் தான்
  • படம் இயக்கம் முன் நிறைய அவமானங்களை சந்தித்து உள்ளேன்
  • இப்படம் உருவாக கமல் சார் பெரிதும் உதவியாக இருந்தார்
தமிழ் சினிமா வளர்ச்சியின் துவக்க நாட்கள் என்று கூட சொல்லலாம், அன்றைய காலக்கட்டத்தில் திரைப்பட கலைஞர்கள் என்பது வெகு சிலரே அதுவும் மேடை நாடகங்களிலிருந்து திரைத்துறைக்கு வந்தவர்கள் தான் அதிகம், அந்த சூழ்நிலையில் தன்னை ஒரு நல்ல நடிகனாக உருமாற்றிக்கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல, மக்களின் அங்கீகாரம் என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். இது போன்ற காலக்கட்டங்களில் தன் நடிப்பு திறமையால், தன்னுடைய பகுத்தறிவு சிந்தனையால், தன்னுடைய வசன உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் 'நடிகவேள்' திரு.எம்.ஆர்.ராதா அவர்கள். அவரின் அரசியல் நையாண்டி பேச்சும், கடவுள் மறுப்பு கொள்கையும், இந்த இரண்டையும் இணைத்து பேசும் வசனங்களும் அன்று பொருத்தமாக இருந்ததா என்பது நமக்கு தெரியாது ஆனால் இன்றைய காலக்கட்டங்களுக்கு மிகச்சரியாக பொருந்துகிறது.

எதாவது அரசியல் கலாட்டா நடக்குமேயானால் இதைப்பற்றி எம்.ஆர்.ராதா என்ன சொல்லியுள்ளார் என்று யுடியூபை புரட்டி பார்க்கும் இளைஞர்கள் பட்டாளம் இன்று பெருகிவிட்டன அந்த அளவிற்கு சமூக தாக்கத்தை உண்டாக்கிய மனிதரின் அடுத்த தலைமுறையும் தமிழ் திரையுலகில் கால் பதித்தது, எம்.ஆர்.வாசு,நடிகர் டத்தோ ஸ்ரீ ராதா ரவி, ராதிகா சரத்குமார், நிரோஷா என்று நடிப்பு துறையில் கவனம் செலுத்தி வந்த நிலையில் அக்குடும்பத்திலிருந்து 3 வது தலைமுறையாக வாசு விக்ரமும் நடிக்க வந்தார்.
 
radha ravi

அனைவரும் நடிப்பு துறையை தேர்ந்தெடுக்க ராதா ரவியின் தங்கை மகன் இயக்குநர் ஐக் மட்டும் இயக்குநராவதை லட்சியமாகக்கொண்டு தற்போது நடிகர் ஜீவா, ஸ்ரீ திவ்யா, ராதா ரவி, ராதிகா, சூரி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் என ஒரு நடிகர் பட்டாளத்தையே வைத்து 'சங்கிலி புங்கிலி கதவை தொற' என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை இயக்குநர் அட்லீயின் A for Apple நிறுவனத்துடன் இணைந்து FOX star studios நிறுவனமும் தயாரித்துள்ளது.

