முகப்புகோலிவுட்

ஆமா என் மீதும் தப்பு இருக்கிறது, மன்னிச்சுடுங்க – நடிகர் சிம்பு

  | December 08, 2017 19:08 IST
Sakka Podu Podu Raja Songs

துனுக்குகள்

  • சிம்பு கைவசம் இரண்டு படங்கள் உள்ளது
  • ‘சக்க போடு போடு ராஜா’விற்கு சிம்பு தான் இசையமைத்திருந்தார்
  • இதன் ஆடியோ ரிலீஸில் சிம்பு கலந்து கொண்டு பேசினார்
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தானே இயக்கி நடிக்கவிருக்கும் படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகளில் பிஸியாகவுள்ளார். இதனையடுத்து இயக்குநர் மணிரத்னமின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில், ‘AAA’ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில், சிம்பு இசையமைத்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 6-ஆம் தேதி) மாலை சென்னையில் நடைபெற்றது. சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிட்டார். இவ்விழாவில் பேசிய சிம்பு “நான் ஒரு இசையமைப்பாளராக இந்த மேடையில் நிற்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தை நான் ஒப்புக் கொண்டதற்கு மிக முக்கிய காரணம் சந்தானம். அவர் நல்ல திறமைசாலி. அதனால் தான், இவர் தமிழ் சினிமாவுக்கு வர வேண்டும் என நான் நினைத்தேன். இன்று அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

இசை என்பது எனக்கு ரொம்ப பிடித்த விஷயம். நான் இளையராஜா சாரின் இசையை கேட்டு வளர்ந்தவன். அதேபோல், மைக்கேல் ஜாக்சனும் எனக்கு பிடிக்கும். இவர்கள் இருவரும் எனக்கு இன்ஸ்பிரேஷன். என்னுடைய அப்பாவும் சிறுவயதிலிருந்து குருமாதிரி கூடவே இருந்து எனக்கு மியூசிக் சொல்லிக் கொடுத்திருக்கிறார். என்னுடைய மானசீக குருவாக நான் ஏ.ஆர்.ரஹ்மான் சாரை பார்க்கிறேன். பிறகு என்னுடைய நண்பராகவும், குருவாகவும் இருந்தவர் யுவன் சங்கர் ராஜா. மிக நல்ல உள்ளம் கொண்ட மனிதர் யுவன். என்னை புரிந்து கொள்வது மிக கடினம். என்னை புரிந்து கொண்டு நான் கொடுக்கிற டார்ச்சரையெல்லாம் தாங்கி கொண்டு, ஒரு நாள் கூட இப்படி பண்ணலாமேனு சொன்னதே கிடையாது. மிக்க நன்றி யுவன் ஷங்கர் ராஜா சார். நான் இன்று இசையமைப்பாளராக உருவாகியிருப்பதற்கு அவர் தான் மிகப்பெரிய காரணம். தேவா சார், வித்யாசாகர் சார், ஹாரிஸ் ஜெயராஜ் சார், ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ் குமார், தரண், தமன், குறள் மற்றும் ப்ரேம்ஜி என நான் பணிபுரிந்த இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த மேடையில் வாலி சார் இல்லாதது எனக்கு வருத்தமாக இருக்கு. என் முதல் படத்திலிருந்து வாலி சார் பாடல்கள் எழுதியிருக்கிறார். இப்படத்திற்கு பாடல்கள் எழுதிய அனைவருக்கும் நன்றி. படம் சூப்பரா வந்திருக்கு.
 

'காதல் கொண்டேன்' படத்தை நானும் தனுஷ் சாரும் சேர்ந்து ஆல்பட் தியேட்டரில் பார்த்தோம். தன்னம்பிக்கை இல்லையென்றால் எப்படி வாழ்வது?. அப்போதே நாம் இருவரும் பிற்காலத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வருவோம் சார் என தனுஷிடம் சொன்னேன். எங்களுக்குள் போட்டி, பொறாமை இருக்கிறது என பலர் சொல்கிறார்கள். ஆனால், எங்கள் இருவருக்குள்ளும் உண்மையான அன்பு இருக்கிறது. அந்த அன்பு எப்பவுமே இருக்கும். அதற்காக தான் தனுஷ் இங்கு வந்திருக்கிறார். தன்னடக்கமானவர் என்றால் அது தனுஷ் தான்.

அப்புறம், பலரும் பல விதமாக குறை சொல்லும் போது, என் மீதும் ஏதோ தப்பு இருக்க வேண்டும் இல்லையா. தப்பு இல்லாமலா சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆமா, என் மீதும் தப்பு இருக்கிறது. அதையும் நான் ஒத்துக்கிறேன். என்னுடைய 'AAA' படம் சரியா போகவில்லைதான். நான் என்னுடைய ரசிகர்களுக்காக ரொம்ப ஜாலியாக செய்த படம் அது. ஒரே பார்ட்டாக முடியவேண்டிய படம், கொஞ்சம் அதிக செலவானதால், 2- பாகங்களாக போக வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது. அதனால், அதன் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் மனக்கஷ்டம் இருந்தது. என்னவென்றால் இந்த படம் நடக்கும்போதோ, படம் முடிந்த உடனேவோ அல்லது 1 மாதம் கழித்தோ கூட சொல்லியிருக்கலாம். ஆனால், 6 மாதம் கழித்து வேறு யாரோ சொல்கிறார்கள் என்ற போதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அதையும் மீறி நான் ஏதாவது தவறு செய்திருந்தால், இந்த மேடையில் அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். என்னை மன்னிச்சுக்குங்க.. நான் நல்லவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால், நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியும். ஆனால், ஒரு முறைன்னு ஒன்னு இருக்கு அது தப்பாயிருச்சு.
அப்புறம், இந்த பிரச்சினையால் பலர் என்னால் இனிமேல் நடிக்க முடியாது என சொல்கிறார்கள். எனக்கு தெரியல ஆனால், மணிரத்னம் சார் இதுவரைக்கும் நீ தான் நடிக்கிறனு சொல்லியிருக்கார். அவருக்கு எப்படி என்மேல இவ்வளவு நம்பிக்கைனு தெரியல. ஒருவேளை அவரும் உங்கள மாதிரி என்னோட ஃபேனான்னு தெரியல. அந்த படத்தின் ஷூட்டிங் 20-ஆம் தேதின்னு சொல்லியிருக்காங்க. அதற்கு தயாராகிட்டு இருக்கேன். மிஞ்சி போனால் நான் தமிழ் சினிமாவில் நடிக்கக் கூடாது என 'ரெட்' போடுவார்கள். ஓகே நான் நடிக்கவில்லை. அதுனால என்ன? ஒன்னும் பிரச்சனை இல்லை. எனக்கு திறமை இருக்கு. என்ன, எங்கப்பா - அம்மா நல்லபடியா வளர்த்திருக்காங்க. சோ, படத்தில் நடித்துதான் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கு எனது ரசிகர்கள் மட்டுமே காரணம். என்ன செய்தாலும், நான் என்னுடைய ரசிகர்களை விட்டு போய்விட மாட்டேன்” என்று சிம்பு கூறியுள்ளார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்