விளம்பரம்
முகப்புகோலிவுட்

சிவகார்த்தியேன் - இவன் வளர்ச்சியின் மறு பெயர்

  | February 17, 2017 10:23 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

  • நாகேஷ் பட தலைப்பின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் சிவா
  • கதை தேர்வில் என்றுமே சிக்சர்களை அடித்து வருகிறார்
  • அவரின் பலமும் பலவீனமும் அவர் நன்கு அறிவார்
பாலச்சந்தர் இயக்கி நாகேஷ் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் நாகேஷ், திறமையை பற்றியும், மக்கள் அபிமானத்தை பற்றியும், பேசும் ஒரு வசனம் உண்டு, 
"ஒரு கலைஞன் என்பவன் காற்றில் பறக்கும் பட்டம் போன்றவன், அவனை உயரே கொண்டு செல்லும் நூல் தான் அவன் திறமை.ஆனால் நூல் மட்டும் இருந்து என்ன பயன், காற்றடித்தால் தானே பட்டம் உயரே பறக்க முடியும் . அந்த காற்று தான் ஒரு கலைஞனின் மேல் மக்களுக்கு இருக்கும் அபிமானம், இரண்டும் சரியான அளவில் இருந்தால் தான் ஒரு கலைஞனால் உயரே பறக்க முடியும்"

இத்தனை வருடம் கழித்து எதிர்நீச்சல் எனும் அதே பெயரில் முதல் முறையாக தனி கதாநாயகனாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு அந்த வசனம் மிக கச்சிதமாக பொருந்தும். 

திறமை என்பது நம் முயற்சியால் நாம் பெறக்கூடியது, ஆனால் மக்கள் அபிமானம் அப்படிப்பட்ட ஒன்று இல்லை. 
அது ஒரு அமைப்பு, நம்மை மீறிய ஒன்று, என்னதான் திறமை இருந்தாலும் அது நடப்பதற்கு காலமும் நேரமும் மனது வைக்க வேண்டும். 
சிவகார்த்திகேயன் மேல் மக்களுக்கு இருக்கும் அபிமானம் அப்படி பட்ட ஒன்று, அவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இல்லாமல் இருந்து நேரடியாக நடிகராகி இருந்தால் இத்தனை புகழும் இத்தனை பிரியமும் மக்களிடமிருந்து கிடைத்திருப்பது சந்தேகமே. 

அவரின் தொகுப்பாளர் வாழ்க்கை, அதில் அவர் தனக்கென அமைத்த பாணி, அவருடைய நகைச்சுவை திறன் என அனைத்தும் சேர்ந்து அனைவரும் விரும்பும் ஒரு டிவி தொகுப்பாளராக அவரை மாற்றியது.
தன்னை பற்றி தானே உயர்த்திப்பேசாமல், தன்னை தானே கலாய்த்து கொண்டு சிரிப்பை வரவழைத்த சிவகார்த்திகேயனின் எளிமை அவர் மக்களிடம் சென்றடைய மிகப்பெரிய காரணியாக இருந்தது. 

காலம் நேரம் அமைத்துக்கொடுத்த கிரிக்கெட் கிரவுண்டை நன்றாக புரிந்து வைத்திருந்த சிவகார்த்திகேயன் களம் இறங்கியவுடன் சிக்ஸர்களாக பறக்கவிட தொடங்கினார். 

அவரின் பலமும் பலவீனமும் அவர் நன்கு அறிவார், விட வேண்டிய பந்துகளை (படங்களை) சாதுர்யமாக தவிர்த்து, தன் பலத்திற்கு ஏற்ற இடத்தில் வரும் பந்துகளை மட்டும் தேர்வு செய்து இறங்கி அடிக்கிறார். 

தன் திரைபயணம் எந்த திசையில் செல்ல வேண்டும் என நன்கு தெரிந்து வைத்திருக்கிறார், தற்கால நடிகர்களில் மிகத்தெளிவாக தனக்கான கதைகளை தேர்வு செய்யும் நடிகராக சிவகார்த்திகேயனை பார்க்கிறேன், இத்தனை  விரைவிலேயே முன்னணி நட்சத்திரமாக வலம் வருவது சாதாரணமான காரியம் இல்லை. 

இவருக்கு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பே நடிக்க தொடங்கி, இன்னும் தனக்கான மார்கெட் இல்லாமல், அடுத்து எந்த மாதிரியான படங்கள் நடிப்பது என்று தெரியாமல் திரியும் நடிகர்களை பார்த்தாலே சிவகார்த்திகேயனின் திறமையும் சாதுர்யமும் அவர் அடைந்திருக்கும் அசுர வளர்ச்சியும் புரியும்.

மேற்கூறிய நடிகர்களில் பலர் தயாரிப்பாளர், நடிகர்களின் மகன் மகளாக இருப்பவர்கள், எத்தனை பெரிய பின்னணியில் இருந்து வந்தாலும் திறமையும் தெளிவும் தைரியமும் இருந்தால், அவர்களை தாண்டி, அவர்களால் தொட முடியாத உயரத்தில் சென்று கொண்டே இருக்கலாம், அதன் நிகழ் நேர சான்று சிவகார்த்திகேயன். 

விஜய், அஜித், சூர்யா திரைப்படங்களுக்கு அடுத்த அளவில் இவர் படங்கள் வியாபாரம் ஆவது வெறும் அதிர்ஷ்டம் இல்லை, காலமும் நேரமும் கொடுத்த வாய்ப்பை தன் திறமையால், தைரியத்தால், தன் கதை தேர்வால் சிவா அடிக்கும் சிக்ஸர்கள் அவை, இல்லையென்றால் பத்தே திரைப்படங்களில் இத்தனை பெரிய அசுர வளர்ச்சியை அடையமுடியாது .

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்