படம் வெளியீட்டில் மும்மரமாக இருந்த இயக்குநர் ஐக்கிடம் பேட்டிக்கேட்க தொடர்பு கொண்ட போது எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக்கொள்ள, நம்முடைய குழுவுடன் அவருடைய அலுவலகத்தில் ஆஜரானோம், நம்மை வரவேற்று அமர்ந்த இயக்குநரிடம் தாமதிக்காமல் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தோம்.
மிகப்பெரிய திரை குடும்ப பின்புலம் இருந்தாலும் உங்களுக்கு எப்போது இந்த துறையில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது? "எங்கள் குடும்பத்தில் சினிமா துறைக்கு இனி யாரும் போக வேண்டாம் என்ற முடிவை எடுத்து இருந்தார்கள், இருந்தாலும் அவ்வப்போது என்னுடைய தாய் மாமா நடிகர் ராதா ரவி அவர்களுடன் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லுவேன், அப்போது அவர் மிகவும் பிஸியாக இருந்த நேரம், இப்போது அப்படி தான் இருக்கிறார் ஆனாலும் அவருடைய இளமையான காலம் என்பதால் படு வேகத்தில் செயல்படுவார், எங்களையும் அழைத்தது செல்வார் அங்கு சென்றவுடனே ராஜ மரியாதை இருக்கும், அன்றைய தினத்தில் இருந்த அனைத்து உட்ச நட்சத்திரமும் இருப்பார்கள், நாங்கள் போன உடனே அப்போது இருந்த கோல்டு ஸ்பாட் கூல் ட்ரிங்க்ஸ் எங்கள் கையில் வந்து விடும் இது போல பல உபசரிப்புகள் இருந்தது, இந்த நிகழ்வுகள் என் மனதில் சினிமா ஆசையை விதைத்தது, அதன் பின் +2 முடிக்கும் போது வீட்டில் கேட்டேன் நான் திரைத்துறையில் வேலை செய்ய ஆசைப்படுகிறேன் என்று, கல்லூரி முடிக்க சொன்னார்கள் அதன் பின் பார்க்கலாம் என்று கூறினார்கள் நானும் யுஜி,பீஜி எல்லாம் முடித்தேன், அதன் பின் எம்.பி.ஏ படிக்க என்னை அமெரிக்க அனுப்பினார்கள் அங்கு சென்ற நான் திரைத்துறையை சார்ந்த படிப்பை தான் படிப்பேன் என்று கூறிவிட்டேன், உடனே இந்தியா திரும்ப சொன்ன என்னுடைய மாமா ராதா ரவி அவர்கள் மும்பையில் உள்ள ஒரு திரைப்படக்கல்லூரியில் எனக்கு படிக்க சீட் வாங்கி கொடுத்தார், அதன் பின் இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களிடம் உதவி இயக்குநராகவும் சேர பரிந்துரைத்தார், அப்படி தொடங்கியது தான் என்னுடைய திரை உலக பயணம் " என்று கூறினார்.

உங்களது திரை உலக பயணத்தில் உலகநாயகனிடம் எப்படி பணிக்கு சேர்ந்தீர்கள்? அவரிடம் பணி புரிந்த அனுபவம் பற்றி கூறுங்களேன்? "இயக்குநர் பிரியதர்ஷன் சாரிடம் தான் முதலில் கமல் சார் கலந்தாலோசித்து உள்ளார், விஸ்வரூபம் திரைப்படம் தொடங்கி இருந்த நேரம், தனக்கு நம்பிக்கையான ஒருவர் இணை இயக்குநர் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் விரும்புகிறேன் என்று கூறிய உடனே இயக்குநர் பிரியதர்ஷன் சாரும் என்னை பற்றியும் என்னுடைய குடும்பத்தை பற்றியும் கூறி பரிந்துரைக்க எனக்கு கமல் சாரின் அலுவலகத்திலிருந்து ஒரு அழைப்பு வந்தது, அடுத்த நாள் என்னை வந்த பார்க்க சொல்லி, அன்றை காலக்கட்டத்தில் நான் படம் இயக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தேன், பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தேன், இந்த அழைப்பு வந்த உடனே முதலில் ஏற்றக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்து அதை அவரிடமே சொல்லிவிடலாம் என்று எண்ணி அடுத்த நாள் கமல் சாருடைய அலுவலகம் சென்றேன், கதவை திறந்த உடனே எதிரில் கமல் சார் நின்றுக்கொண்டிருந்தார், என்னுடைய கையை பிடித்து ஹாலிற்கு அழைத்து சென்றவர் உட்கார வைத்து, 'மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எம்.ஆர்.ராதா அவர்களின் குடுமபத்திலிருந்து ஒருவர் இயக்குனராவதற்கு வந்துள்ளார் என்பதை என்னும்போது, நாளைக்கு காலையில் 10 மணிக்கு ஆபிஸ் வந்துடுங்க மற்றதையெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம்' என்று கூறிவிட்டு எழுந்த கமல் சார் சற்று நேரம் யோசித்து விட்டு 'நீங்க நாளைக்கு வந்த உடனே என்னுடைய ரூமில் அமர்ந்து கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு தன்னுடைய உதவியாளரை அழைத்து விஷயத்தையும் கூறிவிட்டு சென்று விட்டார் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, அன்பு கட்டளையால் விஸ்வரூபம் 1 & 2 ஆகிய திரைப்படங்களில் வேலை செய்தோம் அந்த தருணம் என்பது என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்".

