முகப்புகோலிவுட்

"ஜோதிகாவின் புதியதொரு முகத்தைக் கண்டு பிரமித்தேன்!" நாச்சியாரைப் புகழும் சிவக்குமார்

  | February 19, 2018 12:21 IST
Jyotika Naachiyaar

துனுக்குகள்

  • இப்படம் கடந்த வாரம் கோலிவுட்டில் வெளியானது
  • முக்கிய வேடங்களில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா, இவானா நடித்திருந்தனர்
  • படத்தை பார்த்து ரசித்த சிவக்குமார் வெகுவாக பாராட்டியுள்ளார்
பிரம்மாவின் ‘மகளிர் மட்டும்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கியுள்ள இப்படத்தில் ஜோதிகா காவல் துறை அதிகாரியாக வலம் வந்தார். இதில் மிக முக்கிய வேடங்களில் ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்த இதற்கு ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார், சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘EON ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் பாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘B ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது, படத்தை பார்த்து ரசித்த பிரபல நடிகர் சிவக்குமார் பேசுகையில் “பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம் ‘நாச்சியார்’. முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து, முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும், நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு Balanced திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் Come Back-ஐ வாழ்த்தி வரவேற்போம். ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில் மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ… ? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்… அடடா…

நாச்சியார் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலீஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். (பெண்புலியை வீட்டிலேயே கட்டி வைக்காதீங்க சூர்யா… ) ஒளிப்பதிவு பிரமாதம். முதல் ஃப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலைநாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழ வைத்தார் என்பதை மறக்கவே முடியாது. எத்தனையெத்தனை வர்ணஜாலங்களை அந்த மேதை தூவி இருக்கிறார். உயிர்நாடியே இசைதான்.
கள்ளமறியாத பிஞ்சு உள்ளங்களின் வெள்ளைமன காதலையும், ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், காதல் செய்யும்போது குழந்தைதனமான குறும்புகளையும், நேரில் காணும்போது கோபத்தை செல்லமாய் காட்டி காணாதபோது தவியாய் தவித்து, என்னவன் எங்கோ தவிக்கிறான் என்று உணரும் நேரம் திசையறியாத பயணத்தை அழுகையுடன் தொடங்கிய அரசியின் அன்பும்… அவளை ஒரு குழந்தையாக பரிவுடன் பார்த்து அவளுக்காக தன் ஊன் உயிர் அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்யும் காத்தவராயனையும் தமிழ் சினிமா லேசில் மறக்காது. கனமாக தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்த பாலாவுக்கு கோடி நன்றிகள்…..” என்று சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்