இயக்குநராகுவதற்கு முயற்சி செய்தேன் என்று கூறினீர்கள் எப்படி வரவேற்றார்கள் ? " வரவேற்பா அட போங்க பிரதர் 3 வருஷமா அலையோ அலைன்னு அலைஞ்சேன், யாரும் மதிக்க மாட்டாங்க, ரூமில் இருந்துக்கொண்டேய இல்லைனு சொல்லுவாங்க, இது மாதிரி நிறைய அவமானங்கள், அலைக்கழிப்புகள் இருந்தது ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை, இன்று படம் வெளியாக உள்ளது அந்த வளர்ச்சியை நினைத்து பெருமை படுகிறேன் இன்னும் இது போன்ற பல உயரங்களை தொட வேண்டும், என்னுடைய தாத்தா, மாமா ஆகியோர் இந்த துறையில் வாங்கிய நற்பெயரை நானும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுக்கொள்கிறேன்".

இறுதியாக சங்கிலி புங்கிலி கதவை தொற திரைப்படம் உருவான விதம் பற்றி கூறுங்களேன். "இந்த படத்தோட கதையை முடித்து விட்டு இதற்கு எந்த ஹிரோ பொருந்துவாங்க என்று யோசிக்கும் போது எனக்கு நண்பர் ஜீவா நினைவுக்கு வந்தார், அவரை அதற்க்கு முன் மலேசியாவில் நடைப்பெற்ற யுவன் இசை நிகழ்ச்சியில் சந்தித்துள்ளேன் அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் நான் தான், அப்போது திரைப்படங்கள் விஷயமாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை, ஒரு நாள் ஃபோன் செய்து இந்த மாதிரி கதை இருக்கு பேசலாமா என்று கேட்டேன் வாங்க என்று அவர் கூறினாலும் அவருடைய குரலில் நம்பிக்கை குறைவாகவே இருந்தது, கதை கூறினேன், கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, நான் பண்றேன் பிரதர் என்று கூறியது தான் எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம், நம்பிக்கை எல்லாம், ஆனால் சில காரணங்களால் படம் தள்ளிபோய்க்கொண்டே இருந்தது, ஒரு நாள் கமல் சார் என்னை அழைத்து படத்தை பற்றி கேட்டார், நான் தாமதமாவதற்கான காரணங்களை கூறினேன், அதில் ஒன்று சரியான ஹீரோயினும் அமையாதது, உடனே 'நான் வேணும்னா ஸ்ருதிட்ட பேசவா' என்று கமல் சார் கேட்டது எனக்கு மேலும் ஆதரவாக இருந்தது, அட்லீ, FOX ஸ்டார் எல்லாம் மேலும் நம்பிக்கை அளித்தது இறுதியாக படம் துவங்கி நல்லபடியாக முடித்துவிட்டோம், இனி படத்தை பற்றி பத்திரிக்கையாளர்களாகிய நீங்களும், மக்களும் தான் கூற வேண்டும்" என்று கூறிவிட்டு விடைபெற்றார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்